Saturday, October 31, 2009

ஒப்பறேசன் தமிழீழம் - பாகம் 2

சிங்கள தேசமும் தமிழ் இன எதிரிகளும் தமிழினத்திற்கு விடும் சவால்கள் என்ன? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றோம்? என்கின்ற கேள்விகளோடும் அவற்றிற்கான பதில்களை, அடுத்தவாரத்திலிருந்து ஆரம்பிக்கும் எண்ணத்துடனேயுமே முதல் கட்டுரை (ஒப்பறேசன் தமிழீழம் - பாகம் 1) நிறைவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இக்கட்டுரையின் பிறிதொரு பகுதியில் எழுதவிருந்த சில விடயங்கள் பற்றி அதற்கு முதல் பேச வேண்டியுள்ளது. காரணம் முதல் கட்டுரை எழுதி சுமார் இரு வார இடைவெளிக்குள் உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பல நூறு மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெற்றன. அவை கூறும் சாராம்சம் இப்பொழுது எழுதப்போகும் விடயத்தோடு ஒன்றிப்போயுள்ளது.

அத்தனை மின்னஞ்சல்களையும் அனுப்பியவர்களில் அநேகமானவர்கள் தமிழீழ மாணவர் மற்றும் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்கள். மாற்று இயக்கங்களைச் சேர்ந்த சில ஈழத்தமிழர்கள், தமிழகம், கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மலேசியா சிங்கப்பூர் தென்னாபிரிக்க தேசங்களைச் சேர்ந்தவர்கள். இன்னும் சில முகவரியிடப்படாதவை!

அத்தனை கடிதங்களும் இங்கே கூறப்படும் மூன்று விடயங்களையே தாங்கியிருக்கின்றன. “நாங்கள் தமிழீழ விடுதலைக்காக எங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராய் உள்ளோம். தனித் தமிழ் அரசுக்காக விதைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் மாவீரர்களிற்கு என்றும் உண்மையாயும் விசுவாசமாயும் இருப்போம். எவ்வேளையிலும் எவ்வழியிலும் தமிழரின் தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமைக்காய் போராட தயாராய் உள்ளோம்”

அத்தனை கடிதங்களும் தமிழீழ தேசத்தின் ஆன்மாவின் குரலாக விளங்குகின்றன. தமிழர்களின் ஆழமான அபிலாசைகளை பிரதிபலித்து நிற்கின்றன. அத்துடன் தமிழ் இனம் ஜாதி மதம் கட்சிகள் இயக்கங்கள் பிரதேசங்கள் வாழும் நாடுகள் கடந்து தன்னிலை உணரத் தலைப்பட்டிருப்பதை அல்லது தள்ளப்பட்டிருப்பதை தெளிவாகக் காட்டி நிற்கின்றன.

இந்நிலையில் நின்றபடியே புலி என்ற சொல் பற்றியும் புலிகள் பற்றியும் பேசுவோம். இது இன்னும் பல கேள்விகளிற்கும் குழப்பங்களிற்கும் நிச்சயம் விடைசொல்லும். தமிழ் இனத்தின் விடுதலைப் பயணத்தை உந்தித்தள்ள உதவும்.

முன்பொருமுறை தமிழீழத்தின் வரைபடம் பற்றிய வினா ஒன்றின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் கூறியிருந்தார். "எங்கெல்லாம் இலங்கை இராணுவத்தின் குண்டுகள் வீழ்கின்றனவோ அப்பிரதேசங்கள் எல்லாவற்றையும் அடையாளப்படுத்திப் பார்க்கும் போது தெரியும் நிலப்பரப்பே தமிழீழம்" என்று.

இதை ஒத்த பதில் ஒன்றையே இப்பொழுதும் வேறு கேள்விகளிற்கும் கூறுதல் சாலப்பொருத்தமாகின்றது.

ஒற்றைவரியில் சொல்வதானால் யார் எல்லாம் புலிகள் என்றால் தமிழ் இன எதிரிகளினால் உடல் உள ரீதியாகவும் கல்வி சமூக பொருளாதார கலாச்சார ரீதியாக என ஏதோ ஒரு வகையில் பாதிப்பிற்குள்ளாகும் ஒவ்வொரு தமிழனும் புலிதான். அவன் தமிழீழத்திலும் இருக்கலாம் தென்னிலங்கையிலும் இருக்கலாம் தமிழகத்திலும் இருக்கலாம் கர்நாடகாவிலும் இருக்கலாம் அல்லது மலேசியா சிங்கப்பூரிலோ தென்னாபிரிக்காவிலோ புலம்பெயர் தேசங்களிலோ எங்கும் இருக்கலாம். எந்தக்கட்சிக்குள்ளும் எந்த இயக்கத்துக்குள்ளும் இருக்கலாம் ஏன் எங்கு பிறக்கப்போகின்றான் என்று தெரியாமல் கருவறைகளில் கூட தூங்கிக்கொண்டும் இருக்கலாம்.

காரணம் புலிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுபவர்கள். ஒரு தேசத்தின் தேசிய இனத்தின் ஆன்மாவோடு ஒன்றிப்போயிருப்பவர்கள். தமிழின எதிரிகள் எவ்வேளையிலும் அஞ்சும் ஆத்திரம் கொள்ளும் உருவகமாகவும் உளவியலாகவும் விஸ்வரூபமெடுத்து நிற்பவர்கள். அவர்கள் எப்போது எங்கு வேண்டுமானாலும் எப்படியும் போராடுவார்கள். அதை தீர்மானிக்கவேண்டியது எதிரிகள் தான்.

ஒரு ஐம்பத்தெட்டும் எண்பத்தி மூன்றும் சில ஆயிரம் புலிகளை ஈழதேசத்தில் உருவாக்கியதென்றால் முள்ளிவாய்க்கால் உலகப்பரப்பெங்கும் பல நூறாயிரம் புலிகளை உருவாக்கியுள்ளதென்பதே யதார்த்தம். ஆனால் நிறையப்பேர் தாங்கள் புலிகள் தான் என்பதை இன்னும் தங்களளவில் அடையாளம் காணவில்லை. இதற்கு சில வேளை சில காலம் எடுக்கலாம்.

புலிகளை அழிப்பதாய் நினைத்து பன்மடங்கு அதிகரித்திருக்கின்றார்கள் என்பதும் ஈழக்கோரிக்கையை இல்லாதொழிப்பதாய் சொல்லி வலுப்பெற வழிசமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுமே யதார்த்தம்.

தமிழ் இன எதிரிகளைப் பொறுத்தவரையில் குறிப்பாக சிங்கள தேசத்தைப் பொறுத்தவரையில் புலிகளை அழிப்பதை பற்றி சிந்திப்பதை விட புலிகள் உருவாகாமல் இருக்க ஒவ்வொரு தமிழனையும் உடல் உள ரீதியாகவும் கல்வி சமூக பொருளாதார கலாச்சார ரீதியாகவும் பத்திரப்படுத்துவதே ஆரோக்கியமானது.

ஏனெனில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் புலிகளின் உடல்களை அழித்தலும் அல்லது இனம் காணுதலுமே தமிழின எதிரிகளினால் எக்காலத்திலும் சாதிக்கக்கூடிய அதி உச்ச சாதனையாக இருக்கும். தவிர உலகப்பரப்பெங்கும் காற்றுப்போல் ஊடுருவியிருக்கும் இனவெறியின் விளைவால் உருவாகிக் கொண்டிருக்கும் புலிகளையும் உணர்வுகளையும் முழுமையாக இனம் காணவோ அழித்தொழிக்கவோ சிங்கள இனவெறியர்களால் மட்டுமல்ல இந்த உலகின் அத்தனை வல்லாதிக்க சக்திகளால் கூட முடியாது. இதை எதிர்கொள்ள எந்த வியூகமும் பலனளிக்காது.

இந்நிலையில் குறிப்பிட்டவர்களின் பெயர்களைச் சொல்லி புலிகளை அடையாளம் கண்டுவிட்டோம் என்று நாளுக்கு நாள் அறிக்கை விடுவதெல்லாம் சின்னச்சின்ன உள் நோக்கங்களைக் கொண்டதே தவிர உண்மையில் உருப்படியான காரியம் அல்ல.

ஏனெனில் புலிகள் என்ற சொல் உலகளவில் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் யார் எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் தமிழன் என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாக ஆழ வேரூன்றிவிட்டது. அதாவது தமிழன் என்ற சொல்லும் புலிகள் என்ற சொல்லும் இரத்தமும் சதையும் போன்றதாகிவிட்டது.ஆகவே இதை வேறு பிரிக்கும் பகீரத பிரயத்தனங்களால் ஒரு போதும் அவர்கள் எதிரிபார்க்கும் பலனைக் கொடுக்க முடியாது. வருகின்ற வேற்று நாட்டு அகராதிகளில் தமிழன் என்ற சொல் இருக்கும் இடத்தில் நிச்சயம் புலி இருக்கும். ஜாதி மதம் பிரதேசம் கட்சிகள் இயக்கங்கள் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த உலகில் நீங்கள் எந்த மூலைக்குச்சென்றும் உங்களை தமிழன் என்று அடையாளப்படுத்தும் போதும் அந்த வேற்று நாட்டவன் அல்லது வேற்று இனத்தவன் தமிழனை புலி என்றே அடையாளம் கண்டு கொள்கின்றான்.

அதே போல் சிங்கள தேசமும் அத்தனை தமிழனையும் புலிகளாகவே பார்க்கின்றது. சும்மா பேச்சுக்கும் சுயநலத்திற்காகவும் நண்பர்கள் என்றும் அரச ஆதரவு இயக்கங்கள் என்றும் கட்சிகள் என்றும் கட்டி அணைக்கிறார்களே தவிர உண்மையில் அத்தனை தமிழனையும் ஜாதி மதம் பிரதேசம் கட்சி இயக்கம் கடந்து புலியாகவே பார்க்கிறார்கள். சந்தர்ப்பம் வரும் போது காலைவாரவே காத்திருக்கின்றார்கள். கழுத்தறுக்கவும் கருவறுக்கவுமே காலம் காலமாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார்கள்.

தமிழர்கள் எல்லாம் புலிகள் என்று பார்க்கவும்; தமிழர்களே தமிழர்களின் பாதுகாவலர்கள் என்பதை உறுதி செய்யவும் தமிழ் இன எதிரிகள் பல வரலாற்றுச் சான்றுகளை விட்டபடி பயணிக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு அண்மையில் நடந்த ஒரு சில சம்பவங்ளை பார்க்கும் போது அவை இன்னும் சில தெளிவுகளையும் தன்னிலை அறிதலையும் தரும்.

இலங்கையில் ஒரு மரண விசாரணை அதிகாரிக்கு வழங்கப்பட்ட சாட்சியம்….

“எனது கணவர் கூலி வேலை செய்பவர். இதனால் எமது மகன் பாடசாலைக்கு சென்றால் தலையில் குட்டுகின்றனர், கேலி செய்கின்றனர், திட்டுகின்றனர். இதனால் அவர் அங்கு தொடர்ந்து கல்வி கற்க மறுப்புத் தெரிவித்து வந்தார்.

இதனால் அந்தப் பாடசாலையில் இருந்து மகனை விலக்கி வேறு பாடசாலையில் சேர்க்க முற்பட்டபோது எந்தவொரு பாடசாலையிலும் எமது மகனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக சில பாடசாலை அதிபர்கள் முன்னர் எனது பிள்ளை கல்வி கற்ற பாடசாலையின் அதிபரிடம் மன்னிப்புக் கடிதம் கோரினர். மன்னிப்புக் கடிதம் இல்லாவிட்டால் பாடசாலையில் சேர்க்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், குண்டு வைப்பார் என்ற அச்சம் காரணமாக உங்கள் பிள்ளையினை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளலாம். தற்போது பிரபாகரனும் உயிருடன் இல்லை. இந்நிலையில் எக்காரணம் கொண்டும் எந்தவொரு பாடசாலையிலும் சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என அழுத்தமாக கூறினர்.

இதனால் மிகுந்த கவலை கொண்டு எனது கணவர் மகனை கட்டித்தழுவி உச்சி முகர்ந்த பின்னர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

வறக்காபொல தம்பலதெனிய பாடசாலையில் எனது மகன் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்றான். அங்கு அவனுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 2 மாதமாக பல்வேறு துன்பங்களை கொடுத்தனர்.

வகுப்பு ஆசிரியர் தும்புத்தடியால் அடிப்பார், தலையில் குட்டுவார், தடியால் அடிப்பார், கீழ்த்தரமான வார்த்தையால் திட்டுவார். இதனால் எனது மகன் பாடசாலைக்கு செல்ல மறுத்தார்.

இதன் காரணமாக அந்தப் பாடசாலையில் இருந்து எனது பிள்ளையை விலக்கி, அம்பேபுஸ்ஸ வித்தியாலயம், வறக்காபொல காமினி வித்தியாலயம், அல்லியத்த வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் அனுமதி கேட்டும் உரிய பயன் கிடைக்கவில்லை, சில பாடசாலை அதிபர்களின் காலடியில் வீழ்ந்து மன்றாடியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் தான் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார்.”

தொடரும்..

அன்புடன்
கீர்த்திகன்
keerththikan@gmail.com

தமிழ் வாலிபன் சிங்களவர்களினால் அடித்துக்கொல்லப்படும் வீடியோ



கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் தமிழ் வாலிபனொருவன் மூன்று சிங்களவர்களினால் அடித்துக்கொல்லப்பட்ட காணொளி(வீடியோ) வெளிவந்துள்ளது. சிங்கள பொதுமக்கள் இருவரும் சிங்கள பொலீஸ்காரர் ஒருவரும் கடலில் இறங்கி அவரை தாக்கியுள்ளனர். கடலலைகளிற்கு மத்தியில் தத்தளித்த தமிழ் வாலிபன் தம்மைத்தாக்க வேண்டாமென கும்பிட்டுக கேட்டுக்கொண்டபோதும் அவரை கரைக்கு வரவிடாமல் தடிகளால் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலைச் சமாளிக்முடியாத இளைஞர் கடலலைகளிற்கு மத்தியில் பின்னோக்கிச் சென்ற போது அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டு,மூழ்கி இறந்துள்ளார்.

கொழும்பு மாநகரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து ஐந்து நிமிட நேர நடை தூரத்தில் பம்பலப்பிட்டி போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. பல சிங்களப் பொதுமக்களும் சில சிங்களப்பொலிசாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவே இத்தமிழ் இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

கண்கண்ட சாட்சியின்படி குறித்த இளைஞர் பம்பலப்பிட்டி கரையோர பிரதான வீதியில் நின்று வாகனங்களுக்கு கல்லெறிந்துள்ளார்.

இதன் போது வீதியில் சென்ற இராணுவ வாகனத்திற்கும் அவர் கல்லெறிந்துள்ளார். இந்தநிலையில் இராணுவ வாகனம் நிறுத்தப்படவே, அவர்,அருகில் உள்ள புகையிரத கடவைக்கு பாய்ந்து சென்றுள்ளார்.

இதன்போது, புகையிரதம் ஒன்று வரவே, அதற்கும் அவர் கல்லெறிந்துள்ளார்.உடனடியாக புகையிரம் நிறுத்தப்பட்டபோது இளைஞர் கடலில் குதித்துள்ளார்

இந்த இளைஞரைத் தாக்கிய பொலீஸ் உத்தியோகத்தரை விசேட பொலீஸ் குழு கைது செய்து விசாரிக்கின்றது. இலங்கைச்சட்டதிட்டத்திற்கமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கைத்தீவில் வாழும் பிரஜைகளைப் பாதுகாப்பதில் சட்டமும் பொலீசும் சரியாக செயற்படும் என்றெல்லாம் கூறும் சிங்களத்தின் வழமையான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்டவர் ஒரு மனநோயாளி என சொல்லப்படுகின்றது. நீதித்தறையும் சட்டமும் உள்ள ஐனநாயக நாட்டில் வாகனத்திற்கும் புகையிரதத்திற்கும் கல்லெறிந்த ஒருவரை கைதுசெய்யாமல் காவல்துறையானது பொதுமக்களின் உதவியுடன் அடித்துக்கொன்றுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர் கும்பிட்டு மன்றாட மன்றாட தடியால் அடித்து தாக்கப்பட்டு , கடலலை இழுத்துச்செல்லக்கூடிய ஆழ்கடல்பக்கம் விரட்ட்பட்டுள்ளார். சம்பவத்தை தலைமையேற்று நடத்திய பொலீஸ்காரனுக்கு தெரியாதா கடலலை உள் இழுக்கும் என்று?. நோயாளிக்குக் கூட இலங்கைத்தீவின் சட்டம் பாதுகாப்புக் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

இப்படிப்பட்ட பல சம்பவங்களை உதாரணமாகக் கூறமுடியும். செம்மணியில் 600க்கு மேற்பட்டவர்களை கொன்று புதைத்துவிட்டு சுயாதீன விசாரணைக் குழுக்களை அமைத்து நீதியான விசாரணை என்ற பெயரில் நடந்த விசாரணை என்னவாயிற்று. பிந்துனுவேவ நலன்புரிநிலையத்தில் பொலீசாரின் பாதுக்காப்பில் இருந்த தமிழ் இளைஞர்களை பொலீசாரின் ஆசிகளுடன் கொன்றொழித்த சம்பவத்திற்கான விசாரணைக்கு என்ன நடந்தது. மூதூரில் கொல்லப்பட்ட 'அக்சன் பாம்' தொண்டு நிறுவன தமிழ் ஊழியர்களிற்கான விசாரணைக்கு என்ன நடந்தது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை சுட்டுக்கொல்லும் காணொளி(வீடியோ) ஆவணம் வெளிவந்து மனித உரிமைகள் தொடர்பான விசாரணைக்கான சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் சிங்கள ஆட்சியாளர்களின் கோரமுகம் மீண்டும் புலப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண பொலீஸ் உத்தியோகத்தரால், சிங்களப்பொதுமக்களின் உதவிகொண்டு, சக பொலீஸ் உத்தியோகத்தர்களுடன் சிங்களபொதுமக்களும் வேடிக்கைபார்க்க தமிழ் பொதுமகனை அடித்துக்கொல்லலாம் என்பதானது, இலங்கைச்சட்டம் தமிழ் மக்களிற்கு எத்தைகைய பாதுகாப்பை வழங்குகின்றது என்பதையே உணர்த்தி நிற்கின்றது.

சிங்கள சமூகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல 1958 ம் ஆண்டிலிருந்து 1977,1981, 1983 கலவரங்கள் உட்பட பல தசாப்தங்களாக தமிழ்மக்களைக் கொலைசெய்வதும் அதற்கு சட்டம் தனது பாதுகாப்பை வழங்குவதும் சாதாரணவிடயமே.

அகதிமுகாம்களில் இருந்த மக்கள் சமைப்பதற்கு விறகு எடுக்கச்சென்ற போது சுட்டுக்கொலைசெய்ய அனுமதிக்கப்பட்ட இராணுவம் போல கொழும்பின் ஆட்சிஅதிகார மையத்தில் நடந்த இச்சம்பவமானது சிங்களத்தின் காட்டுமிராண்டித்தனமான முகத்தை மீள வெளிப்படுத்தியுள்ளதுடன் தமிழனுக்கு இலங்கைத்தீவில் எங்கும் பாதுகாப்பில்லை என்பதையே சுட்டிக்காட்டி நிற்கின்றது.

அதேவேளை தமிழ் மக்களிற்கு சுதந்திரவிடுதலை ஒன்றே இலங்கைத்தீவில் பாதுகாப்பானது அல்லாவிடின் நாய்போல் அடித்துக்கொல்லப்படுவாய் தமிழா! என்ற முக்கிய செய்தி ஒன்றையும் இச்சம்பம் எடுத்துக்காட்டி நிற்கின்றது.

பார் தமிழா பார்



பார் தமிழா பார்
சுட்டுக்கொன்ற காணொளி காட்சியின்
இரத்தம் காய்வதற்கு முன்பே!
அதிகாரமையமாம் கொழும்பில்
சிங்களன் குழுமியிருந்து
கிரிக்கெற் மட்டையடிப்பை
வேடிக்கைபார்த்து மகிழ்வதைப்போல் மகிழ
கும்பிடக்கும்பிட நாய்போல் - தமிழனை
கட்டையால் அடித்துக் கொல்கின்றான் - சிங்களன்
பார் தமிழா பார்.

பார் தமிழா பார்
அடித்துக்கொன்றவன்
சட்டத்தைக் காப்பாற்றும்
காக்கிச்சட்டைக்காரன்,
உதவிக்கு!
சாத்வீகத்தை போதித்த
புத்தரின் வாரிசுகளான
சிங்களப் பொதுமக்கள்
உனது உயிரின் மதிப்பைபாத்தாயா?
விலையைப்பார்த்தாயா?
சிங்களனின் விளையாட்டுப்பொருளாகி
விட்டதா? ஈழத்தமிழனின் உயிர்
பார்தமிழா பார்.

பார் தமிழா பார்
தீர்வைப்பற்றி பேசிய சர்வதேசம்
நகரமுடியாமல் வாய்பொத்தி நிற்கின்றது
பக்கத்திலிருக்கும் இந்தியாவோ
தனது பிராந்திய அரசியல் நலனுக்காக
தமிழனை பகடைக்காயாக்கிவிட்டது.
துரோகித்தமிழன் வாழ்வரசியல் அடிமையாக
சிங்களனிடம் நக்கி! தமிழனை
தென்சிங்களத்திற்கு அரசியல் அடிமையாக்க முனைகின்றான்
உனக்கிருக்கும் வழிதான் என்ன
இனி வெள்ளையரும் வரமாட்டார்
பக்கத்துவீட்டுக்காரனும்
வாய்பொத்தி மௌனிப்பான்
உனது வழியை நீ தான் பார்க்கவேண்டும்
பார் தமிழா பார் நடப்பதை காணொளியிலும்பார்
உனக்கு நடப்பது நாளை
உன்சந்ததிக்கும் நடக்குமென சொல்லி
உன்சந்ததிக்கும் காணொளியை போட்டுக் காட்டி
பார் தமிழா பார்

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை நீக்கப்பட்டால் அது தண்டனையா? உடன்பாட்டு மீறலா?

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதிக்கான வரிக் கட்டணம் ஏதுமின்றியே தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக இலங்கைக்கு வழங் கப்பட்டு வந்த "ஜி.எஸ்.பி." வரிச்சலுகை நீக்கப்படுமா என்ற சந்தேகம் வலுத்து வருகையில், இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.

இத்தகைய விசேட வரி விலக்கு சலுகையை ஐரோப் பிய ஒன்றியம் இலங்கை உட்பட உலகின் பதினாறு வறிய நாடுகளுக்கு வழங்கியுள்ளது. ஏதேனும் ஒரு காரணத் திற்காக இச்சலுகையை இலங்கைக்குத் தொடர்ந்து வழங் காமல் ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்துமானால், இந்தச் சலு கையைக் கோட்டைவிட்ட முதல் நாடு என்ற "தனிப் பெருமை" இலங்கைக்குக் கிட்டும்.

இலங்கை நிலைமை குறித்த தனது விசாரணை அறிக் கையை அண்மையில் பகிரங்கப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையில் சித்திரவதை, கடத்தல், அரசுடன் தொடர்புடைய துணைப் படைக் குழுக்களுக்கு சிறுவர்களைச் சேர்த்தல், அவசரகால நிலைமையைப் பயன்படுத்தி அரசியல், சிவில் உரிமைகளை அடக்குதல் போன்ற அத்துமீறல்கள் அளவுக்கு அதிகமாக இடம்பெற்று வருகின்றன என்று அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அத்துமீறல்களுக்குத் தாராளமாக அனுமதித்து நிற்பதன் மூலம், இவ்விடயங்களை ஒட்டிய பல்வேறு சர் வதேசப் பட்டய ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் தனது கடப்பாட்டை நிறைவு செய்ய இலங்கை தவறிவிட் டது என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஆனால், இந்தக் காரணத்துக்காக இலங்கைக்கான விசேட வரி விலக்குச் சலுகையை ரத்துச்செய்யவேண்டும் என்ற திசையை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் நகர முற் படுவது குறித்தும் சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன.

ஒரு நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக் காக, அந்நாட்டின் கைத்தொழில் துறையைத் தண்டிப்பதா அதுவும் வருமானம் குறைந்த மட்டத்தைச் சேர்ந்த பல லட்சம் பேர் தமது அன்றாட சீவியத்துக்காகத் தங்கியிருக் கும் ஒரு துறையை சாகடிப்பதா என்றெல்லாம் விமர்சகர் கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால், இலங்கைக்கான "ஜி.எஸ்.பி." வரிவிலக்குச் சலுகையை நிறுத்த எத்தனிக்கும் ஐரோப்பிய ஒன்றி யமோ, இலங்கை தொடர்பில் தான் எடுக்க உத்தேசிக்கும் நடவடிக்கை இலங்கையைத் தண்டிக்கும் செயலே அல்ல என்று வாதிட்டு வியாக்கியானம் கூறுகின்றது.

2005 இல் மேற்படி வரிவிலக்குச் சலுகையைத் தனக்கு வழங்கும்படி கோரி இலங்கை விண்ணப்பித்த போது, மனித உரிமைகள், சிவில் உரிமைகள், அரசியல் உரிமை கள் தொடர்பான சர்வதேசப் பட்டயங்களை மதித்து நடை முறைப்படுத்தும் என்ற உறுதிமொழியை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியிருந்தது. அந்த உறுதிமொழியின் மீதே இலங்கைக்கு அந்த விசேட வரிவிலக்கு வசதியை சிறப்புரிமையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்தது. ஆனால் இப்போது இவ்வாறு தான் உறுதியளித்த பல்வேறு சர்வதேசப் பட்டயங்கள் தொடர் பான விவகாரத்தில் அந்தப் பட்டயங்களை இலங்கை வெளிப்படையாக அப்பட்டமாக மீறி வருகின்றது. ஆகவே, "ஜி.எஸ்.பி." வரிவிலக்கு சலுகையைப் பெறு வதற்கான உடன்பாடு தொடர்பான ஒப்புக்கொண்ட ஏற் பாடுகளை இலங்கை மீறிவிட்டது என்பதே உண்மை. உடன்பாட்டை இலங்கை மீறியதால், அந்த உடன்பாட் டின் கீழ் தனக்குக் கிட்டிய சலுகையை இலங்கை இழக் கின்றதே தவிர, இது மனித உரிமை மீறல்களுக்குத் தாராள மாக அனுமதித்து நிற்கும் இலங்கைக்கு அதன் காரணமாக வழங்கப்படும் தண்டனையே அல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விளக்குகின்றனர்.

இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் சுட் டிக்காட்டும் இன்னும் சில விடயங்கள் கவனிக்கத்தக்கவை.

"இந்தச் சலுகையை இலங்கை இனித் தொடர்ந்து பெறவேண்டுமானால் இந்த வாய்ப்பு நீடிக்கப்பட வேண்டு மானால் இலங்கை இனியும் வெறும் வாய் வாக்குறுதி களை வழங்கிக்கொண்டிருப்பதோடு அடங்கிவிடக் கூடாது. உறுதியான செயற்பாட்டிலும் அவற்றை வெளிப் படுத்திக் காட்டவேண்டும்." என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய உறவுகளுக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் வெளிவெளியாகவே கூறிவிட்டார்.

இதேசமயம், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தலைவர் பேர்னாட் ஸ்வேஜ் தெரிவித்த ஒரு விடயமும் கவனிக்கத்தக்கது.

"இந்த வரிச்சலுகையை நீடிப்பது தொடர்பான பேச் சுக்கான காலம் முடிவடைந்து விட்டது. இந்த விவகாரத் துக்காக (ஏனைய தரப்புகளிடம்) பிரசாரம் செய்யும் முயற் சியை விட்டுவிட்டு, நேரடியாக விடயத்தைக் கவனித்துத் திருத்தங்களைச் செய்வது குறித்துப் பார்ப்பது நல்லது என்பதை அவர்களுக்கு (இலங்கைக்கு) சிபார்சு செய்ய விரும்புகிறோம்." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, "ஜி.எஸ்.பி." வரிச்சலுகை தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும் என அதன் மூலமான பொருளாதார வளம் கிட்டவேண்டும் என இலங்கை நினைக்குமானால், அந்த வசதியை நீடிக்குமாறு கோரி பல தரப்புகளிடம் பிரசாரம் செய்யும் எத்தனத்தில் தொடர்ந்து ஈடுபடுவதை விட்டு விட்டு, அந்தச் சலுகை நீடிப்பதற்கான நிபந்தனைகளை மனித உரிமைகள் மற்றும் அரசியல், சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச பட்டய ஏற்பாடுகளை முழு அளவில் நடைமுறைப்படுத்துவோம் என்ற தனது உறுதிமொழியை செயலில் நிறைவேற்றுவது குறித்து அது கரிசனை காட்டவேண்டும். காட்டினால் பயன் உண்டு. செய்வார்களா?

நன்றி : உதயன்

Friday, October 30, 2009

ஜனாதிபதி மஹிந்தருக்கு எதிராக சர்வதேச சதி வலைப் பின்னல்

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து, நசுக்கி, தென்னிலங்கை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் நவீன துட்டகைமுனுவாகத் திடீர் எனப் பேரெழுச்சி பெற்று, இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத பெரும் தலைவராக உயர்ந்து நின்ற மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அடித்தளத்தில் திடீரென சிறிய இடறல் பிசிறல் தென்படுவது வெளிப்படை.

"புலி அழிப்பு சாதனை"யில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் அணியில் அவருடன் தோளோடு தோள் கொடுத்து நின்ற முன்னாள் இராணுவத் தளபதியும், முப்படைகளின் தற் போதைய சிரேஷ்ட அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன் சேகா, எதிர்கால அரசியலில் விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் களமிறங்குவார் என்ற தகவல் செய்தி அடிபடத் தொடங்கியதுமே, ஜனாதிபதி மஹிந்தரின் அரசியல் தளம் தடுமாறத் தொடங்கியிருப்பது கண்கூடு.

இது ஒன்றும் தனித்து உள்நாட்டு அரசியலின் அல்லது இங்குள்ள தனி நபர்களின் விருப்பு, வெறுப்புகளால் விளைந்த போக்கோ அம்சமோ அல்ல என்பதுதான் உண்மை.

சர்வதேச சதுரங்கக் காய் நகர்த்தல்களின் விளைவே இப்போது இப்படி வெளிப்படத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இனி எச்சமயத்திலும் நடத் தப்படலாம் என்ற நிலைமை தோன்றியதுமே இந்த அதிரடி கள நிலை மாற்றமும் தென்படத் தொடங்கியிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்க அம்சமாகும்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று பல் வேறு ஊகங்கள் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் இருந்தா லும், இந்த விவகாரங்களின் பின்னணியில் செயற்படும் அரூபக்கரங்களின் சூத்திரதாரிகளின் நோக்கமும், இலக்கும் இவ்விவகாரத்தில் முற்றிலும் வேறானது என்றே விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்க சரத் பொன் சேகா என்ற முக்கூட்டுப் போட்டி நிலையை உருவாக்குவதன் மூலம் மஹிந்தராஜபக்ஷவை மண்கவ்வவைக்கும் இரகசியத் திட்டம் கட்டவிழ்வதாகவே பலரும் அபிப்பிராயப்படு கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் மீதான இராணுவ வெற்றி காரணமாக, இலங்கைத் தீவில் அசைக்கமுடியாத அரசியல் செல்வாக்குடன் தமது பதவியில் வலுவாகக் காலூன்ற முயலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதேசமயம், நாட்டில் தமது அரசியல் செல் வாக்கும், அதிகாரமும் மேலும் உறுதிப்பட்டு, ஸ்திரப்படும் நம்பிக்கை காரணமாக சர்வதேச அரசியலைக் கையாளும் விட யங்களில் சில முக்கிய தரப்புகளுக்கு விரும்பாத தடத்தில் எதேச்சையாகப் பயணிக்க முயல்கின்றார் என்பது எல்லோ ருக்கும் தெரிந்ததுதான். அதுதான் அவருக்கு இன்று எதிர் வினையாக வந்திருப்பதாகப் பலரும் சந்தேகிக்கின்றனர்.

அமெரிக்கா உட்பட்ட மேற்குலகை வெறுப்புற வைக்கும் விதத்தில் வெளிப்படையாகச் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுபக்கத்தில் அமெரிக்க எதிர்ப்பு அணிகளோடு குசலம் விசாரிக்கின்றார். லிபியத் தலைவர் கேணல் கடாபி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோளில் உரிமை யுடன் கைபோடுகின்றார். வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸை, அதிபர் மஹிந்த ராஜபக்ஷ ஆரத் தழுவுகின்றார். ஈரான் அதிபர் அஹமது நிஜாத்தைக் கட்டியணைக்கின்றார். சீனா வுக்கு இலங்கையில் செங்கம்பளம் விரிக்கின்றார் அதிபர் ராஜபக்ஷ.

விடுதலைப் புலிகளுக்கு சவால்விட்டு அதில் வெற்றி கண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதே பாணியில் சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கும் சவால்விட்டுத் தேறலாம் என்று கருதிக்கொண்டு, அச்சக்திகளைத் தூக்கி எறிந்து புறந்தள்ளி உதாசீனப்படுத்தி இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல் வதானால் எள்ளி நகையாடி நடந்துகொள்ள முற்பட்ட போதே இப்போக்கு எத்தகைய விபரீதத்திலும் கொண்டுபோய் விட லாம் என்ற ஓர் ஊகம் பலராலும் வெளியிடப்பட்டே வந்தது.

தனக்கு எதிராக சவால் விடும் சக்திகள் பல நாடுகளிலும் தோன்றும் போது இந்த உலக வல்லாதிக்கத் தரப்புகள் எப்படி நடந்துகொள்கின்றன, எவ்வாறு பின்னணியில் மறைந்திருந்து சூத்திரதாரிகளாக இயங்கி, பல அரசுகளையும் அரசுத் தலை மைகளையும் மண் கவ்வ வைத்திருக்கின்றன என்பதற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றின் பட்டறிவுகள் எமக்குச் சான்று பகர்கின்றன.

அதே நிலைமைதான் சர்வதேச சதுரங்க விளையாட்டுத்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான காய்நகர்த்தல் பின்னணியில் இருந்தபடி கட்டவிழ்கி ன்றன என்பது இலகுவாக ஊகிக்கத்தக்கதே.

ஏற்கனவே இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்திருந்த நிலையில் இங்கு மிக மோசமாக மிகக் கொடூரமாக மிகக் குரூரமாக இடம்பெற்றவை எனக் கூறப்படும் "யுத்தக் குற்றங் கள்"பற்றிய சர்ச்சை இன்று சர்வதேச மட்டத்தில் மேற்குல கால் மிக அழுத்தமாகக் கிளப்பப்பட்டு வருகின்றது.

இந்த இலங்கைத் தீவில் யுத்தக் குற்றங்கள் புரிந்தவர்க ளுக்கு சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் விசேட விலக்கு அளிக்கும் சிறப்புரிமை காப்புரிமை வழங் கப்பட்டுள்ளது என்று குறை கூறி அதற்கு எதிராகத் தீவிரமாகக் குரல்கொடுத்து வருகின்றது மேற்குலகு. இது, தீவிரக் குரல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விடயம் தான். அதில் தப்பில்லை.

ஆனால் அதேசமயம், சில பிரகிருதிகளை இலங்கையின் அரசுத் தலைமைக்கு எதிராகத் திருப்ப வைப்பதற்காக, சர்வ தேச யுத்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களுக்கு மட்டும் விசேட விலக்கு அளிக்கப்படும் என்ற சிறப்புரிமையை, இலங்கை அரசியல் விவகாரத்தில் அந்தப் பிரகிருதிகளை முன்தள்ளிக்கொண்டு வருவதற்கான சலுகையாக உறுதி மொழியாக மேற்குலகு முன்வைக்குமானால் அது பெரும் தப்பு என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேற்குலகின் சுயலாபம் கருதிய முரண்பாடாக குளறுபடியாக இப்போக்கு அர்த்தப்படக்கூடியது.

இலங்கை யுத்தத்தினால் பேரழிவுகளையும், போரழிவுகளையும் சந்தித்துத் துவண்டு கிடக்கும் தமிழினத்தைப் பொறுத்தவரை, "ஊர் இரண்டு பட்டால் யாருக்கோ கொண் டாட்டம்" என்று வளரும் நிலைமையைப் பார்த்திருப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு என்ன மார்க்கம் உண்டு?

நன்றி : உதயன்

Thursday, October 29, 2009

இதயம் வலிக்கும் ஒரு இடப்பெயர்வு....!

எமது வாழ்வில் ஒரு பெரும் சோகத்தை தந்தது, 1995 இன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு. ஒக்ரோபர் 30, வலிகாமம் வலிகளை தாங்கிக் கொண்டு ஒரு இரவுக்குள் தென்மராட்சிக்குள் இடம்பெயர்ந்தது. வார்த்தைகள் கொண்டு இதனை வடித்துவிட முடியாது. அனுபவித்தவன் ஒவ்வொருவனும் ஒரு பெருமூச்சோடு அதனை நினைவு கூர்ந்து கொள்வான். 'சூரியக்கதிர்’ என்ற ஒரு இராணுவ நடவடிக்கை யாழ். தீபகற்பத்தினை விழுங்க ஆரம்பித்தது. மிகச்செறிவான எறிகணைகள்....! பலமான வான் தாக்குதல்கள்...!! கவச வாகனங்களின் குண்டு உமிழ்தல்...!!! என குடாநாடு அதிர்ந்த வண்ணமே இருந்தது. இதன் உச்சக்கட்டமாக நடந்ததுதான் அந்த பாரிய இடப்பெயர்வு. இன்று இலகுவாக 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. எத்தனை மாற்றங்கள். அதனை விட இப்போது எத்தனை கொடிய வலிகள்.

எல்லா இடத்திலும் பதட்டம். எல்லோர் முகத்திலும் கலக்கம். இப்படியான பல இடப்பெயர்வுகளை முன்னரே சந்தித்திருந்தாலும் இது ஒரு வித்தியாசமாக இருந்தது. காரணம் ஒரு சொற்ப பொழுதுக்குள் எல்லோரும் அகதியாக்கப்படுகிறோம் என்ற ஆதங்கம் தெரிந்தது. ஒரு இரவுக்குள் யாழ். குடாநாட்டின் வலிகாம பிரதேச மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து தென்மராட்சிக்குள் புகுந்தனர். ஏறத்தாழ அனைத்து மக்களும் ஊரோடின் ஒத்தோடு என புறப்பட்டே விட்டனர். தேடிய சொத்துக்கள், பரம்பரை பரம்பரையாக கட்டிக்காத்த முதுசங்கள், சொந்த வீடு, காணி, வயல், தோட்டம், கால்நடைகள் எல்லாம் கண் முன் தெரியவில்லை. அரக்கர் கூட்டத்தின் கைகளில் அகப்படக்கூடாது என்பதும், எறிகணைகளுக்குள் அகப்பட்டு அநியாயமாக சாகக் கூடாது என்பதும் உடைமைகள் பற்றி எண்ண முடியாமல் போய்விட்டது. கையில் அகப்பட்டவற்றுடன் புறப்பட வேண்டிய ஒரு சூழல். ஆண்டாண்டு காலமாக வசித்த பூமியை விட்டு கணப்பொழுதில் அகல வேண்டிய ஒரு இக்கட்டான நிலை. இருந்தும் புறப்பட்டே தீரவேண்டும் என்பதால் அனைவரும் அகன்றனர்.

தென்மராட்சிப் பிரதேசத்துக்குள் நுழைய இரண்டு பாதைகள் மட்டுமே. அதுவும் பெரிய அளவில் இல்லை. இரண்டு வாகனங்கள் சமாந்தரமாக போக முடியும். இடையில் கடல் நீரேரிகள். அந்த சாலையில் பாலங்கள் வேறு. இலட்சக்கணக்கான மக்கள் இரவோடிரவாக புறப்பட்டனர். கால்கள் போகும் பாதையில் பயணம். இருளும் சூழ்ந்து கொண்டு விட்டது. எங்கே போகிறோம் என்பது தெரியாது. என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாது. எமக்கு என்ன நிகழப்போகிறது என தெரியாது. கர்ப்பினி, நிறைமாதக் கர்ப்பினி, கைக்குழந்தை, சிறுவர், இளைஞர்கள், வயது வந்தவர்கள், முதியவர்கள்....என எல்லோரும் ஏதிலிகள் போல் நடந்தனர்.

"பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடமறியாமல் - இங்கே
சாகும் வயதினில் வேரும் நடக்குது
தங்கும் இடம் தெரியாமல்............”

என்ற வரிகளை இங்கே தவிர்க்க முடியவில்லை. செம்மணி சுடலை தாண்டியவர்களில் சில பேரிற்கு நாவற்குழி சவக்குழியானது. கைதவறி விடப்பட்ட முதியவர்கள் நீரூள் மூழ்கினர். இருட்டுக்குள் எதுவும் தெரியவில்லை. பாதை எது தண்ணீர் எது என்று எண்ணுவதற்குள் சிலரது வாழ்வு முடிந்து விடுகிறது. ஒரு பத்து மீற்றர் தூரம் நடக்க ஒரு மணி நேரக் காத்திருப்பு. வாகனங்களும் அதற்குள்ளே. அழுகுரல்கள், அய்யோ, கடவுளே, என்ற ஓசைகள் தான் எங்கும். தரையில் தமிழனின் அவலம் கண்டு வானமும் கண்ணீர் சொரிந்தது... ! அது தாகமாக இருந்தவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. குடைகளில் தண்ணீரை ஏந்தி குழந்தைகளுக்கு பருக கொடுத்தனர். அண்ணாந்து வாய் திறந்து ஆகாயம் தந்த நீர்த்துளிகளை குடித்து பசி முடித்தனர். நினைத்துப் பார்க்க முடியாத அவலம். ஆனால் அந்த மழையும் மக்களை வதைத்ததாகவே தோன்றுகிறது. தெப்பமாக நனைந்து விறைத்து போனது பலரது உடல். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. பசிக்கு உணவில்லை. ஒரு வெட்ட வெளிக்குள் நின்றது போன்ற உணர்வு.

கைதடிச் சந்தி தாண்டியதும் ஒவ்வொருவரும் கிடைக்கின்ற இடங்களில் இருந்தனர். மரத்தடி, கோவில், பாடசாலை, சனசமூக நிலையம், உறவினர் வீடு, வீதியோரம் என கால் கடுக்க நடந்தவர்கள் களைப்பாறினர். ஆனால் பின்னர் அதுவே அவர்களின் நிரந்தர குடியிருப்பு பிரதேசங்களாக மாறிவிட்டன. மாளிகை வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மரநிழலில் இருந்தனர். கணப்பொழுதில் வாழ்வின் தத்துவம் விளங்கியது. ஒரு இரவில் எல்லாம் நடந்து முடிந்தது. அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருந்தவர்களும் வெளியேறினர். தமக்கான இடங்களை ஓரளவு தெரிவு செய்தபின்னர் மீண்டும் சென்று சில பொருட்களை எடுத்துவந்தனர். பலவீடுகளில் 50 பேர் 60 பேர் என இருந்தனர். இவை எல்லாம் 5 பேர் வாழ்ந்த வீடு. ஆனால் எல்லோரையும் தாங்கி நின்றது. குழந்தைகளும் முதியோருமே அவதிப்பட்டனர். படுக்கை விரிப்புகள், சாரம் (லுங்கி), சாக்கு, சேலை என்பன கூரைகள் ஆகின. முட்கள், குப்பை, சுகாதாரம் பற்றி எந்தவித கவலையுமின்றி இடம்பெயர்ந்த வாழ்வு தொடங்கியது. வழிமாறி உறவினர்களைத் தேடி அலைந்தவர்களின் அவஸ்தை சொல்லிமாளாது. பெற்றோரை தவறவிட்ட குழந்தைகள். முதியவர்களைத் தவறவிட்ட உறவினர்கள். இன்னார் அவரைத்தேடுகிறார். அவர்கள் இவர்களைத்தேடுகிறார்கள
அறிந்தவர்கள் தகவல் தரவும் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்தும் அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். பத்திரிகைகள் கூட ஒரு வாரம் கழித்தே வெளிவந்தது. கடைகளில் சாமான்கள் இல்லை. இருந்தவை கூட பதுக்கப்பட்டது.

முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு உணவு என்பது பெரிய பிரச்சினையாகவே இருந்தது. உணவுப் பொருட்கள் இல்லை. இருந்தாலும் சமைப்பதற்கு பாத்திரங்களோ அல்லது வசதிகளோ இருக்கவில்லை. முதல் நாள் மாலைப் பொழுதிலேயே சனம் வெதுப்பகங்களுக்கு (பேக்கரி) முன்னால் காத்திருக்க தொடங்கிவிடும், அடுத்தநாள் காலை விற்க இருக்கும் பாண் வாங்குவதற்கு. அதுவும் ஒருவருக்கு ஒரு இறாத்தல் (450கிராம்) அல்லது அரை இறாத்தல். சில பொதுமக்கள், தன்னார்வ ஊர் அமைப்புகள், ஆலயங்கள் தாமாக முன்வந்து சமைத்த உணவுகளை பொதிகளாக்கி வழங்கினர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயம் சுதாரிப்பதற்கு நீண்ட காலம் எடுத்தது. அதன் பின்னரே ஓரளவு நிலைமைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் 1996 ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்துக்குள் காலடி எடுத்து வைத்தோம். ஆனால் அதற்குள் நிறைய பட்டு விட்டோம். படித்து விட்டோம். முகத்தில் அறைந்தது போல் சில யதார்த்தங்களை ஏற்றுக் கொண்டோம். காலம் நிறையவே கற்றுத்தந்தது. சில மனிதர்களை அடையாளம் காட்டியது. சில மனித வேடம் தாங்கிய ஜீவன்களை அடையாளம் காட்டியது. செம்மணி கடக்கும் போது அதிலே இடப்பெயர்வின் போது இறந்தவர்களின் கனமான நினைவு வந்தது. ஆனால் அதே செம்மணிக்குள் யாழ்ப்பாணம் திரும்பிய பின் நடந்த அந்த படுகொலைகளும் புதைகுழிகளும் என்றென்றும் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிக்கொண்டே இருக்கும்.

இன்றளவும் நாம் சந்தித்த இடப்பெயர்வுகள், அவலங்கள் என நிறைய இருந்தாலும் இந்த வலிகாமத்தின் வெளியேறல் ஒரு சரித்திர புள்ளியே. ஒரு இரவுக்குள் சுமார் 4.5 லட்சம் மக்கள் வெளியேறியது என்பது அராஜகப் பிடிக்கு எதிரான ஒரு கிளர்ச்சியே. அன்று 1995 ஒக்ரோபர் 30 ந்திகதி வெளியேறிய எத்தனையோ மக்கள் இன்னமும் சொந்த ஊர் போகவில்லை. தாய் மண்ணில் சாகாமல் வாழ்வை முடித்தவர்கள் பலர். காலங்கள் மாறும். ஆனால் அது தந்த வடுக்கள் மாறாது.

நன்றி : கேடுகுவேலி

வரலாறு கொடுத்த வாய்ப்பு பயன்படுத்துவார்களா தமிழர்கள்?

நீண்டகால மௌனத்தின் பின்னர் சர்வதேச சமூகம் மஹிந்தர் அரசிற்கு நடைமுறை அழுத்தத்தினைக் கொடுக்க தொடங்கிவிட்டது. இலங்கையில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சர்வதேச சக்திகள் என்பவை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா என்பவைதான். இவையனைத்தும் தனித்தும் கூட்டாகவும் அழுத்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. கூட்டு அழுத்தம் பொதுவாக ஐக்கிய நாடுகள் சபை மூலம்தான் கொடுக்கப்படுகின்றது.

அமெரிக்கா, இலங்கை விவகாரம் தொடர்பான அறிக்கையை செனற்சபையில் சமர்ப்பித்துள்ளது. அமெரிக்காவின் தென்ஆசியாவிற்கான இராஜாங்கச் செயலாளர் பிளேக் இது தொடர்பாகக் கடுமையான அறிக்கைகளை விடுத்துவருகின்றார். ஐரோப்பியி யூனியன் "ஜி.எஸ்.பி. பிளஸ்' சலுகையை நிறுத்தும்படி தனது உறுப்பு நாடுகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. இதற்கு அப்பால் பிரிட்டன் இலங்கைத் தலைவர்கள் பலரின் பிரிட்டனுக்கான விசா விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது. ஜனாதிபதியுடன் ஜப்பான் பயணம் செய்யவிருந்த பலருடைய விசா விண்ணப்பங்களை ஜப்பான் நிராகரித்ததுடன் ஜப்பான் சென்ற பிரதமரையும், அரை மணி நேரத்திற்கு மேலாக விமான நிலையத்தில் தாமதப்படுத்தி கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்து அவமானப்படுத்தியுள்ளது.

இந்திய அழுத்தம்
இந்தியா இவற்றுடன் இணைந்து செயற்படாவிட்டாலும் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு ஆகியன தொடர்பாகக் கடுமையான அழுத்தத்தினைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியப் பிரதமரின் கடிதம் நேரடியாகவே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி தனது ஐ.நா. பயணத்தைக் கைவிட்டு பிரதமரை ஐ.நாவிற்கு அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பல தலைவர்களின் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என அவர் அஞ்சியிருக்கலாம். இதற்கு அப்பால் சர்வதேச சக்திகளின் கூட்டு அழுத்தம் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது. அடுத்தடுத்து இலங்கை வருகின்ற ஐ.நாவின் பிரதிநிதிகள் முன்னரைப்போன்று அல்லாமல் காட்டமான அறிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை செயற்படாமை
சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் முதலாவது, சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் வந்து செயற்பட இலங்கை மறுக்கின்றமையாகும். சர்வதேச சக்திகளிடம் குறிப்பாக மேற்குலக சக்திகளிடம் தமது ஆதிக்கத்தை உலகில் மேலோங்கச் செய்வதற்கு அரசியல், பொருளாதார ரீதியாக சில பொறிமுறைகள் உண்டு. ஜனநாயகம், மனித உரிமைகள், சட்டவாட்சி, ஊடகச் சுதந்திரம், திறந்த பொருளாதாரம், உதவி வழங்குதல் என்பவையே அப் பொறிமுறைகளாகும். இப் பொறிமுறைகள் உயர்ந்தபட்சம் செயற்படும்போதுதான் தமது ஆதிக்கத்தை அவர்களால் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

இப்பொறிமுறைகளைப் பின்பற்ற இலங்கை அரசு மறுப்பதுடன், இவ்வழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதற்காக மேற்குலகத்தினதும், பிராந்திய சக்தியினதும் எதிர் சக்திகளோடு உறவு கொள்ளவும் அது முயற்சிக்கின்றது. போர்க்காலத்திலும் இந்த உறவினைப் பயன்படுத்தியே மேற்குலக, பிராந்திய சக்திகளின் எதிர்ப்பினை அது தடுத்து வந்தது. தற்போதும் அதன் தொடர்ச்சியையே அது பேண முயற்சிக்கின்றது.

மேற்குலகத்தைப் பொறுத்தவரையில் ஆசிய மட்டத்தில் எதிர்நிலையில் உள்ளவை என கருதப்படுபவை, சீனா, ஈரான், மியன்மார் என்பவைதான். இச்சக்திகளின் ஆதிக்கம் இலங்கைத் தீவில் வளரக் கூடாது என்பதற்காகத்தான் போர்க் காலத்தின்போது அரசு பக்கத்தில் மேற்குலகச் சக்திகள் நின்றன.

இலங்கைத்தீவு தென்னாசியாவின் கேந்திர மையத்தில் இருப்பதனால் எதிர்நிலை சக்திகளின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கும்போது முழு தென்னாசியாவில் மட்டுமல்லாமல் கிழக்காசியா, மேற்காசியா என்பவற்றிலும் மேற்குலகின் ஆதிக்கத்திற்கு அது பாதிப்பைச் செலுத்தும் என்பது அவற்றிற்கு நன்றாகவே தெரியும்.

இத்தகைய கேந்திர அரசியல் நோக்கு காரணமாக முழு இலங்கைத் தீவும் தமக்குத் தேவை என்பதாலேயே தமிழ் மக்களின் தமிழீழ கோரிக்கையை ஆதரிக்க இவை முன்வரவில்லை. எனினும் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இல்லாவிட்டால் அரசினைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும் என்பதாலும், மனித உரிமைகள் மோசமாக பாதிக்கப்பட்டதாலுமே போரை நிறுத்த அவை முனைந்தன. ஆனால் இந்திய ஆதரவு கிடைக்காததினால் அது இயலவில்லை.

சர்வதேசக் கூட்டுப் பொறிமுறையின் ஆதிக்கத்தைத் தக்க வைக்கும் முயற்சி
இரண்டாவது காரணம் ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து சென்றுவிடும் என்ற அச்சமாகும். சர்வதேச சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு கூட்டு பொறிமுறைக் கருவியாக ஐக்கிய நாடுகள் சபையினையே பயன்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப இங்கை செயற்படாதபோது அதனைத் தடுக்காவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை சரிந்து போவது தவிர்க்க முடியாததே. போர்க் காலத்தில் சட்ட திட்டங்களை மறுப்பதற்கு நியாயம் கூறினாலும், போர் இல்லாக் காலத்தில் அதனை தொடர்ச்சியாக அனுமதிப்பது நம்பகத்தன்மையை வெகுவாகவே பாதிக்கும். அதுவும் வேறு, வேறு நாடுகளில் வேறு, வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றும்போது கண்டனங்களும், எதிர்ப்புகளும் வருவதற்கு அதிகமாகவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் சபை அரசியல் காரணங்களுக்காக சூடான், மியன்மார் விடயங்களில் தீவிரமான போக்கினையும், இலங்கை விடயத்தில் மென்மையான போக்கினையும் கடைப்பிடித்து வந்தது. இதற்கு பிரதான காரணம் இந்தியாவே. இதனால் பலத்த கண்டனங்களை அது எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இன்று ஐக்கிய நாடுகள் சபையுடன் அதன் செயலாளரினதும் நம்பகத்தன்மையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் கையாலாகாதவர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. ஐ.நா. செயலாளருடன் இணைந்து தான் முன்னர் வெளியிட்ட கூட்டறிக்கையை இலங்கையரசு பின்னர் சிறிது கூட கணக்கில் எடுக்காததினால் அவரின் நம்பகத்தன்மை அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது.

சர்வதேச சக்திகள் தமது கூட்டு ஆதிக்கத்தை முன்னர் கூறியமை போல ஐக்கிய நாடுகள் சபையினூடாகவே செயற்படுத்துவதினால், ஐ.நாவின் நம்பகத்தன்மை ஒரு மட்டத்திற்கு மேல் சரிந்து செல்வதை அவற்றால் அனுமதிக்க முடியாது. இதனாலேயே அவசர அவசரமாக பல முனைகளுக்கு ஊடாக அழுத்தங்கள் பீறிட்டுப் பாய்கின்றன.

உண்மைகளைப் படுக்கை விரிப்புக்குள் மறைத்தல், வாக்குறுதிகளை வழங்கிவிட்டு நடைமுறையில் அவற்றுக்கு எதிராக செயற்படுதல் என்பவைதான் சர்வதேச சக்திகளை அதிக கோபத்திற்குள்ளாக்கியிருக்கின்றன. ஐ.நா. ஊழியர்கள் கைது செய்யப்பட்டமை, யுனிசெவ் அதிகாரியின் விசா இரத்து செய்யப்பட்டமை, பத்திரிகையாளர் திஸாநாயகத்திற்கு 20 வருட தீர்ப்பு வழங்கப்பட்டமை போன்ற அண்மைக்கால நிகழ்வுகள் சர்வதேச சக்திகளை உசுப்பேற்றி விட்டுள்ளன.

புலிகளின் மீள் எழுச்சிக்கான வாய்ப்புப் பற்றிய அச்சம்
மூன்றாவது தமிழ் மக்களுக்குச் சார்பான நடவடிக்கைகள் சிறிதளவாவது முன்னேறாவிட்டால் புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அச்சமாகும். புலிகள் திரும்ப மீள எழுவார்களேயானால் நியாயம் அவர்களின் பக்கமே இருக்கும். இது எதிர் நடவடிக்கைகள் எவற்றையும் அவர்கள் மீது எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். அதற்கான தார்மீக உரிமையும் அற்றுப் போயிருக்கும்.

தமிழ் மக்கள் தற்போது புலிகள் இல்லாத வெற்றிட நிலையினை அனுபவ ரீதியாகவே உணர்ந்து வேதனைப்படுகின்றனர். அவர்கள் மீள எழும்புவார்களாக இருந்தால் முன்னரைவிட மிகப்பெரிய ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும். புலிகள் தனித்துப் போராடுவதற்குப் பதிலாக உலகத் தமிழர்கள் அனைவரும் இணைந்து போராடக் கூடிய சூழல் ஏற்படும். உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் போராட்டத்திற்குத் துணையாக நிற்கும். வெறுமனே தேசிய இனத்தின் போராட்டமாக இல்லாமல் மனித தர்மத்திற்கான போராட்டமாக அது வளர்ச்சியடையும். இவ்வாறான நிலை வருமாக இருந்தால், அமெரிக்கா, இந்தியா மட்டுமல்ல எவராலுமே இப்போராட்டத்தை தடுக்க முடியாது போகலாம். இவ் எழுச்சி தமிழீழம் நோக்கி நகர்வதையும் தடுக்க முடியாது. இந்தச் சூழல் வருவதை மேற்குலகோ, இந்தியாவோ விரும்பவில்லை.

ஒருபுறம் சீன, பாக். ஆதிக்கம் மறுபுறம் மேற்குலக ஆதிக்கம்
இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. முதலாவது சீனாவினதும், பாகிஸ்தானினதும் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருவதை எவ்வாறு தடுப்பதென்பதாகும். சிங்கள சமூகமும், இந்தியாவை விட சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை இலங்கை எடுப்பதையே விரும்புகின்றது. சிங்கள சமூகம் என்றைக்குமே இந்தியாவிற்கு ஆதரவாக இருந்ததில்லை. இதனால் தனது நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையைக் கொண்டு வருவதில் இந்தியா தோல்வியையே தழுவி வருகின்றது.

இத்தோல்வி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியிலிருக்கின்ற எல்லாக் காலங்களிலும், இந்தியாவிற்கு ஏற்படுவது வழமைதான். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு மேற்கின் ஊடுருவலுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் இங்கு சீனாவின் ஊடுருவலுக்கும் இந்தியா முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

மேற்குலகத்தின் ஊடுருவலின் போது இந்தியா, இலங்கை அரசிற்கு எதிராக கடுமையான நிலையினையே எடுப்பதுண்டு. இலங்கையிலுள்ள எதிர்க்கட்சியையும் அதற்காக உச்ச வகையில் பயன்படுத்துவதற்கு இந்தியா தவறுவதில்லை. சிங்கள சமூகத்திடமும் மேற்குலக எதிர்ப்பு நிலை தீவிரமாக இருப்பதினால் சிங்கள இனவாத சக்திகள் அதற்கு வலிமையான ஆதரவினை வழங்கி நிற்கும். இதனால் இந்தியாவின் செயற்பாடும் இலகுவாகவிடும்.

சலுகைகள் மூலம் சமாளிப்பு
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சிக் காலத்தில் அதன் சீன, பாகிஸ்தான் சார்பு நிலைக்கு எதிராக இவ்வாறான எதிர்ப்பு நிலையினை எடுக்க முடியாது. சீனா, பாகிஸ்தான் சார்பு நிலையை சிங்கள இனவாதிகள் ஆதரிப்பதாலும், ஐக்கிய தேசிய கட்சி சீனா, பாகிஸ்தானை வெளிப்படையாக எதிர்க்க தயாரில்லாமல் இருப்பதனாலும் கடுமையான எதிர்ப்பு நிலையை எடுக்க இந்தியவால் முடிவதில்லை.

இதனால் பல சலுகைகளைக் கொடுத்து இலங்கை ஆட்சியாளர்களை வளைத்துப் போட இந்தியா முயற்சிப்பதுண்டு. இவ்வளைப்பின் மூலம் தனக்கெதிராக செல்லவிடாது அது இலங்கையைத் தடுப்பதுண்டு. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964), ஸ்ரீமா இந்திரா ஒப்பந்தம் (1974), கச்சத்தீவு ஒப்பந்தம் (1974) என்பவற்றை இந்த வகையிலேயே அதிக விட்டுக் கொடுப்புகளைக் கொடுத்து அது கைச்சாத் திட்டிருந்தது. இதற்காக மலையக மக்களின் நலன்களையும், தமிழக மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுக்கவும் அது தயங்கவில்லை.

இவ்வாறான வரலாற்று நிலையே தற்போதும் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. வன்னிப் போரின் போது தமிழ் மக்களின் நலன்களையும், தமிழக மீனவர்களின் நலன்களையும் விலையாகக் கொடுத்து இலங்கை அரசுடன் இணைந்து போரை அது நடத்தியது. எனினும் சீன ஊடுருவலையோ, தென்னிலங்கை அதிகளவில் சீனா நோக்கிச் சரிவதையோ இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்த ஊடுருவல் இந்தியாவின் கைகளுக்கு அப்பால் சென்றுவிட்டது. மியன்மார் போன்ற நிலைக்கு அது இன்னமும் வராவிட்டாலும் அதனை நோக்கி வேகமாகச் சரிந்து கொண்டிருக்கின்றது.

இந்தியாவை முடக்கும் முயற்சி
இலங்கை அரசு தென்னிலங்கைக்குள் இந்தியாவைக் கால் பதிக்க விடாமல் வடக்கு கிழக்கில் மட்டுப்படுத்த முயற்சிக்கின்றது. ஆனால் இந்தியாவிற்கு வடக்குகிழக்கு மட்டும் போதுமானதாக இல்லை. அதற்கு முழு இலங்கையுமே தேவை. வடக்கு கிழக்கு மட்டும் தேவையாக இருந்திருந்தால், தமிழ் மக்களின் போராட்டத்தை அது ஆதரித்திருக்கும்.

வட கிழக்கில் வலிமையாக கால்பதிப்பதற்கும் தமிழ் மக்களின் ஆதரவும் அதற்கு இல்லை. சம்பூர் பிரதேசத்தை அணு மின் நிலையத்தைச் சாட்டாக வைத்து இந்தியா ஆக்கிரமித்தமை தமிழ் மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியாவின் நலன்களுக்காக போரின் போது தமிழ் மக்களின் நலன்களை அது விலையாக கொடுத்தமையையிட்டும், தமிழ் மக்கள் அதிருப்தியுற்றுள்ளனர்.

கிழக்கில் புலிகள் கருணா முரண்பாட்டுடன் கால் பதிக்க இந்தியா விரும்பியது. கருணா லண்டனில் கைது செய்யப்பட்ட நிலையில் இருந்ததினால் பிள்ளையானைத் தனக்குச் சார்பாக பயன்படுத்த முனைந்தது. ஆனால் தற்போது மஹிந்தர் அரசு இதனை விரும்பாததினால் கருணாவை இதற்கு எதிராக இலங்கை திருப்பி விட்டுள்ளது. கருணா அம்பாறை மாவட்டம் முழுவதும் பிள்ளையானுக்கு எதிராக தற்போது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். படையினரும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர்.

உண்மையில் இங்கு பிள்ளையானும், கருணாவும் மோதவில்லை. மாறாக இந்தியாவும், இலங்கையுமே மோதுகின்றன. இந்திய சார்பு சக்திகள் வலிமையுடன் இலங்கையில் இருப்பதனை இலங்கை அரசும் இராணுவமும் அறவே விரும்பவில்லை.

இந்தியா பயன்படுத்த வடக்கில் எவருமில்லை
வடக்கில் இந்தியா பயன்படுத்துவதற்கு எவருமேயில்லை. டக்ளஸ் தேவானந்தாவை பயன்படுத்த முனைந்த போதும் இலங்கையரசுடன் முரண்படக் கூடாது என்பதற்காக அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இந்தியா தமிழ் மக்களுக்குச் சார்பான நிலைப்பாட்டினை எடுக்கும் வரை தமிழ் மக்களின் மத்தியில் ஒரு தளத்தினை ஒரு போதும் அதனால் அமைக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது பாதுகாப்பிற்காக இந்தியாவை சார்ந்து நின்றாலும் இந்தியாவின் எடுபிடியாகச் செயற்பட அதனால் முடியாது. அதற்குரிய வலிமையும் அதனிடம் கிடையாது. இந்தியாவிற்கு தேவையானபோது ஆயுதம் தரிக்கக் கூடிய அமைப்பே தற்போது அவசியம். அதனாலேயே பிள்ளையானை ஆதரிக்க அது முற்பட்டது. ஆனால் வடக்கில் அதற்கான சாத்தியங்கள் இல்லை.

தமிழகத்தின் நெருக்கடி
அடுத்தது தமிழ் நாட்டிலிருந்து எழும் நெருக்கடியாகும். தமிழ் நாட்டுத் தேர்தல் அரசியல் எப்படித்தான் இருந்தாலும் தமிழக மக்கள் இலங்கை தமிழர்களோடுதான் நிற்கின்றனர். போரில் தமிழ் மக்களின் அழிவும், புலிகளின் தோல்வியும், தமிழக மக்களை வெகுவாகவே பாதித்திருக்கின்றன. தங்களால் இவற்றைப் பாதுகாக்க முடியவில்லையே என அவர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இவையெல்லாவற்றிற்கும் இந்திய அரசே காரணம் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக புலிகள் மீதிருந்த அதிருப்தி எதுவும் தற்போது தமிழக மக்களுக்குக் கிடையாது. மாறாக அனுதாபமேயுள்ளது. இதனை ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போதும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அங்கு பத்திரிகையாளர்கள் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ராகுல் காந்தியைக் கேள்விகளால் துளைத்தெடுத்திருந்தனர். இறுதியில் இதற்கு முகம் கொடுக்க முடியாமல் இரண்டு மணிநேர நேர்காணலை 41 நிமிடத்துடன் முடித்துக் கொண்டு செல்லவேண்டிய நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டது.

எனவே தமிழ் நாட்டு அதிருப்தியையும், சமாளிக்க வேண்டிய தேவையும் இந்தியாவிற்கு உள்ளது. இல்லையேல் விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழ் நாட்டிலும் ஏற்படலாம் என அது அஞ்சுகின்றது. சிங்கள சக்திகளை பாதுகாக்கச் சென்று தமிழ் நாட்டை இழந்துவிட வேண்டாம் என இந்தியா ஆய்வாளர்கள் இந்தியரசிற்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

மற்றைய விடயம் புலிகள் மீள் எழுச்சி பெறுவர் என்ற அம்சமாகும். இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்காத வரை புலிகள் மீள் எழுவதற்கான வெளி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். புலிகளின் வெற்றிடத்தை புலிகளிலிருந்து உருவாகும், புதிய புலிகளால் நிரப்ப முடியுமே தவிர ஏனைய அமைப்புகளினால் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஏனைய அமைப்புகளின் கையாலாகாத நிலை போர் முடிந்து சில மாதங்களுக்குள்ளேயே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. பேரின வாதத்திற்கு எதிராக சிறிய துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையில் அந்த அமைப்புகள் உள்ளன. புலிகள் வலிமையோடு இருக்கின்ற வரை தனது கட்சியின் சொந்தச் சின்னத்தில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தா எவ்வளவோ முயற்சி செய்தும் தனித்துப் போட்டியிட அரசு சம்மதிக்கவில்லை.

புலி எதிர்ப்பு சக்திகள் வாய் பொத்தி மௌனம்
13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்த புலம்பெயர் நாடுகளின் புலி எதிர்ப்பு சக்திகள் இன்று வாய் பொத்தி மௌனம் காக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ் நாட்டில் மாநாடு நடத்த முயற்சி செய்தும் இந்திய உளவுப் பிரிவு அதனை இடையில் குழப்பவிட்டது.

புலிகள் வலிமையாக இருந்த போதுதான் புலி எதிர்ப்பு சக்திகள் இலங்கை அரசிற்கு தேவைப்பட்டன. தற்போது அத்தேவை இல்லாததினால் சிறியளவிற்கு கூட இச்சக்திகளுக்கு மதிப்பினை இலங்கை அரசு கொடுப்பதில்லை.

புலிகளின் மீள் எழுச்சி முன்னைய புலிகளைப் போல ஒருபோதும் இருக்காது. சர்வதேச ரீதியாக வலுவான நியாயத்தைக் கொண்ட உலகத் தமிழர்களையும், உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் இணைத்த பேரெழுச்சியாகவே அது இருக்கும். இராணுவ ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியிலும் பலம் கொண்டவர்களாகவே அவர்கள் விளங்குவர். இது இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் மட்டுமல்லாமல் மஹிந்தருக்கும் நன்றாகவே தெரியும். இந்திய ஆட்சியாளர்கள், அதுவும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இதனை அறவே விரும்பவில்லை.

எனவே இந்நிலைமையைத் தவிர்க்க குறைந்தபட்சம் 13ஆவது திருத்தத்தினையாவது நடைமுறைக்கு கொண்டு வரவேண்டிய கட்டாய நிலை இந்தியாவிற்குள்ளது. ஆனால் மஹிந்தர் அரசு அதற்கும் தயாரில்லாமல் இருப்பது இந்தியாவிற்கு பெரும் எரிச்சலைத் தருகின்றது.

மொத்தத்தில் தற்போதைய போக்கு தமிழ் மக்களுக்கு சாதகமான அரசியல் போக்காகும். மஹிந்தர் ஆட்சி இலங்கையில் இருக்கும் வரை இப்போக்கு வளர்ந்தே செல்லும். மேலும் சில வருடங்களுக்கு மஹிந்தர் ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. எனவே மேற்குலக இலங்கை முரண்பாடு, இந்திய இலங்கை முரண்பாடு தொடர்ந்தும் வளர்ச்சிடைவதற்கான வாய்ப்புக்களே உள்ளன.


வரலாற்று வாய்ப்பு இது!
வரலாறு, சந்தர்ப்பங்களை அடிக்கடி உருவாக்கிக் கொடுக்கும். தற்போதும் உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழ் மக்கள் இதனை எவ்வாறு பயன்படுத்த போகின்றனர்? இதுதான் இன்று எழும் மிகப்பெரிய கேள்வி.

தமிழ்த்தேசிய அரசியலுக்கான அரசியல் தளம் இன்று மூன்று பிரதான இடங்களில் விரிந்து காணப்படுகின்றது. தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழகம் என்பவையே அம்மூன்றுமாகும். தாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், புலம்பெயர் நாடுகளில் புலம்பெயர் மக்களுக்கும், தமிழ்த்தேசிய ஆதரவு சக்திகளுக்கும் இது தொடர்பான மிகப்பெரும் பொறுப்புக்கள் உள்ளன.

இவை மூன்றிலும் தலைமை சக்தியாக இயங்கக் கூடிய தளம் புலம்பெயர் தளம்தான். இதுவே மூன்று தளங்களையும் ஒருங்கிணைத்து தலைமை கொடுக்கும் தகைமையில் உள்ளது.

புலம்பெயர் மக்கள் தலைமை சக்தியாக இருப்பதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன.
முதலாவது புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய சக்திகள் வினைத்திறனுடன் செயற்படக்கூடிய தளமாக புலம்பெயர் தளமேயுள்ளது. புலிகளின் தோற்கடிக்கப்படாத பிரிவினரும் அங்குதான் பெருமளவில் உள்ளனர். தாயகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை முன்னெடுக்க முடியுமே தவிர, தீவிரமான பணிகளை குறிப்பட்ட காலத்திற்கு முன்னெடுக்க முடியாது. இராணுவ நிர்வாகம் அவற்றை அனுமதிக்கப் போதில்லை.

இரண்டாவது தற்போதைய சூழலில் மேற்கொள்ள வேண்டிய மிகப் பிரதான பணி சர்வதேச அரசியலை எமக்குச் சார்பாகத் திருப்புவதுதான். ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இப்பணியினை செய்யாமல், அதில் வெற்றி பெறாமல், எதிர்காலத்தில் ஓர் அடி கூட தமிழ்த்தேசிய அரசியலினால் முன்னோக்கி நகர முடியாது. இப்பணி அதிகளவில் புலைமை சார்ந்த அரசியல் இராஜதந்திரப் பணியாகவும், மக்களை இணைத்து போராட்டங்களை நடத்தும் வெகுஜனப் பணியாகவும் இருப்பதினால் புலம்பெயர் நாடுகளே அதற்கு ஏற்ற தளங்களாக இருக்கின்றன.


புலம்பெயர்ந்த மக்களின் பொறுப்பு
புலம்பெயர் மக்கள் இந்த வரலாற்றுப் பொறுப்பைச் சீராக மேற்கொள்வதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். கூடிய வகையில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஓர் அமைப்பை உருவாக்கி ஒன்றிணைந்து பணிகளை முன்னெடுத்தல் வேண்டும். இராணுவ ரீதியான வெற்றிகளை மட்டும் கேட்டுப் பழகியவர்களுக்கு இந்த அரசியல் வேலைகளின் நுண் தளங்கள் புரியாமல் இருக்கலாம். ஆனால் காலத்திற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் எம்மால் ஒருபோதும் முன்னேற முடியாது. இதுவரை கால தியாகங்களை ஒரு சரியான பாதையில் கொண்டு வந்து நிறுத்தி நகர்த்துவதற்கு எங்களது அரசியல் பார்வைகளை விரித்துக் கொள்வது அவசியமானதாகும்.

மாற்று அரசியல் சக்திகளெனத் தம்மைக் கூறிக் கொள்பவர்கள் உப்புச்சப்பற்ற 13ஆவது திருத்தத்திற்குப் பின்னால் நகர்வதை விடுத்து தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து சரியான பாதைக்கு வரத் தவறக் கூடாது. அவ்வாறு தவறுவார்களேயானால் மீண்டும் ஒரு தடவை வரலாறு அவர்களைப் புறக்கணித்துவிட்டு முன்னோக்கி நகரப்பார்க்கும்.

கூட்டமைப்பின் கடமை
தாயகத்தில் தமிழ்த்தேசிய உணர்வை விழிப்புடன் வைத்திருக்க வேண்டியவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரே ஆவர். அவர்கள் அப்பொறுப்பை உண்மையில் உணர்ந்திருக்கின்றார்களா என்பது சந்தேகம் தான். இல்லையேல் எந்தவித நிகழ்ச்சி நிரலும் இல்லாமல் ஜனாதிபதியுடன் பேசச் செல்வது, நிவாரணப் பொருட்களுக்கு கையேந்த அடிபடுவது போல ஜனாதிபதியின் கையைப்பற்ற முன்னிற்பது, தமிழ் மக்கள் எப்போதோ நிராகரித்து விட்ட ஸ்ரீலங்காவின் தேசிய கீதத்தை பக்திப் பரவசத்துடன் பாடுவது எல்லாம் நடந்திருக்காது.

ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் பேச வந்தமை அரசாங்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியென தொழிற்சங்க தலைவர்களின் சந்திப்பொன்றில் கூறியிருக்கின்றார். தம்மோடு வலிமையாக மோதிக் கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் நாங்கள் பேசிக்கொண்டிருக்கின்றோம் எனக் கூறி சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளுவதற்கு அரசிற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த எந்தக் கோரிக்கைக்கும் தெளிவான பதில் எதையும் ஜனாதிபதி வழங்கவில்லை. பேச்சு நடைபெற்று ஒரு மாதம் ஆகியும் கூட இன்னமும் அகதி முகாம்களுக்கு அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தடுப்புக் காவலில் இருக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பனர் கனக ரத்தினத்தையும் விடுவிக்க செய்ய முடியவில்லை.

கூட்டமைப்பின் இயலாமை
தமிழ் மக்களின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேசுவது அவசியம் தான். பேச்சுக்கு ஒரு சாட்சி தேவை என்ற வகையில் வெளி மத்தியஸ்தத்துடனேயே பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும. குறைந்தபட்சம் சரியான நிகழ்ச்சி நிரல்களுடன் ஒரு தொடர் பேச்சுக்குச் சென்றிருக்க வேண்டும். வெறுமனே அரசு சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் பேசக் சென்றிருக்க கூடாது.

ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் சந்திப்பு தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக அரசிற்கே நன்மையைக் கொடுத்துள்ளது. அரசும் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடியும் வரை பேச்சுக்குச் செல்லவில்லை. அத்தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தால், தமிழ் மக்கள் தங்களோடு நிற்கின்றனர் என அது பிரசாரம் செய்திருக்கும். அது நடைபெறாததினாலேயே பேச்சுக்குச் சென்றிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதையாவது செய்வதற்கு முன்னர் தமது அந்தஸ்தையும், பொறுப்பையும் உணர்ந்து கொள்வது அவசியம். இவ்வளவு காலத் தியாகங்களைப் போட்டுடைக்கும் செயல்களில் அது இறங்கக் கூடாது.

அமைப்பு, தொழிற்பாடு என்பவற்றை பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மிகவும் பலவீனமானது. விடுதலைக்காக போராடும் மக்களின் ஒரு பகுதிப் பொறுப்பினை ஏற்றிருக்கும் அமைப்பு என்ற வகையில் இவை உச்ச நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சாதாரண அரசியற் கட்சிக்கு இருக்க வேண்டிய பண்புகள் கூட அதனிடம் இருக்கவில்லை. பல்வேறு அமைப்புகளை இணைத்த ஒரு கதம்பக் கூட்டமாகவே அது உள்ளது. அவற்றுடன் இணைந்த அமைப்புகளும் வெறும் பெயர்களுடன் இருக்கின்ற அமைப்புகளே தவிர தம்மளவில் உள்ளார்ந்த வலிமையானவையாக இல்லை.

இக்குறைபாடு அதன் தொழிற்பாடுகளிலும் பாதிப்புச் செலுத்துகின்றது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயற்பாடுகள் என்று எதுவும் அதனிடன் கிடையாது. அவ்வப்போது கைக்கு வந்தவற்றை மேற்கொள்கின்ற போக்குத்தான் அதனிடம் உள்ளது.

இதனால் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் போதோ, வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்திக்கச் செல்லும் போதோ, அரசுடன் பேசுவதற்குச் செல்லும் போதோ போதிய ஆயத்தங்களுடன் அது செல்வதில்லை. அதற்கான ஆவணங்களை தேடி தயாரிப்பதுமில்லை. அவற்றை மேற்கொள்வதற்காகத் தங்களுக்குள் ஒழுங்காகக் கூடுவதுமில்லை. அதற்கேற்ற ஒழுங்குவிதிகளும் அதனிடம் கிடையாது. 22 நாடாளுமன்ற உறுப்பனர்கள் இருந்தும் 10 பேரைக் கூட நாடாளுமன்றத்தில் ஒன்றாகக் காண முடியாது. அங்கு உரையாற்றும் போது ஏனோ தானோ என்ற வகையில் உரைகள் ஆற்றப்படுகின்றனவே தவிர திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி ஆற்றப்படுவதில்லை.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது மிகவும் முக்கியமானது. பழைய தமிழரசுக் கட்சிக் காலத்தில் அப்போதைய உறுப்பினர்கள் இதனை நன்றாகவே பயன்படுத்தியிருந்தனர். ஆனால் தற்போது கேள்வி நேரம் பற்றி சிறிய அக்கறை கூட செலுத்தப்படுவதில்லை.

தமிழ் மக்களின் போராட்டம் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டம் என்ற கட்டத்திற்குள் சென்ற பின்னர் நாடாளுமன்றக் கட்சிகளிàல் பெரியளவிற்குச் சாதிக்க முடியாது என்பது உண்மைதான். நாடாளுமன்ற அரசியல் என்பதே சமரச அரசியல் அப்பிரிவால் என்பதால், தமிழ்த் தேசியக் அரசியலில் பிரதான பாத்திரத்தை வகிக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆனால் சிறந்த துணைப் பாத்திரத்தை அதனால் வகிக்க முடியம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு துணை பாத்திரத்திற்கு ஏற்ற அமைப்பாகவும் இல்லை என்பது தான் கவலைக்குரியது. இதனை சமாதான காலத்தில் நன்றாகவே அவதானிக்க கூடியதாக இருந்தது.

துணைப் பாத்திரத்தையாவது சரியாக ஆற்றுவார்களா இவர்கள்?
புலிகள் இல்லாத தற்போதைய நிலையில், தமிழ்த்தேசியக் கூடடமைப்பை எப்படியாவது துணைப் பாத்திரத்தை ஆற்றக்கூடியதாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு உடனடியாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பன் ஒரு மாநாட்டைக் கூட்டி கட்சியின் இலக்கு, கொள்கை, வேலைத் திட்டம், அமைப்பு வடிவம் என்பவற்றை தெளிவாக வரையறுத்துக் கொள்வது அவசியமானதாகும். பழையவர்கள் ஒழுங்காக செயற்படாவிட்டால் புதியவர்களை இணைத்தாவது கட்சியின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வது அவசியம். தமிழ் சிவில் சமூகம் விழிப்புடன் இருந்து அழுத்தங்களைக் கொடுக்கும் போதே இவை சாத்தியமானவையாக இருக்கும்.

பிரதான பாத்திரத்தைப் புலிகள் அல்லது அதனிடமிருந்து தோற்றம் பெறும் புதுப் புலிகள் தான் ஆற்றமுடியும். ஒரு விடுதலை இயக்கத்தை வெளிப்படையச்செயற்படுத்தும் களம் இலங்கையில் இல்லாததினால், புலம்பெயர் நாடுகளிலேயே ஒரு குறிப்பட்ட காலத்திற்கு அதனை இயக்க வேண்டியுள்ளது. முன்னர் கூறியது போல இன்றைய காலகட்டம் இராணுவச் செயற்பாடுகளை விட அரசியல் ரீதியான இராஜதந்திரச் செயற்பாடுகளை வேண்டிய நிற்பதால், அதற்கேற்றவாறு விடுதலை இயக்கத்தினைப் புனரமைத்துக் கொள்வதும் அவசியமானதாகும்.

அடுத்தது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும். இந்தியா தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செல்வதைத் தடுப்பதற்கு தமிழ் நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் முக்கியமானவையாகும். தமிழக சிவில் சமூகம் இனறு மிகவும் விழிப்புணர்வு நிலையில் இருக்கின்றது. ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தின் போது அதனைத் தெளிவாகவே பார்க்க முடிந்தது. கருணாநிதியின் வங்குரோத்துத்தனமான செயற்பாடுகளினால்தான் அரசியல் ரீதியாக எழுச்சியடைய முடியவில்லை. அரசியல்வாதிகளை மட்டும் நம்பியிராமல் சிவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அறிவூட்டி அமைப்பாக்கும் போதே அங்கு வினைத்திறன் மிக்க வினைபயன்களை எதிர்பார்க்கக் கூடியதாகவிருக்கும்.

தலைமை, தாயகம், தலைமை மூன்று தளங்களில் பொறுப்பு
இவை எல்லாவற்றிற்கும் முதலாவது நிபந்தனை தலைமை அமைப்பை மீண்டும் சீர் செய்வதே. அதனைச் சீர்செய்து தலைமை, தாயகம், தமிழகம் மூன்றையும் ஒரே நேர்கோட்டில் ஒழுங்கிணைத்து முன்னேறும் போது காத்திரமான பாய்ச்சலை மேற்கொள்ள முடியும்.

இரண்டாம் கட்ட பணியென்பது திட்டமிட்ட வகையில் இராஜதந்திரப் போரை நடத்துவதே. உலகெங்குமுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை இணைத்து முன்னேறும் போது இரண்டாம் கட்டப் பணிகளிலும் எம்மால் இலகுவாக முன்னேற முடியும். இப்பணிகளை தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழகம் ஆகிய மூன்று தளங்களிலும் முன்னெடுப்பது அவசியம். ஐக்கிய முன்னணி தந்திரோபாயம் இவற்றிற்கு அதிகளவில் உதவக் கூடியதாகவிருக்கும்.

வரலாறு காலத்திற்கு காலம் சந்தர்ப்பங்களை உருவாக்கி கொடுக்கும். அந்தச் சந்தர்ப்பங்களை தெளிவாகப் புரிந்துகொண்டு முன்னேறாவிட்டால் வரலாறு ஒருபோதும் எம்மை மன்னிக்காது.

தற்போது வரலாறு உருவாக்கிக் கொடுத்துள்ள சந்தர்ப்பம்தான் ஸ்ரீலங்கா மேற்குலக முரண்பாடும், ஸ்ரீலங்கா இந்தியா முரண்பாடும்.

இந்த முரண்பாடுகளை நாம் எவ்வாறு கையாளப் போகின்றோம்? அதற்கான தயாரிப்புகளை எவ்வாறு, எப்போது செய்யப் போகின்றோம் என்பவை தான் தற்போது எழுந்துள்ள கேள்விகள்.

இந்தியா செய்யும், ஐ.நா. செய்யும், மேற்குலகம் செய்யும் என எமது பிரச்சினைகளைத் தீர்க்க அவற்றின் வாய்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எமக்காக மற்றவர் பிள்ளை பெறமுடியாது.

நாம் என்ன செய்கின்றோம்? என்ன செய்யப் போகின்றோம்? என்பவை தான் முக்கியமான வினாக்கள்.


அரசியல் விமர்சகர்
மகரிஷி

நன்றி : உதயன்

யுத்த வெற்றிக்கான உரிமைக்கு போட்டி போடும் தரப்புகள்!


பொது எதிரிகளான புலிகள் மீதும் அவர்களை ஆதரித்து நின்ற அச்சமூகத்தின் மீதும் மிகக் கொடூரமாக அடக்கு முறையை ஏவிவிடுவதில் ஒன்றுபட்ட தெற்கின் "தேசப் பற்றாளர்கள்" இப்போது கன்னை பிரிந்து அதிகாரத்துக் காக அடிபடத் தயாராகி விட்டார்கள்.

இப்போதைய முறுகல் தீவிரமடையுமானால், கடந்த மே மாதத்தில் யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்தவரை அரங் கேறிய பெருங் கொடூரங்கள் பற்றிய உண்மைகள் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வரும் என நம்பலாம். கூட்டுச் சேர்ந்து குரூரம் புரிந்தவர்கள் அணி பிரிந்தால், புதை யுண்ட இரகசியங்கள் அம்பலத்துக்கு வரத் தொடங்கும் என்று நம்புவதில் தப்பில்லையல்லவா?

விடுதலைப் புலிகளுக்கு மேலான இராணுவ வெற்றி யில் அரசியல் குளிர்காய எத்தனித்த ஜனாதிபதி மஹிந் தருக்கு, அந்த வெற்றி மீதான விவகாரத்தில் உரிமையில் பங்கு கோருபவர்களே ஜனாதிபதியின் அரசியல் செல்வாக் கிலும் பங்கு கேட்பவர்களாகப் போட்டி போடத் தயாராகி விட்டனர்.

இது தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம் தான். தெற்கில் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிய சமயத் தில் இதுவும் சேர்ந்து அரசியல் கலகலப்பை உண்டுபண்ணி நிற்பது புதிய போக்குத்தான்.

அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என்று இரு பக் கங்களாலும் பேசப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி யும், முப்படைகளின் தற்போதைய சிரேஷ்ட அதிகாரியு மான ஜெனரல் சரத் பொன்சேகா தாம் அரசியலுக்குள் நுழைவது பெரும்பாலும் உறுதி என்பதைக் கோடிகாட்டி விட்டார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஜெனரல் பொன்சேகா அங்கு பௌத்த விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் ஆற்றிய உரையும்

அங்கிருந்தபடி, தாய்லாந்தில் தங்கி நின்ற எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் அவர் நீண்ட நேரம் உரையாடினார் என்று வெளியான செய்தியும்

ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலுக்கு நுழைவாரா என்று கேள்வி எழுப்பி வந்தோரின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டன.

"இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. தமிழ் மக்கள் வாழ்வதற்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகக் கூடிய சூழலை ஏற்படுத் தும் நிலைமைக்கு நாம் பங்களிக்கக் கூடாது. நாடு பிழை யான பாதையில் செல்லவும் நாம் அனுமதிக்க முடியாது. அப்படி நடக்குமானால் எனது சீருடையைக் களைந்து விட்டு, அந்த நிலைமையைச் சரிப்படுத்த நான் தயார்.!"

இப்படி மேற்படி நிகழ்வில் பங்குகொண்ட அமெ ரிக்க வாழ் இலங்கைச் சமூகத்தின் பலத்த கரகோஷத் துக்கு மத்தியில் அறிவித்திருக்கிறார் ஜெனரல் பொன்சேகா.

இதை, தென்னிலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் அதிகாரக் கட்டமைப்பில் தற்போது வரை திடீ ரென ஓரங்கட்டப்பட்ட ஜெனரல் பொன்சேகா, ஜனாதி பதியின் அரசியல் தலைமைத்துவத்துக்கு எதிராக மாற் றாக தமது தனிப்பட்ட அரசியல் வாழ்வைத் தொடக்கு வதற்குத் தயாராகிவிட்டார் என்பதற்குக் கட்டியம் கூறும் அறிவிப்பாகக் கருதமுடியும்.

இதில், முக்கியம் என்னவென்றால் இதுவரை, எதிர்க் கட்சித் தரப்புகளிலிருந்து ஆள்களைப் பிரித்துத் தன்பக் கம் இழுத்து, அதன் மூலம் எதிர்க்கட்சிகளைப் பலவீனப் படுத்துவதுடன் தமது அரசுத் தலைமையைப் பலப்படுத்தி வந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அடுத்த ஜனாதிபதித் தேர் தல் மற்றும் பொதுத் தேர்தல் வரப் போகின்றது என்றதும் நிலைமை மாறிப்போயிருப்பதுதான்.

இப்போதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரக் கட்டமைப்பில் உயர் பதவியிலும், அந்தஸ்தி லும் இருந்து காரியமாற்றி, அதன்மூலம் செல்வாக்குப் பெற்ற ஒருவரை புலிகளைத் தோற்கடித்த இராணுவத் தளபதி எனத் தென்னிலங்கையால் மெச்சப்படும் பிரமுகரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வலது கையாக இதுவரை பணியாற்றிய ஒரு மூத்த படை அதிகாரியை அவருக்கு எதிரான துரும்புச்சீட்டாக எதிரணிகள் தூக்கிப் போடும் காய் நகர்த்தலை முன்னெடுத்திருப்பதுதான் முக்கிய திருப்பம்.

சிறுபான்மையினரான தமிழர்களை ஓரங்கட்டுவதன் மூலம் தென்னிலங்கையில் பேரினவாதிகளான சிங்கள வர்களிடம் ஆதரவையும், செல்வாக்கையும் தக்கவைத்து அதன்மூலம் தமது அரசியலை வெற்றிகரமாக நடத் தலாம் என்ற ஒரே நம்பிக்கையில் தனது கடையை விரித் திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அதே வழியில் வந்து "செக் மேட்" போட்டு, தடுத்து நிறுத் தவே, முன்னாள் இராணுவத் தளபதியை முன்னால் கொண்டுவந்து தள்ளியிருக்கின்றன தென்னிலங்கைத் தரப்புகள்.

இந்தச் சவாலைச் சந்திப்பதற்காக சமாளிப்பதற்காக "பழைய குருடி கதவைத் திறவடி!" என்ற பாணியில் தமிழர்கள் பக்கமும் தமது ஆதரவுக் கரங்களைத் திருப்ப வேண்டிய இக்கட்டுக்குள் வந்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

தென்னிலங்கை அரசியல் தலைமைகளிடையே இப் போது உருவாகியுள்ள போட்டாபோட்டி முறுகல் நிலை, இதுவரை தாம் உதாசீனம் செய்து, புறக்கணித்து, ஒதுக் கிய தமிழர்கள்பால் வேறு வழியின்றிக் கை நீட்ட வேண் டிய கட்டாயத்தை அவற்றுக்கு உருவாக்கி நிற்கின்றது. இதுதான் காலத்தின் கோலம் என்பதா?

நன்றி : யாழ்.உதயன் ஆசிரியர் தலைப்பு

Wednesday, October 28, 2009

சாவீட்டில் கொட்டி மேளம் தட்டித் தாலி கட்டும் முதல்வர் கருணாநிதி

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பார்கள். முதல்வர் கருணாநிதி என்ன பாடுபட்டும் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். மறுத்துரைப்போரை அவரது பாணியில் “சிறுநரிக் கும்பல்” “கும்பிட்டுக் கிடக்கும் விபீஷணக் கூட்டம்” “நெடுமரங்கள்” என்றெல்லாம் வசை பாடுகிறார். ஏதோ தமிழ் வளர்ப்பதை தானே ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக கருணாநிதி நினைக்கிறார்.

சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு பாய்ந்து கொண்டிருந்தபோது முதல்வர் கருணாநிதி டில்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இப்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதில்லை போல் படுகிறது. பார்த்திருந்தால் யார் சிறுநரிக் கும்பல், யார் விபீஷணன் என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் முதல்வர் கருணாநிதியை விபீஷணன், எட்டப்பன், காக்கைவன்னியன் ஆகியோரது மொத்த உருவம் எனப் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.

முதலில் எட்டாவது உலகத்தமிழர் மாநாடு எதிர்வரும் ஜனவரி 21 முதல் 24 வரை நடைபெறும் என அறிவித்தார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பவே வெறுமனே “உலகத்தமிழ் மாநாடு” என அறிவித்தார். இப்போது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 24 முதல் 27 வரை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இது சாவீட்டில் கொட்டு மேளம் தட்டித் தாலி கட்டின கதையாக இருக்கிறது!

ஐந்து தடவை முதலமைச்சராக இருந்த போது வராத தமிழ்ப் பற்று இப்போது முதல்வர் கருணாநிதிக்கு பொத்துக்கொண்டு வந்திருக்கிறது. தண்ணீரில் மூழ்கினவன் ; துரும்பைப் பிடித்தாவது கரைசேர நினைப்பது போல துருப்பிடித்துப்போன தனது படிமத்தைத் துலக்கவும் – தமிழினத் தலைவர் அல்லர் தமிழினக் கொலைஞர் – என்ற வரலாற்றுப் பழியைப் போக்கவும் இந்த உலகத்தமிழர் செம்மொழி மாநாடு உதவும் என முதல்வர் கருணாநிதி கனவு காண்கிறார்.

பேரறிஞர் அண்ணா அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ், தமிழர் என்ற உணர்வு முதல்வர் கருணாநிதியால் அமைச்சர் பதவிகளாக, கோபாலபுரங்களாக மாற்றப்பட்டு விட்டன. பதவி ஆசை காரணமாகத் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ மக்களையும் சிங்கள பேரினவாதத்துக்குக் காட்டிக் கொடுத்து விட்டார்.

தமிழ்மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, மனிதச்சங்கிலி, பதவி விலகல், உண்ணாநோன்பு, பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என நீண்ட நாடகத்தை அரங்கேற்றி சிங்கள – பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த தமிழினப் படுகொலைக்குத் துணைபோனார்!

எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், ராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்!

அண்மையில் ஒரு திமுக – காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுவை இலங்கைக்கு அனுப்பி அதில் அரசியல் குளிர் காய நினைத்தார். ஆனால் குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.எம். ஆரோன் 'இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை' என இனவெறி பிடித்த ராஜபக்ச அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இன்னொரு காங்கிரஸ் உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் 'நாங்கள் சென்ற முகாம்கள் எல்லாம் அனைத்துலக தரத்தில் சிறப்பாகவே உள்ளது' என்று திருவாய்மலர்ந்து வதை முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களது வெந்த நெஞசங்களில் வேலைப் பாய்ச்சினார்!

யாழ்ப்பாணத்தில் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற டி.ஆர். பாலுவிற்கு வலம்புரி இதழ் 'சனீஸ்வரன்' என்ற பட்டத்தை வழங்கியது. மேலும் செய்தியாளர்களிடம் “இலங்கையும் - தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி இருநாடுகளிடையேயும் தொழில் வணிகம் பெருகவும் தமிழகம் இலங்கையில் முதலீடு செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும் எனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தார்.

ஆக மொத்தத்தில், இலங்கைக்குச் சென்ற குழுவினர், திருமாவளவன் நீங்கலாக, நவீன ஹிட்லர் மகிந்த ராஜபக்சவின் குருதி நனைந்த கைகளைக் குலுக்கிப், பொன்னாடை போர்த்தி, பரிசுகள் வழங்கி, பரிசுகள் பெற்று ஈழத்தமிழர்களை அவமானப்படுத்தித் திரும்பினார்கள்.

ஆனால் முதல்வர் கருணாநிதியின் உடன்பிறப்புக்கள் அவரைப் பாராட்டித் தமிழகம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். 'இலங்கைத் தமிழருக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர் கலைஞர்!' என்ற மலிவான அரசியல் பரப்புரை செய்து மகிழ்ந்தார்கள்.

இந்த இடத்தில் ஒரு பழம்பாடல் நினைவுக்கு வருகிறது. அது முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

ஆலைப் பலா ஆக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாவோ – நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீர் ஆக்கலாமோ?

ஆலமரத்தைப் பலாமரமாகச் செய்தல் முடியுமோ? நேராக்குவதற்கு இயலாத நாயினது வளைந்த வாலை தேராக நிமிர்த்த முடியுமோ? கருமை நிறமுடைய காகத்தை கிளியைப் போலும் பேசும்படியாகச் செய்வித்தல் ஆமோ? கருணை இல்லாத மூர்க்கனைச் சீர்படுத்த முயலுமோ? ஆகாது என்பதாம்.

இப்போது நடைபெற இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஜனவரி 2011 ல் நடத்தலாம் என உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா அவர்களின் வேண்டுகோளை முதல்வர் சட்டப் பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டிப் புறந்தள்ளி விட்டார்.

இதனை அடுத்து உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவராக விளங்கும் முனைவர் வா.செ. குழந்தைசாமியையும் பொருளாளர் இரா. முத்துக்குமாரசாமியையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்புராயலுவையும்; அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் வைத்து முதல்வர் கருணாநிதி மாநாட்டை நடத்த மெத்தப் பாடுபடுகிறார். இவர்கள் தமிழகத் தமிழர் என்பதால் முதல்வர் கருணாநிதி தமிழகத்துக்கு வெளியே வலை வீசி இருக்கிறார். இதில் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மாட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.

“தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது” என சிவத்தம்பி பி.பி.சி தமிழோசைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.

இலங்கையில் தமிழர் அரசியல் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்துப் பலத்த விமர்சனம் உள்ளது. இந்த நிலையில், நான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது வில்லங்கமான காரியம். எனது நிலைப்பாடு குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் இராசேந்திரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்.

உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள் இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும்.
செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும் அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்று சிவத்தம்பி கூறியிருந்தார்.

ஆனால் இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதைத் தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று சிவத்தம்பி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தனது குத்துக் கரணத்தை நியாயப்படுத்தத் தான் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொன்னது கிடையாது அப்படியாக யாரும் பொருள் கொண்டிருந்தால் தனது சொற்பதத்தில் உள்ள குறைபாடு காரணம் எனத் தமிழறிஞர் சிவத்தம்பி சமாளிக்கிறார்.

எமது முந்திய அறிக்கையில் கூறியிருந்ததை மீண்டும் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!

இந்த மாநாடு தமிழ்மொழிக்குச் சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை.

ஏன் தமிழ்நாட்டில் தமிழில் ஒரு தந்தி கூட அடிக்க முடியாது. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத்தமிழ் செம்மொழி நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள்.

முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

எனவே தமிழீழ மக்கள் விடுதலை பெற்றுப் பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்!

முதல்வர் கருணாநிதியின் அழுத்தத்துக்கோ இழுப்புக்கோ பேராசிரியர் சிவத்தம்பி வளைந்து கொடுத்துத் தனது பெயரைக் கெடுத்துக் கொள்ளமாட்டார் என நம்புகிறோம்.

"தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்"