Friday, February 3, 2012

ஐ.நா மனித உரிமைச் சபையும்…சிங்கள தேசமும்…


‘முழு இலங்கைத்தீவுக்குமான நிம்மதி என்பது, ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகள் வழங்கப்படும் போதே ஏற்படும் என்பதே நிலையான உண்மை’
சிங்கள தேசத்தின் மீதான சர்வதேச அழுத்தத்தங்களின் வாய்க்காலாக, தொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் அமையும் என்பது பலரது எதிர்பார்பாக உள்ளது.
சிறிலங்கா அரசியல் வட்டாரங்கள் பம்பரமாக சுழன்றுவரும் இன்றைய விடயமாக, ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரம் மாறியுள்ள நிலையில், ஓரு தெளிவற்ற, தளும்பலான நிலையே, கொழும்பு அரசியல் மட்டத்தில் காணப்படுகின்றது.
ஐ.நா மனித உரிமைச் சபையில், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சமர்பிக்கப்படமாட்டாது என் கற்பூரம் கொழுத்தி சத்தியம் செய்யாத குறையாக சொல்லி வந்த சிறிலங்கா அரச தரப்பு, நேற்று வியாழக்கிழமை பல்டி அரசியல் பலகாரத்தை ஊடகங்களுக்கு ஊட்டியுள்ளது.
சர்வதேசத்தை ஏமாற்ற தான் நியமித்துக் கொண்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை,  தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதா இல்லையா என்பது குறித்து, இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளளது.
வழமையாக அமைச்சரவைக் கூட்டங்களின் விபரங்களை அறிவிக்கின்ற ஊடகத்துறை அமைச்சர் ஹெகிலிய ரம்புக்வெல, சிறிலங்காவுக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளுக்கு பறந்துள்ள நிலையில், அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா தங்களது இந்த நிலைப்பாட்டினைத் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணை குழு அறிக்கை குறித்து, சர்வதேச நாடுகளும், மனித உரிமை அமைப்புக்களும் அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில்,  நல்லிக்க ஆணைக்குழு அறிக்கையில், என்ன கூறப்பட்டுள்ளது என்பதை உலகம் அறியும், எனவே ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இதை சமர்பிப்பது அவசியமா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது எனவும் அநுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, சிங்கள தேசமானது தமிழினத்தை அழிப்பதற்கு ஓன்றுதிரண்டு நின்றது போல், சிங்கள தேசத்தின் நலன்களைக் காப்பதற்கு ஒன்றுதிரள்வதற்கு தாங்களும் பின்நிற்கமாட்டோம் என்பது போல் சிறிலங்காவின் எதிர்கட்சியான ஐ.தே.க, சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு, ஐக்கிய தேசியக் கட்சி உதவும் என அக்கட்சியின் நாடாளுமன்ற லக்ஷ்மன் கிரியயெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும், சுயாதீனமான சட்டமா அதிபர் திணைக்களம், சுயாதீன நீதிச்சேவை, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றை அரசாங்கம் இயன்றவரை விரைவாக நிறுவவேண்டும் எனவும் அவர் கூறினார்.
அரசாங்கம், தானே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை எப்படி நிராகரிக்க முடியும், எனவே அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மறுபுறம்,
இலங்கைத்தீவில் மனித உரிமைகள் நிலைவரத்தை முன்னேற்றுவதற்கு, தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து , அமெரிக்க தலைவர்களுக்கு விளக்குவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னராகவே, அமெரிக்காவுக்கு தூதுக்குழுவொன்றை அனுப்ப வேண்டும் என, சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை, அமெரிக்காவுக்கு வருகை தந்து, சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் அழைப்பு  விடுத்திருந்த நிலையிலேயே, மகிந்த இதனை வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - நாதம்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment