Sunday, February 5, 2012

மகிந்தவின் மாற்று ஆலோசனைகள் - பாராளுமன்றத்தின் தீரப்பே இறுதியானது


இலங்கையின் 64 ஆவது சுதந்திரதின தேசிய கொண்டாட்டங்கள் புராதன நகரான அநுராதபுரத்தில் நேற்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றபோது அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகளைப் பொறுத்தவரையில் தனது அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.  "பாராளுமன்றமே அதி மேன்மைக்குரியது என்பதையும் மக்களின் விருப்பங்களை அதுவே பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதையும் நினைவுபடுத்த வேண்டிய தேவையில்லை. இதனால்தான் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வொன்றைக் காண்பதற்கு சிறப்பான இடமாக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமையும் என்று நான் திடமாக நம்புகிறேன். தேசத்தை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அமர்ந்திருந்து ஆராய்வதற்கு தெளிவான ஒரு மேடையை பாராளுமன்றத் தெரிவுக்குழு வழங்கும்' என்று தனதுரையில் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

முப்பத்தியொரு உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான செயன்முறைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்ற போதிலும் அவற்றில் பங்கேற்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யும் தயங்குகின்றன. ஐ.தே.க.வினதும் ஜே.வி.பி.யினதும் தயக்கத்துக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல் அணியான கூட்டமைப்பின் தயக்கத்துக்கும் இடையே வேறுபாடு உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தெரிவுக்குழுவின் செயற்பாடுகளில் அறவே பங்கேற்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை அது எடுக்கவில்லை. கடந்த வருடம் அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதிகாரப் பரவலாக்கத்துடன் சம்பந்தப்பட்ட பிரதான விவகாரங்களை பரிசீலணைக்கு எடுக்க வேண்டிய கட்டம் நெருங்கிய நிலையில், அரசாங்கத் தரப்பினரால் அளிக்கப்பட்ட உறுதிமொழி காப்பாற்றப்படுமாக இருந்தால் குறிப்பிட்டதொரு கட்டத்தில் இருந்து தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயாராயிருப்பதாகக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஏற்கனவே கூறியிருக்கிறார்கள்.

கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகளில் காணப்படக்கூடிய இணக்கப்பாட்டை தெரிவுக்குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது. அந்த உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்ட அரசாங்கம் தற்போது கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க முன்வராவிட்டால், அதனுடனான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் பட்சத்தில் அதற்கு சமாந்தரமாக கூட்டமைப்புடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடருவதில் அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினையுமேயில்லை என்று வேறு யாருமல்ல, ஜனாதிபதி ராஜபக்ஷவே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பகிரங்கமாகக் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. தெரிவுக் குழுவுக்கு பெயர்களைத் தருமாறு அரசாங்கம் தொடர்ச்சியாக விடுத்து வருகின்ற வேண்டுகோளை கூட்டமைப்பினர் நிராகரித்த வண்ணமேயிருக்கின்றனர். இதன் விளைவாக ஒரு முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருக்கிறது.  இதனிடையே மாகாண நிருவாகங்களுக்கான காணி, காவல்துறை அதிகாரங்கள் குறித்த ஒரு சர்ச்சையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் ஜனாதிபதி ராஜபக்ஷ நிகழ்த்திய உரையில் இந்த நாட்டில் இனங்களுக்கு வேறுபட்ட மாகாணங்கள் இல்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. "எந்தவொரு தீவிரவாதக் குழுவினதும் யோசனைகளை நடைமுறைப்படுத்துவது நாட்டுக்குப் பயனைத் தராது. எமக்கு நிலைபேறான சமாதானமே தேவை. அத்தகைய தொலை நோக்கை அடைவதற்கு எம்மை அர்ப்பணித்திருக்கின்றோம். எந்தவொரு இனமோ இனக் குழுமமோ வேறுபட்டதொரு மாகாணத்துக்கோ அல்லது நகரத்துக்கோ சொந்தமானதல்ல. நாடு சகல இனங்களுக்கும் சொந்தமானது' என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் பேசும் மக்களின் சரித்திர ரீதியான வாழ்விடங்களின் தனித்துவம் குறித்த சிறுபான்மையின அரசியல் கட்சிகளின் அடிப்படைக் கருத்து நிலைக்கான அரசாங்கத்தின் பிந்திய பிரதிபலிப்பு என்றே ஜனாதிபதியின் இக்கருத்தை எம்மால் நோக்க முடிகிறது. காணி அதிகாரங்கள் தொடர்பிலான கோரிக்கைகளுக்கு எதிரான கருத்து நிலையைப் பிரசாரப்படுத்தும் நோக்கமுடையதாக ஜனாதிபதியின் உரையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிகாரப் பரவலாக்கத்துடன் சம்பந்தப்பட்ட முக்கியமான விவகாரங்களில் திட்டவட்டமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கும் நிலையில், எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வொன்றைக் காண்பதற்கு சிறப்பான இடமாக அமையக்கூடியதென்று ஜனாதிபதி வர்ணிக்கின்ற உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் திறந்த மனதுடனான கலந்துரையாடல்களுக்கும் யோசனை முன்வைப்புகளுக்கும் வாய்ப்புகள் எவ்வாறு ஏற்பட முடியும் என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை!

நன்றி தினக்குரல் 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment