Monday, February 6, 2012

அபிவிருத்தி திட்டமிடல் - தமிழர் காணிகளை சுவீகரிப்பதற்கான இன்னொரு வடிவம்


காணிப்பதிவு தொடர்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கவலையும் சந்தேகமும் விரக்தியும் சிறிதளவு தணிந்திருந்த நிலையில் உத்தேச நகர, நாடு திட்டமிடல் சட்டமூலத்திருத்தங்கள் பற்றிய விடயம்  மக்கள் மத்தியில் மீண்டும் சந்தேகங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்தச் சட்டமூலத் திருத்தத்துக்கு மாகாண சபைகளின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அரசாங்கம் அதனை மாகாண சபைகளுக்கு பாரப்படுத்தியிருக்கிறது. “உத்தேசநகர, நாடு திட்டமிடல் சட்டத்திருத்தத்துக்கு பெப்ரவரி 8 இற்கு முன்பாக தமது இணக்கப்பாட்டை மாகாண சபைகள் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் “மாகாண சபைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாகவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் தமது ஆட்சேபனைகளையும் அதிருப்தியையும் வெளியிட்டிருப்பதுடன் இந்த உத்தேச சட்டமூலம் சிறுபான்மையினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென எச்சரிக்கையையும் விடுத்திருக்கின்றதை அவதானிக்க முடிகிறது. 


இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வுப் பொதியில் மாகாண சபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வட, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தில் பெரிய பங்காளியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தனும் வலியுறுத்தி வருகின்றனர்.  இரு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண சபையால் காணி,  காவல்துறை அதிகாரத்தை மத்திய அரசு, மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நகர, நாடு திட்டமிடல் சட்டமூலத்திருத்தத்துக்கு அங்கீகாரம் வழங்குமாறு கோருவதை கிழக்கு மாகாண சபை கடுமையாக எதிர்ப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

இலங்கை -இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் கால் நூற்றாண்டாக நடைமுறைப்படுத்தப்படும் மாகாண சபைகள் சட்ட மூலத்தில்  காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கு உரித்தாக்கப்பட்டிருக்கும் நிலையில் உத்தேச சட்ட மூலத்திருத்தம் இந்த அதிகாரத்தை பறித்துவிடும் தன்மையைக் கொண்டதென கிழக்கு மாகாண சபை உறுப்பினரான கே. துரைரெட்ணம் சுட்டிக்காட்டியிருப்பதுடன் கிழக்கு மாகாண சபை இந்தத் திருத்தத்திற்கு இணக்கப்பாட்டை வழங்கக் கூடாதெனத் தெரிவித்துள்ளார்.

நிலத்தின் பொருளாதார, சமூக, வரலாற்று, சுற்றாடல், பௌதிக, மத விடயங்கள்  தொடர்பாக  திட்டமிடுதலை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் ஒழுங்கமைக்கவும் முறைமையொன்றை அடிப்படையாகக் கொண்டு தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையை வடிவமைத்து அமுலாக்குவதே இந்த உத்தேச சட்ட மூலத்திருத்தத்தின் நோக்கம் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையின் பிரகாரம் நோக்கங்களை வென்றெடுக்க காணியை சுவீகரிக்க இந்தத் திருத்தங்கள் வழிவகுக்கும். அத்துடன் குறிப்பிட்டதொரு காணியை புனிதப் பகுதியென வரையறைப்படுத்துமாறு புத்தசாசன, மத விவகார அமைச்சர் அறிவிக்க முடியும்.

ஆனால், இந்த உத்தேச சட்ட மூலத்திருத்தங்களால் சிறியதொரு காணித் துண்டையும் எங்கே அது இருந்தாலும் சுவீகரித்துக் கொள்ள முடியுமென்ற அச்சம் வெளியிடப்பட்டிருக்கிறது.  குறித்த காணியானது பொருளாதார சமூக, சுற்றாடல், தேவைகளுக்கு முக்கியமானதென்றோ அல்லது புனிதப் பகுதியென்றோ பிரகடனப்படுத்திவிட்டு சுவீகரிக்க முடியுமென்ற சந்தேகம் பரவலாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவில்லையென்பது பரவலாகக் காணப்படும் முறைப்பாடுகளாகும். வடக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களில் பலர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படாமல் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த காணிகளை இழந்துவிட்டு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த உத்தேச சட்டமூலத்திருத்திருத்தமானது அபிவிருத்தியை இலக்காகக் கொண்டது என்று அரச தரப்பு நியாயங்களை முன்வைத்தாலும இது அதிகாரப் பகிர்விற்கு எதிரானது என்பதை சிந்தனையில் கொண்டு செயற்படுவதே வடக்குதெற்கு ஐக்கியத்துக்கு வழி வகுக்கும். 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் அரசாங்கம் முனைப்புக்காட்டும் உத்தேச நகர, நாடு திட்டமிடல் சட்ட திருத்தங்கள் அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்தத்தை முற்றிலும் வலுவிழக்கச் செய்துவிடும் நடவடிக்கையென சுட்டிக்காட்டுகிறோம்.

நன்றி தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment