Tuesday, February 7, 2012

மனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைக்கும் புவிசார் அரசியல் நலன்கள்


சிரியாவில் வன்முறைகளை நிறுத்துவதற்கான வழிவகையாக அரபு லீக்கினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தை ஆதரிக்கும் வகையில் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை கடந்த சனிக்கிழமை ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோற்கடித்த பிறகு சிரியாவின் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இராணுவத்தின் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன. ஜனாதிபதி பஷார் அல்அசாத் அதிகாரத்தைக் கைவிட்டு தனக்கடுத்த உயர் பதவியிலிருக்கும் ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பைக் கையளிக்க வேண்டும் என்பதுடன் நகரங்களில் இருந்து துருப்புக்களை வாபஸ்பெற்று ஜனநாயகத்தை நோக்கிய படிநிலை மாற்றங்கள் செய்வதை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அரபு லீக்கின் திட்டமாகும். மத்திய கிழக்கில் மாஸ்கோவின் ஒரேயொரு பெரிய நேச அணியாக தற்போது விளங்கும் சிரியாவின் நெருக்கடியில் ரஷ்யா நடந்துகொண்டிருக்கும் முறை மேற்குலகில் பலத்த கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிறது. 

பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பக்கச்சார்பானதாக இருந்தது என்று தனது எதிர்ப்புக்கு நியாயம் கற்பித்திருக்கும் ரஷ்யா உள்நாட்டு போர் ஒன்றில் ஒருபக்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பது முறையான செயல் அல்ல என்றும் குறிப்பிட்டிருக்கிறது. சிரியாவில் ரஷ்யாவுக்கு ஒரு பெரிய கடற்படைத் தளமும் இருக்கிறது. அந்த நாட்டிற்கான பெரிய ஆயுத விநியோகிஸ்தராகவும் ரஷ்யா விளங்குகிறது. அதனால் அசாத் அதிகாரத்தைப் பறிக்கக்கூடிய எந்தவொரு தீர்மானத்தையும் செயலையும் ரஷ்யா ஆதரிக்காது என்பதை விளங்கிக் கொள்வதில் எவருக்கும் சிரமமிருக்க முடியாது. ரஷ்யாவைப் பின்பற்றி தீர்மானத்திற்கு எதிராக வீட்டோவைப் பயன்படுத்திய சீனா தனது எதிர்ப்புக்கான காரணமாக லிபியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் வன்முறையைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றங்களைச் செய்வதற்கு வசதியாக அமைந்த மேற்குலகத் தலையீடுகளில் உள்ள தவறைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.  

பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும் சீனாவும் நடந்துகொண்ட முறை தொடர்பில் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தொடர்ச்சியாக கடுமையான கண்டனங்களைத் தொடுத்த வண்ணம் இருக்கின்றன. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னதாக சிரிய நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா "சிரிய ஜனாதிபதி ஒரு ஆட்சியாளர் என்ற வகையில் தனக்கு இருக்கக்கூடிய நியாயபூர்வத் தன்மையை இழந்துவிட்டார். அதிகாரத்தில் தொடர்ந்தும் தொங்கிக் கொண்டிருப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை. சொந்த மக்களைப் பயங்கரத்திற்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் கொள்கையும் செயலும் அதன் உள்ளார்ந்த பலவீனத்தினதும் தவிர்க்க முடியாத வீழ்ச்சியினதும் வெளிப்பாடுகள்' என்று குறிப்பிட்டிருந்தார்.  

ரஷ்யாவினதும் சீனாவினதும் வீட்டோக்களினால் கடந்த சனிக்கிழமை தோற்கடிக்கப்பட்ட தீர்மானத்திற்கு முன்னதாக சிரிய நெருக்கடி தொடர்பில் மேற்குலக நாடுகள் பாதுகாப்புச் சபையில் 2011 அக்டோபரில் தீர்மான வரைவொன்றைச் சமர்ப்பித்திருந்தன. அதையும் ரஷ்யாவும் சீனாவும் தோற்கடித்தன. "பாதுகாப்புச் சபை சிரிய நெருக்கடி தொடர்பில் உகந்த நடவடிக்கை எடுப்பதை ரஷ்யாவும் சீனாவும் அனுமதிக்கக்கூடிய சூழ்நிலை தோன்றுவதற்கு இன்னும் எத்தனை சிரியர்கள் கொல்லப்பட வேண்டும்' என்று பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் கேள்வியெழுப்பியிருந்தார்.  அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உட்பட 13 நாடுகள் பாதுகாப்புச் சபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக கடந்த சனிக்கிழமை வாக்களித்தன. தீர்மானத்தைத் தடுத்தவர்கள் பாரதூரமான வரலாற்றுப் பொறுப்புக்குரியவர்கள் என்று பிரான்ஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது. 

சிரிய நெருக்கடி தொடர்பில் ஒருபுறத்தில் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் மறுபுறத்தில் ரஷ்யாவும் சீனாவும் கடைப்பிடிக்கின்ற முரண்பட்ட நிலைப்பாடுகள் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் உலகில் இரு பெரிய வல்லரசுகளாக விளங்கிய கெடுபிடி யுத்த கால கட்டத்தின் தர்க்க ரீதியான அணுகுமுறைகள் இன்னமும் தொடருவதையும் உலகில் வேறு பிராந்தியகளில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பிலும் இதே தர்க்கம் பிரயோகிக்கப்பட்டு நிலைவரங்கள் பாரதூரமானவையாக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. சிரிய ஜனாதிபதி அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்கும் சக்திகளின் ஒரு முக்கிய மையமாக கருதப்படும் ஹொம்ஸ் நகரின் பலமாவட்டங்களில் நேற்றைய தினம் சிரியப் படைகள் படுமோசமான விமானக் குண்டு வீச்சுக்களை நடத்தியிருக்கின்றன. இதில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் இதே நகரில் 300 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள். பாதுகாப்புச் சபையில் தனக்கெதிரான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதை சர்வதேச தலையீட்டிற்கு அஞ்சாமல் செயற்படுவதற்கு தனக்குக் கிடைக்கப்பெற்ற விடுபாட்டுச் சலுகையாக அல்லது உரிமையாகவே சிரிய அரசாங்கம் கருதிக்கொண்டு ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது.

தீர்மானத்திற்குக் கிடைத்த தோல்வியால் ஆத்திரமடைந்திருக்கும் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் அசாத் அரசாங்கத்திற்கு நிதியும் ஆயுத விநியோகமும் கிடைப்பதைத் தடுப்பதற்கு பிராந்திய ரீதியான தடைகளை மேலும் இறுக்கமாக்குவதற்கான வழிவகைகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்துகொண்டிருக்கின்றன. வெளிநாட்டு இராணுவ தலையீட்டிற்கு வழிவகுக்கக்கூடியதென்ற காரணத்தால் தீர்மானத்தைத் தோற்கடித்ததாகக் கூறும் ரஷ்யாவும் சீனாவும் சிரிய மக்கள் அசாத்தின் படைகளினால் வகைதொகையின்றி தினமும் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்படுவது குறித்து கவலைப்படுவதாக இல்லை. புவிசார் அரசியல் நலன்கள் மனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைக்கும் இன்னொரு உதாரணம் இது!

நன்றி தினக்குரல் 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment