Thursday, February 9, 2012

சூழ்ச்சிகளும், சதிகளும், கழுத்தறுப்புகளும், அரசியல் களத்தில் தாராளமாக நடந்தேற, "சம்பந்தன்- சந்திரகாந்தன் சந்திப்பு யாருக்கு, யார் வைக்கும் பொறி"...............?

இந்தச் சந்திப்பு முயற்சியின் உள்நோக்கம் குறித்து சந்தேகங்களும், கேள்விகளும் எழுப்பப்பட வாய்ப்புகள் உள்ளன. காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து அதனுடன் கடைசி வரை நின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. புலிகள் இயக்கத்தைப் பிளவுபடுத்திய கருணாவின் தலைமையில் இயங்கிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோ போராட்டத்தை பலவீனப்படுத்தியது. இந்த இரண்டு துருவங்களும் எப்படிச் சந்திக்கப் போகின்றன என்ற கேள்வி பலருக்கும் இருக்கத் தான் செய்கின்றனஅரசாங்கம் எப்படித் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தியதோ அதன் வழியிலேயே சென்று அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பைப் பயன்படுத்த முனையலாம். அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், அதன் மீது புலம்பெயர் சமூகத்தின் கோபத்தைக் கிளறி விடுவதற்காகவும் இப்படியொரு சந்திப்புக்கான ஏதுநிலை உருவாக்கப்பட்டிருக்குமா என்ற கேள்விகளையும் அடியோடு நிராகரித்து விட முடியாது. இப்போது போர் இல்லை. இதனால் கண்டபடி சுட்டுத் தள்ளிவிட முடியாது. எனவே சூழ்ச்சிகளும், சதிகளும், கழுத்தறுப்புகளும், காலைவாரி விடுதல்களும், அரசியல் களத்தில் தாராளமாக நடந்தேற வாய்ப்புகள் உள்ளன. அவை தான் இப்போது பிரதான வழிமுறைகளாகியுள்ளன. இப்படியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிகவும அவதானமாகவே இந்த விடயத்தில் நடந்து கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இது கத்தியின் மீது கால் வைத்து நடக்கின்ற காரியம். இதில் வெற்றிகரமாக நடந்து சென்றால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், அரசாங்கத்தை இன்னமும் வலுவானதொரு பொறிக்குள் சிக்க வைக்க முடியும்.

சம்பந்தன்- சந்திரகாந்தன் சந்திப்பு யாருக்கு, யார் வைக்கும் பொறி?

கிழக்கு மாகாண முதல்வர் சி.சந்திரகாந்தன் இந்த ஆண்டின் முதலாவது நாளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எழுதிய ஒரு கடிதம், இருவரையும் சந்திக்கின்ற ஒரு சூழலைத் தோற்றுவித்துள்ளது. வடக்கு,கிழக்கு மாகாண இணைப்பு விவகாரம் தவிர, காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான நிலைப்பாட்டில் தாமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே நிற்பதாக சந்திரகாந்தன் தனது கடிதத்தில் கூறியிருந்தார். இதுபற்றிக் கலந்துரையாட வருமாறும் அந்தக் கடிதத்தில் அழைப்பு விடுத்திருந்தார். அவர் வழங்கிய 15 நாள் அவகாசம் முடிந்து போன நிலையில் தான் இந்தக் கடிதம் வெளியே கசிந்தது. அது பகிரங்கமானதை அடுத்தே, கலந்துரையாடலுக்கான அழைப்பை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தத் தகவல் வெளியானதும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கிலுள்ள அமைப்புகளின் பெயரால், அறிக்கைகள் சில வெளியாகின. ஆனால் அத்தகைய எதிர்ப்புகள் குறுகிய காலத்துக்குள் மறைந்து போயின. எதிர்ப்புகள் இருந்தாலும் கூட, இந்தச் சந்திப்பு நடக்கும் என்றே கூட்டமைப்பு வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 
  
கிழக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்ட முறையானது கடும் சர்ச்சைக்குரியதொன்றே என்பதில் சந்தேகமில்லை. பிற கட்சிகள் போட்டி போடக் கூடிய ஜனநாயகமற்ற- கடுமையான அச்சுறுத்தல்கள் நிறைந்த சூழலில் தான் அந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. கிழக்கில் இருந்த புலிகள் தோற்கடிக்கப்பட்டதும் அவசர அவசரமாக அரசாங்கம் அந்தத் தேர்தலை நடத்தி சந்திரகாந்தனை பதவியில் அமர்த்தியது. 

அப்போது அரசுக்குத் தேவைப்பட்டது முன்னாள் புலியான சந்திரகாந்தன் கிழக்கு முதல்வராக பதவியேற்பது ஒன்று தான். அதன் மூலம் வெளிநாடுகளை தன்பக்கம் இழுத்து வைத்துக் கொண்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய தமிழ்க் கட்சிகளால் தேர்தலில் பங்கேற்கக் கூடிய சூழல் இல்லாத நிலையில் ஒதுங்கி நின்று கொண்டன. அப்போதைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் பங்கேற்க விடுதலைப் புலிகள் அனுமதித்திருக்கவும் மாட்டார்கள். பிறகட்சிகள் போட்டியிட முடியாத- ஜனநாயகமற்ற சூழலில் அரசாங்கம் அவசர அவசரமாக நடத்திய அந்தத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகரிக்கவில்லை. அண்மையில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு முதல்வருமான சந்திரகாந்தனுடன் இதுபற்றிக் கடுமையான கருத்துகளைப் பரிமாறியிருந்தனர். 
  
மட்டக்களப்பில் நடைபெற்ற பொது நிகழ்வுகளைப் பயன்படுத்தி இவர்கள் ஒருவருக்கு சவால் விடுத்துக் கொண்டிருந்தனர். இரா.சம்பந்தனுக்கு சந்திரகாந்தன் எழுதியுள்ள கடிதத்திலேயே, தான் இரா.சம்பந்தனைச் சந்திக்கச் சென்றபோது, கிழக்கு மாகாணசபையையே தான் அங்கீகரிக்கவில்லை என்று வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார். கிழக்கு மாகாணசபையை அங்கீகரிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது கிழக்கு மாகாண முதல்வருடன் பேச்சு நடத்தப் போகிறது.  இன்னொரு பக்கத்தில் புலிகளின் பினாமிகள் என்றும், வடக்கு ஆதிக்கவாதிகள் என்றும் சுட்டிக்காட்டிய சந்திரகாந்தன், அதே கூட்டமைப்புடன் பேச அழைப்பு விடுக்கிறார். 

  
இதனை ஒரு அரசியல் மாற்றத்துக்கான மெல்லியதொரு கீற்றாகவும் கருதலாம். 
  
கிழக்கில் பிரதேசவாதத்தை தூண்டிவிட்டு அதில் குளிர் காய்ந்த கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரதேசவாதம் தமிழரின் உரிமைப் போராட்டத்தின் பலமாக- அதன் அச்சாணியாக இருந்து முன்நோக்கி நகர்த்தி வந்த ஆயுதப்போராட்டத்தை அடியோடு அழிப்பதில் கணிசமான பங்கை வகித்திருந்தது. இதனால் இந்தச் சந்திப்புக்கு தமிழ்த் தேசியத்தின் மீது தீவிர பற்றுக் கொண்டவர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் கிளம்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் தற்போதைய சூழலில் தமிழர் தரப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்தச் சந்திப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுவதாகத் தெரிகிறது. காணி,காவல்துறை அதிகாரங்களை பெறுவதற்கான போராட்டத்தில்- அரசின் உறைக்குள் இருந்தே ஒரு வாளை உருவிக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானதாக கூட்டமைப்பு கருதுகிறது. ஏற்கனவே, அரசின் உறைக்குள் இருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கூட இந்த அதிகாரங்கள் தேவை என்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையின் ஆதரவைப் பெறுவது, காணி, காவல்துறை அதிகாரக் கோரிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும். 

இந்த அதிகாரங்களை வடக்கு,கிழக்கிலுள்ள மக்கள் கேட்கவில்லை என்றும் அரசியல்வாதிகள் தான் கேட்கிறார்கள் என்றும் அரசாங்கம் ஒரு பிரசாரத்தை செய்து வருகிறது. 

அரசாங்கம் சொல்வது தவறு என்பதை நிரூபிக்க சம்பந்தன் - சந்திரகாந்தன் சந்திப்பும், அண்மையில் இந்த அதிகாரங்கள் தொடர்பாக கிழக்கு மாகாணசபை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானமும் உதவியாக அமையும். அதேவேளை,இந்தச் சந்திப்பு முயற்சியின் உள்நோக்கம் குறித்து சந்தேகங்களும், கேள்விகளும் எழுப்பப்பட வாய்ப்புகள் உள்ளன. காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து அதனுடன் கடைசி வரை நின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. புலிகள் இயக்கத்தைப் பிளவுபடுத்திய கருணாவின் தலைமையில் இயங்கிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியோ போராட்டத்தை பலவீனப்படுத்தியது. இந்த இரண்டு துருவங்களும் எப்படிச் சந்திக்கப் போகின்றன என்ற கேள்வி பலருக்கும் இருக்கத் தான் செய்கின்றன
  
ஆனாலும் பல சமயங்களில் அரசியலில் துருவங்களாக இருப்பவர்கள் ஒன்றிணைவதுண்டு. அதுபோன்றதொரு ஆச்சரியமாகத் தான் இந்தச் சநதிப்பும் நடக்கவுள்ளது. 
  
அரசாங்கம் எப்படித் தமிழர் தரப்பைப் பலவீனப்படுத்தியதோ அதன் வழியிலேயே சென்று அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பைப் பயன்படுத்த முனையலாம். அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், அதன் மீது புலம்பெயர் சமூகத்தின் கோபத்தைக் கிளறி விடுவதற்காகவும் இப்படியொரு சந்திப்புக்கான ஏதுநிலை உருவாக்கப்பட்டிருக்குமா என்ற கேள்விகளையும் அடியோடு நிராகரித்து விட முடியாது. இப்போது போர் இல்லை. இதனால் கண்டபடி சுட்டுத் தள்ளிவிட முடியாது. எனவே சூழ்ச்சிகளும், சதிகளும், கழுத்தறுப்புகளும், காலைவாரி விடுதல்களும், அரசியல் களத்தில் தாராளமாக நடந்தேற வாய்ப்புகள் உள்ளன. அவை தான் இப்போது பிரதான வழிமுறைகளாகியுள்ளன. இப்படியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிகவும் அவதானமாகவே இந்த விடயத்தில் நடந்து கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இது கத்தியின் மீது கால் வைத்து நடக்கின்ற காரியம். இதில் வெற்றிகரமாக நடந்து சென்றால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், அரசாங்கத்தை இன்னமும் வலுவானதொரு பொறிக்குள் சிக்க வைக்க முடியும்.


-நன்றி இன்போ தமிழ் குழுமம்- 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment