Saturday, February 11, 2012

இராணுவ ஆட்சி வட கிழக்கில் ஒழிக்கப்பட வேண்டும், சிறிலங்காவின் எதிர்க்கட்சி

வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அங்கு சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி இருக்கிறது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. இராணுவத்தின் துணை ஆயுதக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்களைக்களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆள் கடத்தல்கள், காணாமல்போகச் செய்யப்படுதல் என்பவற்றைத் தடுக்க புதிய சட்டம் ஒன்று உருவாக்கப் பட வேண்டும் என்றும் நேற்று விடுத்த அறிக்கையில் அழுத்தம் கொடுத்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இரண்டுமே போர்க்களத்தால் சூழப்பட்டிருந்தன. இலங்கை அரசினதும் விடுதலைப்புலிகளினதும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் பெருந்தொகையான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

வடக்கிலும் கிழக்கிலும் உடனிணைந்த சேதங்களுள் பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் இடப்பெயர்வும், அவர்களது வாழ்வாதாரங்களினதும் வாழ்க்கை நிலைமைகளினது பாதிப்பும் அடங்கும். தெற்கின் பல பகுதிகளிலும் ஆழமான வடுக்களை ஏற்படுத்திய இந்தப் போர், நாட்டின் எந்தவொரு பாகத்தையும் விட்டுவைக்கவில்லை.

இறப்புகளின் எண்ணிக்கையும் காயமடைந்து ஆதரவை நாடி நிற்கும் மக்களின் எண்ணிக்கையும் இன்னமும் சரியாகக் கணிப்பிடப்படவில்லை. முகாம்களில் முடங்கிக் கிடப்பவர்களினதும் போர் இடம்பெறாத வலயங்களில் சிக்க வைக்கப்பட்டிருப்பவர்களினதும் எண்ணிக்கையையும் அரசு சரியாக கணிப்பிடத் தவறியமைக்கான காரணங்கள் என்ன என்பதனையிட்டும் நல்லிணக்க ஆணைக்குழு போதியளவில் விசாரித்தறியத் தவறிவிட்டது.

போரின் கடைசி வாரத்தில், போர் நடைபெறாத வலயத்திலிருந்து தப்பியோடிய குடிமக்களைக் குடியமர்த்துவதற்கு போதியளவு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது. அத்தகைய விளைவொன்றுக்கு அரசின் தயார் நிலையையும் ஆணைக்குழு பரிசீலனை செய்யத் தவறிவிட்டது.

போர் இந்தப் பிரதேசங்களில் வாழும் மூன்று பிரதான சமூகத்தினரையும் பாதித்தது என்பதனை அரசு மிகவும் சரியாகவே ஒப்புக்கொண்டுள்ளது. மிக அவசரமான பிரச்சினைகளுள் ஒன்றாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றமும் அதனோடு தொடர்புடைய காணிச் சொத்துரிமை சார்ந்த பிரச்சினைகளுமாகும். ஆணைக்குழு இந்தப் பிரச்சினைக்கு முனைப்பாகக் கருத்தைச் செலுத்தவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நன்கு பயிற்றப்பட்ட நிர்வாக அலுவலர்களில் தங்கியிருப்பதாகத் தோன்கின்றது.

நிலையான தீர்வொன்றைக் காணவேண்டுமாயின் விரிவான சட்டவாக்கம் தேவை. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தூதரகத்தாலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவாலும் நியமிக்கப்பட்ட மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், "இலங்கையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆட்களையும் அகதிகளையும் பாதிக்கும் ஆதனம் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய சட்டப் பகுப்பாய்வு" என்னும் தலைப்பிலான அதன் அறிக்கையில் இந்தப் பிரச்சினைகளுக்குக் கவனம் செலுத்தியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல் நீதிமன்ற விண்ணப்பம் 620/2011 இல் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்ட "பிம்சவிய" என்னும் காணி உரித்துப் பதிவு பற்றிய நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் வழக்கைத் தடைசெய்யும் "நிறுத்தற் கட்டளையையும்" வழங்கியுள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து இடம்பெயர்ந்தமை, பெருந்தொகையான குடிமக்களின் இறப்புகள், தனியார் ஆதனங்களின் அழிவு, கிராமிய சமுதாயங்கள் ஒட்டுமொத்தமாகக் காணாமற்போனமை என்பன ஒரு தேசிய பேரதிர்ச்சியாகும். இது மிகவும் நீண்டகாலத்திற்கு எம்மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கும். அத்துடன் வரவிருக்கும் பல தலைமுறைகளுக்கு எம்மனதில், விசேடமாக தமிழ் மக்களின் மனதில் வேரூன்றியிருக்கும்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை கவனத்திற்கொள்ளப்படாமையையும் நாம் அவதானிக்கின்றோம். ஐ.நாவின் அறிக்கை வெளியிடப்பட்டமையின் விளைவாக ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளையே கையாளும் என்ற நிலைப்பாட்டையே அரசு கொண்டிருந்தது.

10,000 குடிமக்களின் இறப்புகள் ஒரு அத்தியாவசியமான பலி என்ற நவின் திசநாயக்கவின் கூற்று மேலும் புலனாய்பு செய்யப்படுதல் வேண்டும். எனவே, யுத்தத்தின் கடைசிக் கட்டத்தின்மீதும் பதில் சொல்லும் பொறுப்பு பற்றிய பிரச்சினையின் மீதும் முடிவொன்றுக்கு வருவதற்கு முன்பு கிடைக்கக்கூடிய சான்றையிட்டு மேலும் ஆழமாக அவதானித்திருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆணைக்குழுவின் முன்னிலைக்குக்கூட அழைக்கப்படவில்லை. துரதிஷ்டவசமாக அத்தகைய வெளிப்பாடொன்றின் விளைவாக இடம்பெற்றிருக்கக்கூடிய அழிவையும் சேதத்தையும் மட்டுப்படுத்துவதற்கு நியாயமான முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு ஆணைக்குழுவின் முடிவுகள் பதிலளிக்கவில்லை.

"சனல் 4" வீடியோ சர்வதேச மனித உரிமைகள் மீதான முகவராண்மைகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சனல் 4 வீடியோ ஒளிபரப்பிற்கு ஆணைக்குழு தனது கவனத்தைச் செலுத்தியுள்ளதுடன் வீடியோ காட்சியிலிருந்து எழுகின்ற சார்த்துரைகள் உண்மையானவையா பொய்யானவையா என்பதனை நிலைநாட்டுவதற்கு இந்த விடயங்கள் தொடர்பில் சுயேச்சையான புலனாய்வை அரசு ஆரம்பிக்க வேண்டும் எனச் சரியாகவே விதப்புரை செய்தது.

சுயேச்சையான விசாரணைக்கான செயல்முறை அமைப்பு பாரபட்சமற்ற விசாரணையொன்றை நடத்தக்கூடிய ஆற்றல் கொண்டதாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அரசு மனித உரிமைகள் பதிவில் முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இந்த விடயத்தை முடிவுறுத்துவதற்கு மிகவும் அவசர தேவையுள்ளது.

தடுத்துவைக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விடயங்களையிட்டு விசாரணைகளின் முடிவொன்றை நாம் பலமாக விதத்துரைக்கின்றோம். 
இயைபான அதிகாரிகளுக்கு நம்பத்தகுந்த தகவலுடன் அறிக்கையிடப்பட்ட குடிமக்களின் இறப்புகளையும் காணாமற்போதலையும் புலனாய்வு செய்வதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.  இவ்வாறு அந்த நீண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி உதயன்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment