Monday, February 13, 2012

பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எவ்வாறு? அமெரிக்காவின் ரப் குழுவினர் ஆய்வு

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், பாதுகாப்பு வலையங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எவ்வாறு, மக்கள் பகுதிகளுக்குள் எறிகணைகள் எந்த திசையிலிருந்து வந்தன, கண் மற்றும் உடலில் எரிவை ஏற்படுத்தும் வெடிபொருட்கள் பாவிக்கப்பட்டனவா என்பன போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்றங்ளுக்கான விசேட தூதுவர் ஸ்ரீபன் ரப் தலைமையிலான குழு ஆய்வு செய்துள்ளது. நேற்றுக் காலை கிளிநொச்சி இரணைமடு பகுதியை அண்டியுள்ள கிராமமொன்றில் மக்களுடன் சந்திப்பொன்றை மேற்படி குழுவினர் மேற்கொண்டுள்ளனர். காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த சந்திப்பில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் நீடித்திருந்தது.


இந்தச் சந்திப்பில் தாயாரொருவர் சாட்சியளிக்கையில், “கடற்கரையில் சிறுபிள்ளைகளைப்போல மணலை கும்பிகளாக்கிவிட்டு அதன் பின்னால் ஒழிந்து கொண்டிருந்தோம். ஆறு தடிகளைப் போட்டு அமைத்துக் கொண்ட கூடாரத்தினுள்தான் நாங்கள் தங்கியிருந்தோம், எம்மைச் சுற்றி நெருக்கமாக பல ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருநாள் காலை ஷெல் வீழ்ந்து வெடித்தது. நாங்கள் வீழ்ந்து படுப்பதற்குள் அடுத்தடுத்து சற்று இடைவெளியில் பல ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன.அதிலொன்று எமது கூடாரத்தின் மேல் வீழ்ந்து வெடித்தது. அதில் நான்கு பெண் பிள்ளைகளும் மருமகனும் ஒரு வயது நிரம்பிய பேரப்பிள்ளையும் உயிரிழந்தனர். எனக்கும் முள்ளந்தண்டில் காயம்பட்டு இயங்க முடியாத நிலையில் என்னுடைய விதவை மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்‘  என கண்ணீர் மல்க கூறினார்.


இதேபோல் காணாமல் போனோர், இராணுவத்தினரிடம் உறவினர்களை ஒப்படைத்தோர் என ஒவ்வொரு வகைப்பாட்டிலிருந்தும் ஒவ்வொருவரைத் தெரிவு செய்து மிகவும் நிதானமாகவும் முழுமையாகவும் ஆய்வு செய்து தகவல்களை எடுத்துக்கொண்டனர். மேலும் இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிற்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டமை எவ்வாறு? எனவும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிற்குள் ஷெல்கள் எந்தத் திசையிலிருந்து வந்தன என்பன குறித்தும் கண் மற்றும் உடலில் எரிவை ஏற்படுத்தக் கூடிய வெடிபொருட்கள் பாவிக்கப்பட்டனவா என்பது குறித்தும் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

இதேபோல் இறுதி யுத்த காலத்தில் பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் மாற்றக் கூடிய சிறு காயங்களால் கூட ஏற்பட்ட மரணங்கள் குறித்தும் உணவு மற்றும் மருந்து வசதிகள் இன்மை குறித்தும் மக்கள் தமது மனக்குறைகளைப் பகிர்ந்து கொண்டனர். இதேபோல் யுத்தத்தின் பின்னர் முழுமையான இராணுவ நெருக்குல்தகளுக்குள் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றமை, மற்றும் போரில் அதிகமான இழப்புகளைச் சந்தித்த மக்கள் தொடர்ந்தும் உரிய வசதிகளற்ற நிலையில் வாழ்கின்றமை தொடர்பிலும் மக்கள் தெரிவித்தனர்.

நன்றி தினக்குரல்

Reactions:

2 கருத்துரைகள் :

கலயம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்னங்க வலயம்?

மன்னிச்சுக்கோங்கோ, அது வலயம் இல்லை, வலையம் என்று வரவேண்டும். திருத்திவிட்டேன்.

மிக்க நன்றி

Post a Comment