Thursday, February 16, 2012

ஜெனிவாவில் இந்தியா என்ன செய்யப்போகிறது.............?


"சீனா விடயத்தில் தாம் ஏமாந்து விடக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. ஆனால் அதை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அப்படி வெளிக்காட்டுவது தமது பலவீனமாக கருதப்பட்டு விடும் என்று இந்தியா அஞ்சினாலும், சீனாவை விட இலங்கையிடம் அது அதிகம் நெகிழ்ந்து போகிறது என்பதே உண்மை. சின்னஞ்சிறிய இலங்கையைப் பணிய வைத்து காரியம் சாதிக்க முடியாத நிலையில் தான் இந்தியா இப்போது இருக்கிறது. அது மீனவர்களின் பிரச்சினையாகட்டும், தமிழர்களின் பிரச்சினையாகட்டும் எந்த விடயத்திலும் இந்தியாவினால் தாம் நினைத்ததை செய்து கொள்ள முடியவில்லை. எப்படியாவது இலங்கை அரசைத் தன் பிடிக்குள் இருந்து மீறிச் செல்லாத வகையில் வைத்திருப்பதற்காக இலங்கையுடன் மிகவும் தாராளமாகப் பொறுமையைக் கடைப்பிடிக்கிறது. இப்படிப்பட்டதொரு கட்டத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படியானதாக இருக்கும் என்று எவராலும் இலகுவில் ஊகித்து விட முடியும். ஆனால் இந்தியா இந்த விடயத்தில் குழப்பமானதொரு நிலையில் இருப்பதாகவே தோன்றுகிறது. 2009இல் போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டது. அப்போது இந்தியாவும் முன்னின்று இலங்கையைக் காப்பாற்றியது. அது இந்தியாவுக்கு ஒரு பழியாகவே இருந்து வருகிறது. சிரியா விடயத்தில் மேற்குலகுடன் ஒட்டி நின்ற இந்தியா- இலங்கை விடயத்தில் மட்டும் எதிர்த்து நிற்குமா என்பது கேள்வி தான். அதேவேளை, இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஒரு கருவியாகத் தான் அமெரிக்கா கருதுகிறது. அதாவது நல்லிணக்கம், அமைதி, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றை அடைவதற்கான ஒரு கருவியாகவே அமெரிக்கா இதனைப் பார்க்கிறது. இப்படிப்பட்ட நிலையில், இந்தியா அப்படியானதொரு வாய்ப்பு உருவாவதை தடுக்க முனைந்தால் அந்த வரலாற்றுப் பழியை இந்தியாவினால் இலகுவில் துடைத்து விட முடியாது. சீனாவை விட இலங்கையிடம் அது அதிகம் நெகிழ்ந்து போகிறது என்பதே உண்மை. சின்னஞ்சிறிய இலங்கையைப் பணிய வைத்து காரியம் சாதிக்க முடியாத நிலையில் தான் இந்தியா இப்போது இருக்கிறது." 

இனி, 

ஜெனிவாவில் இந்தியா என்ன செய்யப்போகிறது?


ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் மேற்குலகம் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கொண்டு வரப்போகும் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது இந்தியா அந்த முடிவில் இருந்து மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இலங்கைக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கும் என்று இலகுவாக நம்பிவிட முடியாது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளை சரிவரப் புரிந்து கொண்டால், இந்தியா இத்தகைய கட்டத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் அண்மைக்கால போக்கைப் பார்க்கின்ற எவருமே, இலங்கை விடயத்தில் அதன் நெகிழ்வுத்தன்மையை குறைத்து மதிப்பிடமாட்டார்கள். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அண்மையில் கொழும்பு வந்திருந்த போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதாக உறுதியளித்ததாக கூறியிருந்தார். பல நாட்கள் கழித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தான் அப்படியான எந்த உத்தரவாதத்தையும் இந்தியாவுக்கு வழங்கவில்லை என்று குத்துக்கரணம் அடித்தார். எஸ்.எம்.கிருஸ்ணா உறுதிமொழி பற்றிக் கூறியதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவோ, இலங்கை அரசோ உடனடியாக அதுபற்றி எந்தக் கருத்தையும் கூறவில்லை. அதுபோலவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அப்படியான உத்தரவாதம் எதையும் கொடுக்கவில்லை என்று கூறியபோது இந்தியாவும் எந்தக் கருத்தையும் கூறவில்லை. பல நாட்கள் கழித்தாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தான் அப்படிக் கூறவில்லை என்று மறுத்தார். 

ஆனால் இந்தியா நாட்கள், வாரங்களாகியும் வாய் திறக்கவில்லை. 

இந்தியாவின் இந்த மௌனம் ஏமாந்து போய் விட்டதை வெளிப்படுத்துகிறது என்றே பலரும் கூறுகின்றனர். 

ஆனால் அதற்கு மாறான இன்னொரு அர்த்தமும் உள்ளது. தாம் ஏமாந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையே அது. 

சீனா விடயத்தில் தாம் ஏமாந்து விடக் கூடாது என்று இந்தியா கருதுகிறது. ஆனால் அதை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. 

அப்படி வெளிக்காட்டுவது தமது பலவீனமாக கருதப்பட்டு விடும் என்று இந்தியா அஞ்சினாலும், சீனாவை விட இலங்கையிடம் அது அதிகம் நெகிழ்ந்து போகிறது என்பதே உண்மை. 

13 பிளஸ் விடயத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு நடந்த கதி மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக இந்தியா வெளியிட்ட கருத்தின் அடிப்படையிலும் சரி, ஜெனிவாவில் இந்தியா காட்டமான முடிவுகளை எடுக்க வாய்ப்புகள் இருந்தன. ஆனால் ஜெனிவாவில் தனியே இந்தியாவின் ஆதரவை மட்டும் இலங்கை நம்பியிருக்கவில்லை. இந்தக் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை இலங்கை எப்போதோ தொடங்கி விட்டது. வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் உலகில் எங்கு சர்வதேச மாநாடுகள் நடந்தாலும் அங்கே ஓடிப்போய் பிரசாரம் செய்தார். ஆபிரிக்க நாடுகளிலும், தென்அமெரிக்க நாடுகளிலும் ஓடி ஓடி பிரசாரங்கள் செய்யப்பட்டன. 

இலங்கையில் தூதரகத்தைக் கொண்டிருக்காத- புதுடெல்லியை தளமாகக் கொண்டு செயற்படும் இராஜதந்திரிகளை மடக்க கடந்தமாத இறுதியில் புதுடெல்லி சென்றிருந்தார் பீரிஸ். பின்னர் அவர்கள் கொழும்புக்கு அழைத்து அனுராதபுரத்தில் நடந்த சுதந்திரதின நிகழ்வுகளைக் காண்பித்த அரசாங்கம், யாழ்ப்பாணத்தையும் சுற்றிக் காட்டியது. இப்படி இலங்கை அரச்சாங்கம் ஜெனிவா பொறியில் இருந்து தப்ப இராஜதந்திர முறையில் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கட்டத்தில் அமெரிக்காவின் பின்புலத்துடன் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால், இலங்கைக்கு சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் கைகொடுக்கும். 

சீனாவும், ரஸ்யாவும் சிரியா விடயத்தில் நடந்து கொண்ட முறை மேற்குலகை கடும் அதிருப்தி கொள்ள வைத்துள்ளது. மீண்டும் ஒரு முறை இந்த விவகாரத்தினால் குட்டுப்படுவதை மேற்குலகம் விரும்புமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவு கிடைத்து விட்டால், சீனாவினது செல்வாக்கு அதிகரிக்கும். அது இலங்கை மீதான இந்தியாவின் பிடியை தளர்த்தி விடும். எனவே இந்த விடயத்தில் இந்தியா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தீர்மானம் ஒன்றுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்குப் பல முறை யோசித்தே முடிவு எடுக்கும். 

2009இல் போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டது. அப்போது இந்தியாவும் முன்னின்று இலங்கையைக் காப்பாற்றியது. அது இந்தியாவுக்கு ஒரு பழியாகவே இருந்து வருகிறது. சிரியா விடயத்தில் மேற்குலகுடன் ஒட்டி நின்ற இந்தியா- இலங்கை விடயத்தில் மட்டும் எதிர்த்து நிற்குமா என்பது கேள்வி தான். அதேவேளை, இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஒரு கருவியாகத் தான் அமெரிக்கா கருதுகிறது. அதாவது நல்லிணக்கம், அமைதி, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றை அடைவதற்கான ஒரு கருவியாகவே அமெரிக்கா இதனைப் பார்க்கிறது. இப்படிப்பட்ட நிலையில், இந்தியா அப்படியானதொரு வாய்ப்பு உருவாவதை தடுக்க முனைந்தால் அந்த வரலாற்றுப் பழியை இந்தியாவினால் இலகுவில் துடைத்து விட முடியாது.

நன்றி இன்போதமிழ் 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment