Saturday, February 11, 2012

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்


தாம் அனுபவித்த மிகப் பயங்கரமான யுத்த வடுக்களிலிருந்து தம்மை மீட்டெடுத்து, இயல்பு வாழ்வுக்கு திரும்புவதற்கு முதல் யுத்த மீறல்கள் தொடர்பான உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதையே யுத்தத்தின் போது தப்பிப் பிழைத்த தமிழ் மக்கள் விரும்புகின்றனர். யுத்தம் தொடர்பான உண்மை நிலைப்பாடு வெளிக்கொண்டு வரப்படாது மீளிணக்கப்பாடு, மன்னித்தல் போன்றன நடைமுறையில் சாத்தியப்பாடானவை அல்ல என, பாகிஸ்தான் இணையத்தளமான Dawn.com தளத்தில்,  பிபிசியின் முன்னாள் செய்தியாளர் Frances Harrison எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் முக்கிய சராம்சங்களின் தொகுப்பு வருமாறு.  

2009 ல் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அந்நாட்டு அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சரியான வகையில் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்துலக சமூகம் கடும்போக்கைக் கடைப்பிடித்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின் போது சிறிலங்காவிற்கு எதிராக முன்வைப்பதற்கான பிரேரணை ஒன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அதிபர் பாகிஸ்தானுக்கான தனது மூன்று நாள் சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பிக்கவுள்ளார். சிறிலங்காப் போரின் போது கொல்லப்பட்ட பல பத்தாயிரக்கணக்கான சிறுபான்மை தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையில் பாகிஸ்தான் தனது தயக்கத்தைக் காண்பிக்கக் கூடாது. 

"சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது போது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், அனைத்துலக சட்டத்தை முற்றுமுழுதாக மீறிக் காணப்படுவதாகவும், இறுதி யுத்தம் இடம்பெற்ற ஐந்து மாதங்களில் 40,000 தமிழ் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர்" எனவும் ஐக்கிய நாடுகள் சபையால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் அறியப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் எனவும் ஐ.நா விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான புதிய வழியைத் தான் கைக்கொண்டுள்ளதாக தெரிவித்த சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவ வெற்றியை இதன் மூலம் பிரகடனப்படுத்திக் கொண்டது. இந்த அடிப்படையில், வெற்றியைப் பிரகடனப்படுத்திக் கொண்ட சிறிலங்கா அரசாங்கம், பொதுமக்களையும் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்கத் தவறியமை மற்றும் யுத்த மீறல்கள் தொடர்பிலான சுயாதீன சாட்சியங்களை இல்லாதொழிப்பதில் தவறிழைத்தமை  போன்றவற்றின்  பின்னணியில் மிகப் பயங்கரமான, கொடூரமான நில அபகரிப்புக் கொள்கையை சிறிலங்கா அரசாங்கம் கைக்கொண்டுள்ளதையே சுட்டிக்காட்டுகின்றது. 

 2009 ஜனவரி தொடக்கம் மே மாத காலப்பகுதியில், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த மிகச் சிறிய ஒடுங்கிய பகுதிக்குள் அகப்பட்டுக் கொண்ட பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது சிறிலங்கா இராணுவம் எவ்வித தயவு தாட்சண்ணியமும் காட்டாது எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது. புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இப்பகுதிக்குள் பணிபுரிந்த அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்துலக தொண்டர் அமைப்பு பணியாளர்கள் ஆகியோர் முதலிலேயே வெளியேற்றப்பட்டதால் உண்மையில் இங்கு என்ன நடந்தது என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்கு எவரும் அங்கு இருக்கவில்லை. 

இறுதிக்கட்ட யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து நிற்கும் மக்கள் 'தாம் நரகத்திற்குள் வாழ்ந்ததாக' கூறுகிறார்கள். சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் மிகையொலி விமானங்களின் வான் குண்டுத்தாக்குதல்கள் போன்றவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக   பெண்களும் சிறார்களும் மண் அகழிகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். தாக்குதல்கள் தணிந்திருந்த சில பொழுதுகளில், தம்மைச் சுற்றி இறந்த மனித உடலங்கள் சிதறிக் காணப்படுவதையும், கால் அல்லது குழந்தையின் தலை மரத்திற்கு அருகில் கிடப்பதையும் இந்த மக்கள் நேரில் கண்டுள்ளனர். இவ்வாறு சிதறுண்டு கிடந்த தமது உறவுகளின் உடலங்களையும், பாகங்களையும் நாய்கள் உண்ணாமல் இருப்பதற்காக மிக அவசர அவசரமாக அவற்றை குழி தோண்டிப் புதைத்துள்ளனர். 

இறுதிக் கட்ட யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்டு பரிதவித்த ஒவ்வொரு மக்களும் தாம் மயிரிழையில் எவ்வாறு தப்பிக் கொண்டோம் என்பதை ஆழமாகப் பதிந்து வைத்துள்ளனர். இந்த மக்கள் மிக்க கொடூரமான முறையில் நடந்தேறி முடிந்த யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து நிற்கின்றனர்.  இந்த மக்கள் அதிக நீரை ஊற்றி அதற்குள் மிகக் குறைந்தளவு அரிசையை வேக வைத்து அந்த சோற்று நீரையே குடித்து வாழ்ந்த சம்பவங்களும் உண்டு. இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற மாதங்களில், ஒன்பது வயதேயான சிறுமி ஒருவரின் உடல் நிறையின் அரைவாசியை இழந்திருந்தார். பதுங்குகுழி ஒன்றினுள் குழந்தையைப் பெற்றெடுத்த தாயொருவர் தன்னிடம் இறுதியாக இருந்த 16 கிராம் பெறுமதியான தங்க வளையல் ஒன்றை விற்று இரண்டு கிலோ அரிசி மட்டும் வாங்கிக் கொண்ட சம்பவமும் சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது. 

விவசாயிகள், கடை உரிமையாளர்கள், ஆசிரியர்கள், அரச பணியாளர்கள் என எந்தவித வேறுபாடுமின்றி இறுதி யுத்தத்திற்குள் அகப்பட்டுக் கொண்ட அனைத்து மக்களும் 40 தடவைகளுக்கு மேல் இடம்பெயர்த்தப்பட்டனர். இறுதியில் இவர்கள் மிக ஒடுங்கிய சதுப்பு நிலப் பகுதி ஒன்றில் அகப்பட்டுக் கொண்டனர். இங்கு வெள்ளை மணல் பரந்து காணப்பட்டதால், இந்த இடத்தில் இந்த மக்களால் பதுங்குகுழிகளைக் கூட அமைத்துக் கொள்ள முடியவில்லை. பதுங்குகுழிகள் அமைக்க முயன்றபோது, கடற்கரை மணல் மீளவும் நிரம்பிக் கொண்டேயிருந்ததால் அந்தப் பகுதியில் பதுங்குகுழிகளை அமைக்க முடியவில்லை. இதனால் மண் மூட்டைகளை அமைப்பதற்காக பெண்கள் தம்மிடமிருந்த பெறுமதி மிக்க சேலைகளை வெட்டி அதில் பைகளைத் தயாரித்தனர். பின் இப்பைகள்  மண்மூட்டைகளைத் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. 

குடும்பத்திலிருந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர் சிலர் தற்கொலை செய்து கொள்வதற்காக தமது பிள்ளைகளுடன் கடலை நோக்கி ஒடிய சம்பவங்களும் இங்கு நடந்தேறியுள்ளன. பசியுடனும் பீதியுடனும் இருந்த தமது சிறு பிள்ளைகள், யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அவர்களது நண்பர்களின் சிதைந்த உடலங்களைப் பார்த்து அதிர்ச்சியடையக் கூடாது என்பதற்காக பெற்றோர்கள் தமது சிறார்களை அணைத்து அவர்களது இரு கண்களையும் தமது கைகளால் மூடி வைத்த சம்பவங்களும் இங்கு நடந்தேறியுள்ளன. 

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற வலயத்திற்குள் பணிபுரிந்த துணிச்சல் மிக்க வைத்தியர்களைக் கொண்டு சிறப்புடன் செயற்பட்ட வைத்தியசாலைகள் மீது திட்டமிட்ட ரீதியில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மருத்துவ வளங்கள் நிறுத்தப்பட்டன. அதாவது சத்திர சிகிச்சைக்குத் தேவையான உயிர் காக்கும் மருந்து வகைகள் மற்றும் காயம் கட்டுவற்குத் தேவையான 'பண்டேஜ்' போன்றவை முடிவடைந்தன. கர்ப்பப்பைக்குள் இருந்தபோது தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பிரசவிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்றின் காலில் குண்டுச் சிதறல் காணப்பட்டது. சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக இறைச்சி வெட்டும் கத்தியைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு வைத்தியர்கள் தள்ளப்பட்டனர். அத்துடன் நோயாளர்களின் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வைத்தியர்கள் தமது இரத்தத்தைக் கூட தானம் செய்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. 

தேவாலய வளாகம் மீது எறிகணைத் தாக்குதல் நடாத்தப்பட்ட போது அதில் காலில் காயமடைந்த கிறிஸ்தவ பாதிரியர் ஒருவரின் கால் மயக்க மருந்து இல்லாததால் வெட்டி அகற்றப்பட்ட சம்பவம் கூட சிறிலங்காவின் இறுதி யுத்த வலயத்திற்குள் அரங்கேறியுள்ளது. இறுதியில் தமது உயிர்களைக் காத்துக் கொள்வதற்காக பல பத்தாயிரக்கணக்கான மக்கள் இறந்த மனித உடலங்களைக் கடந்து, ஒடிக்கொண்டிருந்த மனித இரத்த ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமது உயிர்களை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு உள்ளாகிய மக்கள் காயமடைந்த தமது உறவுகளைக் கூட தம்முடன் கொண்டு செல்ல முடியாது அவர்களைக் கைவிட்டு பாதுகாப்பான இடத்தை நோக்கிய ஓடிய சம்பவங்களும் இங்கு நடந்துள்ளன. இந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தப்பிப்பிழைத்து வந்த பெருமளவிலான மக்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் உள்ளனர் என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்றல்ல. 

உயிர் காப்புப் பணியில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் இரத்த வெள்ளத்திற்குள் நின்று கொண்டு நீண்ட நாட்கள் பணிபுரிய முடியாது, ஒளிப்படப் பிடிப்பாளர் ஒருவர் தனது ஒளிக்கருவி வில்லை ஊடாக இறந்த குழந்தைகளைப் பார்ப்பதைத் தவிர்த்து தொடர்ந்தும் ஒளிப்படங்களை எடுக்க முடியாது, யுத்தத்தின் கோரத்தை நேரில் பார்த்த கத்தோலிக்க பெண் துறவி ஒருவர் தான் நேசிக்கும் கடவுளின் முன் தனது விசுவாசமான மன்றாட்டத்தைக் காண்பிப்பதற்கு போராட வேண்டியிருந்தது. ஏனெனில் அவர் இந்தக் காட்சிகளை மறந்து தனது மனத்தை கடவுளிடம் ஒப்புக் கொடுப்பதென்பது இயலாத காரியமாகும். 

மே 18, 2009 ல் புலிகள் பின்னடைவைச் சந்தித்த பின்னரும் கூட, படுகொலைகள் நிறுத்தப்படவில்லை. யுத்த வலயத்திலிருந்து தப்பிப் போக முடியாது தவித்த,  காயமடைந்த புலி உறுப்பினர்கள் பதுங்கியிருந்த அகழிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கைக்குண்டுகளை வீசி காடைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை பலர் நேரில் கண்டுள்ளனர். 

இறுதி யுத்தம் இடம்பெற்ற இடத்தில் பல ஆயிரக்கணக்கான மனித உடலங்கள் பரவுண்டு கிடந்ததாகவும், அவை வெயிலில் காய்ந்து சுருண்டு போயிருந்ததாகவும், யுத்த வலயத்தை விட்டு இறுதியாக வெளியேறிய மக்களில் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு யுத்த வலயத்திலிருந்து வெளியேறிய 280,000 வரையான மக்கள் பின்னர் இராணுவத்தினரால், கம்பி வேலிகளால் சூழப்பட்ட மிகப் பெரிய இடம்பெயர்ந்தோர் முகாங்களில் தங்க வைக்கப்பட்டனர். புலிகள் எனச்சந்தேகிக்கப்பட்ட பதினொராயிரம் வரையானவர்கள் எந்தவொரு விசாரணைகளுமின்றி நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டனர். யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட படுகொலைகள், வன்புணர்வுகள், சித்திரவதைகள் என்பன தொடர்வதாக தமிழ் மக்கள் கூறுகின்றனர். 

சிறிலங்கா அரசாங்கம் அண்மையில் தனது யுத்த விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தது, ஆனால் அதில் யுத்த மீறல்கள் அனைத்தையும் புலிகள் அமைப்பு செய்ததாக அரசாங்கத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் தனது நாட்டு இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டாது மறைத்துள்ளது. அனைத்துலக சட்டத்தின் கீழ் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுதல் என்பது இன்றியமையாத ஒன்றாக இருப்பதால், அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

தாம் அனுபவித்த மிகப் பயங்கரமான யுத்த வடுக்களிலிருந்து தம்மை மீட்டெடுத்து, இயல்பு வாழ்வுக்கு திரும்புவதற்கு முதல் யுத்த மீறல்கள் தொடர்பான உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதையே யுத்தத்தின் போது தப்பிப் பிழைத்த தமிழ் மக்கள் விரும்புகின்றனர். யுத்தம் தொடர்பான உண்மை நிலைப்பாடு வெளிக் கொண்டு வரப்படாது மீளிணக்கப்பாடு, மன்னித்தல் போன்றன நடைமுறையில் சாத்தியப்பாடானவை அல்ல. முதலில் மோதலுக்கு வழிவகுத்த ஆபத்தை விளைவித்த பல குறைபாடுகள் இன்னமும் நிவர்த்தி செய்யப்படாது உள்ளன. 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment