Saturday, February 18, 2012

சுமையாகும் வாழ்வாதாரம் - தவிக்கும் ஏழைகள்


எரிபொருளின் விலையேற்றம் என்றும், எப்போதும் இல்லாதவாறு மிக உச்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவில் மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கே விலையேற்றம் செய்யப்பட வேண்டும் என்பது பொருளியலாளர்களின் கருத்து. உதாரணமாக மதுபானம், சிகரெட் போன்ற நுகர்வுப் பொருட்களுக்கு விலையேற்றம் செய்யும்போது அரசுக்கு வருமானம் கிடைப்பதுடன் நுகர்வோரும் மேற்குறித்த பொருட்களின் நுகர்வைக் கட்டுப்படுத்திக் கொள்வர்.

இத்தகைய கட்டுப்பாட்டின் மூலம் மதுபானம், சிகரெட் பாவனையால் ஏற்படக்கூடிய நோய் கட்டுப்படுத்தப்படுவதும் அதன் மூலம் மருத்துவ செலவை மிகச் சிறிய அளவேனும் குறைக்க முடியும் என்பதும் பொருளியல் முடிபு. எனினும் அரசு, மதுபானம் சிகரெட் போன்றவற்றுக்கான விலையை ஏற்கெனவே அதிகரித்தது மட்டுமன்றி இப்போது எரிபொருளின் விலையை பன்மடங்கால் உயர்த்தியுள்ளது. எரிபொருள் என்பது பொருளாதாரத் துறையில் அடங்கக்கூடிய அத்தனை உற்பத்தி, வர்த்தக நடவடிக்கைகளுக்குமான மூலப் பொருளாகும்.

எனவே எரிபொருளுக்கான விலையேற்றம் இந்த நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை பொருட்கள், சேவைகளுக்கான விலையையும் பன்மடங்கு உயர்த்தும். இந்நிலைமை நடுத்தர மற்றும் கீழ்மட்ட வருமானத்தை பெறுவோரின் சீவனோபாயத்திற்கு பேராபத்தாக அமையும். அதிலும் குறிப்பாக அரச வருமானம் போன்ற எல்லையிடப்பட்ட வருமானத்தை உழைப்பவர்களின் நிலைமை அந்தோகதிதான். எரிபொருட்களின் விலையால் போக்கு வரத்து, மின்சாரம் ஆகியவற்றுக்கான செலவு அதிகரிக்க அதன் வழி பொருட்கள் சேவைகளின் விலை உயர கூலி மட்டமும் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆக, நிலைமை தாங்கமுடியாமல் போக நாட்டில் வேலைநிறுத்தம், மக்கள் போராட்டம் என்பன தலைவிரித்தாட அதனைக் கட்டுப்படுத்தல் என்ற கோதாவில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்த அப்பாவிப் பொதுமக்கள் பலியாகிக் கொள்வர். உலக வரலாற்றில் நாடுகளில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்கும், ஆட்சி கவிழ்ப்பிற்கும் அதி அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும், பொருளாதார நலிவுமே மூல காரணமாக இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

அவ்வகையில், இலங்கையிலும் அத்தகையதோர் நிலைமைக்கான சூழமைவு தெரியவே செய்கின்றது. பொதுவில் இலங்கை மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருப்பதாலும், இலங்கைப் படை அரசுக்கு மரியாதை செய்வதையே பெரிதாக நினைப்பதாலும், ‘புரட்சி’ என்பதற்கான சாத்தியப்பாட்டை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எதுவாயினும் எரிபொருளின் விலை உயர்வு இந்த நாட்டில் மிகப் பெரிய பொருளாதார கீழிறக்கத்தை ஏற்படுத்தும் என்பது சர்வ நிச்சயம்.

மூலம் - வலம்புரி

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment