Saturday, February 4, 2012

அப்போது அமெரிக்காவிடமும், அதன் பின்னர் இந்தியாவிடமும் வாக்குறுதி அளித்தபடி.....?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நான்கு நாள் பயணமாக வந்து போன பின்னர், 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு பற்றிய விவாதங்களும், சர்ச்சைகளும் சூடுபறக்கத் தொடங்கியுள்ளன. இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதான உறுதிப்பாட்டுடன் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தன்னிடம் வாக்குறுதி அளித்திருந்தார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா கூறியிருந்தார். ஆனால் இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக கூறவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவே கூறியிருந்தார். 13 வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு ஒன்றை வழங்கத் தயாராக இருப்பதாக கூறப்பட்டாலும், அதற்குள் காவல்தறை மற்றும் காணி அதிகாரங்கள் இருக்காது என்பதே அரசதரப்பின் வாதம். அதிலும் காவல்துறை அதிகாரங்களுக்கு வாய்ப்பே இல்லை என்று விளக்கம் கொடுக்கிறார்கள் அமைச்சர்கள். 13வது திருத்தம், அதற்கு அப்பாற்பட்ட அதிகாரங்கள் பற்றிய செய்திகள் தான் ஊடகங்களில் வெளியாகின்றவே தவிர வேறு, அதுசார்ந்த எந்த முன்னகர்வுகளும் இடம்பெறுவதாகத் தெரியவில்லை. 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்டது என்றால் என்ன என்ற கேள்விக்கு அரசாங்கம், இரண்டாவது சபை ஒன்றை அமைக்கும் யோசனையையே முன்வைக்கிறது. அந்த இரண்டாவது சபை எந்த வகையிலும் தமிழரின் பாதுகாப்புக்கு உதவப் போவதில்லை என்பதுதான் முக்கியமான விடயம். அந்த இரண்டாவது சபை தமிழருக்கு அதிகாரங்களை உறுதி செய்வதில் எத்தகைய பங்கினையும் வகிக்க முடியாது. ஏனென்றால் அந்தச் சபையிலும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப் போதிய பலம் கொழும்பை ஆளப்போகின்ற தரப்பிடம் இருக்கவே போகிறது. இத்தகைய நிலையில் இரண்டாவது சபை ஒன்றின் மூலம் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், 13வது திருத்தத்தில் உள்ள காணி, காவல்தறை அதிகாரங்களைப் பிடுங்கிக் கொள்வதில் உறுதியாகவே இருக்கிறது. அவற்றை ஒருபோதும் மாகாணங்களுக்கு வழங்கப் போவதில்லை. அப்படி இவற்றைப் பிடுங்கிக் கொள்ளும் போது, சர்வதேச அளவிலும், தமிழர் தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் உருவாகும் என்பதால், தான் அரசாங்கம் இரண்டாவது சபை என்ற பூச்சாண்டியைக் காட்டத் தொடங்கியுள்ளது. 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்த 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு என்று கூறத் தொடங்கி மூன்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. விக்கிலீக்கில் வெளியான அமெரிக்க தூதரக இராஜதந்திர தகவல் பரிமாற்றக் குறிப்பு ஒன்றில், 2009 மே 20ம் திகதி றொபேட் ஓ பிளேக் பிரியாவிடை பெற்றுச் செல்ல மகிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். அப்போதும் கூட இதே 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு ஒன்றை வழங்கப் போவதாகவே அவர் உறுதியளித்திருந்தார். ஆனால் அப்போது அமெரிக்காவிடமும், அதன் பின்னர் இந்தியாவிடமும் வாக்குறுதி அளித்தபடி, 13வது திருத்தத்தையும் அவர் நடைமுறைப் படுத்தவில்லை. அதற்கு அப்பாற்பட்ட எதையும் கொடுக்கவும் இல்லை. இருப்பதையும் பிடுங்கிக் கொள்வதில் தான் அரசாங்கம் ஆர்வம் காட்டிவருகிறது. இந்த நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, வடக்குகிழக்கு மக்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கேட்கவில்லை என்றும் அரசியல்வாதிகள் தான் அவற்றைக் கேட்பதாகவும் கூறியுள்ளார். அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஒன்றை மட்டும் மறந்து போகிறார்கள். 

ஆட்சியில் உள்ள தம்மைத் தெரிவு செய்த மக்கள் கொடுத்த ஆணைக்கு ஒருவிதமாகவும், எதிர்க்கட்சியினரைத் தெரிவு செய்த மக்கள் கொடுத்த ஆணைக்கு இன்னொரு விதமாகவும் அவர்கள் கற்பிதம் கூறுகிறார்கள். பசில் ராஜபக்ஸவும் அப்படித்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை கொடுத்துள்ளனர் என்பதையோ, அவர்களின் சார்பில் தான் கூட்டமைப்பு பேசுகிறது என்பதையோ அவர் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. அப்படிக் கவனத்தில் கொண்டிருந்தால் இப்படிக் கூறியிருக்க முடியாது. மக்களின் விருப்பதை, அவர்களின் அபிலாசைகளைத் தான் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் கோருகிறார்கள். இதனை அரசாங்கம் இல்லை என்று வாதிடுமானால் வடக்கு,கிழக்கு மக்களிடமே ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவையா என்று கேட்கலாம். ஆனால் அதைச் செய்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாராக இருக்காது. ஏனென்றால், அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு கூட இதில் உடன்பாடு இல்லை என்பதை அண்மையில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதம் உறுதி செய்துள்ளது, 

ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூட அரசாங்கத்தைக் காப்பாற்ற மௌனம் சாதித்தாலும் இந்த அதிகாரங்கள் தேவையில்லை என்று ஆறுமுகன் தொண்டமான் போல அடித்துக் கூற தயாராக இருக்கமாட்டார். மாகாணங்களுக்கு அதிகாரமில்லாத சபைகளை உருவாக்கி விட்டு மத்திய அரசு எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு தீர்வு இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது. அது வேண்டுமானால் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கானதாக இருக்கலாமே தவிர தமிழரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக, நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதொன்றாக இருக்க முடியாது. போரின் முடிவில் இருந்து அரசாங்கத்தின் மீது அதிகாரப்பகிர்வு பற்றிய அழுத்தங்கள் பல கொடுக்கப்பட்ட போதும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமலேயே காலத்தைக் கழிக்கிறது அரசாங்கம். இரண்டாவது பதவிக்காலத்துக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு தன்னிடம் உள்ளதாகவும் அதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவேன் என்றும் கூறினார். அதே ஜனாதிபதி பின்னர் தன்னிடம் தீர்வு எதுவும் கிடையாது என்றார்.  இப்போது மீண்டும் 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு என்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புன் பேசத் தொடங்கிய போது, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கம் முன்வைக்கப் போகும் தீர்வு என்ன என்று கேட்ட போதும் அதற்கு அரசாங்கம் எந்தப் பதிலையும் கொடுக்கவில்லை. இதன் பின்னர் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில யோசனைகளை முன்வைத்து அது பற்றிய நிலைப்பாட்டை அரசிடம் கேட்டது. அதற்குக் கூட அரசாங்கம் பதில் கொடுக்கவில்லை. இப்போது தெரிவுக்குழுவைக் காரணம் காட்டித் தட்டிக்கழிக்கிறது. ஒருபக்கத்தில் தெரிவுக்குழுவே தீர்வை முடிவு செய்யும் என்கிறார் ஜனாதிபதி. 

இன்னொரு பக்கம் 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு என்கிறார். மற்றொரு பக்கம் தன்னிடம் எந்தத் தீர்வும் இல்லை என்றும் சொல்கிறார். இவையெல்லாம் முரண்பட்ட விடயங்களாகவே உள்ளன. தன்னிடம் யோசனை எதுவும் இல்லை என்று கூறும் அரசினால் எவ்வாறு 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றி வாக்குறுதி கொடுக்க முடியும். இப்படி பல குழப்பங்கள் இருந்தாலும் கூட அரசாங்கம் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எதிர்க்கட்சிகள் இதெல்லாம் வெறும் கண்துடைப்பு இந்தியாவைச் சமாளிக்கப் போடும் நாடகம் என்று விமர்சித்தாலும், அரசாங்கமோ அதையிட்டு எந்தக் கூச்சமும் இல்லாமல் காய்களை நகர்த்துகிறது. ஆனால் இந்தக் காய்நகர்த்தல்கள் ஏதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை வழங்குவதை மையப்படுத்தி நகர்வதாகத் தோன்றவில்லை.

நன்றி இன்போதமிழ்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment