Sunday, February 19, 2012

லிபியாவில் கடாபி பணிய மறுத்ததால், உயிரைக் கொடுத்துள்ளார், மாலைதீவில் பணிந்து போனதால் நசீட் உயிரைக் காப்பாற்றியுள்ளார், எனவே மகிந்த.........?


கடந்த ஆண்டில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவரும் நகர்வுகளில் கனடா இறங்கியிருந்த போது, இலங்கை அரசுக்கு ஆதரவாக களம் இறங்கியவர்களில் முக்கியமான ஒருவர் மொகமட் நசீட். அண்மையில் மாலைதீவில் நடந்த குழப்பத்தை அடுத்து பதவி விலகிய ஜனாதிபதியான நசீட் ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். முக்கியமான பல சர்வதேச மாநாடுகளில் அவர் இலங்கை அரசைக் காப்பாற்றும் நகர்வுகளில் ஈடுபட்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு மிகவும் நெருக்கமான- தலைவர்கள் வட்டத்தில் இவரும் முக்கியமானவர். இலங்கையுடன் மிகவும் நெருக்கமான, குறிப்பாக தற்போதைய அரசுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு நேரம் சரியில்லைப் போலும். 

லிபியத் தலைவர் கடாபியின் கதி யாவரும் அறிந்ததே. 

கடாபிக்கு எதிரான புரட்சி ஆரம்பமாகிய ஒரு கட்டத்தில் அவருக்கு இலங்கையில் அடைக்கலம் கொடுப்பற்குத் தயார் என்று செய்தி கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டதாகவும் செய்தி வெளியானது. அதை அரசாங்கம் உறுதி செய்யவில்லை. ஆனால் கடாபி ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டு அலைக்கழிந்து கொண்டிருந்தபோது கூட, அவருக்காக இலங்கை அரசு வாய் திறக்கவில்லை. அடுத்து இலங்கைக்கு மிகவும் நெருக்கமான ஈரானின் நிலையும் தெளிவற்றதாகவே உள்ளது. 

மேற்குலகுடன் மோதும் ஈரானிடம் இருந்து எப்படி எண்ணெய் இறக்குமதி செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போயுள்ளது அரசாங்கம். இலங்கைக்கு சர்வதேச அரங்கில் உதவிகளை செய்யும் சிரியாவும், கேள்விக் குறியாகியுள்ளது. அதுபோலவே மாலைதீவில் நான்கு ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவியில் இருந்த ஜனாதிபதி நசீட் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அவர் ஆயுதபடைகளால் பதவிவிலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மிகவும் இளம் ஜனாதிபதியாக கருதப்பட்ட அவர், பலமுறை சிறைகளில் இருந்தவர். மாலைதீவு ஜனநாயக கட்சியை உருவாக்கி தேர்தலில் வென்று ஜனாதிபதியானவர். ஜனநாயகத்தை பேணுவதாக உறுதியளித்த அவரால் அதைச் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மனிதஉரிமை மீறல்கள் அங்கு அதிகரித்திருந்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தன. மாலைதீவில் பொதுமக்களால் தேர்வு செய்யப்படாத- ஜனாதிபதியாக இருந்த அப்துல் கயூமின் ஆட்சியைக் கவிழ்க்க 1988ம் ஆண்டு புளொட் ஒரு சதிப்புரட்சியை மேற்கொண்டது. அப்போது இந்தியா தனது படைகளை அனுப்பி அவரது ஆட்சியைக் காப்பாற்றியது. ஆனால் இம்முறை ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட நசீட் தனக்கு எதிராக சதிப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அப்படியான சூழலில் இந்தியாவே உதவ வேண்டும் என்றும் கோரி புதுடெல்லிக்கு 10 நாட்களுக்கு முன்னர் தூதுவர் ஒருவரை அனுப்பியிருந்தார். ஆனால் இந்தியா அவருக்கு கைகொடுக்காமல் நழுவியது. இப்போது இது உள்நாட்டு விவகாரம் என்று கூறிவிட்டு புதிய அதிபருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது இந்தியா. 

கயூமின் ஆட்சிக் காலத்தில் மாலைதீவு இந்தியாவின் காலடியில் கிடந்தது. ஆனால் இப்போது அது சீனாவின் செல்வாக்கிற்குள்ளேயும் வந்துவிட்டது. மாலைதீவில் கடற்படைத்தளம் அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் பொறுத்த நேரத்தில் இந்தியா காலை வாரி விட்டது. 

சர்வதேச அரங்கில் நடந்தேறும் சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது. மேற்குலகின் அழுத்தங்களுக்குப் பணிய மறுத்த கடாபியின் கதி என்னவானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு காலத்தில் கடாபியைத் தனது நெருங்கிய நண்பனாகக் கொண்டாடிய இலங்கை பின்னர் அவருக்காகக் குரல் கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டது. காரணம் அது தனக்கு ஆபத்து வந்திடக் கூடாது என்பதற்காக. 

ஈரானுடனான எண்ணெய் வர்த்தக விடயத்திலும் கூட மேற்குலகைப் பகைத்துக் கொள்ள இலங்கை தயாராக இல்லை. அது பொருளாதார தடைகளை ஏற்படுத்தி விடும் என்று அச்சம் கொள்கிறது. அதேவேளை, ஈரானுடனான உறவுகளை முறித்துக் கொண்டால் இரட்டிப்பு நட்டம், ஒன்று எண்ணெய் இறக்குமதியால் ஏற்படக் கூடியது, இரண்டாவது தேயிலை ஏற்றுமதியால் ஏற்படக் கூடியது. 

இன்னொரு பக்கத்தில் சர்வதேச அரங்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கேற்ப நெகிழ்ந்து போகாத தலைமைகளுக்கு நிகழ்ந்ததை சரியாகக் கணக்கிட்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது மியான்மர். நீண்டகால இராணுவ ஆட்சியிலுள்ள மியான்மார் கூட இலங்கையின் ஒரு நட்பு நாடு தான். மியான்மார் மேற்குலகுடன் கடுமையாக முட்டிமோதிக் கொண்டிருந்த போது கூட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அங்கு சென்றார். பின்னர் மியான்மார் அதிபர் கொழும்புக்கு வந்தார். 

ஒரு காலத்தில் சீனாவை மட்டும் நம்பியிருந்த அந்த நாடு இப்போது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் சொல்லைக் கேட்கும் நல்ல பிள்ளையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆங் சாங் சூகியை சிறையில் அடைத்து வைத்த மியான்மார் அரசு, அவரை வெளியே விட்டு இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதியும் கொடுத்து, அமைச்சர் பதவியைக் கொடுக்கவும் தயாராகியுள்ளது. இந்தளவுக்கும் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணம், மேற்குலகத் தடைகளை வைத்து சீனா தன்னை உறிஞ்சிச் கொள்வதாக மியான்மார் உணர்ந்து கொண்டது தான். 

லிபியாவில் கடாபி பணிய மறுத்ததால், உயிரைக் கொடுத்துள்ளார். 

மாலைதீவில் பணிந்து போனதால் நசீட் உயிரைக் காப்பாற்றியுள்ளார். 

மியான்மரும் மேற்குலகுடன் இணைந்து போனதால் சர்வதேசத் தடைகளில் இருந்து விலகியுள்ளது. 

ஆக இப்போது சர்வதேச சமூகத்தின் வேறுபட்ட அணுகுமுறைகளை- இந்த நாடுகளுடன் நட்புறவைப் பேணிய இலங்கையால் ஒரு பாடமாக கற்க முடியும். பாடம் கற்றல் என்பது மேற்குலகுடனனா மோதலைக் கைவிட்டு விடுவது மட்டுமல்ல. உள்நாட்டில் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதும் தான். 

அத்தகைய நம்பிக்கையை வென்றெடுக்க மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் தவறினால் அது மக்களை வீதியில் இறக்கும் நிலைக்குக் கொண்டு வரும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியா ஓடிவரும் என்று கருத முடியாது. ஏனென்றால் மாலைதீவு ஜனாதிபதி நசீட்க்கு உதவ மறுத்தது போலவே, இந்தியா ஒதுங்கி நின்று கொண்டு இது உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறினால் அதில் ஆச்சரியம் இருக்காது.

நன்றி இன்போதமிழ் 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment