Monday, February 20, 2012

அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை கொடுத்துள்ள நிலையில், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்குள்.............


அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை கொடுத்துள்ள நிலையில், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்குள், அதற்கு நம்பிக்கையூட்டக் கூடிய எதையாவது செய்து விடவேண்டும் என்று அரசாங்கம் கருதுகிறது போலும். அதனால் தான் அவசர அவசரமாக இந்த இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ளது. குற்றங்களே நடக்கவில்லை, மீறல்களை படையினர் புரியவில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கமும் படைத்தரப்பும் இருந்திருந்தால், இத்தகைய இராணுவ நீதிமன்றத்தை நியமித்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், உண்மை அதுவாயின் அரசாங்கம் தனது முடிவில் உறுதியாக நின்று பிடித்திருக்கும். ஆனால் இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ளதன் மூலம், இலங்கை இராணுவம் போரில் எந்த மீறல்களிலும் ஈடுபடவில்லை என்று உறுதியாக நம்பியிருந்தவர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அடுத்து, போரின்போது எந்த மீறல்களும் இடம்பெறவில்லை என்றும், பொதுமக்களுக்கு எந்த இழப்புகளும் ஏற்படாத கொள்கை கடைசிவரை உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகவும் இலங்கை இராணுவம் கூறிவந்தது. போரின் போது பொதுமக்களில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்று இராணுவம் சொன்னது. அதை அரசாங்கத்தில் உள்ள அனைவரும் வழிமொழிந்தனர். இப்போது அதே தரப்புகள், போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப் போவதாக படியிறங்கியுள்ளன. இலங்கை இராணுவம் எந்தக் குற்றமும் நடக்கவில்லை என்று நியாயப்படுத்தும் பல அறிக்கைகளை கொடுத்து விட்டது. இப்போது இந்த விசாரணை நடக்கப் போகிறது. இதன் முடிவும், தமது தரப்பை நியாயப்படுத்துவதாக அமையுமேயானால், இலங்கை மீதான முடிச்சுகள் இன்னும் இறுகுமே தவிர தளராது. இதை இராணுவ நீதிமன்றம் உணராமல் போகாது. எனவே, அழுத்தங்களில் இருந்து அரசைக் காப்பாற்ற சில படையினரைக் குற்றவாளிகள் என்று கூண்டில் ஏற்ற அது தயாராகலாம்.அவ்வாறு நடந்தால் அது ஆச்சரியமாக இருக்காது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இந்த விசாரணைகளில் ஒருபோதும் இளநீர் குடித்தவர்கள் கூண்டில் ஏற்றப்படப் போவதில்லை. கோம்பையை தின்றவர்கள் தான் மாட்டிக் கொள்வார்கள்.

இனி,


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்து இரண்டு நாட்களில் முக்கியமானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இலங்கை இராணுவம். கொழும்பில் கடந்த திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனாநாயகம், மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலர் மரியா ஒரேரோவும் அமெரிக்காவின் முடிவை அதிகாரபூர்வமாக பகிரங்கப்படுத்தினர். அதற்கு முன்னதாக இதுபற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு அவர்கள் தெரியப்படுத்தியிருந்தனர். இந்தப் பகிரங்க அறிவிப்பு வெளியாகி 48 மணி நேரத்துக்குள்- புதன்கிழமை மாலை இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அவதானிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக இராணுவ நீதிமன்றம் ஒன்றை இராணுவத் தளபதி நியமித்துள்ளது தொடர்பான அறிக்கையே அது. இந்த இராணுவ நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 2ம் திகதியே நியமிக்கப்பட்டு விட்டதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. கிளிநொச்சிப் படைத்தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையில் ஐந்து அதிகாரிகள் இந்த இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். அதன் ஏனைய உறுப்பினர்கள் யார்,யார் என்று அறிவிக்கப்படவில்லை. 

போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்தும் இந்த இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு உண்மை கண்டறியும் இராணுவ நீதிமன்றமே தவிர, குற்றம்சாட்டப்பட்ட படையினரை விசாரித்து தண்டிக்கும் அதிகாரம் கொண்டதல்ல. முதற்கட்டமாக இந்த இராணுவ நீதிமன்றம் எவரையும் குற்றம்காணுமாயின், அதுகுறித்து கோர்ட் மார்சல் எனப்படும் இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்படும். அதில் குற்றம் நிரூபிக்கப்படும் ஒருவருக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என்று இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது. 

இராணுவத் தலைமையகத்தின் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியம் கொள்ள வைத்துள்ளது.காரணம், சர்வதேச நெருக்கடியின் உச்சத்தில் தான் இந்த இராணுவ நீதிமன்ற விசாரணை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தான் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இதனை ஏமாற்று வேலை என்றும் நம்பகமற்ற விசாரணை என்றும் கூறியுள்ளது. காலம்கடத்தும் தந்திரமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், ஜனவரி 2ம் திகதி நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றம் குறித்த தகவல்கள் ஏதும் சுமார் ஒன்றரை மாதங்களாக மறைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜனவரி 2ம் திகதியே இந்த இராணுவ நீதிமன்றம் நியமிக்கப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டிருந்தால், நிச்சயமான அதுபற்றி ஏதோ ஒருவிதத்தில் தகவல் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் அப்படியான எந்தச் செய்தியும் வெளியாகாத நிலையில் ஒன்றரை மாதங்களாக இந்த இரகசியத்தை பாதுகாத்ததாக கூறுவதை எவராலும் இலகுவில் நம்பிவிட முடியாது. 

அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை கொடுத்துள்ள நிலையில், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்குள், அதற்கு நம்பிக்கையூட்டக் கூடிய எதையாவது செய்து விடவேண்டும் என்று அரசாங்கம் கருதுகிறது போலும். அதனால் தான் அவசர அவசரமாக இந்த இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ளது. அடுத்து, போரின்போது எந்த மீறல்களும் இடம்பெறவில்லை என்றும், பொதுமக்களுக்கு எந்த இழப்புகளும் ஏற்படாத கொள்கை கடைசிவரை உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டதாகவும் இலங்கை இராணுவம் கூறிவந்தது. போரின் போது பொதுமக்களில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்று இராணுவம் சொன்னது. அதை அரசாங்கத்தில் உள்ள அனைவரும் வழிமொழிந்தனர். இப்போது அதே தரப்புகள், போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப் போவதாக படியிறங்கியுள்ளன. 

குற்றங்களே நடக்கவில்லை, மீறல்களை படையினர் புரியவில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கமும் படைத்தரப்பும் இருந்திருந்தால், இத்தகைய இராணுவ நீதிமன்றத்தை நியமித்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், உண்மை அதுவாயின் அரசாங்கம் தனது முடிவில் உறுதியாக நின்று பிடித்திருக்கும். ஆனால் இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ளதன் மூலம், இலங்கை இராணுவம் போரில் எந்த மீறல்களிலும் ஈடுபடவில்லை என்று உறுதியாக நம்பியிருந்தவர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்து, சனல்-4 விவகாரம். 

சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ பொய்யானது, போலியானது என்று அரசாங்கமும் படைத்தரப்பும் உடனடியாகவே, நிராகரித்தன. நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து அவர்களும் அது போலியானது என்று கூறியதாகவும் இராணுவத்தரப்பு கூறியது. இதனை முறியடிக்கும் வகையில் அரசாங்கம் ஒரு வீடியோவையும் வெளியிட்டது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் சனல்-4 வீடியோ குறித்து மேலும் ஆராயப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இராணுவ நீதிமன்றம் சனல்-4 வீடியோ குறித்தும் விசாரிக்கப் போவதாக கூறியுள்ளது. நிபுணர்களை கொண்டு பொய்யானது- போலியானது என்று உறுதியாக அறிவித்த இராணுவம், இப்போது அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப் போகிறது என்றால், அங்கே சந்தேகம் வராமல் இருக்காது. இந்த விசாரணைகள் நீதியானதாக அமையுமா என்பது வேறு விடயம். இவற்றை விசாரிக்கப் போவதாக அரசபடைகள் அறிவித்துள்ளது தான் முக்கிய திருப்பம். ஏனென்றால் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்ற போக்கில் இருந்து அரசதரப்பு விலகியுள்ளதை இது காட்டுகிறது. இது அமெரிக்காவின் அழுத்தங்களில் இருந்து மீள்வதற்கான ஒரு உத்தியாகவே கருதப்படுகிறது. ஆனால் இந்த இராணுவ நீதிமன்ற விசாரணையை அமெரிக்கா போன்ற மேற்குலகம் அவ்வளவு இலகுவாக நம்பிவிடப் போவதில்லை. அவர்கள் வலியுறுத்துவதெல்லாம் நம்பகமான- சுதந்திரமான உள்ளக விசாரணையைத் தான். இந்த இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தான் போரின் இறுதிக்கட்டத்தில் வன்னிப் படைகளின் தளபதியாக இருந்தவர். அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் தான் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

இத்தகைய சூழலில், நம்பகமான விசாரணைகளை இவர்கள் நடத்துவார்கள் என்று நம்பவே முடியாது என்று உடனடியாகவே கூறிவிட்டது மனிதஉரிமைகள் கண்காணிப்பகம். ஏற்கனவே, நல்லிணக்க ஆணைக்குழுவில் முன்னாள் அரச அதிகாரிகள் விசாரணையாளர்களாக நியமிக்கப்பட்டது குறித்தே சந்தேகம் வெளியிட்ட இந்தத் தரப்புகள், இராணுவ அதிகாரிகளைக் கொண்டே இராணுவத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பமுடியாது. எவ்வாறாயினும் இலங்கை இராணுவம் இத்தகைய விசாரணை ஒன்றுக்கு தயாராகி இருப்பது சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகளுக்கு வலுச் சேர்ப்பதாகவே உள்ளது. ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறிவந்த அரசதரப்பு திடீரென விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளது அதையே உணர்த்துகிறது. அதேவேளை இந்த விசாரணை அறிவிப்பை வைத்து, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்று அரசாங்கம் கணக்குப் போட்டால், அது தப்பாகி விடும். 

இலங்கை இராணுவம் எந்தக் குற்றமும் நடக்கவில்லை என்று நியாயப்படுத்தும் பல அறிக்கைகளை கொடுத்து விட்டது. இப்போது இந்த விசாரணை நடக்கப் போகிறது. இதன் முடிவும், தமது தரப்பை நியாயப்படுத்துவதாக அமையுமேயானால், இலங்கை மீதான முடிச்சுகள் இன்னும் இறுகுமே தவிர தளராது. இதை இராணுவ நீதிமன்றம் உணராமல் போகாது. எனவே, அழுத்தங்களில் இருந்து அரசைக் காப்பாற்ற சில படையினரைக் குற்றவாளிகள் என்று கூண்டில் ஏற்ற அது தயாராகலாம்.அவ்வாறு நடந்தால் அது ஆச்சரியமாக இருக்காது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இந்த விசாரணைகளில் ஒருபோதும் இளநீர் குடித்தவர்கள் கூண்டில் ஏற்றப்படப் போவதில்லை. கோம்பையை தின்றவர்கள் தான் மாட்டிக் கொள்வார்கள்.

நன்றி இன்போதமிழ்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment