Tuesday, February 21, 2012

கலாச்சாரத்தை பேணும் இளைஞர் குழுக்கள் தேவை


போர்க்கால செய்திகள் வைத்து சீவித்த ஊடக பண்பாடு இப்போது கலாசார சீரழிவுகள் பற்றிய செய்திகள் மூலம் தங்கள் இருப்பை நிலை நிறுத்த முற்பட்டுள்ளன. வீரமும் காதலும் தமிழர் தம் வரலாற்றில் முதன்மையானவை என்பதை மறுத்தலிப்பதற்கில்லையாயினும் அதற்காக கலாசார சீரழிவு என்ற பெயரில் எல்லாவற்றையும் செய்திக்குள் அடக்கிவிடுவது எங்கள் இனம் சார்ந்த தவறான கருத்துக் கணிப்புக்கு வாய்ப்பாகிவிடும்.

இவ்வாறு நாம் கூறும்போது அப்படியானால் கலாசார சீரழிவு பற்றி பேசாமல் விட்டுவிட்டால் எங்கள் இனத்தின் மானம் காப்பாற்றப்பட்டுவிடும் என்று நீங்கள் கருதுகிறீர்களா என்ற கேள்வி எழுமாயின், அது நியாயமானதென்பதை மறுப்பதற்கில்லை. நாம் இங்கு கூற வருவதெல்லாம் கலாசார சீரழிவு தடுக்கப்பட வேண்டும் என்பதாகும். அதற்காக ஒரு பாடசாலையின் பேரைக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட மாணவியை இனங்காட்டி கலாசார சீரழிவு என்ற தகவலை வெளிப்படுத்தும் போது நிலைமை மிக மோசமாகி விடுகின்றது.

எனவே கலாசார சீரழிவை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பிரஸ்தாபிப்பதன் மூலமே எங்கள் இனம் சார் கலாசார பண்பாட்டை பாதுகாக்க முடியும். இதற்கு வீடு, குடும்பம், பாடசாலை, சமூகம் என்ற பல தளங்களில் தடுப்பு வேலி அமைக்கப்படவேண்டும் என்பதே இங்கு முக்கியமானதாகும். இதற்கு நம்மிடம் இருக்கக் கூடிய ஆரோக்கியமான பலம் இளைஞர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எங்கள் கலாசாரத்தை பாதுகாப்பதென்று இளைஞர்கள் முடிபெடுத்துவிட்டால், பின்னர் கலாசார சீரழிவு என்ற பேச்சுக்கே இடமிருக்க முடியாது. எனவே எங்கள் கலாசாரம் பேணும் இளைஞர் குழுக்களை ஊர்கள் தோறும் உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கப்பட்ட இளைஞர் குழுக்களுக்கு வேண்டிய பயிற்சிகள் வழங்கப்படுவது அவசியமாகும்.

நம் பகுதிகளில் மட்டும் இளைஞர் குழுக்கள் எழுச்சி பெற்று விட்டால் கலாசார சீரழிவு என்று சதா புலம்பும் துன்பத்திற்கு முடிபுகட்டிவிட முடியாது. எனவே இது விடயத்தில் ஊர் திரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமக்கு ஏன் தேவையில்லாத வம்பு என்று நினைத்துக் கொண்டால் எதுவுமே நடந்தேறாது. ஆக, கலாசார சீரழிவு தொடர்பில் நாம் அனை வரும் ஒன்று திரண்டு இளைஞர் குழுக்களை அமைப்பதில் சிரத்தை காட்டுவோம். இந்த முயற்சிக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்ந்து இயங்கும் இணையத்தளங்கள் கூடுதலான பங்கை ஆற்றமுடியும் - ஆற்ற வேண்டும்.

வலம்புரி ஆசிரியர் தலையங்கம் 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment