Wednesday, February 22, 2012

ஜெனீவாவில் இலங்கை எதிர்நோக்கும் மனிதஉரிமை தொடர்பான தீர்மானம்


இலங்கை அரசாங்கத்தை, அது நியமித்த கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு செய்த சிபாரிசுகளையும் அவை தொடர்பான ஏனையவற்றையும் நடைமுறைப்படுத்தும் படி எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கொண்டு வரும் தீர்மானத்தினை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் ஆதரிக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அமெரிக்காவின் வெளிவிவகார அமைசசர் ஹிலாரி கிளின்டன் இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதில் அவர் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையினை சமர்ப்பித்தமையினை அறிந்து கொண்டதாக கூறியுள்ளதுடன் அவ்வறிக்கையானது சில முக்கியமானதும் எதிர்மறையற்றதுமான சிபாரிசுகளை தேசிய நல்லிணக்கத்தினை ஊக்குவிப்பதற்காக கூறியுள்ளமையினையும் தெரிந்து கொண்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார். அச்சிபாரிசுகளால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பொதுமக்கள் (சிவிலியன்கள்) வாழும் பகுதிகளிலிருந்து ஆயுதப்படையினரை வாபஸ் வாங்குமாறு கூறியமையும் இராணுவத்தினரது ஆட்சியை தவிர்க்குமாறு கூறியமையினையும், சனநாயக, சிவில் சமூக நிறுவனங்களை பலப்படுத்துமாறு கூறியமையினையும், காணாமல் போனோர் தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வு செய்யக் கூறியுள்ளமையினையும் தான் வரவேற்பதாகவும் கூறி அவற்றிற்கான இலங்கை அரசாங்கத்தை ஆவன செய்யுமாறும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.


அதே வேளையில் அக் கடிதத்தில் இன்னும் முழுமையான செயற்திட்டம் ஒன்று வெளிப்படையாக அறிவிக்கப்படாதது பற்றி ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வெளிப்படையாக அறிவிக்கப்படாததன் காரணமாக பொதுமக்கள் கொல்லப்பட்டமை , காணாமல் போனமை தொடர்பாக பொறுப்புக் கூறுதல் உட்பட நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதனை உறுதி செய்யும் வகையிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஏனைய சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதனை உறுதி செய்யும் வகையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அமெரிக்கா 2012 ஆம் வருடம் மார்ச் மாதம் ஒரு தீர்மானம் கொண்டு வருவதனை முன்மொழியப் போவதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இவற்றிலிருந்து இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் வடமாகாணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடாத்துதல் என்பன தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதனை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் எதிர்பார்த்து நிற்பதாகத் தெரிக்கின்றது. கடந்த இரண்டு வாரங்களுக்குள் ஐக்கிய அமெரிக்காவின் உயர் மட்ட அரசாங்க பேராளர் குழு ஒன்று இலங்கை வந்து சென்றது. அதில் அந்நாட்டின் ராஜாங்க உதவிச் செயலாளர் மரியா ஒடேரா, உதவிச் செயலாளர் ரொபட் பிளேக் என்போர் உள்ளடங்குவர். அக்குழு கடந்த காலத்திலும் இப்போதும் மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் நிலவும் பிரச்சினை தொடர்பான அக்கறையுடன் வந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவர்கள் இலங்கையில் இருந்த காலப் பகுதியில் அரசாங்க மற்றும் எதிரணித் தலைவர்களையும் சிவில் குழுக்களையும் சந்தித்து உரையாடினர். இலங்கை அரசாங்கத்திற்கு அபிவிருத்தி, பொருளாதார, சுபிட்சம், நல்லிணக்கம் தொடர்பான அதன் முயற்சிகளுக்கு தாம் ஆக்க பூர்வமாகவும் எதிர் காலத்தை நோக்கமாகவும் கொண்ட வகையில் செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் இலங்கைக்கு வந்திருந்த இக்காலப்பகுதியிலேயே கொழும்பில் இன்னுமொரு ஆட்கடத்தல் இடம் பெற்றதாக அறிக்கைகள் வந்துள்ளமை துரதிர்ஷ்டவசமானதாகும். இச்சம்பவம் தேசிய மட்டத்திலும் சர்வதேச சமூக மட்டத்திலும் இலங்கையில் இன்னும் "வெள்ளை வான் ஆட்கடத்தல்' நடவடிக்கை நிலவுகின்றது என்றும் பேரச்சத்தினைத் தரும் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆட்கடத்தல் இலங்கையில் இன்னும் நடைபெறுகிறது என்பதும் அதுவே யதார்த்தம் என்பதும் நிரூபணமாகியுள்ளது. பொலிஸார் இதனை தமிழ்க்குழு ஒன்றினால் பணயப்பணம் பெறுவதற்காக செய்யப்பட்ட குற்றவியல் நடவடிக்கை என அறிவித்துள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமானால் அவற்றை மீண்டும் தடை செய்வது என்பது கடினமாகிவிடும். இது இப்போது நிலவும் சர்வதேச மட்டத்திலான இலங்கைக்கு எதிரான யுத்தகால  குற்றச்சாட்டுகளுக்கும் அதே போல் நாட்டில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையினை சீர்குலைத்து பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதான குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து பாதுகாப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் பொருந்தும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை

ஐக்கிய அமெரிக்காவின் பேராளர் குழு இலங்கைக்கு வந்த அன்று உயர்நீதிமன்றத்தில் தனது அடிப்படைஉரிமைகள் நிமித்தம் தமிழ் வர்த்தகர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்குக் காரணமாக அடுத்தநாள் (திங்கட்கிழமை) விசாரிக்கப்பட ஏற்பாடுகள் இருந்த நிலைமையில் அவரை தன்னியக்க துப்பாக்கிகள் சகிதம் வந்த ஆயுத பாணிக் குழு ஒன்று கொழும்பின் இருதயப் (முக்கிய) பகுதியில் வைத்து கடத்திச்சென்ற செய்தினை ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. கடத்தலுக்கு ஆளாகிய நபர் கடந்த இரண்டு வருடங்களாக, இப்போது செயலிழந்துள்ள தமிழ்ப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். விசாரணையில் அவர் மீதான குற்றச் சாட்டுகளுக்கு போதிய சாட்சிகள் இல்லாதிருந்ததால் அவர் மீதான குற்றச் சாட்டுகள் நீக்கப்பட்டு கடந்த வருடம் செப்டம்பர் 17 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் கொழும்பு குற்றவியல் பிரிவில் பணிபுரியும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மீது அவர் அடிப்படையுரிமைகள் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

நல்லிணக்க ஆணைக் குழுவில் பணியாற்றிய ஆணையாளர்கள் கடந்த காலத்தை ஒதுக்கி விட்டு இலங்கையில் நாட்டின் எல்லைகளும் மக்களும் பிணைபட்டிருந்தமைக்கு காரணமான யுத்தத்தில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதனை வழிநடத்துவதற்காக புதிய முதிர்ந்த ஜனநாயக வழியொன்றினை அறிக்கையில் காட்ட செய்திருந்த கடும் முயற்சி அவ்வறிக்கையின் முக்கியமான பலமாகும். அரசியல் தலையீடுகளின்றி பொலிஸ்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டுமென அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவற்றை விட நல்லிணக்க ஆணைக்குழு பல்வேறு முக்கிய சிபாரிசுகளை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். நாட்டின் கிழக்கு மாகாணத்தில் நிவாரணப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை உட்பட பல்வேறு சிவிலியன்களது படுகொலைகள் மற்றும் ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள், மற்றும் காணாமல் போனோர்கள் தொடர்பாக குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டமை என்பன தொடர்பாக புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது, தீர்க்கப்படாத இவ்வாறான வழக்குகளை திறந்து பார்ப்பது ஒரு பிரச்சினை என்பது தெளிவாகும். இலங்கைக்கு வந்திருந்த ஐ.அ. பேராளர் குழுவுக்கும் அவர்கள் அக்கறையுடன் கவனித்த அரசாங்கத்தின் பலத்தின் அத்திபாரமான பாதுகாப்புப் படையினரே அவற்றிற்கெல்லாம் சூத்திரதாரிகளாவர் என்றும் நம்பப்படுகின்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சில சிபாரிசுகள் உடனடியாக நிறைவேற்றப் படக்கூடியவை. நல்லிணக்க ஆணைக்குழு ஏற்கனவே ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தனது இடைக்கால சிபாரிசுகளை ஒன்றாகச் செய்த சிபாரிசு அதன் இறுதி அறிக்கையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக்கின்றது. அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய விபரங்கள் முழுமையாக வெளியிடும்படி கூறப்பட்டுள்ளமையே அதுவாகும். யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் மாத்திரமன்றி கடந்த முப்பது வருட யுத்தத்தின் போதும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவ்வாறு காணாமல் போனோரது உறவினர்கள் காணாமல் போன தமது உறவினர்கள் இப்போது உயிருடனேயே எங்கோ மறைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர் என்ற எண்ணத்துடன் சோர்வடைந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பற்றி பல வதந்திகள் நிலவுகின்றன. அரசாங்கத்திலுள்ள ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த மர்மமான இடங்களில் அரசாங்கம் பல சிறைசச்சாலைகளில் பலரை அடைத்து வைத்திருப்பதென்னும் வதந்தியும் அவற்றிலொன்றாகும். இவ்வாறான வதந்திகள் சான்றுகளின் அடிப்படையிலோ அல்லது சான்றுகள் இல்லாதோ கூட இருக்கலாம். தமது உறவினர்கள் இல்லை என்ற செய்தி உறுதியாக கிடைக்கும் வரையில் அவர்கள் உயிருடன் வாழ்வதாகவே நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

முடிவுக்கு வருதல்

காணாமல் போனோர் பற்றி ஒரு முடிவுக்கு வந்ததன் பின்னர் தான் காணாமல் போனோரது குடும்ப அங்கத்தவர்கள் தமது வாழ்வை மீண்டும் ஆரம்பிக்க கூடியதாக இருக்கும். காணாமல் போனோர் பற்றிய அவ்வாறான பிரகடனத்தின் பின்னர் சமூகத்தின் அனைத்து அங்கத்தவர்களும் தமது கடந்த கால துயரங்கள் தொடர்பாக ஒரு தீர்மானத்திற்கு வந்து அதன் பின்னர் வாழ்க்கையை தொடர்ந்து செல்வதற்கான பலத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். இத்தகைய நிலைமையில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய முதற்படியான முக்கிய நடவடிக்கை தமது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தகவல்களை முழுமையாக பகிரங்கமாக வெளிப்படுத்துவதாகும். இவ்வாறாக வெளிப்படுத்தப்படும் தகவல் காரணமாக தமது அன்புக்குரியவர்களது பெயர்கள் அதில் அடங்கியில்லாதிருந்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகப் போவது உறுதியாகும் அப்படித் தெரியவரும் போது அங்கே ஒரு முடிவுக்கும் அவர்களால் வரக் கூடியதாக இருக்கும். அவ்வாறு அரசாங்கக் கட்டுப்பாட்டில் சிறையில் உள்ளவர்கள் பற்றிய தகவலை வெளிப்படுத்துவதனால் இனி மேலும் உயிருடன் இல்லாதவர்கள் பற்றிய விபரமும் தானாகத் தெரியவரும். அப்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்னுமோர் சிபாரிசான “யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் துக்க தினம்“ ஒன்றினை அடையாளம் செய்து பின்பற்றலாம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மீது பல சர்வதேச அரசாங்கங்கள் எதிர்மறையற்ற அபிப்பிராயங்களைக் கொண்டுள்ளன. “பொறுப்புக் கூறுவது தொடர்பான பிரச்சினை“ பற்றி அவ்வரசாங்கங்கள் வேறுபட்ட அபிப்பிராயங்களை கொண்டுள்ள போதிலும் அவை கடந்த காலம் பற்றி விசாரணை செய்யும் ஒரு சர்வதேச பொறிமுறை ஏற்பாடுகள் பற்றி அரசாங்கத்தை வற்புறுத்துவனவாக இல்லை. அந்நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை சர்வதேச நாடுகளின் தரத்திற்குச் சமமான வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்கள் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இல்லை. அந்நிறுவனங்கள் நல்லிணக்க ஆணைக்குழு பொறுப்புக் கூற வேண்டியவை தொடர்பில் பெரும் தவறிழைத்துள்ளதாக கூறி வருவதுடன் கடந்த கால தவறுகள் பற்றி (படுகொலைகள், காணாமல் போனோர் உட்பட சட்ட விரோத மனிதாபிமானத்திற்கு எதிரானவை) விசாரணை செய்யும் சர்வதேச பொறிமுறை பற்றியும் வற்புறுத்தி வருகின்றன. 

அரசாங்கங்கள் தமது மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளில் இருந்து மீறாத வகையில் நல்லாட்சி செய்வதனையும் தமது வாக்குறுதிகளை திரிபு படுத்தி விடாதும் செயற்படுவதனை உறுதி செய்யும் வகையில் கருத்தியல்களை பாதுகாக்கும் காவலர்கள் பணியினை புரிவதே அரசு சாரா நிறுவனங்களின் பிரதான நோக்கமாகும். மறுபுறத்தில் பார்க்கும் போது அரசியல் என்பது "தகுதியானவர்களது கலை' எனக் கூறப்படுவதுடன் நடைமுறை சாத்தியமான அரசியல்வாதிகளினால் அரசாங்கம் நடாத்தப்படுகின்றது என்பதும் யதார்த்தத்தில் காணப்படுவதொன்றாகும். அரசுசாரா நிறுவனங்களில் உள்ளவர்களை விட சர்வதேச அரசாங்கங்களில் அங்கம் வகிப்போர் கூடியளவு நடைமுறைக்குச் சாத்தியமானவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மார்ச் மாதத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் இடம் பெறப்போகும் "தீர்மானிக்கப்படுவன“ தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு சில நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் பயனுள்ளவையாயிருக்கும். பெப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சுதந்திர தின உரையில் அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த கடுமையாக ஏற்பாடுகளை செய்து வருவதாக குறிப்பிட்டார். ஆனால் அவை யாவை ? என்பது பற்றி ஏதும் கூறவில்லை. ஜனாதிபதியினை தலைவராகக் கொண்டதும் சில அமைச்சரவை அங்கத்தவர்களை அங்கத்தவர்களாக கொண்டதுமான ஒரு உயர்மட்ட அமைப்பினை உருவாக்கி சிபாரிசுகளை அமுலாக்கம் செய்யும் அதிகாரம் கொண்ட குழு செயற்படப் போவதாக கூறும் ஒரு அறிவிப்பினையாவது முதலில் செய்யலாம். சர்வதேச ரீதியாக ஏற்பட்ட மனித உரிமைகள் தொடர்பான அழுத்தங்களை சமாளிக்கும் வகையில் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவினை தான் அமைத்து செயற்படப் போவதாக சொல்லளவில் கூறிவந்துள்ளது. அவ்வாறு அரசாங்கம் அளித்த உறுதிமொழியினை நடைமுறைப்படுத்த இது சரியான தருணமாக தென்படுகின்றது.

நன்றி -தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment