Sunday, February 5, 2012

இலங்கை மீது அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு: குட்டுப்போடவா, குனியவைக்கவா.................?


ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.  இந்த முடிவு அரசாங்கத்தை தூக்கிவாரிப் போட்டு விட்டது. அமெரிக்கா போர்க்குற்ற விவகாரங்களை அவ்வப்போது கையில் எடுத்து அரசாங்கத்தை மிரட்டி வந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படையாக ஜெனிவாவில் தீர்மானத்தைக் கொண்டு வரவோ, ஆதரிக்கவோ போவதாக கூறவில்லை. முதல்முறையாக இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. அதுமட்டுமன்றி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள ஹிலாரி கிளின்டன் அதனை இலங்கை அரசுக்கு முறைப்படி அறிவிக்கத் தான் இந்தக் கடிதத்தை அனுப்பினார். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக அமெரிக்கா அறிவிக்கவில்லை, ஆதரிக்கப் போவதாகத் தான் கூறியுள்ளது. அப்படியானால் அந்தத் தீர்மானத்தை யார் கொண்டு வரப் போவது என்ற கேள்வி எழுகிறது. 

கடைசியாக நடந்த கூட்டத்தொடரில் கனடா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர முனைந்தது. கடைசிநேரத்தில் அது கைவிடப்பட்டது. இம்முறையும் கனடாவை உசுப்பி விட்டிருக்கலாம் அமெரிக்கா. இந்தநிலையில் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இத்தகைய சூழலில் மேற்குலக நாடுகள் இந்தியாவின் ஆதரவைப் பெறும் முனைப்பில் இறங்கியுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கத்தில் இந்தியாவின் ஆதரவைத் தேடும் முயற்சியில் இலங்கையும் ஈடுபட்டுள்ளது. எல்லாப் பக்கங்களிலும் ஜெனிவா கூட்டத்தொடர் விவகாரத்தில் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தான் அரசாங்கத்திடம் இருந்து தளம்பலான கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள கட்டத்தில், மாகாணங்களுக்கு முக்கிய அதிகாரங்கள் எதையும் வழங்க முடியாது என்று அரசாங்கம் பிடிவாதமாக உள்ள கட்டத்தில் தான் மேற்குலகம் இலங்கையின் மீதான பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து அரசாங்கம் மீள்வதற்கு மீண்டும் பேச்சுக்களைத் தொடங்குதல், அதிகாரப் பகிர்வுக்கு இணங்குதல் ஆகியவற்றுடன் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கும் விடயத்திலும் அரசாங்கம் இறங்கிப் போய்த் தான் ஆக வேண்டியுள்ளது. இதனைச் சாதிக்கும் வரை அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை. வரப்போகும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுமோ இல்லையோ, இலங்கைக்கு அவ்வப்போது அமெரிக்கா கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு: குட்டுப்போடவா, குனியவைக்கவா? 

ஜெனிவாவில் இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு பெரிதும் கலக்கத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விட்டது. இந்தக் கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது மேற்குலக நாடுகளின் அழுத்தமாக இருந்து வருகிறது. ஆனால், இலங்கை அரசாங்கமோ "இந்த அறிக்கை ஜெனிவாவில் சமர்ப்பிக்க முடியாது, இது ஒன்றும் ஐ.நாவுக்கான அறிக்கை அல்ல. அது உள்நாட்டு விவகாரம்" என்று தான் கூறி வந்தது. இந்த நிலைப்பாடு கடந்தவார நடுப்பகுதி வரைக்கும் தான் அரசிடம் இருந்தது.  கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டுக்கு வழக்கமாக முடிவுகளை அறிவிக்கும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல வரவில்லை. அவர் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான நகர்வுகளை முறியடிப்பதற்கு ஆதரவு தேடி வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதனால், பிரதிப் பேச்சாளரான சுற்றாடல்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவே அமைச்சரவை முடிவுகளை அறிவித்தார். அப்போது அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவாவில் கையளிப்பது பற்றி அரசாங்கம் இன்னமும் அதிகாரபூர்வமான முடிவை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். அதற்கு முதல் நாளில் கூட, மனிதஉரிமைகள் விவகாரங்களைக் கையாளும் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும், வெளிவிவகார செயலர் கருணாதிலக அமுனுகமவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜெனிவாவில் கையளிக்கப்படாது என்று உறுதிபடக் கூறியிருந்தனர். அதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் இதையே கூறியிருந்தார். இவற்றுக்கு முரணான வகையில் அறிக்கையை கையளிப்பதா, இல்லையா என்று இன்னமும் முடிவு செய்யவில்லை என்று அனுரபிரியதர்சன யாப்பா குறிப்பிட்டது, அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் இருந்து தள்ளாடத் தொடங்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தியது. அதுவரை ஜெனிவாவில் எதையும் எதிர்கொள்ளத் தயார் என்று பேட்டி கொடுத்த அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, கருணாதிலக அமுனுகம, ஜி.எல்.பீரிஸ் போன்றவர்களெல்லாம் திடீரெனச் சுருண்டு போனதற்கும், ஜெனிவாவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பிப்பது பற்றி முடிவு எடுக்கவில்லை என்று அறிவித்ததற்கும் காரணம் அமெரிக்கா தான். 
  
கடந்த 27ம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கப் பிரதித் தூதுவர், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிசிடம் கடிதம் ஒன்றைக் கொடுத்திருந்தார். 
அது அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் கொடுத்தனுப்பிய கடிதம். 
  
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முதலாவது விடயம், வரும் ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது என்பதாகும். இந்த முடிவு அரசாங்கத்தை தூக்கிவாரிப் போட்டு விட்டது.  அமெரிக்கா போர்க்குற்ற விவகாரங்களை அவ்வப்போது கையில் எடுத்து அரசாங்கத்தை மிரட்டி வந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படையாக ஜெனிவாவில் தீர்மானத்தைக் கொண்டு வரவோ, ஆதரிக்கவோ போவதாக கூறவில்லை. முதல்முறையாக இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. அதுமட்டுமன்றி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள ஹிலாரி கிளின்டன் அதனை இலங்கை அரசுக்கு முறைப்படி அறிவிக்கத் தான் இந்தக் கடிதத்தை அனுப்பினார். மேலும், நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை அரசின் எதிர்காலத் திட்டங்கள் என்னவென்று அமெரிக்காவுக்கு விளக்கிக் கூற மார்ச் மாதம் வொஷிங்டன் வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். இந்தமாத இறுதியில் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப் போகிறது, ஆனால் இப்போது வொஷிங்டனுக்கு வருமாறு அவர் அழைக்கவில்லை. மார்ச் மாதம் தான் அதாவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போது தான் ஜெனிவாவுக்கு வருமாறு பீரிஸ் அழைக்கப்பட்டுள்ளார். 
  
இலங்கை அரசாங்கம் அதற்கு முன்னரே அவரை அனுப்பி அமெரிக்காவை சமாதானப்படுத்த முனைகிறது. ஆனால் அது அவ்வளவு இலகுவில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம் தான். ஏற்கனவே, போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் இலங்கை வரத் திட்டமிட்டிருந்த போது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நாட்டில் இல்லையென்று கூறி இராஜதந்திர வழியில் அவரது வருகையைத் தடுக்க இலங்கை அரசாங்கம் முனைந்தது. பின்னர் அவர் தனது பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டு வந்த போது கூட, அவரைச் சந்திக்காமல் தட்டிக் கழித்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.. அமெரிக்காவுக்கு இலங்கை எப்படி போக்குக் காட்டியதோ, அதேநிலை இப்போது வெளிவிவகார பீரிசுக்கு ஏற்படலாம். அது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. முன்கூட்டியே வெளிவிவகார அமைச்சர் பீரிசை வொஷிங்டனுக்கு அழைத்து இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள உயர் அழுத்தத்தைக் குறைக்க அமெரிக்கா விரும்பாது. இதே பதற்றமும் அழுத்தமும் ஜெனிவா கூட்டத்தின் இறுதிப் பகுதி வரை தொடர வேண்டும் என்பதே அமெரிக்காவின் எண்ணம். இதனை, வரும் மார்ச் மாதம் வொஷிங்டனுக்கு வருமாறு ஹிலாரி விடுத்த அழைப்பில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. இறுதியாக நடந்த ஜெனிவா கூட்டத்தின் போதும் இலங்கைக்கு நெருக்கடி இருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அழுத்தம் கொடுப்பதற்காக அப்போது அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வரவேண்டியிருந்தது. ஆனால் இப்போதும் அமெரிக்கா இதுபற்றி விவாதிக்க வொசிங்டனுக்கு வருமாறு பீரிசை அழைத்துள்ளது. இந்த ஒரு அழைப்பே இலங்கையைத் தடுமாற வைத்து விட்டது. 
  
கடந்தமுறை பிளேக் வந்து கடுமையாக வற்புறுத்திய போதும் ஒத்துக் கொள்ளாத அரசாங்கம் இப்போது அமெரிக்கா கேட்காமலேயே அறிக்கையை ஜெனிவாவில் கையளிக்க முடிவு செய்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஜெனிவாவில் நாங்கள் சாதிப்போம், எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்கத் தயார் என்று - 5ம் ஆண்டு மாணவன் எல்லாப் பாடங்களையும் படித்து விட்டு பரீட்சைக்குத் தயார் என்று கூறுவது போல அறிவித்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இப்போது அடியோடு குழம்பிப் போயுள்ளனர். கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் இது எதிரொலித்துள்ளது. அமெரிக்காவின் முடிவு குறித்து அங்கு விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போதே, அமெரிக்காவுக்கு விளக்கமளிக்க ஒரு உயர் மட்டக்குழுவை அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார். 
  
தன்னை அதிகாரத்தில் இருந்து அகற்ற அமெரிக்கா முனைவதாக அவர் குற்றம்சாட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்காவைச் சமாதானப்படுத்த முடியாது, அவர்கள் தமது முடிவில் இருந்து விலக மாட்டார்கள் என்று வழக்கத்திலேயே அமெரிக்காவைப் போட்டுத் தாக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச வெறுப்போடு கூறியுள்ளார். எஸ்.பி.திஸநாயக்கவோ இந்தியாவின் ஆதரவை தக்க வைப்பது தான் இப்போது முக்கியம் என்றிருக்கிறார். எவ்வாறியினும் அமெரிக்காவுக்கு ஒரு உயர்மட்டக் குழுவை அனுப்பி அதனுடன் சமரசம் செய்து கொள்ளும் இராஜதந்திர முயற்சிகளை இலங்கை அரசாங்கம் எடுக்கப் போகிறது. இது வெற்றி பெறுமா இல்லையா என்பது அடுத்த விடயம். இப்போது அதிகபட்ச அழுதங்களுக்குள் அரசாங்கம் சிக்கிப் போயுள்ளது என்பது தான் முக்கியமான விவகாரம். 
  
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக அமெரிக்கா அறிவிக்கவில்லை, ஆதரிக்கப் போவதாகத் தான் கூறியுள்ளது. அப்படியானால் அந்தத் தீர்மானத்தை யார் கொண்டு வரப் போவது என்ற கேள்வி எழுகிறது. கடைசியாக நடந்த கூட்டத்தொடரில் கனடா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர முனைந்தது. கடைசிநேரத்தில் அது கைவிடப்பட்டது. இம்முறையும் கனடாவை உசுப்பி விட்டிருக்கலாம் அமெரிக்கா. இந்தநிலையில் ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவளிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இத்தகைய சூழலில் மேற்குலக நாடுகள் இந்தியாவின் ஆதரவைப் பெறும் முனைப்பில் இறங்கியுள்ளன. அதன் ஒரு கட்டமாகவே நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் புதுடெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கத்தில் இந்தியாவின் ஆதரவைத் தேடும் முயற்சியில் இலங்கையும் ஈடுபட்டுள்ளது. 
  
இந்திய - இலங்கை பாதுகாப்புக் கலந்துரையாடலுக்காக புதுடெல்லி சென்றிருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ கடந்தவாரம் இதுபற்றியும் மேலாட்டமாகப் பேசியுள்ளார். ஆனாலும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மீண்டும் இந்தியா செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. 
  
எல்லாப் பக்கங்களிலும் ஜெனிவா கூட்டத்தொடர் விவகாரத்தில் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தான் அரசாங்கத்திடம் இருந்து தளம்பலான கருத்துகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கள் முடங்கிப் போயுள்ள கட்டத்தில், மாகாணங்களுக்கு முக்கிய அதிகாரங்கள் எதையும் வழங்க முடியாது என்று அரசாங்கம் பிடிவாதமாக உள்ள கட்டத்தில் தான் மேற்குலகம் இலங்கையின் மீதான பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து அரசாங்கம் மீள்வதற்கு மீண்டும் பேச்சுக்களைத் தொடங்குதல், அதிகாரப் பகிர்வுக்கு இணங்குதல் ஆகியவற்றுடன் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கும் விடயத்திலும் அரசாங்கம் இறங்கிப் போய்த் தான் ஆக வேண்டியுள்ளது. இதனைச் சாதிக்கும் வரை அமெரிக்கா போன்ற நாடுகளின் அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை. வரப்போகும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுமோ இல்லையோ, இலங்கைக்கு அவ்வப்போது அமெரிக்கா கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை.

நன்றி இன்போதமிழ் 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment