Monday, February 13, 2012

போர்க் குற்றச்சாட்டுக்களில் கிளம்பும் புதிய பொறிகள்!


புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் சரணடைந்த போது கொல்லப்பட்டது, காணாமற்போனதான விவகாரங்களும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் முக்கியமானதாக உள்ளன. இவர்களை அரச படையினர் தடுத்து வைத்துள்ளனர் என்று கூறப்பட்டாலும் அதை வெளிப்படுத்த அரசாங்கம் தயாரில்லை. அப்படி வெளிப்படுத்தினால் மேலும் பல உண்மைகளை மறைத்ததான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக நேரிடும். இன்னொரு பக்கத்தில் இவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறித் தப்பிக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் இவர்கள் சரணடைந்ததற்கு நேரடிச் சாட்சியங்கள் உள்ளன. இந்தநிலையில் தான் அரசாங்கம் தன் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிக்க புலிகள் இழைத்த கொடூரங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது அரசாங்கத்தை எந்தளவுக்குப் பாதுகாக்கப் போகிறது என்பது தான் கேள்வி.

இனி,

போர்க் குற்றச்சாட்டுக்களில் கிளம்பும் புதிய பொறிகள்!


இந்திய - இலங்கை பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, கொழும்பு திரும்பியதும் இந்தியாவின் டெக்கான் குரோனிக்கல் நாளேட்டுக்கு ஒரு பேட்டியை வழங்கியிருந்தார். அந்தப் பேட்டியின் ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே.பாலகுமாரன் பற்றி செய்தியாளர் பகவான் கிங் கேள்வி எழுப்பியிருந்தார். போரின் இறுதி நாட்களில் தனது மகனுடன் படையினரிடம் சரணடைந்தவர் பாலகுமாரன். ஆனால் அதன் பின்னர் அவரது நிலை என்னவென்று தெரியவில்லை என நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்திருந்தார் அவரது மனைவி. 

பாலகுமாரனுக்கு என்ன நடந்தது என்று அறிவதே இந்திய செய்தியாளரின் நோக்கம். அதற்குப் பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டுள்ளார் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச. ஒட்டுமொத்தப் போரை வழிநடத்தியவர் கோத்தபாய ராஜபக்ச தான். பாலகுமாரன் அல்லது தனிப்படக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில எவரதும் நிலைமை பற்றியும் தனக்குத் தெரியாது என்றும் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? என்றும் தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அத்துடன் விடுதலைப்புலிகளின் அறியப்பட்ட தலைவர்கள் பலரும் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். சரணடைந்த புலிகள், படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த அவர், சரணடையும் போது அங்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் எம்.எஸ்.எவ். பிரதிநிதிகள் இருந்ததாகவும் கூறியுள்ளார். பாலகுமாரனின் நிலை என்ன என்று தனக்குத் தெரியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டு அவர் இப்படிப் பதிலளித்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பாதுகாப்புச் செயலராக உள்ள கோத்தபாய ராஜபக்ச, பாலகுமாரன் அல்லது புலிகளின் வேறு முக்கிய தலைவர்களின் நிலை பற்றித் தெரியாது என்று கூறுவதை யாராலும் நம்ப முடியாது.கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளதன் மூலம் எதையோ ஒரு உண்மையை மறைக்க முனைகிறார் என்ற சந்தேகமே தோன்றுகிறது. பாலகுமாரன் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதையோ அல்லது உயிருடன் இல்லை என்று கூறுவதையோ அவர் விரும்பவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்று வெளிப்படுத்தவும் அவர் விரும்பவில்லை. அதேவேளை அறியப்பட்ட புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்ற பதிலின் ஊடாக அவர் இன்னொரு செய்தியை சொல்கிறாரா? என்ற கேள்வியையும் அவர் எழுப்ப வைத்துள்ளார். பாலகுமாரன் உள்ளிட்ட 50ற்கும் அதிகமான புலிகளின் தலைவர்கள் சரணடைந்த பின்னர் பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதாக பலர் சாட்சியம் கூறியுள்ளனர். 

அவர்களின் கதி என்னவாயிற்று என்று இன்னமும் தெரியாதுள்ளது. 

இதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவிடம் பதில் அளிக்கவில்லை. இப்போதும் கூட பாலகுமாரன் உயிருடன் உள்ளாரா? தடுப்பில் இருக்கிறாரா? என்பதை உறுதிப்படுத்தாமல் தப்பவே பாதுகாப்புச் செயலர் அது பற்றித் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். புலிகளின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பாலகுமாரன் பற்றி தனக்குத் தெரியாது என்று கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளது மிகவும் விந்தை தான். அவர் தடுப்பில் இருந்தால் தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்புச் செயலருக்குத் தான் உள்ளது. அவருக்குத் தெரியாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பில்லை. ஏனென்றால் இவரை மிஞ்சிய பாதுகாப்பு அதிகாரம் இலங்கையில் வேறு எவரிடமும் இல்லை. பாலகுமாரன் இறந்து விட்டார் என்றும் உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் அவர் சண்டையில் இறக்கவில்லை. அப்படி இறந்தவர்களின் பட்டியலை பாதுகாப்பு அமைச்சு முன்னர் வெளியிட்டது. அதில் அவரது பெயர் இல்லை. அதேவேளை சரணடைந்த பின்னர் அவர் கொல்லப்பட்டிருந்தால் அதற்கான பொறுப்பையும் பாதுகாப்புச் செயலரால் தட்டிக்கழிக்க முடியாது. ஏனென்றால் ஒட்டுமொத்தப் போரை வழிநடத்தியவர் கோத்தபாய ராஜபக்ச தான். இன்னொரு விடயம், போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளோ அல்லது பொதுமக்களோ சரணடைந்த பகுதியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ முறைப்பாடு செய்யப்பட்டும், அந்தக் குழு இதுபற்றி பொதுவாக அறிக்கையிட்டுள்ளதே தவிர அதுபற்றி விசாரித்து எந்தத் தகவலையும் பெற எம்.எஸ்.எவ். தொண்டர்களோ இருக்கவில்லை. அதற்கான அனுமதியும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் முன்பாகவே புலிகள் சரணடைந்ததாகக் கூறியுள்ளார் பாதுகாப்புச் செயலர். 

போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் நடுநிலையுடன் புலிகளை சரணடைய வைக்க சர்வதேச அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அதற்கு கோத்தபாய ராஜபக்ச இடமளிக்கவில்லை. போர் முடிவுக் கட்டத்துக்கு வந்து விட்டதாகவும், இனிமேல் புலிகள் சாதாரணமாக வந்தே சரணடையலாம் என்றும் கூறி அதை தடுத்து விட்டார் கோத்தபாய ராஜபக்ச. இந்த முயற்சியில் ஈடுபட்ட ஒரு தரப்பான அமெரிக்காவின் கொழும்புத் தூதரகத்தினால் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட தகவலில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் விக்கிலீக்ஸில் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்தநிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எம்.எஸ்.எவ். போன்றவற்றுடன் புலிகள் சரணடைந்த விவகாரத்தை பாதுகாப்புச் செயலர் தொடர்புபடுத்தியிருப்பது முக்கியமானதொன்று. இந்திய ஊடகவியலாளரிடம் அவர் இவ்வாறு கூறியுள்ளதும், அதுவும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ள நிலையில் இப்படிக் கூறியுள்ளதும் கவனத்தில் கொள்ளப்படக் கூடியது. புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் சரணடைந்த போது கொல்லப்பட்டது, காணாமற்போனதான விவகாரங்களும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் முக்கியமானதாக உள்ளன.இவர்களை அரச படையினர் தடுத்து வைத்துள்ளனர் என்று கூறப்பட்டாலும் அதை வெளிப்படுத்த அரசாங்கம் தயாரில்லை.அப்படி வெளிப்படுத்தினால் மேலும் பல உண்மைகளை மறைத்ததான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக நேரிடும். இன்னொரு பக்கத்தில் இவர்கள் போரில் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறித் தப்பிக் கொள்ளவும் முடியாது.ஏனென்றால் இவர்கள் சரணடைந்ததற்கு நேரடிச் சாட்சியங்கள் உள்ளன. இந்தநிலையில் தான் அரசாங்கம் தன் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிக்க புலிகள் இழைத்த கொடூரங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இது அரசாங்கத்தை எந்தளவுக்குப் பாதுகாக்கப் போகிறது என்பது தான் கேள்வி. ஏனென்றால், ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் இருதரப்பும் போர்க்குற்றங்களை இழைத்ததாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இருதரப்பின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் தான் நிபுணர்குழு பரிந்துரை செய்துள்ளது. 

ஆனால் இலங்கை அரசு தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்ற அதேவேளை புலிகள் மீது போர்க்குற்றங்களை அடுக்குகிறது. புலிகள் போர்க்குற்றம் செய்யவில்லை என்று வாதிடும் நிலையில் யாரும் இல்லை. ஆனால் இலங்கை அரசோ தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிப்பதாக நினைத்துக் கொண்டே புலிகளின் போர்க் குற்றங்களை சர்வதேசத்துக்கு கூறியுள்ளது. இப்போது புலிகள் மீது விசாரணையைத் தொடங்கினால் தனக்கும் ஆபத்து உள்ளதென்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை போலும். எனவே புலிகள் பற்றிய புதிய வீடியோ சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோருக்கு வலுவான சாட்சியாக அமையுமே தவிர, அது இலங்கை அரசின் மீதான அழுத்தத்தை ஒரு போதும் குறைத்து விடாது. 

இன்னொரு பக்கத்தில் போர்க்குற்ற விவகார நட்டஈட்டு வழக்கில் இருந்து தனது இராஜதந்திர விலக்குமையைப் பயன்படுத்தி விடுதலை பெற்றுள்ளார் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. அவர் இந்த வழக்கில் தன்னை குற்றவாளியில்லை என்று நிரூபித்து விடுதலை பெறவில்லை. தன் மீது வழக்குத் தொடுக்க முடியாது என்ற அடிப்படையில் தான் வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். இந்த வழக்கில் குற்றம் செய்யாததை அரசாங்கம் அல்லது சவேந்திர சில்வா நிரூபித்திருந்தால் அதுவே மிகப்பெரிய பிரசாரமாக அமைந்திருக்கும். அதைச் செய்யும் துணிவு அவருக்கோ அரசாங்கத்துக்கோ இல்லாது போனது வியப்புக்குரியதல்ல. ஆனால், இந்த வழக்கில் இருந்து குறுக்கு வழியில் விடுபட்டாலும் கூட, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக அவரால் கூறமுடியாது. இது போர்க் குற்றச்சாட்டுகள் அவர் மீது நிலைத்திருக்கவே வழி செய்துள்ளது. அரசாங்கத் தரப்பு போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க கையாளும் ஒவ்வொரு நகர்வும் இன்னொரு பொறிக்குள் அவர்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதை இத்தகைய நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி இன்போதமிழ்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment