Sunday, February 19, 2012

பார்வைக்கு எட்டாத தூரத்தில் நல்லிணக்கம்


இலங்கையில் நல்லிணக்கத்தையும் யுத்த கால இறுதிக் கட்டத்தின் போதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பதிலளிக்கும் கடப்பாட்டையும் கொண்டிருப்பதற்கான பொறிமுறையை ஏற்படுத்துமாறு சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஜெனீவாவில் இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் வாஷிங்டனின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பாகவும் உலக பொலிஸ்காரனாக தன்னை சுயமாக வரித்துக் கொண்டுள்ள அமெரிக்காவின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் உள்நாட்டு அரசியல் கட்சிகளும் மனித உரிமைகள்  கண்காணிப்பகம் , சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச நெருக்கடிக் குழு போன்ற சர்வதேச அமைப்புகளும் இதர நாடுகள் சிலவும் முக்கியத்துவம் கொடுத்து விடுத்து வரும் அறிக்கைகளை அவதானிக்க முடிகிறது. 

சர்வதேச சமூகமும் வட,கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்  பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தும் பதிலளிக்கும் கடப்பாடு விவகாரத்துக்கான சர்வரோக நிவாரணியாக மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டத்தையும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக் குழுவின் அறிக்கையையும் அரசாங்கம் முன்வைத்திருப்பதுடன் இவற்றைத் துரிதமாக அமுல்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறிவருகிறது. 

ஆனால் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க உதவி வெளி விவகார அமைச்சர்  ரொபெர்ட் பிளேக், நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் போதியளவுக்கு இதுவரை எடுத்திருக்கவில்லை எனவும் அதே சமயம் பதிலளிக்கும் கடப்பாட்டு விவகாரத்தில் இன்னும் மேற்கொள்ளப் படவேண்டியவை  அதிகளவுக்கு இருப்பதாகக் கூறியதுடன்  போர் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக நம்பகரமானதும் வெளிப்படையானதுமான உள்ளூர் பொறி முறை ஒன்றை  ஏற்படுத்தி விசாரணை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் இந்த உள் மட்டப் பொறிமுறையில் குறைபாடுகள் இருக்குமானால் வெளிமட்ட விசாரணைக்கு இடமளிக்க வேண்டுமென்ற சர்வதேச அழுத்தத்தை கொழும்பு எதிர் நோக்கநேரிடுமென்றும் இராஜதந்திர ரீதியான  நயத்துடனும் அதே சமயம் நாசூக்கான அழுத்தத்துடனும்  தெரிவித்திருந்தார். 

அதே சமயம் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கும் ஆதரவான கருத்தைத் தெரிவித்திருந்தார். நீண்டகாலமாக இழுபட்டுச் செல்லும் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் அரசுக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுக்களின் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் அதனை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் கலந்துரையாடலை மேற்கொள்ளலாம் என்பது  தமிழ்க் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடாக இருந்து வருகிறது.  அமெரிக்கா இதற்கு ஆதரவான கருத்தை தெரிவித்திருப்பதை தமிழ்க் கூட்டமைப்பு  உடனடியாகவே வரவேற்றிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. பதிலளிக்கும் கடப்பாட்டு விவகாரத்துக்கு போதியளவில் தீர்வையோ, பரிந்துரைகளையோ நல்லிணக்க ஆணைக்குழு முன்வைக்கவில்லை என்பதை பல நாடுகள் சுட்டிக்காட்டியிருப்பதை கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் குறிப்பிட்டிருப்பதுடன், சர்வதேசம் சம்பந்தப்பட்ட விசாரணையே இந்த இலக்கை வென்றெடுப்பதற்கு எடுத்து வைக்கும் சாதகமான படி முறையென வலியுறுத்தியிருக்கிறார்.

அதேவேளை உள்ளூர் பொறிமுறையென அரசு கூறிவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாட வேண்டும் என்ற விடயம் சுதந்திர தினத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை சுமந்திரன் உதாரணமாக காட்டியிக்கிறார். அரசாங்கம் கூறுவது ஒன்று, செய்வது மற்றொன்று என்பதற்கு இதுவொரு சிறிய உதாரணமென்ற அதிருப்தி அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.  இராணுவ நீதிமன்ற விசாரணை, நல்லிணக்க ஆணைக் குழுவின்  அறிக்கைகளை அமுல்படுத்தப்போவதாக விடுக்கப்படும் அறிக்கைகள் போன்றவை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கான வெள்ளையடிப்பு என்ற கருத்தே தமிழ்க் கூட்டமைப்பிடம் காணப்படுகிறது. 

அதேவேளை பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க.வும் அரசாங்கம் ஒரு போதும் அரசியல் தீர்வை வழங்காது என்று உறுதிபடக் கூறுகிறது. தீர்வொன்றை ஜனாதிபதி முன்வைத்தால் ஆளும் கூட்டணி உடைந்து விடும் என்றும் தீர்வுப் பொதிப் பேச்சு அடுத்த தேர்தல் வரை தொடரும் என்றும் அதன் பின்னர் நாட்டின் இறைமையை எவ்வாறு தாங்கள் பாதுகாத்தனர் என்ற பேச்சு வெளிப்படும் எனவும் அத்துடன் இன ரீதியான சுலோகங்கள் எழுப்பப்படும் என்றும் அடுத்த தேர்தல் வரை இந்த சுலோகத்தை கொண்டிருப்பதே அரசின் முழு நோக்கமும் என்றும் ஐ.தே.க.வின் சிரேஷ்ட உப தலைவரும் கண்டி மாவட்ட எம்.பி.யுமான லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டிருக்கிறார். நாட்டின் உண்மையான ஜனநாயகத்தின் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடலாமெனவும் வெளியார் தலையீடு தேவையில்லை என்றும் மற்றொரு தென்னிலங்கை கட்சியான ஜே.வி.பி. கூறுகிறது. 

இன நெருக்கடியுடன் தொடர்புபட்ட விடயங்களில் தென்னிலங்கை கட்சிகள் எப்போதுமே தமது வாக்கு வங்கியை தக்கவைப்பதற்கான நிலைப்பாட்டிற்கு அப்பால் ஓரங்குலம் தானும் முன் நகரப்போவதில்லை என்பதை கடந்த கால வரலாறும் நிகழ்கால சம்பவங்களும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் நிலைப்பாடும் பூகோள அரசியல் நலன்சார்ந்த விடயத்திற்கு அப்பால் எதுவும் இல்லை என்பதும் இரகசியமானதல்ல. ஆசியாவில் பொருளாதார வல்லரசாக தோற்றம் பெற்றுவரும் சீனாவின் பக்கம் இலங்கை நழுவிச் சென்று விடாமல்  வைத்திருக்கும் துருப்புச் சீட்டாகவே அமெரிக்கா உட்பட மேற்குலக அரசுகள் இந்த விவகாரத்தை பற்றிப்பிடித்திருக்கின்றன. தெற்காசிய பிராந்தியத்தின் பலம் வாய்ந்த பெரிய நாடான இந்தியாவின் இலங்கை தொடர்பான கவலைகளும் சீனா, பாகிஸ்தான் போன்றவற்றுடனான கொழும்பின் அந்நியோன்யம் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. 

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன்  நிபுணர்குழுவை நியமித்த  தருணத்தில் ஐ.நா. வின்  அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் லின் பாஸ்கோ இலங்கைக்கு வருகை தந்திருந்த வேளை ஜனாதிபதி, எதிர்க் கட்சித் தலைவர் , தமிழ், முஸ்லிம் , சமூகப் பிரதிநிதிகள், இடம்பெயர்ந்த மக்கள் எனப் பலதரப்பினரையும் சந்தித்த பின் ஒரு விடயத்தை வலியுறுத்தியிருந்தார்.  மோதலுக்கு காரணமான கவலைகளுக்கு அரசியல் தீர்வே அருமருந்து என்றும் போரினால் ஏற்பட்ட மன வடுக்களை ஆற்றுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியமாகத் தேவைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால்  இந்த அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மெத்தனப் போக்கையே தொடர்ந்தும் காண முடிகிறது. இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாகவும் இந்து சமுத்திரத்தின் மற்றொரு சிங்கப்பூராகவும் மாற்ற வேண்டும் என்ற தனது கனவை நனவாக்கி நாட்டின் வரலாற்றை மாற்றி எழுதக்கூடிய நிலைமையில் ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளார். கனவு காண்பது இலகுவானதாகும். ஆனால் கனவுடன் வாழ்வது எளிதான காரியமல்ல. ஜனாதிபதியும்  அரசாங்கமும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினால்  சர்வதேச சமூகம் எந்தவொரு கேள்வியையும் கேட்பதற்கோ விமர்சிப்பதற்கோ சிறியதொரு வாய்ப்பும் கிடைக்காது.

நன்றி தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment