Saturday, February 11, 2012

குருதியில் உறைந்த குமரபுரம்...... மறக்க முடியுமா?


இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு தமிழ்க் கிராமத்திலும் இனத்தாக்குதலின் சோக வரலாறுகள் இருக்கும். சில கிராமங்கள் பல படுகொலை மரணங்களைத் சுமந்து நிற்கும். அப்படியான ஒரு கோரப்படுகொலையை 11.02.1996 இல் சந்தித்தது குமரபுரம் எனும் தமிழ்க்கிராமம். கிழக்கு மாகாணம் தாங்கிய எத்தனையோ படுகொலைகளுடன் குமரபுரம் படுகொலையும் ஒரு சம்பவமாக மறைக்கப்பட்டுவிட்டது. ஆனால், பிஞ்சுகளும் சேர்த்துக் கருக்கப்பட்ட அந்தநாளின் வடுக்களைச் சுமந்து வாழும் உறவுகளின் வலி இன்றுவரை ஆறவில்லை. 

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் குமரபுரம் என்ற இந்தக் கிராமம் இருக்கின்றது. பாரதிபுரத்திற்கும் கிளிவெட்டிக்கும் இடையிலுள்ளது. கிராமத்திற்குக் கிழக்கே பிரசித்தி பெற்ற அல்லைக்குளம் அமைந்திருப்பது, அதன் பலமாக அமைகின்றது. குமரபுரத்தின் வடக்கு எல்லையில் இருந்து இரண்டு மைல் தூரத்தில், சிறிலங்கா இராணுவத்தின் முகாம் அமைந்திருக்கின்றது. கிராமத்தின் பெரும்பாலான குடும்பங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டிருக்கின்றன. ஒரு விவசாயக் கிராமம் என்பதால் பெருமளவிலான ஓலைக்குடிசைகளும் ஆங்காங்கே சில ஓட்டுவீடுகளையும் காணமுடியும். மூதூர் நகரத்திலிருந்து வெருகல் முகத்துவாரம் வரை நீண்டுசெல்லும் பிரதான வீதி இக்கிராமத்தின் ஊடாகவே ஊடறுத்துச் செல்லுகிறது. இனவாதத் தாக்குதல்களும் கலவரங்களும் அதிகளவில் இடம்பெறாத வகையில் குமரபுரம் ஒரு சாதாரண வாழ்வோட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்தது. 

1995ஆம் ஆண்டிற்குப் பின்னர், கிழக்கு மாகாணத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்திருந்ததன் காரணமாக, ஒரு நெருக்கடியான சூழலுக்குள் அன்றாட வாழ்க்கைநிலை தள்ளப்பட்டது. ஒவ்வொரு நாளும் இராணுவத்தினருக்கு அஞ்சி வாழும் நிலையேற்பட்டது. இவ்வாறான நாட்களில்தான் 11.02.1996 அன்று, ஒரு மிருகத்தனமான மனித வேட்டையில் குமரபுரம் உறைந்துபோனது. 

11.02.1996 அன்று மாலை நான்கு மணியளவில் திடீரென, வழமைக்கு மாறாக வெடிச்சத்தங்கள் கேட்டன. பீதியடைந்த மக்கள் தமது உயிர்களைப் பாதுகாக்க  வழி தெரியாது அடைக்கலம் தேடி ஒடினார்கள். சிலர், கிழக்கு பக்கமாக இருந்த அல்லைக்குளத்திற்கு அருகே நெட்டுயர்ந்து, அடர்த்தியாக வளர்ந்திருந்த கிளிக்கண்ணா மரக்கூடலுக்குள் ஒளிந்து கொண்டார்கள். ஓடமுடியாதவர்களை விட்டுச்செல்ல முடியாத பலர் வீட்டிலேயே,   கடவுளைத் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். 

சற்று நேரத்தில் கிராமத்தின் வீதிகளில் இறங்கிய இராணுவம், வீடுகளை நோக்கியும், வீதிகளில் வந்து கொண்டிருந்தவர்களையும் காரணம் ஏதுமின்றி, இலக்கின்றிச் சுட்டது. முதியவர், குழந்தைகள் என்ற எந்தவிதமான வேறுபாடுமின்றி தாக்கப்பட்டு அங்கிருந்தவர்களில் பலர், பிணங்களாகச் சரிந்து கொண்டிருந்தனர். பல மணிநேரங்களாகத் தொடர்ந்த இந்தக் கொலைவெறியாட்டத்தில் மொத்தமாக இருபத்தியாறு தமிழர்களின் உயிர் காவுகொள்ளப்பட்டது. இரண்டு வயதுப் பாலகனிலிருந்து எழுபது வயது முதியவர் வரை குதறிக் கொல்லப்பட்டு, குமரபுரம் பிணக்காடாகியது.   இருபத்தியிரண்டு பேர் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டார்கள். இறந்த எல்லோருடைய மரண அத்தாட்சிப்பத்திரங்கள், துப்பாக்கிச் சூட்டுகாயங்களினாலும், நீண்ட நேரம் உரிய சிகிச்சை அளிக்கப்படாது கவனிப்பாரற்று விடப்பட்டமையாலும் ஏற்பட்ட மரணங்களென எழுதப்பட்டிருந்தன.

வீடுகள், வீதிகள் எங்கும் பிணங்கள், மரணக்கோலத்தில் அந்தக்கிராமம் உறைந்திருந்தது. ஆனால் தொடர்ந்து கொண்டிருந்த இராணுவத்தின் அட்டூழியத்தால் அழக்கூட முடியாமல் எஞ்சியிருந்தவர்கள், தம் கண்முன்னே செத்துக் கொண்டிருந்த உறவுகளுக்கு கண்ணீரை மட்டும் சிந்திக் கொண்டிருந்தனர். வாழ்நாள்வரை மறக்க முடியாத அந்தச் சம்பவத்தை இன்றும் கண்ணீருடன்தான் சொல்கின்றாரகள். 

அழகுதுரை என்பவரது வீட்டில் எட்டுப் பேர் இருந்தார்கள். அந்த எட்டுப் பேரும், இராணுவத்தால் வீட்டுக்குள்ளேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள் குமரபுரத்தின் ஊர்த்தலைவர் தனது சாட்சியத்தில்  கூறும்பொழுது ”தன்னுடைய வீட்டில் தன்னுடன் கதைத்துக்கொண்டிருந்த இராசேந்திரம் கருணாகரன் என்பவர் தன் கண் முன்னாலேயே சூடுபட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைத் தான் பார்த்ததாக” சொன்னார். இந்த அடாவடித்தனமான சூட்டில் தொழிலாளியான நாகராசா என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒரு கண்ணை முழுமையாக இழந்தார். மறுகண்ணிலும் பார்வைக் குறைபாட்டோடு இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

தனது எட்டு வயதுச் சகோதரனான அன்ரனி ஜோசெப் என்ற சிறுவனை  துவிச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு, குமரபுரத்து வீதி வழியாக  கிளிவெட்டிக்கு சென்று கொண்டிருந்த அருமைத்துரை தனலட்சுமி (கீதா) என்ற பதினாறு வயதுப் பாடசாலை மாணவி துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு கடை ஒன்றுக்குள் தனது தம்பியுடன் அடைக்கலம் தேடியிருந்தார். கடைக்குள் புகுந்த சிறிலங்கா இராணுவம் மாணவியை வெளியே இழுத்துச் சென்று பாற்பண்ணைக் கட்டிடத்திற்குள் வைத்து பாலியல் வல்லுறவு கொண்டது. பல இராணுவச் சிப்பாய்களால் வல்லுறவு கொள்ளப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

நீதிமன்றில் சாட்சியமளித்த கோப்ரல் குமார என்ற இராணுவச் சிப்பாய் அந்த மாணவியைத் தானேதான் சுட்டுக்கொன்றதாக ஒத்துக் கொண்டார். ஏன் சுட்டுக்கொன்றாய் எனக் கேட்கப்பட்டபோது,  ”அந்தச் சிறுமி பல இராணுவச் சிப்பாய்களால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு உடம்பு முழுவதும் கடிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தாள். உடம்பிலிருந்து குருதி வடிந்து கொண்டிருந்தது. வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடைகள் பல துண்டுகளாகக் கிழித்து வீசப்பட்டிருந்தன. அவள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள். அவளின் பரிதாபகரமான நிலையைப் பார்த்தே சுட்டேன்” என்றான்.

மூதூர் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய பொன்னையா சுவர்ணராச் இம்மரணங்களை அத்தாட்சிப்படுத்தியுள்ளார். இந்த படுகொலை தொடர்பாக ஒன்பது படையினர் கைது செய்யப்பட்டார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தக்கொலை தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நிலுவையிலுள்ளது. இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட சான்றுப் பொருட்களும் தடையப் பொருட்களும் மூதூர் நீதிமன்றத்தினால் கொழும்பு அரசாங்க பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால் அவையாவும் 2005ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின் போது எரிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதற்கு பதில் ஏதுமின்றி கிடப்பில் போய்விட்டது. 

11.02.1996 அன்று குமரபுரம் இனப்படுகொலையில் பலிகொள்ளப்பட்டவர்கள் 

 1. இராமஜெயம்பிள்ளை கமலேஸ்வரன்......மாணவன்.......14
 2. விநாயகமூர்த்தி சுதாகரன்...............................மாணவன்.......13
 3. சண்முகநாதன் நிதாகரன்................................மாணவன்........11
 4. சுந்தரலிங்கம் சுபாசினி.....................................மாணவி...........04
 5. சுந்தரலிங்கம் பிரபாகரன்.................................மாணவன்...... 13
 6. அருமைத்துரை தனலட்சுமி............................மாணவி...........16
 7. தங்கவேல் கலாதேவி........................................மாணவி...........11
 8. கனகராசா சபாபதிராசா.....................................கமம்..................16
 9. செல்லத்துரை பாக்கியராசா...........................தொழிலாளி....26
 10. வடிவேல் நடராசா...............................................தொழிலாளி....27
 11. சுப்பையா சேதுராசா...........................................தொழிலாளி....72
 12. சிவக்கொழுந்து சின்னத்துரை.........................கமம்..................58
 13. ஆனந்தன் அன்னம்மா.....................................................................28
 14. அழகுதுரை பரமேஸ்வரி................................................................27
 15. அருமைத்துரை வள்ளிப்பிள்ளை 
 16. அருணாசலம் கமலாதேவி 
 17. அருணாசலம் தங்கவேல் 
 18. சோமு அன்னலட்சுமி
 19. அமிர்தலிங்கம் ரஜனிக்காந் 
 20. கிட்டினர் கோவிந்தன்
 21. பாக்கியராசா வசந்தினி
 22. சுப்பிரமணியம் பாக்கியம் 
 23. சிவபாக்கியம் பிரசாந்தினி 
 24. இராசேந்திரம் கருணாகரன்

கடுமையான காயமடைந்தவர்கள் 
 1. இராசதுரை சத்தியப்பிரியா, சுயதொழில், 24
 2. நாகராசா கிருபைராணி, வீட்டுப்பணி, 35
 3. குலேந்திரன் தவமணிதேவி, வீட்டுப்பணி, 24
 4. கணபதிப்பிள்ளை நிரோஜன், குழந்தை, 04
 5. கணபதிப்பிள்ளை குகதாசன், மாணவன்,12
 6. திருப்பதி மஞ்சுளா, மாணவி,12
 7. அழகுதுரை சர்மி, மாணவி, 12
 8. மோசஸ் அன்ரனி யோசப், குழந்தை, 02
 9. மகேஸ்வரன் குவேந்தினி, சிறுமி, 06
 10. மகேஸ்வரன், வனஜா 
 11. நாகராசா சுதாகரன் 
 12. கிட்டிணன், 04
 13. கணபதிப்பிள்ளை குமுதினி 
 14. பாக்கியராசா, 35
 15. பழனிவேல் யோகராணி 
 16. தம்பிப்பிள்ளை சிற்றம்பலம் 
 17. மாரிமுத்து செல்லாச்சியார்
 18. அரசரட்ணம் நாகராஜா 
 19. சித்திரவேல் வேல்நாயகம் 
 20. சிற்றம்பலம் கோணேஸ்வரன் 
 21. இராசதுரை சின்னவன் 
 22. ராஜா இன்பமலர், 24

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.


Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment