Saturday, February 4, 2012

சுதந்திரதினத்தில் ஒரு கோரப்படுகொலை - உருத்திரபுரம்


சுதந்திரதினம் என்பது ஒரு நாட்டின் தேசியநாள். அனைத்து மக்களும் இன, மொழி, மத பேதங்களைக் கடந்து, தேசியம் என ஒருமைப்படும் சிறப்பு இந்தநாளுக்கு உண்டு. ஒரு இறைமையுள்ள நாட்டின் அர்த்தம் இதுதான். ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை, சுதந்திரதினம் என்பது சிங்களதேசியவாதத்தை கொண்டாடுவதற்கான ஒருநாளாகவே இன்றுவரை இருந்து வருகின்றது. அந்த நாளிலும் கூட தமிழ்மக்கள் மீதான இராணுவ நடவடிக்கைகளும் தாக்குதல்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, தமிழர்களும் அந்தநாட்டின் உரிமையுள்ள மனிதர்கள்தான் என்பது நிலைநிறுத்தப்படுவதில்லை. 1991ம் வருடம், சிறிலங்காவின் நாற்பத்து மூன்றாவது சுதந்திரதினத்தன்று (04.02.1991) உருத்திரபுரத்தில் நடாத்தப்பட்ட வான்குண்டுத்தாக்குதல்களில் ஒன்பது அப்பாவிகள் அநியாயமாகப் பலிகொள்ளப்பட்ட சம்பவம் ஒரு சான்று. 

உருத்திரபுரம், வன்னிநிலப்பரப்பின் வளமான கிராமங்களில் ஒன்று. கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேசசெயலர் பிரிவில் அமைந்துள்ள உருத்திரபுரம்,  கிளிநொச்சி நகர மையத்தில் இருந்து ஏறத்தாழ ஆறு மைல் துாரத்தில் அமைந்துள்ளது.    தொன்மையான வரலாற்றைக் கொண்ட இக்கிராமத்தின் குடிப்பரம்பல், விவசாயக் குடியேற்றத்திட்டங்களைத் தொடர்ந்து வேகமாக விருத்தியடைந்தது.  விவசாயம் உருத்திரபுரத்தின் முதன்மை சீவனோபாயமாக இருக்கின்றது. வருடம் முழுமைக்கும்  கிடைக்கும் நீர்ப்பாசனம் கிராமத்தின் செழிப்பிற்கான அடிப்படை. ஒப்பீட்டு ரீதியில்,  கல்வி, விளையாட்டு, உட்கட்டுமானம், வாழ்க்கைத்தரம் என்பவற்றில் உருத்திரபுரம் முன்னேற்றகரமான வளர்ச்சியைக் கொண்டது.  அந்தக் கிராமத்தின் மையத்தில் அதாவது சந்தை, வாசிகசாலை, கூட்டுறவுச்சங்கம், கமநல நிலையம், விளையாட்டுக்கழகம், கடைகள் என்பன அமைந்துள்ள,  கூழாவடிச் சந்தியில்தான் சிறிலங்கா வான்படையின் கோரப்படுகொலை நிகழ்த்தப்பட்டது. 

04.02.1991 அன்று சிறிலங்காவின் நாற்பத்து மூன்றாவது சுதந்திரதினம். வடக்குக் கிழக்குத் தவிர்ந்த, நாட்டின் ஏனைய இடங்களில் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகக் களைகட்டியிருந்தன. தமிழர் தாயகம் வழமையான தாக்குதல் அச்சங்களுடன் இருந்தாலும், சுதந்திரதின நன்நாளில் இராணுவத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் இருக்காது என்ற ஒருசிறு நம்பிக்கையில் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.  ஆனால் அந்த நம்பிக்கை பாதுகாக்கப்படவேயில்லை.


உருத்திரபுரம், கூழாவடிச்சந்தை காலையிலேயே மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. அயல் கிராமங்களிலிருந்து வந்தவர்கள், மொத்த, சில்லறை வியாபாரிகள் என மக்கள் கூட்டம் நிறைந்திருந்தவேளை, முற்பகல் 11மணியளவில், திடீரென வான்பரப்பில் நுழைந்த சிறிலங்கா விமானப்படையின் இரண்டு விமானங்கள் ('பொம்பர்')  சந்தைப்பகுதியை மையப்படுத்தி ஐந்து நிமிடங்களாக வட்டமிட்டன.  விமானங்களின் இரைச்சலினால் திகைப்படைந்த மக்கள் செய்வதறியாது சிதறி ஓடினார்கள். பாதுகாப்புத் தேடி, சந்தியில் நின்ற கூழாமரத்தின் கீழும், அருகேயிருந்த கால்வாயின் பாலத்தின் கீழும் ஒளிந்துகொண்டார்கள். எல்லாத் தெய்வங்களையும் இரந்து வேண்டிக் கதறிக் கொண்டிருந்த வேளையில், தாழப்பறந்த விமானங்கள் நான்கு குண்டுகளை அடுத்தடுத்து வீசிவிட்டு, தமது இலக்கு நிறைவேறியது போல திரும்பிவிட்டன. வீசப்பட்ட குண்டுகளில் ஒரு குண்டு வெடிக்கவில்லை ஏனைய மூன்று குண்டுகளும், பாதுகாப்புத் தேடி மக்கள் ஒளிந்திருந்த பாலத்தின் மேலே வெடித்துச் சிதறின. 

பாலத்தினுள் புகுந்திருந்த ஒன்பது அப்பாவிகள் (ஐந்துபேர் மாணவர்கள்) அந்த இடத்திலேயே உடல் சிதறிப் பலியானார்கள். அவர்களின் உடலத்தில் இருந்து தெறித்த குருதியால், அந்த வாய்க்காலே செந்நிறமானது. இரத்த ஆறாகப் பாய்ந்த கால்வாயில் மிதந்த சதைத் துண்டங்களைப் பொறுக்கியெடுத்து ஒவ்வொருவராக அடையாளம் காணப்பட்டனர்.     எதிர்பாராத தாக்குதலால் அந்தக் கிராமமே கதிகலங்கி நின்றது.  சுதந்திரத்தினத்தில் பதிவு செய்யப்பட்ட படுகொலையால் உருத்திரபுரம் மரண ஓலத்தில் கரைந்தது. இந்த சம்பவத்தின்போது இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இத்துடன் முடிந்துவிடவில்லை, பலியாகிப்போனவர்களுக்கான இறுதிச்சடங்குகள் மறுநாள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை, மீண்டும் நுழைந்த விமானங்கள் அந்தப் பகுதியில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன. உயிரிழந்தவர்களின் நினைவாக இப்பிரதேச மக்களால், கூழாவடிச் சந்தியில் 2005ம் வருடம் நினைவாலயம் திறக்கப்பட்டது.

உருத்திரபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கே.வி.கே. திருலோகமூர்த்தி அகில இலங்கை சமாதான நீதவான், திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவம் பற்றி தெரிவிக்கையில்.

'திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும், வைத்தியராகவும் உள்ள நான் 1991ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி, உருத்திரபுரம் கூழாவடிச்சந்தியில் தனியார் மருத்துவமனையையும், அத்தோட எனது அலுவலகத்தையும் நடத்தி வந்தனான். 1991 பெப்ரவரி மாதம் நான்காம் திகதியும் வழமைபோல எனது வைத்தியசாலையைத் திறந்து நடத்திக்கொண்டிருந்தன். அன்றைக்கு சிறிலங்காவின் சுதந்திரதினம் என்பதால், பாடசாலை, அரச திணைக்களங்கள் எல்லாவற்றிற்கும் விடுமுறை நாள். கூழாவடிச் சந்தியில்தான் சந்தையும் இருக்குது. நேரம் நண்பகல் 11.00 மணியிருக்கும் சந்தையில் நிறையச் சனக்கூட்டமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் பாடசாலை விடுமுறை என்பதால், பாடசாலை மாணவர்களும் அங்கு நின்று விளையாடிக்கொண்டு நின்றார்கள் அந்த நேரம் சிறிலங்கா விமானப்படையினருடைய பொம்பர் விமானங்கள் வானில் வட்டமிட்டன. முதல் ஒரு குண்டு அடிச்சவன் ஒருத்தருக்கும் சேதமில்லை. சனங்கள் எல்லாப்பக்கத்தாலயும் பதற்றத்துடன் ஓடினார்கள். நான் ஒரு வைத்தியர் என்பதால் அங்குள்ள எல்லோரையும் எனக்கு நன்றாகத் தெரியும். சிலர் பாலத்துக்குக் கீழ ஓடினார்கள். டொக்ரர் வாங்க என்று சொல்லி என்னையும் கூப்பிட்டவர்கள்தான். நான் துவிச்சக்கர வண்டி எடுத்துக்கொண்டு சிவநகர்ப் பக்கமாக ஓடி விட்டேன். இரண்டாவது குண்டு பாலத்துக்குள்ள விழுந்து வெடிச்சதால சம்பவ இடத்திலேயே ஒன்பது பேரும் உயிரிழந்தார்கள், இருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவருக்கும் நான் தான் மருந்து கட்டிவிட்டேன்” என்றார்.

04.02.1991 அன்று உருத்திரபுரப் படுகொலையில் பலிகொள்ளப்பட்டவர்கள்
 1.  நாகலிங்கம் தயாபரன்........................மாணவன் ..................14
 2. கணபதிபிள்ளை ஜெயலிங்கம்........மாணவன்....................08
 3. பாலசிங்கம் ஜெயதீஸ்வரன்.............மாணவன்...................15
 4. பஞ்சலிங்கம் பாலேந்திரன்...............வியாபாரம்..................23
 5. முருகேசு தர்மலிங்கம்......................தொழிலாளி..................38
 6. கோபாலசிங்கம் ஜெயகோபால்......வியாபாரம்...................20
 7. பேனாட்சோ தயாபரன்.........................மாணவன்....................12
 8. சுந்தரலிங்கம் சந்திரகுமார்................மாணவன்.....................16
 9. விநாயகமூர்த்தி கருணாகரன்..........தொழிலாளி.................29
காயமடைந்தவர்கள் 
 1. கணபதிப்பிள்ளை இராசன்.................மாணவன்.......................16
 2. கணேசன் தவநேசன்.............................மாணவன்.......................18
பல படுகொலைகளையும், இடப்பெயர்வுகளையும் சந்தித்த உருத்திரபுரம், போர் நிறுத்த காலத்தில் கல்வி, சமூக, பொருளாதாரத்தில் துரித வளர்ச்சியைக் கண்டது. மீண்டும் 2009 மனிதப் பேரழிவில் அனைத்தையும் இழந்து, இன்று மீளக்குடியேறி தனது இருப்பிற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றது. 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment