Sunday, February 19, 2012

ஒரு கிராமத்தின் மரணம் - தங்கவேலாயுதபுரம்

கிழக்கு மாகாணத்தின் எல்லைக் கிராம மக்களின் வாழ்க்கை எப்போதும் நெருக்கடிகளுடன்தான் பயணிக்கும். அவர்களது நாட்கள் ஒவ்வொன்றும் நிச்சயான,பாதுகாப்புடன் நகரும் என்பதற்கான உத்தரவாதங்கள் இருப்பதில்லை. நில அபகரிப்பிற்காகவும், வளச்சுரண்டல்களுக்காகவும் விரட்டப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அதற்காக அவர்கள் பார்த்த உயிர்ப்பறிப்புக்கள் ஏராளம். நியாயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் சட்டத்திற்கும் அப்பால் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். அவ்வாறுதான், காரணம் ஏதுமின்றி, தங்கவேலாயுதபுரத்தில் ஒரே நாளில் நுாற்றியெழுபத்து எட்டுப் பேரைக் கொன்று குவித்தது சிறிலங்கா இராணுவம். 

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் என்னும் கிராமம். விவசாயம் மற்றும் குடிசைக் கைத்தொழில் போன்றவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமம். இனக்கலவரங்களால் அதிகம் பாதிக்கபட்ட கிராமங்களில் ஒன்று. பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்வு மீள்குடியேற்றம் என ஒரு அவலமான வாழ்க்கைதான் இந்தக் கிராமத்திற்கு சொந்தமானது. இறுதியாக 2006 இல் இடம்பெயர்ந்து, இன்று மீள்குடியேற்றத்திற்கான அனுமதிக்காகக் காத்திருக்கின்றார்கள். எத்தனை முறை இடம்பெயர்ந்தாலும், துரத்தப்பட்டாலும் சொந்த மண்ணின் சுவாசத்திற்காக ஏங்கும் அந்த மக்களின் கிராமத்தில் நடந்தேறிய படுகொலை, அதிகமான உயிர்களைக் காவுகொண்ட ஈழப்படுகொலைகளில் ஒன்று.

சிறிலங்காவின் இனவாதம் உச்சமடைந்த எண்பதுகளின் நடுப்பகுதியில், 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி பத்தொன்பதாம் திகதி, கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களையும் அழிக்கும் நோக்கில், சுற்றிவளைத்த விசேட அதிரப்படையினர் சரமாரியான தாக்குதலை மேற்கொண்டனர். கவசவாகனங்களில் இருந்தபடியே வீதிகள், வீடுகள் என கண்ணுக்கு தெரிந்த இலக்குகளில் எல்லாம் சுட்டனர்.உலங்கு வானுார்திகளும் தாக்குதலில் இணைந்து கொண்டன. குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என எந்தப்பாகுபாடும் இன்றி தாக்குதல்கள் தொடர்ந்தன. வீடுகளில் இருந்தோர், பணியில் இருந்தோர் என அப்படியே உயிர் பிரிந்தார்கள். அங்கு துப்பாக்கி வேட்டுக்களையும் மரண ஓரங்களையும் தவிர எதுவுமே இருக்கவில்லை. 

பல மணி நேரங்களாகத் தொடர்ந்த கொலையாட்டத்தில் நுாற்றியெழுப்பத்தெட்டுப் பேர் உயிர்துறந்தார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். கைகொடுக்கவும் காப்பற்றவும் யாருமின்றி குற்றுயிராக விழுந்தவர்களும் சில மணித்துளிகளில் இறந்துபோனார்கள். கடைகளும் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன. வீதிகளிலும் வீடுகளிலும் பிணங்கள் சிதறிக்கிடந்தன. நுாற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அந்தக் கிராமத்தை மட்டுமல்ல, தமிழர் தாயகத்தையே உலுக்கியது. அநியாயமாகப் பலிகொள்ளப்பட்ட அந்த ஆத்மக்களின் கதறலும் வலிகளும் இன்றுவரை ஆறாத வடுக்களாக கிராமத்தின் அடிவேர்களில் பதிந்திருக்கின்றன. 

குறிப்பு - பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களைப் பெற முடியவில்லை.

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment