Monday, February 20, 2012

எதிர்காலம் குறித்த பெரும் அச்சத்தில் மக்கள்


சிறிலங்காவில், இன்று உருவாகியுள்ள நெருக்கடி நிலையை உற்றுநோக்கும் போது எதிர்காலம் குறித்த அச்சத்துக்குள் மக்கள் சிக்கியுள்ளதையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கடந்த சில வருடங்களாக அரசாங்கம் தெரிவித்து வந்த பொருளாதார அபிவிருத்தி என்பது கானல்நீரா என்ற சந்தேகமே அதிகரித்து வருகிறது. அண்மையில் கூட அரசாங்கம் நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதத்தால் வளர்ச்சி கண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது. ஆனால், நாட்டு மக்களுக்கோ, பொருளாதாரத்துக்கோ எந்த பயனும் கிட்டியதாகக் காணப்படவில்லை. கடந்த ஒருவார காலத்துக்குள் அனைத்துமே தலைகீழாக மாறிப் போயுள்ளதையே பார்க்க முடிகிறது. இன்றைய அரசாங்கம் பதவியேற்ற நாள் முதல் கூறிவந்த "வளமான எதிர்காலம்' என்ற கோஷம் இன்று பொய்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக சரிந்து வீழ்ந்து போயுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதை மறுக்க முடியாது. சர்வதேசப் பொருளாதாரம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை அதிலிருந்து மீண்டிருப்பதாக அதிகாரத்திலுள்ளவர்களும் அவர்களுக்கு ஆதரவான பொருளாதார விற்பன்னர்கள் எனக் கூறிக்கொள்பவர்களும் பெருமைப்படுவது இன்று புஸ்வாணமாகிப் போயுள்ளது. 

பொருளாதார நெருக்கடிக்குத் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதும் தான் அரசு கண்களை மூடிக்கொண்டு மக்கள் மீது சுமையேற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதன் பிரதிபலன் முழு நாட்டையும் ஆட்டம் காணச் செய்துவிட்டது. மக்களின் திடீர் எழுச்சியைக் கண்டு பயந்த அதிகார வர்க்கம் அந்த மக்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்டத் தொடங்கியுள்ளது. மக்களுக்கு "வளமான எதிர்காலம்' பற்றிப் பேசிய அரசு அந்த மக்கள் மீதே துப்பாக்கிகளை நீட்டும் நிலைக்கு குறுகிய காலத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களைத் தூண்டி விடுவதாக அரசு தரப்பு சுமத்தும் குற்றச்சாட்டானது நியாயமானதாகப் பார்க்கக்கூடியதொன்றல்ல. நாட்டு மக்களுக்கு பாதகமான நிலைமைகள் ஏற்படும் போது அதற்காக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவது தவறெனக் கொள்ள முடியுமா? என்று கேட்க விரும்புகின்றோம். 70, 77 கால ஆட்சியில் உருவான பொருளாதார நெருக்கடியை விடவும் மிக மோசமானதொரு பொருளாதார நெருக்கடி இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரபாயத்திலிருந்து நாட்டை மீட்டுக் கொள்வதற்கான மாற்று வழிகளைத் தேடும் முயற்சியை மேற்கொள்ளாமல் எதிரணிகள் மீது பழி சுமத்துவதும், மக்களை நோக்கி துப்பாக்கிகளை நீட்டுவதும் ஆரோக்கியமான செயற்பாடுகள் அல்ல என்பதை அதிகார வர்க்கம் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார ரீதியில் பார்க்கும் போது ரூபாவின் மதிப்பை மிதக்க விடும் விதத்தில் அரசு எடுத்த முடிவானது எரிபொருளின் விலையை அதிகரிக்க எடுத்த முடிவைப் பார்க்கிலும் மோசமானதாகும். இவையிரண்டும் சமகாலத்தில் கையாளப்பட்டதால் பொருளாதாரத் தளம்பலுக்கு முக்கிய காரணியாக அமைந்துவிட்டன.

எரிபொருள் விலை, மின்சாரக் கட்டண அதிகரிப்பால் முழு நாடும் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அன்றாட வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் வாழும் மக்கள் மீது மேலும் பளுவைச் சுமத்தும் போது அதன் தாக்கம் எவ்வாறானதாக அமையும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட கையோடு போக்குவரத்துக் கட்டணங்களும் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட இந்த மக்களைப் பாதிக்கும் விடயம் தொடர்பில் அனுதாபப்பட்டு அரசு எரிபொருள் நிவாரணம் தந்தால் உடனடியாக பஸ் கட்டணங்களைக் குறைக்கத்தயாரென அறிவித்துள்ளனர். பொருட்களின் விலைகளை அதிகரித்துவிட்ட அரசு மறுபுறத்தில் நிவாரணம், நிவாரணம் என ஜெபிக்கத் தொடங்கியுள்ளது. எதற்காக இந்த நிவாரண மந்திரம் என்ன எனக் கேட்கவிரும்புகின்றோம். மக்களை பாதிக்கும் இந்த நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்கு சில ஆலோசனைகளை புத்தி ஜீவிகள் பலரும் முன்வைத்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். பொதுமக்கள் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பை இரத்துச் செய்து எரிபொருள் வர்த்தகர்களின் அளவுக்கு மிஞ்சி இலாபத்தை மட்டுப்படுத்த வேண்டும். அரசு "வற்' வரி போன்ற சில வரிகளை நீக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியத்தை முடிந்தளவு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த யோசனைகளை அரசு கவனத்தில் எடுப்பதன் மூலம் ஓரளவுக்கேனும் நிலைமையைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

இதனிடையே எரிபொருள் விலை அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பை காரணமாக வைத்து மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. பாண், பால் மா உட்பட முக்கிய பொருட்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன. இதற்கு அரசு இடமளிக்குமானால் மக்களைப் பொறுத்தளவில் அது மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடு ஏறி மிதித்தது போலாகிவிடும். அரசாங்கத்தின் தவறான கொள்கையால் மக்கள் அதிருப்தி கொண்டு கிளர்ந்தெழும்போது அடக்குமுறையை பிரயோகிக்கவும் எதிரணி மீது பழி சுமத்தவும் முற்படுவதால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. அரசாங்கம் கடைப் பிடிக்கும் நிதி முகாமைத்துவம் செயற்பாட்டுத் திறனுடையதல்ல என்பதை உணர்ந்து பயணத்தை சரியான தடத்தில் செலுத்த முற்படுவதே ஆரோக்கியமானதாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நன்றி தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment