Thursday, February 23, 2012

மனித நாகரீக மேம்பாட்டின் அடிப்படை கலாச்சாரம்


இலங்கையில் தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம் என்பனவற்றுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மூத்தப் பிரஜைகள், அரசியல்வாதிகள், அறிஞர்கள் கவலையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றனர். சமூகமொன்றின் அல்லது தனிநபரின் பழக்க வழக்கங்கள், கலைகள், எழுத்துக்கள், அறிவுசார்ந்த விடயங்கள் தொடர்பானவற்றை அடிப்படையாகக் கொண்டே கலாசாரத்துக்கு வரைவிலக்கணத்தை வகுத்துக் கொண்டுள்ளோம். குறிப்பிட்ட காலப்பகுதியில் குறித்த சமூகத்தின் வாழ்க்கை நடைமுறைகளில் உள்ள பிரத்தியேகமான அம்சங்கள், கலைகள், படைப்புகள் யாவுமே கலாசாரப் பரிமாணத்துக்கு உட்பட்டவையாகும். மானிட வரலாற்றில் இவை காலத்துக்கு காலம் கூர்ப்படைந்து வந்திருக்கின்றன. 

கலாசாரமானது மனிதர்களின் வெற்றிக்கு பிரதான காரணியாக இருக்கின்றது. நாங்கள் யார்? எவ்வாறு நாங்கள் வாழ்கின்றோம்? என்பதைத் தீர்மானிப்பதில் மனிதர்களின் கலாசாரமானது மிகையான மரபணுக்களைக் கொண்டிருப்பதாக பிரிட்டனிலுள்ள உயிரியல் விஞ்ஞானக் கல்லூரியின் கூர்ப்பியல் ஆய்வு கூடத்தின் தலைவரான மார்க் பேஜல் என்ற அறிவியலாளர் வாதமொன்றை முன்வைத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. கலாசாரம் என்பது ஒரு வைரஸ் என்றும் அது எமது மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது எனவும் கட்டுப்படுத்துகின்றது எனவும் சிலர் நினைப்பதுண்டு. எமக்கு பயனற்ற விதத்தில் கூட, கலாசாரம் எம்மைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆனால், கலாசாரத்தை நாங்கள் வளப்படுத்தும் போதே அதன் சிறப்பான அனுகூலங்கள் எம்மை வந்தடைகின்றன. உண்மையில் எமது கலாசாரத்தை ஆரத் தழுவிக் கொள்ளும் விதத்தில் மனிதர்களாகிய நாம் கூர்ப்படைந்தவர்களாக இருக்கிறோம். அத்துடன் கலாசாரமானது எமது மனதின் கட்டுப்பாட்டின் கீழ் கணிசமான அளவுக்கு வருவதற்கு இடமளிப்பவர்களும் நாங்களேதான். இதனால் எமக்கு கிடைக்கும் பிரதியுபகாரமே சுபிட்சமும் பாதுகாப்புமாகும். 

கலாசாரத்திற்கான ஆற்றலை மனிதர்கள் பெற்றுக்கொண்ட போதே நவீன மனித பரிணாம வளர்ச்சியானது வரையறைப்படுத்தப்பட்டதாகத் தோற்றம் பெற்றது என்கிறார் மார்க் பேஜல். இது 2 இலட்சம் வருடங்களுக்கு முன்னர் சம்பவித்ததாக அந்த அறிவியலாளர் கூறுகிறார். கலாசாரத்திற்கான தகைமையை மனிதர்கள் பெற்றுக்கொண்டதாலேயே பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அறிவைப் பரிமாறிக் கொள்ளவும் அறிவு, சிறப்புத் தேர்ச்சி என்பனவற்றைப் பெற்றுக்கொள்ளவும் மனிதர்களால் முடிந்தது. இதுவொரு புதிய ரகமான கூர்ப்பாகும். இதனை நாம் கூர்ப்பியல் சிந்தனையென அழைக்க முடியும். கருத்துக்கள் மனதுக்கு மனம் தாவக் கூடியதாக இருந்ததால் எமது கலாசாரமானது எமது மரபணுக்களிலும் பார்க்க மிக வேகமாக கருத்துக்களை உள்ளீர்த்துக்கொள்ளக்கூடிய நிலைமை ஏற்பட்டது. ஆதி மனிதர்கள் ஆபிரிக்காவிலிருந்து வெளியேறி சவூதி அரேபிய பாலை வனங்களுக்கு சென்ற போது அங்கு வாழ்வதற்கு அனுகூலமான விடயங்களை உள்வாங்கிக்கொள்வதற்கு மரபணுக்களிலும் பார்க்க இந்தப் பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்ட சிந்தனை துரிதமாக உள்ளீர்த்துக்கொள்கின்றது என்று மார்க் பேஜல் கூறுகிறார். புகலிடங்களை எவ்வாறு உருவாக்குவது? நீரை தோண்டியெடுப்பது? வீட்டு மிருகங்களை வளர்ப்பது? போன்றவற்றையெல்லாம் மனிதர்கள் இந்த சிந்தனை வளர்ச்சியாலேயே கண்டுபிடித்து உள்வாங்கிக் கொண்டனர். 

ஆனால், மரபணு ரீதியாக நாம் விடயங்களை உள்ளீர்த்துக்கொள்ளும் ஆற்றலிலிருந்து இந்தக் கலாசார மட்டத்தில் உள்ளீர்த்துக்கொள்ளும் ஆற்றல் வேறுபட்டதாக இருக்கின்றதா என்பதைப் பார்க்கக்கூடாது. தகவல்கள் பலதலைமுறை தலைமுறையாக பல்லாயிரக்கணக்கான வருடங்களைக் கடந்து வந்திருப்பதே யதார்த்தமானதாகும். ஏனைய விலங்குகளிலும் பார்க்க மனித இனமே பெருந்தொகையாகப் பல்கிப் பெருகியுள்ளது. சுற்றாடல்களுக்கு ஏற்புடையதாக மனிதர்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் மரபணுக்களும் அதனை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், எமது முன்னோர்கள். குரூரமான பேராசையைக் கொண்டவர்களாக இருக்க வேண்டிய தேவை காணப்பட்டிருக்கவில்லை. ஆனால், இப்போது நாங்கள் அதனை நிலையானதொரு உபாயமாகப் பார்ப்பதில்லை.

பல்லாயிரம் கோடி நிகழ்வுகளை உள்ளடக்கியதே எமது கலாசாரப் பரிவர்த்தனையாகும். எமது உயிர்வாழ்வு, சுபிட்சம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கு கலாசார அறிவு முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. இந்தக் கலாசார அறிவின் வரட்சியே சமூகத்தில் பல்வேறு வகையான குழப்பங்களுக்கு கச்சரவுகளுக்கும் சண்டைகளுக்கும் வழிவகுக்கின்றது. 

சென்னையில் அண்மையில் 15 வயது மாணவன் தனது ஆசிரியையைக் குத்திக் கொன்றமை பொலிவூட் திரைப்படமான "அக்னீபாத்'தை பார்த்ததன் விளைவே என்று கூறப்பட்டது. ஊடகங்கள் மூலமாக வன்முறைகளின் தாக்கம் பிள்ளைகளில் ஏற்படுவதே இந்தக் கலாசார சீரழிவுக்குக் காரணமென விசனம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த விடயத்தில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானதாகும். வன் செயல்களை ஊக்குவிக்கும் திரைப்படங்களை பிள்ளைகள் பார்க்காதவாறு பெற்றோர் கட்டுப்படுத்த முடியும். இங்கு சமூகத்தின் கண்காணிப்பு மிக மிக அவசியமாகின்றது. ஏனைய உயிரினங்களிலும் பார்க்க உலகின் சுற்றாடலை முழுமையாக மாற்றியவர்கள் மனிதர்கள். அந்த வகையில் காலாதி காலமாகக் கூர்ப்படைந்து வரும் கலாசாரத்தையும் நடைமுறை இருப்புக்கு இசைவாக்கமடையத்தக்கதாக உள்ளீர்த்துக் கொண்டு அதேசமயம் தத்தமது சமூகம் சார்ந்த கலாசார விழுமியங்களைச் செவ்வனே கடைப்பிடிக்கும் போது கலாசாரம் சீர்கெட்டுப் போகின்றதே என்று எவரும் கவலையடையவோ அல்லது அலட்டிக்கொள்ளவோ தேவையில்லை.

நன்றி தினக்குரல்

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment