Tuesday, February 14, 2012

அமெரிக்காவின் நலன்கள் வெற்றி கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்பது..................?

உண்மையில் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் என்பதே அரசை இறுக்கும் இவ்வாறான அழுத்தங்களை, தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது என்ற கேள்வியில்தான் தங்கியிருக்கிறது. அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான விசேட தூதுவர் ஸ்டீபன் ரப் கொழும்பு வந்திருப்பதானது, அரசின் மீதான அழுத்தங்களில் மேலும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். முன்னர் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேசத்தின் கரிசனைகளை முற்றாக நிராகரித்த அரசு, அத்தகைய விசாரணைகளை அனுமதிக்க முடியாதென்றும் கூறிவந்திருக்கிறது. நமக்கு நினைவிருக்கலாம் - ஜ.நாவின் நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்த மகிந்த அரசு, நிபுணர் குழு இலங்கையில் மேலதிக விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை கோரியபோது அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆனால் இன்று, அமெரிக்காவின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஸ்டீபன் ரப்பின் விஜயத்தை கொழும்பால் தடுக்க முடியவில்லை. வழமையாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆவேசமான அறிக்கைகளை வெளியிடும், அரசின் கூட்டாளிகள் சிலரும் இன்று ரப்பின் வருகை தொடர்பில் மிகுந்த மௌனம் சாதிக்கின்றனர். எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியான தந்திரோபாயம் கைகொடுக்காது என்பதை அரசு கருத்தில் கொண்டிருப்பதே, மேற்படி மாற்றத்திற்கான காரணமாகும். ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த ஸ்டீபன் ரப், யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருக்கின்றார். ரப் பிரதிநிதித்துவப்படுத்தும் - The Office of Global Criminal Justice (GCJ) என்னும் அமெரிக்காவின் அமைப்பு - முன்னர் றுவாண்டா, யூகோஸ்லாவியா, சியாரோ லியோன் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இடம்பெற்றதாகக் கருதப்பட்ட இனப்படுகொலை, போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது. இலங்கையில் இறுத்திக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக நம்பப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில், ஒபாமா நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதே ரப்பின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும். ஸ்டீபன் ரப் இலங்கையில் இருக்கும் சந்தர்ப்பத்திலேயே, இலங்கை பதுகாப்பு அமைச்சு, ' Ruthless' – என்னும் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. ஆவணப்பட்டத்தில் தோன்றும் மக்கள் சிலர் புலிகள் பொதுமக்களை கொன்றதாகக் குறிப்பிடுகின்றனர். பிள்ளைகளை வலுக்கட்டாயமாக புலிகள் பிடித்துச் சென்ற கதைகளும் இந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்படுகின்றன. புலிகள் இறுதிக்கட்டத்தில் மக்களுடன் நடந்துகொண்ட முறை தொடர்பில் ஏற்கனவே பல அமைப்புக்களும் குறிப்பிட்டிருக்கின்றன. அரசின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் எந்தவொரு மனித உரிமை அமைப்பும் புலிகளை நியாயப்படுத்தியிருக்கவில்லை. எனவே புலிகளின் தவறுகளை காட்சிப்படுத்துவதன் மூலம் அரசின் தவறுகளை நியாயப்படுத்த முயலும் அரசின் தந்திரோபாயம் பெரியளவில் வெற்றிபெறப் போவதில்லை. ஏற்கனவே, சனல்-4 தொலைகாட்சியின் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வீடியோ படங்களை எதிர்த்தும், அரசு சில பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறது. ஆனால் அவைகள் பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கவில்லை. இராஜதந்திரம் என்பது எப்போதுமே பூச்சியங்களை வைத்து ஆடும் (zero-sum game) ஆட்டமல்ல. இதனை கருத்தில் கொள்ளும் மகிந்த அரசு தற்போது அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தங்களை கையாளும் பெருட்டு நல்லிணக்க ஆணைக் குழுவின் (LLRC)அறிக்கை மற்றும் தேசிய வேலைத்திட்ட முன்மொழிவு (National Action Plan) ஆகிய இரண்டையுமே பிரதான ஆயுதங்களாகக் கைக்கொள்ள முயல்கிறது. இந்த இராஜதந்திர ஆட்டத்திலும் இலங்கை வெற்றி பெறுமா? இதிலும் இலங்கை வெற்றி பெற்றால் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்னவாகும்? இங்கு எழும் பிரதான கேள்வி, அமெரிக்காவின் இவ்வாறான அழுத்தங்கள், நம்மில் சிலர் நம்புவது போன்று அல்லது சிலர் வாதிட்டு வருவது போன்று, இலங்கையின் ஆட்சியாளர்களை மின்சாரக் கதிரைக்கு கொண்டு செல்ல உதவுமா? நிட்சயமாக அமெரிக்காவின் அழுத்தங்கள் அத்தகையதொரு நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதில் நாம் குழம்ப வேண்டியதில்லை. வரலாற்றில் எங்கும் பெருவாரியான மக்கள் செல்வாக்குடன், உலகம் அங்கீகரித்திருக்கும் தேர்தல் ஜனநாயக முறைமையை வலுவாகக் கடைப்பிடிக்கும் ஆட்சியாளர்களுக்கு அத்தகையதொரு நிலை நேர்ந்ததும் இல்லை. பழிவாங்க வேண்டும் என்ற ஆவேசத்தில் இருக்கும் சில நண்பர்களுக்கோ யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. உண்மையில் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் என்பதே அரசை இறுக்கும் இவ்வாறான அழுத்தங்களை, தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகின்றது என்ற கேள்வியில்தான் தங்கியிருக்கிறது. அமெரிக்க விஜயத்தின்போதும் கூட்டமைப்பு விசேட தூதுவர் ஸ்டீபன் ரப்புடன் கலந்துரையாடியிருக்கின்றது. ஸ்டீபனின் இலங்கை விஜயத்தின் போதும், அவர் முதலில் த.தே.கூட்டமைப்புடனேயே கலந்துரையாடியிருக்கின்றார். சந்திப்பின்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை வலியுறுத்தியிருக்கின்றார். இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்கள் அமெரிக்காவின் நீண்டகால மூலோபாய நகர்வின் ஒரு பகுதி என்பதை விளங்கிக் கொள்வதில் சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால் அதற்கானதொரு வலுவான தளக் காரணி அமெரிக்காவிற்கு தேவை. தற்போதைய நிலையில் இலங்கை அரசின் யுத்தத்திற்கு பின்னரான பொறுப்புக்கூறும் தன்மைதான் அமெரிக்காவிற்கான தலையீட்டுக் காரணி. ஏற்கனவே இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதியுடனான சந்திப்பொன்றின்போது, இலங்கையின் உள்நாட்டு விடயங்கள் முறையாக கையாளப்பட்டால் அந்நியத் தலையீட்டுக்கான வாய்ப்புக்கள் இருக்காது என்று குறிப்பிட்டதையும் நாம் இந்த இடத்தில் நினைவுகொள்ள முடியும். எனவே அரசு யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும், அமெரிக்க மற்றும் இந்தியத் தலையீட்டிற்கான வலுவான காரணியாகவே இருக்கப் போகிறது. எதிர்வரும் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தாலும், எதிர்காலத்திலும் இத்தகைய தலையிடியை அரசு எதிர்கொள்ளவே நேரிடும். இதிலிருந்து தப்ப வேண்டுமாயின், அரசு அழுத்தங்களுக்கு அடிபணிந்து செல்ல வேண்டும் அல்லது அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டு செல்ல வேண்டும். அமெரிக்காவை முழுமையாக எதிர்த்துக் கொண்டு பயணிப்பதென்பது, முழுமையாக சீனாவை சாருவதாகவே அமையும். கொழும்பு முழுமையாக சீனாவை சாருவதென்பது, இன்னொரு மியன்மாராக மாறுவதாகவே முடியும். முழுமையாக சீனாவை சாருவதென்பது பிறிதொரு வகையில் முழுமையாக இந்தியாவை எதிர்ப்பதாகவும் அமையும். அத்தகையதொரு சூழல் ஏற்படின், 87ற்கு முற்பட்ட இந்தியாவை, கொழும்பு சந்திக்கவும் நேரிடலாம். எப்படிப் பார்த்தாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் இது ஒரு விசப் பரீட்சையே ஆகும். எனவே இன்றைய சூழலில் இலங்கையைப் பொறுத்தவரையில் போர்க் குற்றச்சாட்டு என்பது, கொழும்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு இராஜதந்திர அணுக் குண்டாகும். இதிலிருந்து தப்புவதற்கு அரசின் முன்னைய இராஜதந்திரம் தொடர்ந்தும் கைகொடுக்குமா? அமெரிக்காவின் முலோபாய நகர்வுகள் ஆசியாவை நோக்கியதாக இருக்கும் பின்னணியிலேயே, உலகின் பார்வை இலங்கையின் பக்கமாக திரும்பியுள்ளது. அரசு இந்தியாவின் (சீனா, பாகிஸ்தான்) முரண் சக்திகளை அரவணைப்பதன் மூலம் இந்தியாவை ஒரு வரையறைக்குள் (Containment) முடக்கும் தந்திரோபாயத்தை நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகிறது. அதில் இலங்கை அரசு பெரு வெற்றியும் பெற்றிருக்கிறது. புலிகள் மேற்கொண்ட வரலாற்றுத் தவறுகளும் இத்தகைய தந்திரோபாய வெற்றிக்கான புறச் சூழலை வழங்கியது. ஆனால் இந்தியாவிற்கு பிரயோகித்த அதே தந்திரோபாயத்தை அமெரிக்கா மீதும் கைக்கொள்ள முடியுமா? அமெரிக்காவின் அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கு கொழும்பு இந்தியா நோக்கியே சாயவேண்டி ஏற்படும். ஒரு வகையில் அமெரிக்க அழுத்தங்களின் நீண்டகால இலக்கு அதுவாகக் கூட இருக்கலாம். கொழும்பு சவுத் புளொக்கை சார்ந்திருப்பதானது, ஒரே நேரத்தில் சீனாவை எதிர்கொள்ளும் இந்திய-அமெரிக்க கூட்டிற்கு சாதகமான ஒன்றாக அமையும். இவ்வாறான பின்னணிகளை கருத்தில் கொண்டுதான் அமெரிக்கா இலங்கையின் போருக்கு பின்னரான சூழலில் அதிக கரிசனையை வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால் இதில் ஆபத்தான பக்கமும் உண்டு – சர்வதேச சக்திகளின் காய்நகர்த்தல்கள் முதல் அர்த்தத்தில் அவர்களது நலன் சார்ந்தது. நலன்களை வெற்றிகொள்ளக்கூடிய ஏது நிலைமை இருப்பின் ஏனைய விடயங்கள் இரண்டாம் பட்சமாகிவிடும். எனவே போருக்கு பின்னரான இலங்கையின் பொறுப்புக்கூறும் பொறிமுறை தொடர்பில் அழுத்தங்களை பிரயோகித்துவரும் அமெரிக்காவின் நலன்கள் வெற்றி கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், ஈழத் தமிழர்களின் பிரச்சனை கீழ் நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்தும் நேரிடலாம். இந்த இடத்தில் இதுவரை அரசு தன் மீதான அழுத்தங்களை கையாளுவதற்கு எவ்வாறு ஒன்றுக்கொன்று முரண்பட்ட சக்திகளை கையாண்டு வந்ததோ, அதனையொத்த இராஜதந்திர அணுகுமுறைக்கான வாய்ப்பு தற்போது தமிழர் தரப்பிற்கு கிடைத்திருக்கின்றது. இதனை நமது அரசியல் சக்திகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்? ஈழத் தமிழர்களின் எதிர்காலம் என்பது, மேற்படி இராஜதந்திரப் போரில் முரண்பட்ட சக்திகளை கையாளும் ஆற்றலில்தான் தங்கியிருக்கிறது. கடந்த 64 வருடங்களாக தங்களுக்கான இராஜதந்திர அரசியலை மிகவும் நுட்பமாக கையாண்டுவரும் கொழும்பை, அவர்களுக்கு சமதையான இராஜதந்திர ஆற்றலுடன் எதிர்கொள்ள வேண்டுமாயின், தமிழர் தரப்பிற்கு அதிக தயாரிப்புக்கள் தேவைப்படும். இது மூளையை பயன்படுத்த வேண்டிய காலம் என்பதை நமது தமிழ் தேசிய தரப்பினர் விளங்கிக் கொண்டால் மட்டுமே அத்தகையதொரு தயாரிப்பு சாத்தியப்படும்.


ஆய்வாளர் யதீந்திரா 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment