தொடரும் காணி அபகரிப்பு, அவலப்படும் கொக்கிளாய் மக்கள்


கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக அபகரிக்கப்பட்டு,  தென்னிலங்கையில் இருந்து வரவழைக்கப்பட்ட   சுமார் 280 பெரும்பான்மையினக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன.இவர்கள் நீர்கொழும்பு, புல்மோட்டைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்கள் முகத்துவாரம் கடற்பகுதியில் தொழில் செய்து வருகின்றனர். இதனால் தாம் அங்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக, அப்பிரதேசத்தில் மீள்குடியமர்ந்துள்ள தமிழ்மக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், மாரியாமுனை, புளியமுனை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விவசாயத்தையும், மீன்பிடியையும் பிரதான தொழில்களாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் 1983ஆம் ஆண்டு, சிறிலங்கா இராணுவத்தின்  திட்டமிட்ட வன்முறைகளால் இந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் 1983 ஆம் ஆண்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு வரையான 28 ஆண்டுகள் வாழ்வாதாரத்திற்காக பல துன்பங்களை அனுபவித்துள்ளனர். பலர் தொழிலின்றியும், சிலர் கூலிவேலைகளைச் செய்தும் வாழ்ந்ததாகத் தெரிவிக்கின்றனர்.  கடந்த ஆண்டுதான் இவர்கள் இந்தப்பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டனர். வீதிகள், காணிகள், அனைத்தும் பற்றைக்காடுகளாக மண்டிக் காணப்பட்ட இப்பிரதேசத்தில்  குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

வீடுகள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது பற்றைகளை அழித்துத் தற்காலிக வீடுகளை அமைத்துக் குடியேறியுள்ளனர்.ஆனால் இவர்கள் வாழ்வாதாரத்தொழில்கள் எதனையும் சுதந்திரமாகவும் சுயமாகவும் செய்யக் கூடிய நிலை தற்போது இல்லை. முகத்துவாரம் பகுதியிலும் கொக்கிளாய் ஆற்றுப் பகுதியிலும் கடற்றொழிலை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்தப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட, மற்றும் தொழில் நிமித்தம் வந்து தங்கியிருக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொழில்களைச் செய்து வருகின்றனர்.

முகத்துவாரம் பகுதியில் இவர்களது காணிகள் முழுமையாக அபகரிக்கப்பட்டுச் சுமார் 280 வரையான பெரும்பான்மையினக் குடும்பங்கள், நீர்கொழும்பு, புல்மோட்டை அகிய பகுதிகளில் இருந்து வந்து குடியமர்ந்து முகத்துவாரம் கடற்பகுதியில் கடற்றொழில்களைச் செய்து வருகின்றனர். இதனால் இவர்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாத நிலையே உள்ளது.  முகத்துவாரம் கொக்கிளாய் ஆற்றுப் பகுதியில் எல்லாக்காலத்திலும் சிறுகடற்றொழில் செய்யக் கூடிய நிலை காணப்பட்டது. இங்கு, சட்டத்தின்படி இயந்திரப்படகுகள், கூட்டுவலைகள் என்பவற்றைப் பாவித்தல் கூடாது. ஆனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோமான வலைகளையும் தடை செய்யப்பட்ட இயந்திரப் படகுகளையும் பயன்படுத்தி தொழில் செய்து வருகின்றனர்.

சிங்கள மக்களின் குடியேற்றத்தாலும், அவர்களின் முழுமையான ஆதிக்கத்தாலும் தாங்கள் தொழில் செய்ய முடியாதுள்ளது எனவும் தாங்கள் தொழிலுக்கெனக் கடலில் இறங்கினால் தாக்கப்படலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். சொந்த இடங்களிலேயே சுதந்திரமாக வாழவும் தொழில் செய்யவும் முடியாமல், பல்வேறு வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.பொருளாதார ரீதியாக கடுமையாகப்  பாதிக்கப்பட்டுள்ள இவர்களது எதிர்காலம் எவ்விதமான உத்தரவாதமும் இன்றிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நன்றி உதயன்
Share on Google Plus

About ஈழப் பக்கம்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment