Sunday, February 19, 2012

மீனவரின் கண்ணீரில் உவர்ப்பாகிப்போன சுண்டிக்குளக் கடற்பரப்பு


இரவுநேரம், இயற்கையை மட்டும் நம்பி, கடலில் இறங்கும் மீனவனின் வாழ்க்கை ஆபத்து நிறைந்தது. ஆனால் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் மீன்பிடி என்பது மரணப்பொறிக்குள் பயணிக்கும் தொழில். கட்டுமரத்துடன் கடலில் இறங்கும் ஜீவன் காலையில் திரும்பிவரலாம் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.சிறிலங்கா கடற்படையின் வெறித்தனத்தில் அப்பாவி மீனவர்கள் காவு கொள்ளப்படுவார்கள். இதனால்,  மீனவக் குடும்பங்களின் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் கண்ணீரில்தான் கரையும். அதனால்தான் தாயகக்கடல் அதிகமாக உப்புக்கரிக்கும். அப்படியொரு கோரவெறியில், 18.02.1994 அன்று, சுண்டிக்குளக் கடற்பரப்பு குருதியிலும் கண்ணீரிலும் கரைந்துபோனது.

யாழ் மாவட்டத்தின், நீண்ட கடற்கரையையும், இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டமைந்த நிலப்பரப்பு வடமராட்சி கிழக்கு. அந்நிலப்பரப்பின் கிழக்கு எல்லையாக அமைந்த கிராமம்தான் சுண்டிக்குளம். வடக்கே பாக்கு நீரிணை, கிழக்கு, தெற்காக வளைந்து செல்லும் தொடுவாய் என அமைந்த கிராமம். வெண் மணல் பரப்பில் அங்காங்கே குடிசைகள் அமைந்திருக்கும். மீன்பிடிதான் கிராமத்தின் முதன்மை வாழ்வாதாரத் தொழில். கடலை மட்டும் நம்பித்தான் அவர்களது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

வழமைபோல, 18.02.1994 அன்றும் அதிகாலை 5:15 மணியளவில் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கட்டு மரங்களில் கரையோரமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். திடீரென “டோறாப்படகில்” அங்கு வந்த சிறிலங்கா கடற்படை, மீனவர்களை நோக்கி, கண்முடித்தனமாகச் சுட்டது. நொடிப் பொழுதில் நிகழ்ந்த சம்பவத்தில் திகிலடைந்த மீனவர்கள், உயிரைக் காப்பாற்றுவதற்காக கட்டுமரங்களை விட்டுக் கடலில் குதித்தார்கள். இருந்தாலும், தமது ஒரே சொத்தாக இருக்கும் கட்டுமரங்களை விட்டுச் செல்ல வழியின்றி, வலைகளை அறுத்துவிட்டு, கட்டுமரங்களை கரையை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தனர். கடற்படையினரோ மீனவர்களை நோக்கித் தொடர்ந்தும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டிருந்தார்கள்.

துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் கரையோரக் குடியிருப்புக்களிலிருந்த அனைவருக்கும் தெளிவாகக் கேட்டதால், தங்கள் உறவுகள் மீன்பிடிக்கச் சென்றதை எண்ணி ஏக்கத்துடன் கரையை நோக்கி ஓடிவந்தார்கள். கரைக்கு வந்து பார்த்த போது, மீன்பிடிக்கச் சென்றவர்கள் தத்தளித்தபடி கட்டுமரங்களுடன் கரையை அண்மித்து வந்து கொண்டிருந்தார்கள். கைகளைத் துாக்கி அவர்கள் கதறியழுதது கரையில் நின்றவர்களுக்கு தெளிவாகவே தெரிந்தது. கையறு நிலையல், இவர்களும் கரையில் நின்று கதறிக்கொண்டிருந்தார்கள். ஆனால், கடற்படையின் டோறாப்படகு கடற்கரையை மிகவும் அண்மித்து வந்து சுடத்தொடங்கியது. ஒவ்வொரு துப்பாக்கிச் சூட்டிலும் ஒவ்வொரு மீனவராக கடலில் விழுந்து கொண்டிருந்தனர். பிண்ங்களாகச் சரிந்து கெண்டிருந்த உறவுகளைப் பார்க்க முடியாமல் கரையிலிருந்தவர்கள் கடற்கரை மணலில் புரண்டு கதறினர். கடலிலும் கரையிலும் கதறிய அப்பாவிகளின் குரல் கடவுளுக்கும் எட்டவில்லை. அப்பாவிகளைக் கொன்று குவித்து, போரில் வெற்றி கொண்ட பெருவீரர்கள் போல கடற்படை குதுாகலித்துக் கொண்டு திரும்பியது. 

கடற்படையின் தாக்குதலில் பத்து மீனவர்கள் கடலில் உயிரிழந்தனர். தாக்குதல் நடந்த அன்றைக்கு மூன்று பேரின் உடல்களே கிடைக்கப்பெற்றன. ஏனைய ஏழு பேரது உடல்களும் மறுதினமே கரை ஒதுங்கின. இரண்டு நாட்களாக கடற்கரையிலேயே கண்ணீருடன் இருந்த உறவுகளிடம், கரை ஒதுங்கிய பிணங்களை கட்டி அழுவதற்கு கண்ணீர் இருக்கவில்லை.

இந்த தாக்குதலினால் பீதியுற்ற மீனவர்கள் சிலமாதங்களாக மீன்பிடித் தொழிலுக்கே செல்லவில்லை. இதனால், ஏற்கனவே வறுமையில் இருந்த அக்கிராமம் மேலும் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவித்தது. 

18.02.1994 அன்று சுண்டிக்குளம் கடலில் கொல்லப்பட்ட மீனவர்கள் விபரம்
  1. இயக்கோ கபிரியேல்பிள்ளை............................29
  2. இயக்கோப்பிள்ளை நிக்சன்.................................20
  3. கரியோப்பிள்ளை அருள்ஜெயசீலன்...............25
  4. மனுவேற்ப்பிள்ளை மரியசீலன்........................26
  5. அந்தோனிப்பிள்ளை இயக்கோப்பிள்ளை......46
  6. அமிர்தநாயகம் யோன்பெர்னான்டோ.............35
  7. ஆசிர்வாதம் வினஞ்சேநிதிமரிசலின்..............44
  8. யேசுராசா அலோசியஸ் சாந்தகுமார்..............22
குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை.

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment