இலங்கையின் வேலையில்லாப் பிரச்சினைகள் - ஒரு சமூகவியல் பார்வை


இன்றைய நவீன யுகத்தில் சமூகத்தில் பல்வேறு சீர்கேடுகள் ஏற்படுவதற்கு வேலையில்லாப் பிரச்சினை ஒரு மூல காரணம் எனலாம். அதாவது வேலையில்லாப் பிரச்சினை என்பது ஒரு நாட்டின் மொத்த ஊழியப்படையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு முயற்சியும் தகுதியும் ஆர்வமும் கொண்டிருந்த போதிலும் தகுந்த வேலை வாய்ப்பினை பெற முடியாதிருக்கும் மக்களின் பங்கு அதிகரிப்பதை குறிக்கும். இங்கு ஊழியப்படை எனப்படுவது சனத்தொகையில் 15 - 64 வயதுக்கு இடைப்பட்டவர்களில் அங்கவீனர்கள், நிரந்தர நோயாளிகள், வேலை செய்ய விரும்பாதவர்கள் முதலானவர்களைக் கழித்துப் பெறப்படும் தொகையாகும்.  இந்த வேலையில்லாப் பிரச்சினை இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒரு பொதுப்பிரச்சினையாக காணப்படுகின்றது. இதனால், பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார, கலாசார சீர்கேடுகள் நிகழ்வதும் விருத்தியின் உச்சத்தில் தற்கொலை செயல் அதிகரிப்பதும் நாடு அபிவிருத்தியடைய முடியாத நிலையில் பின்னடைவுக்கு உள்ளாவதும் கண்கூடாகும். 

வேலையில்லாப் பிரச்சினை என்ற கருத்துகைக்கு உள்ளே கீழ்  உழைப்பு, பருவகால வேலையின்மை, மறைமுக வேலையின்மை என்பனவும் அடங்குகின்றது. கீழ் உழைப்பு என்பது ஒருவரின் கல்வி தராதரத்திற்கு உரிய வேலை கிடைக்காது  தன் தரத்திற்கு குறைவான வேலை செய்வதாகும். உதாரணத்திற்கு பட்டதாரி ஒருவர் கூலித் தொழில் செய்தல். பருவகால வேலையின்மை என்பது குறித்த காலத்தில் மட்டும் வேலை வாய்ப்பு  கிடைக்க, ஏனைய காலங்களில் தொழிலின்றி இருப்பதாகும். மறைமுக வேலையின்மை என்பது ஒரு பணிக்காக அல்லது தொழிலுக்காக அமர்த்தப்பட்ட போதிலும் கடமை அல்லது அதிகாரம் அற்றவராக இருத்தல். இவ்வாறான தொழில் பிரச்சினைகளால் ஒருவர் சமூக, பொருளாதார, உளவியல் ரீதியில் பல தாக்கங்களை பெறுவர். இதனால் ஒருவர் சமுதாய ரீதியாகவும் தன்னிலிருந்தும் அந்நியமயமாக வாய்ப்புண்டு. 

எந்தவொரு பொருளாதாரத்தினதும் இறுதி நோக்கம் நிறை தொழில் மட்டம் அல்லது முழு வேலைவாய்ப்பு என்பதாகவே இருக்கிறது. ஆனாலும்,  அடம்சிமித் முதலானோரின் கருத்துப்படி எந்தவொரு நாட்டிலும் நிறை தொழில் மட்டம் காணப்படுவதில்லை. வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் உலகளாவிய ஒன்றாகவே  காணப்படுகிறது. ஆயினும் இலங்கை முதலான அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இது ஒரு பாரிய சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் பாதிப்புகள் எல்லை கடந்தனவாக காணப்படுகின்றன. அதாவது கல்விமான்கள் வெளியேறுகின்ற நிலையும் காணப்படுகின்றது. 

இலங்கையில் வேலையில்லாப் பிரச்சினை வளர்ந்து கொண்டு செல்லும் சிக்கலாகவே இருக்கிறது.

இளவயதினர் மற்றும் பெண்களுக்கிடையேயான தொழில் வாய்ப்பின்மை வீதம் சார்பு ரீதியில் உயர்ந்து காணப்படுகின்றது. எனினும், குறிப்பாக 15 - 19 வருடங்களைக் கொண்ட வயதுத் தொகுதிகளிடையேயான இளைஞர்களின் தொழில் வாய்ப்பின்மை குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்திருந்துள்ளது. காலாண்டு தொழிற் படை அளவீட்டை மதிப்பீடுகளின்படி இளவயதுத் தொகுதியிலான தொழில் வாய்ப்பின்மை வீதம் 2005  இல்  33.2 சதவீதத்திலிருந்து 2006 இல் 23.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும் 2029 வயதுத் தொகுதியினரிடையேயான தொழில் வாய்ப்பின்மை வீதம் தொடர்ந்து மாறாதிருந்தது. மேலும் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரம் மற்றும் உயர் தகைமைகளை  கொண்டோரின் தொழில் வாய்ப்பின்மை வீதங்கள் முறையே 10.6 சதவீதம் மற்றும் 12.2 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதம் மற்றும் 11.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தன. எனினும், இம்மதிப்பீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2006 இன் காலாண்டு தொழிற்படை அளவீடு நடத்தப்படாததால் இரண்டு ஆண்டுகளுக்கும் இம்மாகாணங்கள் உள்ளடக்கப்படவில்லை. இந்த ஆய்வினூடாக பார்க்கும் போது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் வழங்கிய வீதத்தில் பாரியளவு வித்தியாசம் (குறைவு) காணப்படவில்லை என்பது புலனாகின்றது. 

வேலை வாய்ப்பின்மை காரணமாக பெண்கள் மத்திய கிழக்கு நாடு போன்ற வெளிநாட்டு பிரயாணங்கள் மூலம் வேலை தேடுகின்றனர். இதனால் குடும்ப கலாசார சீர் கேடுகள் ஏற்படுவதுடன் பாதகமான பல நோய்களுக்குள்ளாகின்ற நிலையும் ஏற்படுகின்றது. 2004 ஆம் ஆண்டுகளிற்குப் பின்னர்  வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டமைக்கு காரணம் சுனாமியைத் தொடர்ந்து நிவாரணப் பணிகளுக்காக இலங்கை வந்த தனியார் நிறுவனங்களின் வேலைத் திட்டங்களைக் கூறலாம். இன்றைய காலகட்டங்களில் பாதுகாப்பின்மை காரணமாகவும் வேலைத் திட்டங்கள் முடிவடைந்த நிலையினாலும் தமது சொந்த நாடுகளுக்கு போகின்ற நிலையைக் காண முடிகின்றது. எனவே, 2007 ஆம் ஆண்டில் வேலையற்றோர் வீதம் அதிகரிக்கலாம். 

இலங்கையின் வேலையில்லாப் பிரச்சினைக்குப் பிரதான காரணமாக இருப்பது, நாட்டில் யுத்தத்திற்காக பெருமளவு செல்வம் வீணழிக்கப்பட்டதாகும். இச்செல்வம் தொழில் பேட்டைகளை உருவாக்கப்படுமாயின் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடிவதுடன், நாடும் அபிவிருத்தி கண்டிக்கும். தொழில் அடிப்படையிலான கல்வி வாய்ப்பின்மை, சுயதொழில் முயற்சிகளில் ஆர்வம் காட்டாமை முதலான காரணங்கள் வேலையில்லாப் பிரச்சினைக்குரிய  அடிப்படைக் காரணங்களாகும். பல்கலைக்கழகங்கள் தொழில் தேர்ச்சி இல்லாத பட்டாதரிகளை உருவாக்குவதால் தனியார் நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. பின் வந்த தனியார் நிறுவனங்கள் பலவும் சில வேலை வாய்ப்பினை வழங்கியது உண்மை. ஆனால், யுத்தம் காரணமாக தம் சொந்த நாடுகளுக்கு திரும்பிய வண்ணமேயுள்ளனர். உயர் கல்வி கற்ற நிலையிலும் தொழில்வாய்ப்பு கிடைக்காமல் அல்லது கீழ் உழைப்பு வேலைகளில் விரக்தியடைந்த நிலையில் இளைஞர்களும் யுவதிகளும் காணப்படுகின்றனர். இதனால் அவர்களின் உழைப்பு பயன்படுத்தப்படாதிருப்பதுடன் மனிதவளமும் சீரழிக்கப்படுகின்றது. இவ்வாறு இளைஞர்கள் தொழில் வாய்ப்பின்றி காணப்படுதல் சமூக, அரசியல் விரோதமான நிலை வளர்வதற்கு ஊக்கமளிப்பதுடன் போதை வஸ்துப் பாவனை, கடத்தல், கொலை, கொள்ளை முதலான நடவடிக்கைகளையும் செய்யத் தூண்டுகின்றன. எனவே, வேலையில்லாப் பிரச்சினையை உடன் தீர்க்க வேண்டிய  சமூகப் பொறுப்பு நன்நோக்குள்ள சகலருக்கும் உரியதாகும். 

இலங்கையின் வேலையில்லாப் பிரச்சினையை பின்வரும் மூன்று வழி முறைகளினூடாக தீர்க்க முயற்சிக்கலாம். அவையாவன; சுயதொழில் வாய்ப்பு, தொழில்நுட்ப பயிற்சிக் கல்விகளை வழங்குதல் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வேலை வாய்ப்புகள் வழங்குதல், தேசிய ரீதியாக பிரதேசத்துக்குப் பிரதேசம் காணப்படும் வளங்களை மதிப்பீடு செய்து அவற்றக்கு ஏற்றதாக சுயதொழில் முயற்சிகளை  ஊக்குவித்தல் போன்றன மூலம் தீர்க்கலாம். மேலும் மானியம் வழங்குதல், வங்கிக்கடன், உரிய சந்தை வாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலமும் சுயதொழில் வெற்றியைக் காணலாம். புதிய சுயதொழிலாயின் நவீனரகமான உத்திகள் பயிற்சிகளை வழங்குதல் என்பனவும் அவசியமாகும். சுனாமியின் பின்னர் தொழில்வாய்ப்பு பரவலாக்கப்பட்டாலும் அது அதிகமானோரை சென்றடையவில்லை என்பதே உண்மை. கல்வி வெறும் சான்றிதழ்களை வழங்கும் விடயமாக அமைதல் கூடாது. தொழில்நுட்பப் பயிற்சிக்குப் பின்னர் அதனை பயன்படுத்தி தொழில் புரியக் கூடிய சந்தர்ப்பங்களுக்கு வழிமுறைகள் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும். 

அடுத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பற்றி கருதினால் இங்கு புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்படுவதுடன் தொழிலாளர் தேவைப்படும் வகையிலான விரிவாக்கமும் செயற்படுத்தல் அவசியமாகும். புதிய செயற்திட்டங்களை உருவாக்குதல், ஓய்வு பெறுவோரை ஊக்குவித்தல், வினைத்திறன் மிக்க இளம் வேலையாட்களை  சேர்த்தல், சேவைக்குரிய நேரத்தை விரிவாக்கம் செய்து மாற்றொழுங்கு அடிப்படையில் அநேகமானோரை வேலைக்கு உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். வேலையில்லாப் பிரச்சினை உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய ஒரு சமூகப் பிரச்சினையாகும். இளைஞர் வளம் விரக்தி நிலைக்கு உள்ளாக்கப்படுவதுடன் பல அரசியல்  சமூகச் சீரழிவுகளுக்கும்  இது அடிகோலும் என்பது திண்ணமாகும். இளைஞர்கள் நிலை கொள்ளல் இன்றி திரிவதற்கும், அதிருப்தி மனோ நிலையில் அழுத்தத்துடன் வாழ்வதற்கும் முக்கியமான காரணியாக வேலையில்லாப் பிரச்சினை இனங்காணப்பட்டுள்ளது. அரசியல் கல்வி, தொழில் நிலையங்கள், முதலானவற்றில் ஏற்படுத்தப்படும் பாரிய சீர்திருத்தமே தொழிலின்மையை நீக்க உதவக் கூடியது. எனவே, பல்வேறு வேலைத் திட்டங்கள் வழங்க அரசு, தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும். சுனாமி போன்ற  இயற்கை அனர்த்தம் வந்தால் தான் வேலை கிடைக்கும் என்ற மனநிலையில் பலர் உள்ளனர். ஆகவே அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அபிவிருத்தி அடைய வேண்டுமாயின் சுய தொழில் உற்பத்தியை அதிகரிக்கவும் உச்ச வளத்தினைப் பயன்படுத்தவும் நாட்டினை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லவும்  வேலையில்லாப் பிரச்சினை தீர்வுக்கு உள்ளாக்கப்படுவது முக்கியமாகும். 

நன்றி தினக்குரல் 
Share on Google Plus

About ஈழப் பக்கம்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment