Monday, February 13, 2012

சிறிலங்கா ஆணைக்குழுவின் அறிக்கை அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது


சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று கிட்டத்தட்ட ஆயிரம் நாட்கள் ஆகின்றன. இந்த வேளையில், யுத்த மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் எந்தப் பதில்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை கூட அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது உண்மையான மீளிணக்கப்பாட்டை நாட்டில் கொண்டு வருவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவில்லை என The Independent என்னும் தளத்தில்,  Emanuel Stoakes எழுதியுள்ள கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டுரையின் முக்கிய அம்சங்கள்.

சிறிலங்காத் தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் தொடரப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகின்ற நிலையில், தற்போது அத்தீவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா பொறுப்புக் கூறாதிருப்பதை எதிர்த்து அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள பரிந்துரை, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் கருத்திலெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

2008 – 2009 காலப்பகுதியில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு வகையான கொடுமைகள், சித்திரவதைகள், படுகொலைகள் போன்றவற்றை மேற்கொண்டது. அதாவது, சிறிலங்கா இராணுவத்தால் 'பாதுகாப்பு வலையம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களில் வாழ்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை, அவர்கள் மீது துன்பங்கள கட்டவிழ்த்து விட்டமை, மனிதப் படுகொலைகள், பலாத்கார ஆட்கடத்தல்கள், வைத்தியசாலைகள் உள்ளடங்கலாக பொதுமக்களின் உடைமைகள் மீது தாக்குதல் மேற்கொண்டமை எனப் பல்வேறு விதமான யுத்தமீறல்கள் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சிறிலங்கா இராணுவத்தினர் தமது நிர்வாகத் தலைமையகத்திடமிருந்து கட்டளைகளைப் பெற்ற பின்னரே இவ்வாறான யுத்த மீறல்களை மேற்கொண்டதற்கான சாட்சியங்கள் காணப்படுவதால், இதற்கான முழுப்பொறுப்பையும் அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 

இந்த யுத்த மீறல்கள் எதற்கும் தாம் பொறுப்பல்ல என சிறிலங்கா அரசாங்கத் தலைமைகள் உடனடியாகத் தெரிவித்துக் கொண்டன. அத்துடன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 'பொதுமகன் ஒருவர் கூட கொல்லப்படவில்லை' என்ற சிறிலங்கா அதிபரின் அறிவிப்பானது, சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை முடிவுகளின் பின்னர் ’யுத்தத்தில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர்' என மாற்றமடைந்தது. 

இம்மாற்றமானது சில முன்னகர்வுகளை நோக்கிய சமிக்ஞையாக இருக்கலாம், ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணையின் முடிவுகள், வெளித்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு தகவல்களிலிருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன. சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் பரவலாக மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் மோசமான பிற மீறல்களை, கடந்த ஆண்டில் கற்றறிந்து கொண்ட ஐ.நா வல்லுனர் குழுவினர் தமது இறுதி அறிக்கையின் வாயிலாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பின் குற்றங்களை ஆதாரப்படுத்தியுள்ளனர். 

நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை வெளியிட்ட பின்னர் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அதாவது "அனைத்துலக மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் சட்ட மீறல்களை வெளிப்படுத்துவதென்பது உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டத்தின் கீழ் உள்ள கடப்பாடாகும். இந்த மீறல்களை வெளிப்படுத்துவதென்பது கோட்பாடோ அல்லது தெரிவிற்கான ஒன்றோ அல்ல. சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகளை மேற்கொள்வதற்கு தடை விதித்திருந்தது. இம்மாத இறுதியில் இதற்கான முயற்சிகள் மீளவும் மேற்கொள்ளப்படவுள்ளன" என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். 

ஐ.நா வல்லுனர்களின் விசாரணை முடிவுகள், அனைத்துலக மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள், இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மீறல்களை காட்சிப்படுத்தி வெளியிடப்பட்ட ஆவணப்படம் உள்ளடங்கலான அனைத்துலக ஊடகங்களின் அறிக்கைகள் போன்றன, சிறிலங்காவில் உண்மையில் என்ன நடந்ததென்பதை சான்றுபடுத்துவதாக உள்ளன.அனைத்துலக ஊடகங்களை விலை கொடுத்து தம் வசப்படுத்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே சிறிலங்காவிற்கு எதிரான இவ்வாறான பரப்புகளை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதுடன், அதன் தலைமைக்கு அச்சுறுத்தலை விடுக்கும் நடவடிக்கைகளில் புலி ஆதரவுக் குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.
 
கெடுகாலமாக, சிறிலங்கா தரப்பு அதிகாரிகள் சிலர் பெறுமதி மிக்க, நம்பகமான சில யுத்த மீறல் தொடர்பான சாட்சியங்களை வழங்கியதானது சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டின் மீது மேலும் பாதிப்பை உண்டுபண்ணியது. 

2009 ல் யுத்தம் நிறைவுற்ற இறுதி நாட்களில் ஆயுதம் தரிக்காத, நிராயுதபாணிகளாக இருந்த தமிழ் இளையோர் மீது சிறிலங்கா இராணுவப் படைகள் சித்திரவதைகளை மேற்கொண்டு அவர்களைக் கொலை செய்தமையை சான்றுபடுத்தும் 'விருது பெறும் ஆவணப்படத்தை' சனல் 04 தொலைக்காட்சி சேவை வெளியிட்டதன் பிற்பாடு இதனை ஐ.நா வல்லுனர்கள் மீள ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், விடுதலைப் புலி ஆதரவாளர்களால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரப்புரையாக இவை உள்ளதாகவும், புலி ஆதரவாளர்களின் நோக்கங்களையும் சிறிலங்கா அரசாங்கம் பட்டியலிட்டுக் கொண்டது. 

சனல் 04 தொலைக்காட்சி சேவையால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் நம்பகமானவை, உண்மையானவை என்பதை அனைத்துலக தடயவியல் வல்லுனர்கள் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் போன்றவர்களால் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், ஆகவே சிறிலங்கா அரசாங்கத் தரப்பால் கூறப்படுவது போன்று சனல் 04 ஆவணக்காட்சிகள் போலியனவை அல்ல என்பதை, தன்னிச்சையான, நீதிக்கு அப்பாலான படுகொலைகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஐ.நாவிற்கான சிறப்பு அதிகாரியான பிலிப் அல்ஸ்றன் தெளிவுபடுத்தினார். 

அல்ஜசீரா தொலைக்காட்சி சேவைக்கான தனது நேர்காணலை வழங்கிய சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதியான பாலித கோகன்ன, "சிறிலங்காப் படையினர் பாதுகாப்பு வலையங்கள் மீது தாக்குதல் நடாத்தியதை ஏற்றுக்கொண்டதுடன், ஆனால் பொதுமக்களைக் குறிவைத்து அவர்கள் தாக்குதலை நடாத்தவில்லை" எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். 

சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று கிட்டத்தட்ட ஆயிரம் நாட்கள் ஆகின்றன. இந்த வேளையில், யுத்த மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் எந்தப் பதில்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை கூட அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது உண்மையான மீளிணக்கப்பாட்டை நாட்டில் கொண்டு வருவதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவில்லை. 

இவ்வாறான காரணங்களாலேயே யுத்த மீறல்கள் தொடர்பில் சுயாதீன, அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைப்பதுடன் அதற்கான பதிலை எதிர்பார்த்து அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இந்நிலையில், "முன்னாள் அமெரிக்க அதிபரான புஸ்ஸின் நிர்வாகத்தின் கீழிருந்த இராணுவத்தினர் Fallujah, Haditha மற்றும் Abottabad  போன்ற இடங்களில் மேற்கொண்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டிய தேவையில்லையா?" என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.  சிறிலங்கா தான் மேற்கொண்ட யுத்த மீறல்களுக்காக அனைத்துலக விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டும் - பிரிட்டன் மற்றும் அமெரிக்காவும் கூட. 

நன்றி புதினப்பலகை

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment