Saturday, February 4, 2012

சுதந்திர இலங்கையில் அந்நியமானவர்கள்


1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது.தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது.

30 பேர் கொண்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செனட்டர்களும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட 15 பேரும் அங்கம் வகித்தார்கள்.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக எஸ். நடேசன், டாக்டர் நாகநாதன், பெரி. சுந்தரம் அவர்களும், நியமிக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக சி. குமாரசுவாமி, சேர் சிற்றம்பலம் கார்டினர் மற்றும் முதலியார் ஏ.பி. இராஜேந்திராவும், அத்தோடு தெரிவு செய்ப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களாக சேர். ரசீக் பரீட்டும், சேர் முஹம்மட் மாக்கான் மாக்கரும் சுதந்திர இலங்கையின் முதலாவது செனட் சபையில் பங்குபற்றியுள்ளார்கள்.

நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் பிரேரணைகளை தீவிர பரிசீலனைக்குட்படுத்தி அதனை ஏற்றுக் கொள்ளும் மீளாய்வுத் தளமாகவே இச்சபை அன்று தொழிற்பட்டது.அத்தோடு செனட் சபையானது ஏறத்தாழ பிரித்தானியாவிலுள்ள பிரபுக்கள் சபையை ஒத்த வடிவில் அமைந்திருந்தது என்று கூறலாம்.

இருப்பினும் சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தில் 8 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததன் ஊடாக, 1971 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதியன்று இச்சபை இல்லாதொழிக்கப்பட்டது.இக்காலப் பகுதியிலேயே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பண்டா- செல்வா, டட்லி- செல்வா ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் ஒரு தலைப்பட்சமாக அரசால் கிழித்தெறியப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.ஆகவே முன்னர் செனட் சபை இருந்த காலத்திலும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தீர்வுகள் எட்டப்படவில்லை என்கிற கசப்பான வரலாற்று உண்மையை புரிந்து கொள்ள @வண்டும்.

சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்புகளின் அடிப்படையில் உருவான சுதந்திர இலங்கைக்கான அரசியலமைப்பின் பிரகாரம் முதலாவது தேர்தல் நடைபெற்றது.கீழ்ச்சபை என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றில் 101 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். முதல் பிரதமராக டி.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.

இதில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 13 சதவீதத்தைக் கொண்ட ஒரு மில்லியன் மலையக தமிழர்களை 8 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.இதனைச் சகித்துக் கொள்ள முடியாத பெருந் தேசியவாதச் சக்திகள், சிலோன் குடியுரிமைச் சட்டத்தை அவசரமாகக் கொண்டு வந்து பல இலட்சம் மலையக மக்களின் வாழ்வுரிமையைப் பறித்தார்கள்.

இந்த விவகாரத்தில் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் நழுவல் போக்கினைக் கடைப்பிடித்ததால் அதிலிருந்து விலகி 1949 இல் இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கினார், "தந்தை செல்வா' என்றழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.இக்கொடூரமான குடியுரிமைச் சட்டத்தின் எதிர்வினையாக, 1952 இல் நடைபெற்ற தேர்தலில் ஒரு உறுப்பினரைக் கூட தமது சார்பாகத் தெரிவு செய்யமுடியாத நிலையை மலையகத் தமிழர்கள் அடைந்தனர். 

இத்தகைய நீதி மறுப்புச் சட்டத்திற்கு எதிராக தொண்டமானும் அவரது இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் பல அஹிம்சைப் போராட்டங்களை முன்னெடுத்தபோது, தமிழர் தரப்பிலிருந்து காத்திரமான ஆதரவு கிடைக்கவில்லை என்பது கவலைக்குரியது.

இவை தவிர, 13 ஆம் நூற்றாண்டில் இரண்டு மொழிவாரி மாநிலங்களாக இருந்து பிரித்தானியரால் ஒன்றிணைக்கப்பட்ட சிலோனில், சுதந்திரமடைந்த பின்னர் டி.எஸ். சேனாநாயக்க மேற்கொண்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் இனப்பரம்பல் மாறுதலடைவதைக்   காணலாம்.

1948 இல் கந்தளாயில் இருந்து ஆரம்பமாகி, 1950 இல் அல்லை, பதவியா, கல்லோயா என்று விரிவடைந்தது சிங்கள மயமாக்கல். திருமலையில் 1911 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டில் 4 சதவீதமாகவிருந்த சிங்களவர்கள், 1981 இல் 33 சதவீதமாக அதிகரித்ததன் தாற்பரியத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

சேருநுவரவிலுள்ள சேருவில என்கிற உதவி அரசாங்க அதிபர் பிரிவானது அரிப்பு என்கிற பூர்வீக பெயரைக் கொண்டது. கல்லாறு சோமபுரவாகவும், நீலாப்பளை நீலாப் பொலவாகவும், முதலிக்குளம் மொரவெவவாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வரலாறு சுதந்திர இலங்கையிலேயே நடந்தேறியது.

அதேவேளை காணி, காணி அபிவிருத்தி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமினி திசாநாயக்கவும், அன்றைய கால கட்டத்தில் திருமலை அரசாங்க அதிபராகவிருந்த டி.ஜே. பண்டாரகொடவும் கூட்டுச் சேர்ந்து பல குடியேற்றத் திட்டங்களை அங்கு உருவாக்கியிருந்தார்கள். 

ஆகவே ஆரம்ப காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்தோரின் அரசியல் வரலாறு, குடியேற்றத் திட்டங்களால் நிரப்பப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஒருபுறம் டி.எஸ். சேனநாயக்கவினால் கல்லோயா, அல்லை, கந்தளாய் மற்றும் பாவற்குளம் போன்ற தமிழர் பிரதேசங்களில் பாரியளவில் சிங்களக் குடியேற்றங்கள் நடாத்தப்பட்ட வேளையில், சிங்களம் மட்டும் என்கிற பெருந்தேசிய இனவாத முழக்கத்தை முன்வைத்து நாட்டில் கிளர்ச்சிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க.

அவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டுப் பிரிந்து சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். '24 மணி நேரத்துள் சிங்களம் மட்டும்' என்கிற சட்டத்தைக் கொண்டு வருவோமென பண்டாரநாயக்க முன்வைத்த தேர்தல் வாக்குறுதி, 1956 தேர்தலில் அவரது கட்சிக்கு அமேõக வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதற்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார் தந்தை செல்வா.1956 ஜுன் 11 ஆம் திகதியன்று உள்ளூர் சிங்கள குடியேற்றவாசிகளாலும் கல்லோயா அபிவிருத்தி சபையின் ஊழியர்களாலும் கல்லோயாவில் பெரும் தமிழின அழிப்பு ஆரம்பமானது. ஏறத்தாழ 150 மக்கள் அதில் கொல்லப்பட்டார்கள்.

பின்னர் அரசிற்கும் தமிழர் தலைமைக்குமிடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளின் விளைவாக 1957 இல் பண்டா- செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.பிராந்திய சபைகளுக்கூடாக அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வது என்பதனடிப்படையில் அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது.ஆயினும், ஜே.ஆர். ஜயவர்தனவின் கண்டி யாத்திரை வெப்பம் தாளாமல் அதனைக் கைவிட்டார் பண்டாரநாயக்க.

மறுபடியும் 1958 இல் கலவரம் வெடித்தது. ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வட- கிழக்கிற்கு இடம்பெயர்ந்தனர்.இத்தகைய இடப்பெயர்வு 1983 கலவரத்திலும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

59 இல் சோமராம தேரரால் பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டவுடன், 1960 ஆம் ஆண்டு, உலகின் முதற் பெண் பிரதமராக அவரின் மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவியேற்றார்.

மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த டி.எஸ். சேனாநாயக்கவிற்கு, தான் எந்த வகையிலும் சளைத்தவரல்லர் என்பதை நிரூபிக்கும் வகையில், அந்த உழைப்பின் உன்னதங்கள் 5 இலட்சம் பேரை இந்தியாவிற்கு நாடு கடத்தும் ஒப்பந்தத்தில், 1964 ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியுடன்  ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க  கைச்சாத்திட்டார்.

தமிழர்களை, இந்திய நடுவண் அரசு கைவிட்ட முதலாவது நிகழ்வு அது. அதேவேளை தொண்டமான் இந்நாடு கடத்தலை தீவிரமாக எதிர்த்தார். ஆனாலும் இம் மக்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களை அணிதிரட்டிப் போராட தமிழ்த் தலைமைகள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது பெரும் சோகம்.

அதேவேளை, புதிதாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த டட்லி சேனாநாயக்கவுடன் 1965 இல் ஒப்பந்தம் ஒன்றினை கைச்சாத்திட்டார் தந்தை செல்வா.பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மாநில சபை (Regional Council) க்கான அதிகாரப் பரவலாக்கல் என்பது, டட்லி -செல்வா உடன்படிக்கையில் மாவட்ட சபைக்கான (District Council) அதிகாரப் பரவலாக்கமென்று கீழிறங்கியது.

எதிர்க்கட்சித் தலைவியான ஸ்ரீமாவோ அம்மையாரும் சும்மா இருக்கவில்லை.தமிழர்களுக்கு எதிராக கலவரங்களைத் தூண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், டி.எஸ். சேனாநாயக்கவின் வாரிசான டட்லி சேனாநாயக்க, தந்தை செல்வாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைக் கைவிட்டார்.

பின்னர் 1972 இல், கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வாவினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு சோசலிசக்  குடியரசாக, "ஸ்ரீ லங்கா' என்ற பெயரில் இலங்கை மாறிய கதையை நாமறிவோம். அதேவேளை, தமிழர் அரசியலில் 1976 இல் பெரும் மாற்றம் நிகழ்ந்தது.தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இணைந்து மேற்கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) உருவாக்கமே அது.

பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை, 1976 மே 14 இல் வட்டுக்கோட்டை பண்ணாகத்தில்  நடந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.1977 தேர்தலில் போட்டியிட்ட 24 தொகுதிகளில் 18 இடங்களை கூட்டணி கைப்பற்றியது.இதன் எதிர்வினையாக மலையகத்தில் கலவரம் வெடித்தது. அங்கிருந்து ஆரம்பமாகிறது தமிழ் இளையோரின் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி.

83 இல் மீண்டுமொரு கலவரம். நாட்டின் ஒருமைப்பாட்டினை நிலை நிறுத்த சிங்கள ஆட்சியாளர் 6 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.பின்னர் இந்தியாவின் தலையீடு, இலங்கை- இந்திய ஒப்பந்தம், 13 ஆவது திருத்தச் சட்டம், விடுதலைப் புலிகள் உடனான மோதல் என்பன 80 களோடு முற்றுப் பெற்றதைக் காணலாம்.

2002 ரணில்-விடுதலைப்  புலிகள் சமாதான ஒப்பந்தத்தோடு சர்வதேச தலையீடுகள் அதிகரித்து, 2009 மே மாதம் ஆயுதப்  போராட்டமும் முடிவுற்றது.
சுதந்திர இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பாரிய இனவழிப்பினை 2009 பதிவு செய்துள்ளது.

இப்போது, சம்பூர் மக்களின் பூர்வீக மண், இனி அவர்களுக்குச் சொந்தமில்லை என்கிறார் காணி அமைச்சர்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் போராட்டம் வெடிக்குமென்கின்றன சிங்கள கடும் போக்குச் சக்திகள். 

48 இலிருந்து நில ஆக்கிரமிப்புச் செய்வதையே முக்கிய அரசியல் நிகழ்ச்சி நிரலாகக் கொண்ட எங்களிடம் காணி உரிமையைப் பற்றிப் பேசுவது வேடிக்கையாகவிருக்கிறது என்கிறது சிங்களம்.

ஆக மொத்தம், சுதந்திர இலங்கையில், தமிழ்பேசும் மக்களின் சுதந்திரம் எங்கே உள்ளதெனத் தேட வேண்டி இருக்கிறது.

மீண்டும் சமாதான காலத்தில் ஓடிய ஓட்டம் மறுபடியும் தொடர்கிறது. நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் புதுடில்லி செல்கிறார். ரொபேர்ட் ஓ பிளேக் கொழும்பு வருகின்றார். கிலாரி கிளின்டனின் வேண்டுகோளையடுத்து அமெரிக்கா செல்லவிருக்கிறார் ஜி.எல். பீரிஸ். பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இந்தியா செல்கிறார். அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி ஸ்டீபன் ராப் கொழும்பிற்கு பயணமாகிறார்.

ஆனாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைக் காண்பதற்காகவே இவர்களெல்லோரும் ஓடுகிறார்களென யாரும் கற்பனை பண்ணக் கூடாது.

           
நன்றி -வீரகேசரி  (இதயச்சந்திரன்)

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment