Saturday, February 18, 2012

அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி IV

கடந்த பத்தியிலே, தமிழ்மக்களின் தற்போதைய மனோ நிலை, தமிழ் மக்களின் சமகால சூழலுக்குப் பொருத்தமான உலகளாவியரீதியிலான உதாரணங்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன். இந்த வாரப் பத்தியிலே, ஆசிய-பசுபிக் நோக்கிய அமெரிக்காவின் வியூக விரிவாக்கத்தோடு இலங்கைத் தீவில் ஒரு தீவிரமான ஒரு நிலை உருவாகப் போகிறது.  அது ஏன்? அதனை தமது எதிர்காலத்திற்கு சாதகமான முறையில் மாற்றுவதற்காக ஈழத்தமிழர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகளையும் ஆராய்வோம்.  


தக்கன பிழைக்கும், வல்லன வாழும்

ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை எறும்பு போன்றதாகவும், அவர்களுக்கு எதிரானவர்களின் பலம் எறும்போடு மோதும் யானைக்கு நிகரானதாகவும் உள்ளது என்பது உண்மை. ஆனால், எறும்பு யானையின் தும்பிக்கைக்குள் நுழைந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள். ஆகவே, தம்மை எறும்புக்கு நிகராக எண்ணிக்கொண்டிருக்கும் தமிழர்கள், அந்த எண்ணத்தை கைவிட்டு யானையின் தும்பிக்கைக்குள் நுழையவேண்டிய கட்டாயத்தையும், அதற்காக உருவாகிவரும் வாய்ப்புக்களையும் சரிவர இனம் கண்டு, அந்த வாய்ப்புக்களை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு, அதனோடிணைந்த திட்டங்களை வகுக்க வேண்டும்.  இது இன்றைய தவிர்க்க முடியாத தேவையும், எதிர்காலத்துக்கான அத்திபாரமும் ஆகும். 


இராணுவ அறிவியலிலே கூறுவார்கள், "எதிரியை கொல். இல்லையேல் அங்கவீனப்படுத்தென்று. எதிரியை கொல்வதென்பது, அதனூடாக அவன் பலம்சேர்க்கும் இலக்கை வீழ்த்துவதற்கே. எமக்கு சவாலாகவும்,  எதிரிக்கு பலமாகவும் இருக்கும் விடயம், இரு தரப்புக்குமான பொது இலக்காகிறது. ஆகவே, அதனை பாதுகாப்பவன் அங்கவீனப்படுவதென்பது, இலக்கை வீழ்த்துவதற்கான எமது முயற்சியை ஒரு அங்குலமாவது இலகுபடுத்தும். அதேவேளை, எதிரியானவன் பலம் எந்தவகையிலும் அதிகரிக்கப்படாத வகையில் கவனம் செலுத்த வேண்டும்."   

இன்னும் ஒருவகையில் கூறுவதானால், "மிகப் பலம்பொருந்திய ஒரு இராணுவ முகாமை  வீழ்த்த முடியாத தருணங்களில் அல்லது அந்த முகாமை வீழ்த்தும் முயற்சியின் ஒரு அங்கமாக, குறித்த முகாமுக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பலமளிக்கும் காவலரண்கள், மினிமுகாம்கள் தயார்படுத்தலின் போதே தகர்க்கப்படுவதோடு, அவை மீளபலமடையாத சூழல் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், அந்த முகாமின் கட்டளை பீட(ம்)ங்கள், தொலைத்தொடர்பாடல் மையங்கள் மற்றும் முக்கிய ஆயுத இயங்குதளங்கள் போன்றவை தாக்குதலுக்கு முன்னரே இனங்காணப்பட வேண்டும். எதிரியினதும், எங்களினதும் பலமும், பலவீனமும் தொடர்ச்சியாக மதீப்பீடு செய்யப்பட வேண்டும்.  இவையனைத்தும் காலப் போக்கில் குறித்த முகாமை கைப்பற்றுவதை அல்லது அழிப்பதை இலகுபடுத்தும்" என்கிறது இராணுவ அறிவியல்.   

இன்றைய பூகோள அரசியலிலே, வல்லரசு நாடுகளோ அல்லது வல்லரசாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளோ நேரடியான ஒரு போரில் இறங்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு. ஆனால், பனிப்போர்கள் தீவிரமடையும். இதில், ஒரு தரப்பை வீழ்த்துவதற்கு மறு தரப்பு கடும் பகீரதப் பிரயத்தனம் எடுக்கும்.  அதேவேளை, இராணுவ அறிவியலை கடைப்பிடித்து, அதனை அமுல்படுத்தும் சூழலில் தமிழர் தேசம் தற்போது இல்லை. 

ஆனால், மேற்கூறிய இருதரப்புக்குமே இராணுவ அறிவியலுக்கு இணையான காய்நகர்த்தல்கள் தேவைப்படுகிறது என்பதையே இலங்கைத் தீவுடன் தொடர்புடைய பூகோள அரசியல் விடயங்களும், அனைத்துலக விவகாரங்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன.  அதன்பாற்பட்டே, இராணுவ அறிவியல் உதாரணத்தை மேலே குறிப்பிட்டுள்ளேன்.


சீனாவின் மேலாண்மையும், அமெரிக்காவின் வியூகமும்

பொருளாதார நிலையில் கூட்டிணைவுடன் செயற்பட்ட அமெரிக்காவும், சீனாவும் பொருதவேண்டிய களங்கள் திறக்கப்பட்டாயிற்று. சீனாவின் துரிதகதி அசுர பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை விழிப்படைய வைத்துள்ளது. இது, அனைத்துலக உறவில் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வழிகோலியுள்ளது. ஆசியாவில் மேலாண்மையுடன் உள்ள சீனா, ஆபிரிக்கா கண்டம், வட அமெரிக்கா கண்டம் என தனது செல்வாக்கை வியாபித்துள்ள நிலையில், ஆசிய – பசுபிக் பிராந்தியத்தை நோக்கி அமெரிக்கா தன் வியூகத்தை விரிவாக்கியுள்ளது. ஆக, சீனாவை அதன் குகைக்குள்ளேயே எதிர்கொள்வதற்கான ஒரு திட்டம். இதில், இரு பெரும் சக்திகளுக்குமே இலங்கைத் தீவை முன்னிறுத்திய நகர்வுகள் கட்டாயமானவை. 

 'சீனாவின் ஆபிரிக்க கதை' ஆசியாவிலும் தொடங்கி விட்டது. அதன், முதற்பலியாக சிறிலங்காவும், பாகிஸ்தானும் மாற்றம் பெற்றுள்ளன. பர்மா [மியானமார்] விழிப்படைந்ததால், சீனாவின் ஆபிரிக்க கதை அங்கு முழுமையடைவது கேள்விக்குறியாகியுள்ளது. 'சீனாவின் ஆபிரிக்க கதை' என்பது, குறித்த நாட்டுடன் ஒத்துழைப்பு போன்று அல்லது அதற்கு உதவுவது போல காட்டிக்கொண்டே குறித்த நாட்டிலுள்ள வளங்களை சுரண்டுவதோடு, அந்த நாட்டையும் தனக்கு சார்பான வகையில் மாற்றுநிலையாக்கம் செய்யும். இதனை நோக்கிய காய்கள் வெவ்வேறு வகையில் நகர்த்தப்படும். அது பொருளாதரா ரீதியாகவும் இருக்கலாம். இராணுவரீதியாகவும் இருக்கலாம். ஏன், சமய, பண்பாடு ரீதியாக கூட இருக்கலாம்.

இந்த அடிப்படையிலேயே, இலங்கைத் தீவிலும் சீனா காலுன்றி, இன்று மேலாண்மை மிக்க சக்தியாக மாற்றமடைந்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே, சிறிலங்காவுக்கு உதவி வழங்குவதில் முதன்மை நாடாக விளங்கிய ஜப்பானை முந்தியுள்ளது. அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதென்ற போர்வையிலேயே, சீனாவின் மேலாண்மையானது இலங்கைத் தீவில் வீச்சடைகிறது. இதனை சீனா தனது நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கிறது. இதற்கு சார்பாக, சீனாவின்  ஏற்றுமதி - இறக்குமதி வங்கி 2-6 வீத கடனை குறித்த சீன நிறுவனங்களுக்கு வழங்குகிறது.  

2011ம் ஆண்டில் சுமார் 60,000 சீனத் தொழிலாளர்கள் இலங்கைத் தீவினில் இறக்கப்பட்டிருந்தனர் என்கிறது சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள். சீனத் தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் சுற்றுலா நுழைவு அனுமதி சீட்டிலேயே சிறிலங்காவுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தனர். இதன்நோக்கம், சிறிலங்காவுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் புள்ளிவிபரத்தில் அதிகரிப்பை காட்டுவதனூடாக, மேலதிக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவர்ந்து, பொருளாதார வருவாயை அதிகரிப்பது. அடுத்து, சீனாவின் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வைத்து, இலங்கைத் தீவில் அதிகரிக்கும் சீனாவின் மேலாண்மையயை கணிப்பீடும் செய்யும் பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகளின் கண்ணில் மண்ணைத் தூவ முயற்சிப்பது போன்றவை சிறிலங்கா அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரல். 

உண்மையில், சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவலை விட, இலங்கைக்குள் நுழைந்துள்ள சீனத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். அத்துடன், இவர்களில் பெரும்பாலனோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்கான சீன சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களே, சீனா நிறுவனங்களால் இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களிலில் சாதாரண தொழிலாளர்களாக பணிபுரிகிறார்கள். ஹம்பாந்தோட்டையில் சீனா அமைத்துள்ள துறைமுகத்துக்காக சுமார் ஒரு பில்லியன் தொடக்கம் ஒன்றரை பில்லியன் அமெரிக்க டொலர் வரை முதலீடுசெய்யப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானங்கள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், இந்து சமூத்திரத்தில் பயணிக்கும் சீனக் கடற்படையினதும், பொருளாதார கப்பல்களினதும் எரிபொருள் நிரப்பு தளமாகவும், கடற்படை கப்பல்களின் தரிப்பிடமாகவும் மாற்றமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதைவிட, இலங்கைத் தீவில் சீனா சிறப்பு பொருளாதார வலயத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பண்ணையை நடத்துகிறது. அத்துடன், நுரைச்சோலையில் 900 மெகா வாற்ஸ் அனல் மின்னல் நிலையம், கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை, பளை – காங்கேசன் துறை தொடருந்துப் பாதை, சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கான யாழ்ப்பாண வீட்டுத் திட்டம் போன்றவை சீனாவின் பிரதான செயற்திட்டங்கள் ஆகும். இதேவேளை, சீனா இலங்கைத் தீவில் ஆழக் காலூன்றுவதென்பது, இந்தியாவுக்கு ஒரு சவாலான விடயம். இந்த சவால் பொருளாதாரத்தையம் தாண்டி, தேசிய பாதுகாப்புத் தொடர்பாகவும் சிந்திக்கத் தூண்டுகிறது. சிறிலங்கா ஆட்சிபீடமோ, இந்தியாவையும் தடவி, சீனாவை தட்டிக்கொடுத்து தனது காரியங்களை முன்னனெடுக்கும் முனைப்பில் கவனம் செலுத்துகிறது. ஆயினும், சீனா பக்கமே அதிகமாகச் சாய்கிறது. 

இந்த வகையிலேயே, இந்தியாவுக்கு போட்டியாகவும், சவாலாகவும் விளங்கக் கூடிய வகையில் பூநகரியில் அனைத்துலக தரத்திலான ஒரு விமான நிலையத்தை அமைக்கும் திட்டம் சீனாவால் முன்னெடுக்கப்படவிருக்கிறது. இரணைமடுவில் அமைக்கப்படவிருந்த விமானநிலையமே, தற்போது பூநகரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நெற் செய்திவெளியிட்டுள்ளது. இதனூடாக இந்தியாவை கண்காணிப்பது மேலும் இலகுவாகும். இலங்கைத் தீவில் சீனாவின் மேலாண்மை அதிகரிப்பதென்பது, அமெரிக்காவை பொறுத்தளவில் அதன் ஆசிய-பசுபிக் நோக்கிய மூலோபாய நகர்வில் முக்கியமா கவனத்திலெடுக்கப்பட வேண்டிய விடயம். ஆனால், இந்தியாவுக்கோ, அதன் தேசிய பாதுகாப்புக்கு சவாலான விடயம். காலப்போக்கில் இது அச்சுறுத்தலாக கூட மாற்றமடையக் கூடும். 

இவற்றின் அடிப்படையிலேயே, சிறிலங்காவை நோக்கிய முத்தரப்பு [இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா] வியூகம் தீவிரம் அடைகிறது. இதில் முன்னணி வகிப்பவர்களாலேயே, இந்து சமுத்திரத்தை சொத்தாகக் கொண்ட ஆசியப் பிராந்தியத்தில் முன்னணி வகிக்க முடியும். இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களே, எதிர்கால வல்லரசாக இருக்க முடியும்.  இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது. அதனடிப்படையில், இலங்கைத் தீவை தமது 'கட்டுப்பாட்டுக்குள்' வைத்திருப்பது குறித்த தரப்புகளுக்கு கட்டாயமானது. அதற்காக ஒரு தரப்பு பொருளாதார நலன் என்கிறது. இன்னொரு தரப்பு தீர்வுத் திட்டம் தொடர்பாக பேசுகிறது. மற்றத் தரப்போ போர்குற்றம் மற்றும் மானுடகுலத்திற்கெதிரான குற்றம் ஆகியவற்றை பேசுகின்றது. 

இதில், எல்லோருக்கும் பொதுவான அடிப்படையாதெனில், எல்லோருமே, தத்தமது தேசிய நலனை கருத்தில்கொண்டே காய்களை நகர்த்துகிறார்கள். அந்த நகர்விற்கு தமிழ்த் தேசியம் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக மாற்றமடைந்துள்ளது. இந்த நிலை, தமிழர் தேசத்திற்கு கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. அதனை, சரிவரப் பயன்படுத்துவதே வளமான எதிர்காலத்திற்காக தமிழர் தேசம் இடும் ஒரு சிறந்த அடிக்கல்லாகும்.   

உலகில் நாடில்லாத தேசங்கள் தமது அடையாளத்தை பேணிப்பாதுகாப்பது, தமது தேச நலனை முன்னிறுத்தி செயற்படுவதென்பது ஒன்றும் புதியவிடயமல்ல. ஆகவே, நீதிக்கு போர்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான சுதந்திரமான அனைத்துலக விசாரணையும், நிலையான தீர்வுக்கு இனப்படுகொலை விடயமும் கருத்திலெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். 

மேற்குறித்த விடயங்கள் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. ஆனால், தமிழ் மக்களுக்கு நிலையானதும், நியாயமானதும் மற்றும் கௌரவமானதுமான தீர்வு என்பதே நீண்டகால இலக்காகவும், இறுதி இலக்காகவும் இருக்க வேண்டும். 

குறுங்கால மற்றும் மத்திமகால திட்டங்களை தன்னகத்தே கொண்டு நீண்டகால இலக்கு நகரவேண்டும். குறுங்கால மற்றும் மத்திமகால திட்டங்களை, போரினால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வுக்காக தாயகத்தில் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு தேவையான மனிதாபிமானப் பணிகளை, இனப் பற்றுடன், மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படும் நபர்கள், அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஊடாக  முன்னெடுக்க வேண்டும். 

அத்துடன், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவை, போரினால் அழிந்து போயுள்ள சமூக கட்டுமானங்களை மீள நிலைநிறுத்துவதோடு, தன்னிறைவு நிலைக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும். இவற்றிற்கு, தம்மாலான சகல உதவிகளையும், ஆதரவுகளையும் புலம்பெயர் அமைப்புகள் தமக்கு நம்பிக்கையான நபர்கள் மற்றும் அமைப்புகள் ஊடாக வழங்க வேண்டும். இது, புலம்பெயர் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பும், வரலாற்று கடமையுமாகும்.   

அதேவேளை, போர்க்குற்றம் மற்றும் மானுடகுலத்திற்கு எதிரான சுதந்திரமான அனைத்துலக விசாரைணையை தமிழர் தேசத்திற்கு சாதகமான முறையில கையாள்வதற்காக, இது தொடர்பாக புலம்பெயர் தேசங்களில் செயற்படுகின்ற அமைப்புகள் யாவும் விரைவில் ஒருங்கிணைந்து வினைத்திறனுடன் பணியாற்றுவதற்காக ஒரு பொது இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். அதற்காககவும், அதன் பிற்பாடான செயல்பாடுகளுக்காகவும் ஒரு காத்திரமான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு, அதன்படி அமுல்படுத்தல் நடவடிக்கைகள் ஒழுங்காக நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். இவை, காலத்துக்கு காலம் சுயமதிப்பீடு செய்யப்படுவதோடு, தேவையான நேரங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

போர்க்குற்றம், மானுடகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான விடயங்களை தாயகத்திலுள்ள மக்களோ, சிவில் அமைப்புகளோ, தமிழ் அரசியல் தலைமைகளோ வெளிப்படையாக பேசமுடியாத சூழல் நிலவுகிறது. ஆனால், மேற்கத்தேய இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களில் இதனை வலிறுத்த வேண்டிய தார்மீக கடமைiயும், வரலாற்றுப் பொறுப்பும் தாயகத்திலுள்ள அரசியல் தலைமைகளுக்கு உண்டு. அதேவேளை, நம்பிக்கையான அனைத்துலக ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கும் போது, தம்மை இனங்காட்ட வேண்டாம் எனக் கூறிக்கொண்டு மேற்குறித்த கருத்தை வலியுறுத்தலாம். 

இவ்வாறு, களத்தில் உள்ளோரும், புலம்பெயர்ந்தோரும் செயற்படுவது தமிழ்மக்களின் வளமான எதிர்காலத்திற்கு அவசியமாகும். அணுகுமுறைகளிலும், வெளிப்படுத்தல்களிலும் வேறுபாடுகள் இருப்பினும், இறுதி இலக்கில் இருதரப்புக்கும் ஒருமித்த தெளிவும், உறுதியும் இருக்க வேண்டும். அதனடிப்படையிலேயே, இலங்கைத் தீவை நோக்கி நகர்ந்துள்ள முத்தரப்பு காய்நகர்தலால் உண்டாகும் வாய்ப்புக்களை தமிழர் தேசத்திற்கு சார்பாக மாற்றலாம். 

ஆசியா- பசுபிக்கை மையப்படுத்தி அமெரிக்கா வகுத்துள்ள வியூகம் இந்த சந்தர்ப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. தமிழர்கள் எந்த தரப்புடனும் அனுசரித்துப் போகலாம், ஆனால் யாரிடமும் சரணாகதியடைய வேண்டிய தேவையோ அல்லது எவரதும் நிகழ்ச்சி நிரலுக்கும் இணங்கி பணியாற்றவேண்டிய அவசியமோ இல்லை. அதற்குப் பெயர் இராஜதந்திரமுமில்லை.  

குறித்த வாய்ப்பை பயன்படுத்துவதற்கான தோற்றுவாயாக, போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்துக்கு எதிரான சுதந்திரமான அனைத்துலக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளலாம். அடுத்த பத்தியிலே, போர்க்குற்ற விடயத்தை முன்னெடுப்பது சாத்தியமானதா? அதற்கான சவால்கள் என்னவென்பதை ஆராய்வோம். 

நிர்மானுசன் பாலசுந்தரம் 

Reactions:

0 கருத்துரைகள் :

Post a Comment