Monday, April 30, 2012

தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம்


பல ஆண்டு முடக்கத்திற்குப் பின்னர் டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனித் தமிழ் ஈழம் உருவாக்கியே தீர வேண்டும். அதைப் பார்க்காமல் நான் கண் மூட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக பேசி வருகிறார். காங்கிரஸிடமிருந்து வேகமாக விலகி வரும் திமுகவின் இந்தப் புதிய கோஷம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெசோ உறுப்பினர்களான அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை கருணாநிதியும் உறுப்பினர்களும் சந்தித்தனர்.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப. வீரபாண்டியன் வாசித்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

பல்லாண்டுகளாகப் பாரம்பரியமான முறையில் இலங்கையின் தேசிய இனமாக இருந்து வரும் தமிழினம், மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் பறிக்கப்பட்டு, இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு, அணி அணியான அல்லல்களால் அனுதினமும் அலைக்கழிக்கப்பட்டு வரும் பிரச்சினை தீர்வதற்கு தனித் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மை நிலையை இந்தியத் திருநாட்டின் பிற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும், தக்க ஆதரவு திரட்டுவதற்கும் உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட விசாரணைக்குழு, இலங்கை ராணுவத்தினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது.

வாழ்வுரிமைக்காகப் போராடிய ஈழத் தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதற்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை 2011, ஏப்ரல் 25-ந்தேதியன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணுவம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களைக் குண்டு போட்டுக் கொன்றதோடு, போர்க் கைதிகளையும் கொடூரமாகச் சுட்டு அழித்தது என்றும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் அந்த அறிக்கையிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றி ஐ.நா. குழு பரிந்துரைத்துள்ளவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி, குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கனவே தீர்மானம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையில் போர் முடிந்த பிறகு தமிழர் பகுதிகளை சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.

தமிழர் பகுதிகள் எல்லாம் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாகவும், தமிழ் ஊர்ப்பெயர்கள் கூட சிங்களப் பெயர்களாக மாற்றப்படுவதாகவும், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இஸ்லாமியர் மசூதிகள் ஆகியவை புத்த விகாரங்களாக மாற்றப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில் தனி ஈழம் அமைவதற்கு தமிழர்கள் மத்தியில், ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திட வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்கள் பால் அன்பும், அக்கறையும் கொண்டுள்ள அனைவரது கருத்தாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டினையடுத்து இதைப்போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டிநீக்ரோ போன்றவை தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தை ஏற்கனவே பெற்றிருக்கின்றன.

அதன் அடிப்படையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,

இலங்கையில் தமிழர் பகுதிகளில் புதியதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு இந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்குரிமை வழங்கப்படக் கூடாது.

நடத்தப்படும் பொது வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் தனி ஈழம் அமைவதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் நல்குவதோடு, ஐ.நா. மன்றத்திலும், உலக அமைப்புகளின் மூலம் சர்வதேச அரங்கிலும் உரிய அழுத்தத்தையும் தரவேண்டும்.

தமிழ் ஈழம் குறித்த முடிவை தமிழர்களின் விருப்பத்துக்கே விட்டு விடுவது என்ற நிலையை ஐ.நா. மன்றம் விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. தமிழ் ஈழம் குறித்த வாக்கெடுப்பு ஒன்று புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் உலக நாடுகளில் நடந்து வருகிறது.

இதன்மூலம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஈழப்போராட்டத்தின் அடிப்படைச் சாசனத்தை சர்வதேசம் அங்கீகரிக்கும் நிலை சாத்தியமாகி உள்ளது. தனித்தமிழ் ஈழம் விரைவில் அமைந்திட ஐ.நா.மன்றம், தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும், அதற்கு நமது இந்தியப் பேரரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும், இன்று உருவாகியுள்ள தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் சிங்களர்கள்-கருணாநிதி

பின்னர் கருணாநிதி பேசுகையில், சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.

இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

டெசோ பிறந்த கதை

டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. கருணாநிதியைத் தலைவராகவும், கி.வீரமணி, பழ. நெடுமாறன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அப்போது அது அமைந்தது. இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கையாக வடக்கு கிழக்கு இலங்கைப் பகுதிகளை இணைத்து தமிழ் ஈழ நாடு அமைக்க வேண்டும் என்பதே.

டெசோ அமைப்பின் சார்பில் மதுரையில் பிரமாண்ட மாநாட்டையும் கருணாநிதி நடத்தினார்.அதில் வாஜ்பாய் உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

போர்க்குற்றங்களும் சார்ள்ஸ் ரெயிலரும்



அரசாங்கத் தலைவர்கள் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டுக்கு உள்ளாக்கப்படுவர் என்ற புதிய யதார்த்தத்தை இத் தீர்ப்பு உணர்த்தி நிற்கிறது.
இவ்வாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஆபிரிக்க ஜனாதிபதி சியராலியோன் நாட்டில் அட்டூழியங்களைச் செய்த கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவளித்து போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்படுவதற்கு தூண்டுதல் கொடுத்து உடந்தையாகச் செயற்பட்டதாக குற்றவாளியாகக் காணப்பட்ட சார்ள்ஸ் ரெயிலருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இலங்கையில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளேடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் இடித்துரைத்துள்ளது.
பயங்கரமான விலையைச் செலுத்திய பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஓரளவு நீதியை இந்தத் தீர்ப்பு வழங்குவதாக அமைகிறது எனவும் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தினக்குரல் தெரிவித்துள்ளது.
போர்க்குற்றங்களும் சார்ள்ஸ் ரெயிலரும் என தலைப்பிட்ட ஆசிரியர் தலையங்கத்தின் முழுமையான பதிவு :
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று மேற்குலக ஊடகங்களினால் வர்ணிக்கப்படுகின்ற இந்தத் தீர்ப்பை நெதர்லாந்தின் ஹேக் நகரில் இயங்கும் (சியராலியோனுக்கான ஐக்கிய நாடுகள் ஆதரவுடடைய) விசேட நீதிமன்றம் நான்கு வருடகால விசாரணைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை வழங்கியிருக்கிறது. இதையடுத்து நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் ரெய்லர் பிரிட்டிஷ் சிறையொன்றில் நீண்டகால சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரப்போகிறது.
இரண்டாவது உலக மகா இறுதிக் கட்டத்தில் அடொல்ப் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னரான குறுகியதொரு காலகட்டத்துக்கு நாஜி ஜேர்மனிக்குத் தலைமை தாங்கிய அட்மிரல் கார்ள் டூனிட்ஸை நுரம்பேர்க் விசாரணையில் நீதிபதிகள் குற்றவாளியாகக் கண்டதற்குப் பிறகு முன்னாள் அரசாங்க தலைவர் ஒருவரை சர்வதேச நீதிமன்றம் ஒன்று முதற்தடவையாக குற்றவாளியாகக் கண்ட சந்தர்ப்பமாக கடந்த வியாழக்கிழமைய தீர்ப்பு அமைகின்றது.  முன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்ட போதிலும் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக அவர் மரணமடைந்தார்.
19962002 காலகட்டத்தில் அயல்நாடான சியராலியோனில் அட்டூழியங்களைச் செய்துகொண்டிருந்த புரட்சி ஐக்கிய முன்னணியையும் ஏனைய குழுக்களையும் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்குத் தூண்டுதல் அளித்து உடந்தையாக இருந்தமைக்காக சார்ள்ஸ் ரெய்லர் குற்றப்பொறுப்புடையவர் என்று மேற்படி சர்வதேச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
கொலை, பாலியல் வல்லுறவு, பாலியல் அடிமைகளாக பெண்களை வைத்திருந்து கொடுமைப்படுத்தியமை, அவயவங்களைத் துண்டித்து பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை முடமாக்கியமை உட்பட 11 குற்றச்சாட்டுகள் சார்ள்ஸ் ரெய்லருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.
சியராலியோனில் குடிமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பயங்கரங்களைப் பற்றி 1997 ஆகஸ்டிலிருந்து லைபீரியத் தலைவர் அறிந்திருந்தார் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

சாட்சியமளித்தவர்களினால் பட்டியலிட்டுக் கூறப்பட்ட அட்டூழியங்களில் குடிமக்கள் சிரச்சேதமும் அடங்குகிறது.
அவ்வாறு துண்டிக்கப்பட்ட தலைகள் சோதனைச் சாவடிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் வயிறு வெட்டிக்கிழிக்கப்பட்டு இன்னொரு சோதனைச் சாவடியின் வீதித் தடுப்பாக அமையும் வகையில் குடல் பகுதிகள் வீதிக்குக் குறுக்கே விரித்து வைக்கப்பட்டிருந்தன என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.  அட்டூழியங்களுக்கு உத்தரவிட்டதாகவோ அல்லது திட்டமிட்டதாகவோ சார்ள்ஸ் ரெயிலர் குற்றவாளியாகக் காணப்படவில்லை.
கொள்ளையடிக்கப்பட்ட வைரக் கற்களுக்குக் கைமாற்றாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் தான் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருப்பதை உறுதிசெய்வதற்காக சியராலியோனில் வைரம் உற்பத்தியாகும் பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு புரட்சிகர ஐக்கிய முன்னணியின் தளபதிகளை சார்ள்ஸ் ரெயிலர் கேட்டிருந்தார் என்று நீதிபதிகளில் ஒருவரான ரிச்சேர்ட் லுசிக் கூறினார்.
தீர்ப்பின்  முழு விபரங்களும் கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் சார்ள்ஸ் ரெயிலர் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முடியும். தண்டனை அறிவிப்புக்கான தினம் மே 30 ஆகும்.
முன்னாள் லைபீரிய ஜனாதிபதிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு இனிமேல் எந்தவொரு அரசாங்கத் தலைவருமே சர்வதேச நீதியில் இருந்து விலக்குப் பெற்றவர் என்று தன்னைக் கருத முடியாதவாறு ஒரு முன்னுதாரணத்தை வகுத்திருப்பதாக மேற்குலக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சார்ள்ஸ் ரெயிலரின் குற்றங்களுக்காக பயங்கரமான விலையைச் செலுத்திய பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஓரளவு நீதியை இந்தத் தீர்ப்பு வழங்குவதாக அமைகிறது.
அரசாங்கத் தலைவர்கள் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டுக்கு உள்ளாக்கப்படுவர் என்ற புதிய யதார்த்தத்தை இத் தீர்ப்பு உணர்த்தி நிற்கிறது.
தலைமைத்துவத்துடன் அதிகாரமும் ஆணையுரிமையும் மாத்திரமல்ல பொறுப்புணர்வும் பதில் கூற வேண்டிய கடப்பாடும் கூடவே சேர்ந்து வருகின்றன.  எவ்வளவு தான் பலம்பொருந்தியவராக,அதிகாரமுடையவராக இருந்தாலும் எவருமே சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்று வழக்குத் தொடுநர்கள் கூறியிருக்கிறார்கள்.
சார்ள்ஸ் ரெயிலர் மீதான விசாரணை சட்ட விலக்கீட்டு உரிமையின் முடிவுக்கான சமிக்ஞையைக் காட்டியிருக்கிறது.
சியராலியோன், லைபீரியா, கினியா மற்றும் ஐவரிகோஸ்ட் ஆகிய நாடுகளில் சார்ள்ஸ் ரெயிலர் தூண்டி விட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் வன்முறை, அரசியல் உறுதிப்பாடின்மை ஆகியவற்றின் விளைவாக அவலங்களை அனுபவித்த மேற்கு ஆபிரிக்க உப பிராந்திய மக்களைப் பொறுத்தவரை இந்த விசாரணையும் தீர்ப்பும் பாரிய முக்கியமுடையவையாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.
அதேவேளை, சார்ள்ஸ் ரெயிலரின் தலைமை வழக்கறிஞர் கோட்னி கிறிபித் கியூ.சி.தெரிவித்திருக்கும் கருத்து முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதானவை.
‘கறை படிந்ததும் ஊழல் தனமானதுமான சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்ப்பு அமைந்திருக்கிறார். சர்வதேச நீதிச் சமூகம் ஆபிரிக்கத் தலைவர்களையே பிரத்தியேகமாக இலக்கு வைக்கிறது. சர்வதேச நீதி ஆபிரிக்க நாடுகளை இலக்கு வைத்துக்கொண்டு வருகின்ற பாணி குறித்து நீண்ட காலமாகவே நான் எனது விசனத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறேன். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தற்போதைய விசாரணையை எதிர்நோக்கியிருப்பவர்கள் சகலருமே ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான்’ என்று கிறிபித் கூறியிருக்கறிர்.
ஐவரிகோஸ்ட் முன்னாள் ஜனாதிபதி லோரன்ட் கபாக்போவுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. சூடான் ஜனாதி ஒமர் ஹசன் அல்பஷீர் மீது சர்வதேச பிடியாணை பிறக்கப்பட்டிருக்கிறது.
ஆபிரிக்காவைத் தவிர வேறு எந்தக் கண்டத்திலுமே போர்க்குற்றங்களையும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்திருக்கக்கூடிய  அல்லது அத்தகைய குற்றங்களுக்கு தூண்டுதலளித்து உடந்தையாயிருந்திருக்கக்கூடிய ஆட்சியாளர்களோ அல்லது அதிகாரிகளோ இல்லையா?
தினக்குரல்

Sunday, April 29, 2012

தம்புள்ள பள்ளிவாசல்: சிறுபான்மை இனத்தின் மத அடையாளங்களை அழிக்கும் முயற்சி

தம்புள்ள பள்ளிவாசலை இடித்தழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் மேலும் கோபம் கொண்டுள்ளனர்.இவ்வாறு வளைகுடா நாட்டை தளமாகக்கொண்டு வெளிவரும் Gulf News ஆங்கில ஊடகத்தில் பத்தி எழுத்தாளர் *Tariq A. Al Maeena எழுதியுள்ள சிறப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளார். 

26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட வன்முறை மிக்க, மிகப் பயங்கரமான உள்நாட்டு யுத்தமானது பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து, அவர்களின் சொத்துடைமைகளை நாசம் செய்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் வாழும் பௌத்தர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லீம் ஆகிய வேற்றின மக்கள் மத்தியில் தேசிய மீளிணக்கப்பாடு உருவாக்கப்பட்டு, இந்த மக்களின் வடுக்களை ஆற்றும் புதிய பாதையில் சிறிலங்கா பயணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், தமது கலாசாரத்தையும், மத அடையாளத்தையும் அழித்தொழிப்பதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடுவதாகவும் இதற்காக தமக்குச் சொந்தமான நிலங்களில் புத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் மக்கள் விசனம் கொள்கின்றனர். இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று சிறிலங்காவில் வாழும் பிறிதொரு சிறுபான்மை இனத்தின் மத அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சியாகக் காணப்படுகின்றது. இந்தச் சம்பவம் தற்போது புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. 

பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகக் காணப்படுவதால், தம்புள்ளவில் உள்ள, கடந்த 65 ஆண்டு கால பழமை கொண்ட பள்ளிவாசல் ஒன்றை இடித்தழிப்பதற்கான உத்தரவை சிறிலங்காப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ன வழங்கியிருந்தார். இச்சம்பவத்தை அடுத்து கொதித்தெழுந்த உள்ளுர் அமைப்புக்கள் இது தொடர்பாக தமது கண்டன அறிக்கையை வெளியிட்டபோது, இந்தப் பள்ளிவாசல் வேறொரு இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாகவும் சிறிலங்காப் பிரதமர் அறிவித்திருந்தார். தம்புள்ளவில் அமைந்துள்ள பள்ளிவாசல் முன் கூடிய பௌத்த பேரினவாதிகள் அதனை இடித்தழிப்பதற்கான முயற்சியை எடுத்த பின்னரே முஸ்லீம் சமூகம் இதற்கான தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது. 

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது பாதிப்படைந்து, துன்பங்களை அனுபவித்தது மட்டுமல்லாது, இதற்காக தமது உயிர்களை விலையாகக் கொடுத்த சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் தம்புள்ள பள்ளிவாசலை இடித்தழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளால் மேலும் கோபம் கொண்டுள்ளனர். 

உள்நாட்டு யுத்தத்தின் போது, சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கைகக்குள் அகப்பட்டுக் கொண்ட முஸ்லீம் மக்கள் கிராமம் விட்டு கிராமம் நோக்கி இடம்பெயர வேண்டியிருந்தனர். இவர்கள் தமது பள்ளிவாசல்களில் தொழுகைகளை நடாத்தி போதும் தொடர்ந்தும் யுத்தத்தின் விளைவுகளைத் தாங்கிக் கொண்டனர். இவர்களது வயல் நிலங்கள் யுத்தத்தின் விளைவால் அழிக்கப்பட்டது. அத்துடன் இவர்கள் தமது வர்த்தக மையங்களை மூடவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் அவர்களது சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதுடன், அவர்களது சொத்துக்களும், உடைமைகளும் களவாடப்பட்டன. 

இந்நிலையில், தம்புள்ள புனிதப் பிரதேசமாக உள்ளதால், அங்குள்ள முஸ்லீம் பள்ளிவாசல் வேறிடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்ற அறிவிப்பும் இதற்காக மேற்கொள்ளப்பட்ட அழிப்பு நடவடிக்கையும் முஸ்லீம் மக்களை வேதனையும் அதிர்ச்சியும் கொள்ள வைத்துள்ளது. "தங்கத்தால் கட்டப்பட்டாலும் கூட, பள்ளிவாசலை வேறொரு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லீம் சமூகம் ஒருபோதும் சம்மதிக்காது" என முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். 

"சிறிலங்கா காவற்துறையும், இராணுவமும் கண்காணித்துக் கொண்டிருக்கும் போது, சிறுபான்மை மக்களின் வணக்கத் தலங்கள் அழிக்கப்படுகின்றது. ஆகவே இவ்வாறான அழிப்பு நடவடிக்கைகளுக்க பாதுகாப்பு படையினரும் காவற்துறையினரும் துணைபோகின்றனர் என்பது வெளிப்படை. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய இவர்களே இவ்வாறான சம்பவங்களுக்கு காலாக உள்ளனர்" எனவும் ஹசன் அலி மேலும் தெரிவித்துள்ளார். 

பள்ளிவாசலை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட ஆரம்ப முயற்சிகளுக்கு எதிர்ப்பு காட்டப்பட்ட நிலையில், முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து தம்புள்ள பள்ளிவாசலை பிறிதொரு இடத்துக்கு மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிறிலங்காப் பிரதமர் அறிவித்துள்ளார். எவ்வாறெனினும், பிரதமரின் இந்த அறிக்கையை முன்னணி முஸ்லீம் அரசியல்வாதிகளான மூத்த அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அலாவி மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்தும் காதர் ஆகியோர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தற்போது தம்புள்ள பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ள நிலம் 1964ல் சட்டபூர்மாக வாங்கப்பட்டதாகவும் முஸ்லீம் தலைமைகள் தெரிவித்துள்ளதுடன், இரு ஆண்டுகளின் முன்னரே இது புனிதப் பிரதேசமாக்கப்பட்டது என்ற பௌத்தர்களின் குற்றச்சாட்டை முஸ்லீம் தலைமைகள் அடியோடு மறுத்துள்ளன. 

"இப்பள்ளிவாசல் கடந்த 65 ஆண்டுகாலமாக இந்த இடத்தில் உள்ளபோது, இது இரு ஆண்டுகளின் முன்னரே அமைக்கப்பட்டதாக கூறுவதானது உண்மையில் மிகப் பிழையான ஒன்றாகும். இது Waqf சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான அங்கீகாரத்துடன் கட்டப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன. இந்நிலையில் இப்பள்ளிவாசல் இடித்து அழிக்க வேண்டும் எனவும், இது அதிகாரம் வழங்கப்படாத இடத்தில் கட்டப்பட்டுள்ளது எனவும் பிரதமர் அறிவித்துள்ளதானது முற்றிலும் பொய்யானதாகும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணொருவர், தம்புள்ள பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ள நிலத்தை ஆங்கிலேயர் ஒருவரிடமிருந்து வாங்கியிருந்தார். அதிலிருந்து இந்த இடத்தில் பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது" என இஸ்லாமிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகரத்தின் முன்னாள் பிரதி மேயருமான அசாட் சலி தெரிவித்துள்ளார். 
"இதன் பின்னர் பள்ளிவாசலுடன் இணைந்துள்ள நிலத்தை 1995ல் பள்ளிவாசல் அதிகாரிகள் வாங்கினர். இந்நிலையில் சிறிலங்காப் பிரதமரால் விடுக்கப்பட்ட அறிக்கையானது நாட்டிலுள்ள பௌத்த மதத்தவர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்கின்றது. இவ்வாறான பொறுப்பற்ற அறிக்கை ஒன்றை பிரதமர் வெளியிட்டிருக்கக் கூடாது" எனவும் அசாட் சலி மேலும் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான குழப்ப நிலை தொடர்பாக சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு பொது அறிக்கையையும் வெளியிடாத நிலையில், இவரது பிரதித் தலைவரான சஜித் பிறேமதாச, "சிறிலங்காப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை பௌத்த மதம் சார்ந்தது அல்ல. பிரதமர் என்ற ரீதியில் ஜெயரட்ண இவ்வாறானதொரு பிழையான, தவறான அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் செயலகமே இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டால் நாம் எவ்வாறு இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்?" எனவும் சஜித் பிறேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். 

கடந்த பல பத்தாண்டுகளாக யுத்த சூழ்நிலைக்குள் வாழ்ந்த தமிழ், முஸ்லீம் மற்றும் ஏனைய இனத்து மக்கள் நாட்டில் சமாதானத்தையும், அமைதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வேளையில் நாட்டில் இவ்வாறான குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அண்மையில் தம்புள்ளவில் ஏற்பட்ட குழப்பமானது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும், அமைதியையும் கொண்டு வருவதற்கான தூரத்தை மேலும் அதிகரித்துள்ளது. சிறிலங்காவில் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.

*Tariq A. Al Maeena is a Saudi socio-political commentator. He lives in Jeddah, Saudi Arabia.

புதினப்பலகை

கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி!


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகளால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.வின் வெடிபொருள் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலே இந்தப் பிரச்சினைக்கான மூலகாரணம்.
புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற ஒரு வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உலோகங்களாக விற்பதற்காக, வன்னியில் சிதறிக் கிடந்த குண்டுகளின் பாகங்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில்தான், அந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
கிளஸ்டர் குண்டின் ஒரு பகுதியான சிறிய குண்டு ஒன்று வெடித்தே, சிறுவன் மரணமானதாக, ஐ.நா கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்தான், முதல்முறையாக கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தச் செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளஸ்டர் குண்டுகள் உலகின் மிகமோசமாக ஆயுதங்களாக கருதப்படுபவை.
ஒரு குண்டை விமானத்தில் இருந்து வீசும் போது, அது கீழே விழுந்து, அதிலுள்ள நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகள் பிரிந்து, வெடித்துச் சிதறி பரவலான சேதங்களை ஏற்படுத்தும்.
பேரழிவு ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை சர்வதேச போர்ச்சட்டங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறப்படும் விமானக் குண்டுகளும், ஆட்டிலறிகளும் இலங்கைப் போரில் மிகச் சாதாரணமாகவே பயன்படுத்தப்பட்டன.
இந்தநிலையில்தான் கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
பேரழிவு ஆயுதமாக கருதப்படுவதால், கிளஸ்டர் குண்டுகளை உலகில் இருந்தே நாடுகளுக்கிடையிலான போர்களின் போதும் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சர்வதேச உடன்பாடு ஒன்று 2010ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டுள்ளது.
உலகில் உள்ள 60 நாடுகள் இதில் ஒப்பமிட்டுள்ளன.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர்தான், கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போதும், இலங்கை அதில் கையெழுத்திடவில்லை.
கிளஸ்டர் குண்டுகளைத் தாம் பயன்படுத்தவில்லை என்று கூறும் அரசாங்கம், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது சந்தேகத்துக்குரியதே.
பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை கிட்டத்தட்ட ஒரு போர்க்குற்றமாகவே சர்வதேச சமூகம் கருதுகிறது.
அதுவும், இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்த குறுகலான போர் தவிர்ப்பு வலயப்பகுதி ஒன்றின் மீது இத்தகைய குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
புதுக்குடியிருப்பில் தான் இந்த கிளஸ்டர் குண்டு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.
2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஐ.நா முதல் முறையாக கிளஸ்டர் குண்டு பற்றிய குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.
ஆட்டிலறி ஷெல்களின் மூலம் கிளஸ்டர் குண்டுகள் ஏவப்படுவதாக அப்போது சந்தேகம் எழுப்பப்பட்டது.
அதற்குக் காரணம், ஆட்டிலறி ஷெல்கள் வீசப்பட்ட சற்று நேரத்தில் அடுத்தடுத்து சிறிய வெடிப்புகள் பல நிகழ்ந்ததுதான்.
அரசாங்கம் அப்போது அதை நிராகரித்தது விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் புதுக்குடியிருப்புச் சமர் மிகவும் உக்கிரமானது.
சிறியதொரு நகரான புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமர் பல வாரங்களாக நீடித்தது.
புதுக்குடியிருப்பையே தமது இறுதித் தளமாகக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு, அது வாழ்வா சாவா என்ற போராட்டமாகவே இருந்தது.
இதனால் எல்லா வளங்களையும் ஒன்று திரட்டி அவர்கள் கடுமையாகப் போரிட்டனர்.
இதனால், புலிகளைப் பின்தள்ளுவதற்கு அரசபடைகள் கடுமையாகப் போரிடவும் விலை கொடுக்கவும் வேண்டியிருந்தது.
எனவே, அந்தப் பகுதியில் கிளஸ்டர் குண்டுகளுக்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
2009 ஏப்ரல் முதல் வாரத்தில் புதுக்குடியிருப்பை அடுத்து ஆனந்தபுரம் பகுதியில் நிகழ்ந்த சமர் தான், விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய வரலாற்றுத் தோல்விக்குக் காரணமாகியது.
அதுவே அவர்கள் சந்தித்த மிகப்பெரிய இறுதிப் போராகவும் அமைந்தது.
இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் முக்கியமான தளபதிகள் உள்ளிட்ட 600 வரையான போராளிகள் கொல்லப்பட்டனர்.
அந்தச் சமரின் போது, அரசபடைகளின் முற்றுகையில் சிக்கியிருந்த புலிகளை அழிக்க, கிளஸ்டர் குண்டுகள், எரிகுண்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.
இந்தச் சமரின் பின்னர் அரசபடைகளால் மீட்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் மோசமாக சிதைந்து காணப்பட்டதும், எரிந்து போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும், இது பொதுமக்களைச் சார்ந்த ஒரு சம்பவமாக இல்லாததால், இதுபற்றி எந்தவொரு குழுவும் கவனத்தில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில், புதுக்குடியிருப்பில் கண்டறியப்பட்டுள்ள கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரம், சர்ச்சையாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போன்போது கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கெனவே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஆனால், கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்தது.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்தவர்களும் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாக கூறியிருந்தனர்.
பலரின் காயங்களில் அதற்கான தடயங்கள் இருந்தன.
விமானத்தில் இருந்தும், ஆட்டிலறிகளின் மூலம் வீசப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து பல சிறிய குண்டுகளாக வெடித்ததாகவும், தாமதித்து வெடித்ததாகவும் பலர் சாட்சியமளித்திருந்தனர்.
ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வந்துள்ளது.
இந்தநிலையில் தான் புதிய ஆதாரங்களை ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.
இது இலங்கைக்கு கடும் நெருக்கடி ஒன்றை உருவாக்கக் கூடும்.
ஏனென்றால், அரசாங்கமே போர் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதிகளில், இலட்சக் கணக்கான மக்கள் குவிந்திருந்த பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை சர்வதேச சமூகம் நியாயமானதென்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை.
எனவே சர்வதேச விசாரணை வலியுறுத்தும் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கலாம்.
ஏற்கெனவே, பல்வேறு நெருக்கடிகள், அழுத்தங்களில் சிக்கிப் போயுள்ள அரசாங்கத்துக்கு புதியதொரு சிக்கலாக கிளஸ்டர் குண்டும் உருவெடுக்கப் போகிறது.
தாம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவிக்கவில்லை என்று கூறும் அரசபடைகள், புலிகள் அதனைப் பாவித்தற்கான ஆதாரம் இல்லை என்கிறது.
அப்படியானால் போர் நடந்த பிரதேசத்தில் இவை எப்படி வந்தன என்ற கேள்விக்கு அரசாங்கம் நிச்சயம் பதிலளித்தேயாக வேண்டியிருக்கும்.
வன்னியில் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பொதுமக்களையோ சர்வதேச அமைப்புகளையோ அரசாங்கம் உடனடியாக அனுமதிக்கவில்லை.
சர்வதேச சட்டங்களுக்கு முரணான சம்பவங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தும் தடயங்கள் அகற்றப்பட்ட பின்னர் தான், அங்கு வெளியார் அனுமதிக்கப்பட்டனர்.ஆனாலும் அதையும் மீறி ஒரு சான்று ஐ.நாவிடம் சிக்கியுள்ளது.
கிளஸ்டர் குண்டுகள் வன்னியில் வீசப்பட்டதற்கு ஏற்கனவே ஆதாரங்கள் பல வெளியாகின.
விமானத்தில் இருந்து வீசப்பட்டு வெடிக்காத கிளஸ்டர் குண்டின் நிழற்படங்களும் வெளியிடப்பட்டன.
ரஷ்யத் தயாரிப்பான அந்தக் குண்டின் எழுதப்பட்டிருந்த ரஷ்யமொழி எழுத்துகள் பெயின்ற் பூசப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன.
அப்போது சர்வதேச சமூகம் அதைக் கண்டு கொள்ளவில்லை.
ஐ.நாவின் கையில் இப்போது ஆதாரமாகச் சிக்கியுள்ள நிலையில், கிளஸ்டர் குண்டு விவகாரத்தை சர்வதேசம் இனிமேல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் சர்வதேச சமூகத்தை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் அரசுக்கு கிளஸ்டர் விவகாரம் பெருந்தலைவலியாகவே அமையப் போகிறது.
சுபத்ரா






புலிகள் இல்லாத சூழலில் தான் அவர்களின் அருமை புரியத் தொடங்கியுள்ளது


இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது. சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான். 


முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பையும் கொடுத்து வந்தது. இன்று அந்தப் பாதுகாப்பு இல்லாது போய்விட்ட நிலையில்- யாரும், எப்போதும், எப்படியும் குற்றங்கள் செய்யலாம் என்று துணிந்து விட்டனர். இலகுவாகத் தப்பிக்கலாம் என்பதால் எந்தக் கூச்சமும் இல்லாமல் குற்றங்களில் இறங்குகின்றனர். இந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் புலிகளின் அருமையை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள்.அதேபோல புலிகள் இல்லாத சூழலில் தான் அவர்களின் அருமை புரியத் தொடங்கியுள்ளது.



முள்ளிவாய்க்காலிலேயே தமிழரின் செழிப்பான வாழ்வும், எதிர்காலமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது. அதற்கு சிங்களப்படைகள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் தான் பொறுப்புக் கூற வேண்டும். போரை நிறுத்த ஐ.நாவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறது ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை.உலகத்தின் கண்முன்னே தான் தமிழருக்கு இந்தக் கொடுமைகள் எல்லாம் இழைக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலில் பீரங்கிகள் மூலம் தமிழரைக் கொன்றொழித்துக் கொண்டிருந்த போது- அமெரிக்காவில் இருந்தபடியே அதை செய்மதிப் படங்களின் ஊடாகப் பார்த்திருக்கிறார்கள். உள்ளிருந்தே தகவல்களைப் பெற்றிருக்கிறது இந்தியா. ஆனாலும் யாருக்கும் அங்கே தமிழர் மீது இரக்கமே வரவில்லை. அங்கிருந்த மூன்றரை இலட்சம் மக்களின் அவலத்தை விட அவர்களுக்கெல்லாம் பெரிதாக இருந்தது- புலிகளின் அழிவு தான். அதை எல்லோருமாகச் சேர்ந்தே செய்து முடித்திருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கெல்லாம் நிம்மதி வந்துவிட்டது.ஆனால் தமிழரின் நிம்மதி பறிபோய் விட்டது. தமிழர்கள் போரின் போது இழந்தவற்றையும் சரி, அதன் பின்னர் அவர்கள் இழந்து போயுள்ள நிம்மதியையும் சரி, எந்த உலக சக்தியாலும் கொடுத்து விட முடியாது. இவர்களிடத்தே இருந்து வந்த ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் இனிமேல் ஏற்படுத்தி விட முடியாது. எல்லாம் சீர்குலைந்து வேரறுக்கப்பட்டு விட்டது. இது தான் தமிழருக்கு முள்ளிவாய்க்கால் கொடுத்த பரிசு. 



ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.



முள்ளிவாய்க்காலில் தமிழரைச் சீரழித்து, சின்னா பின்னமாக்கியவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்காமல் விடப் போவதில்லை. இப்போதே பலரும் அதற்கான தண்டனையையும்- வலியையும் சுமக்கத் தொடங்கி விட்டனர்.    இது இன்னமும்  நீளப் போகிறது. தமிழருக்கு எதிராக தொடரப்பட்ட போரும், அதனால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகளுக்கும் காரணமாக இருந்தவர்களை நீதி ஒரு போதும் தண்டிக்காமல் விடாது. அந்த நம்பிக்கை ஒன்று தான் தமிழரை அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கிறது. ஆனாலும் அது வெளிச்சத்தை நோக்கிய பயணமாக அமையுமா அல்லது இருளைத் தேடிய பயணமாக அமையுமா என்பதை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.





               video



-இன்போ தமிழ் குழுமம் -

Saturday, April 28, 2012

இலங்கையை குற்றக்கூண்டில் நிறுத்தப் போகும் கடத்தல்கள்


முன்னிலை சோசலிசக் கட்சியின் குமார் குணரட்ணமும், திமுது ஆட்டிக்கலவும் கடத்தப்பட்ட விவகாரம், பெரும் சர்ச்சை ஒன்றுக்குள் அரசாங்கத்தைச் சிக்க வைத்து விட்டது. இலங்கையில் போர் முடிந்து போனாலும், ஆட்கடத்தல்கள் இன்னமும் தொடர்கின்றன என்ற செய்தியை சர்வதேச அளவில் இந்தச் சம்பவம் பகிரங்கப்படுத்தி விட்டது. ஏற்கனவே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஆட்கடத்தல்கள் பற்றிய தகவல்களை ஐதேக வெளியிட்டிருந்தது. அந்தக் கூட்டம் முடிந்த பின்னர், அதுவும் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இவர்கள் கடத்தப்பட்டது, அந்தக் குற்றச்சாட்டை இன்னமும் வலுப்படுத்தி விட்டது. கடந்த 5 மாதங்களில் 56 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐதேகவின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. கடத்தப்பட்டவர்களில் குமார் குணரட்ணம் திமுது ஆட்டிக்கல உள்ளிட்ட ஒரு சிலர் தான் மீண்டு வந்திருக்கிறார்கள். பலர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இன்னும் பலர் என்னவாயினர் என்றே தெரியவில்லை. அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. கடத்தப்பட்ட ஒருவரையாவது அரசபடைகளால் மீட்கமுடியவில்லை. கடத்தல்காரர்களையும் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இவையனைத்துமே, அரசதரப்பின் ஆசீர்வாதத்துடன் இடம்பெறுவதால் தான், எந்தச் சம்பவம் பற்றியும் தீர விசாரிக்கப்படுவதில்லை என்றும், கடத்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. 

கடந்த 5 மாதங்களில் 56 ஆட்கடத்தல்கள் என்பது சாதாரணமானது அல்ல. 

இவர்களில் பலர் அரசியல் தொடர்புடையவர்கள். இன்னும் சிலர் முன்னாள் போராளிகள். வேறு சிலர் வர்த்தகப் புள்ளிகள். 

இப்படிக் கடத்தப்பட்டவர்களில் குணரட்ணம் போன்ற ஒரு சிலரால் தான் திரும்பி வரமுடிந்தது. 

அதுவும் கூட அவுஸ்ரேலியாவின் அழுத்தத்தினால் தான் சாத்தியமானது என்பதில் சந்தேகம் இல்லை. 

கடத்தியவர்கள் தன்னைக் கொல்லப் போகிறார்கள் என்றே நினைத்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் குமார் குணரட்ணம். 

தம்மைக் கடத்தியவர்கள் அரசபடையினரே என்று அவரும், திமுது ஆட்டிக்கலவும் உறுதியாகச் சொல்லியுள்ளனர். 

குணரட்ணமாவது, அவுஸ்ரேலியாவில் தான் இதைக் கூறியுள்ளார். 

ஆனால் ஒரு பெண்ணாக இருந்தும், திமுது ஆட்டிக்கல, தன்னைக் கடத்தியவர்கள் யார் என்று விடுவிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே துணிச்சலோடு வெளிப்படுத்தினார். அதன் விளைவு என்னவாக இருக்குமோ என்றெல்லாம் யோசிக்க அவர் நேரம் எடுக்கவில்லை. இந்தக் கடத்தலுடன் அரசுக்கு தொடர்புள்ளது என்று அவர் துணிச்சலோடு கூறியது, மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும் சர்வதேச சமூகத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம். சர்வதேச சமூகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தான் திமுதுவுக்கு இந்தத் துணிவைக் கொடுத்திருக்க வேண்டும். எவ்வாறாயினும் திமுதுவும், குணரட்ணமும் கடத்தப்படவில்லை என்று அரசாங்கம் இன்னமும் வாதிட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் கடத்தப்படவில்லை என்று அரசாங்கம் மட்டும் தான் சொல்கிறதே தவிர, சர்வதேச அளவில் எவரும் அதை நம்பும் நிலையில் இல்லை. காரணம் இலங்கை ஆட்கடத்தல்கள் அதிகம் இடம்பெறும் ஒரு நாடாகவே இன்னமும் இருந்து வருகிறது. இப்போது குணரட்ணம் கடத்தப்பட்ட விவகாரம் என்பது, அவர் விடுவிக்கப்பட்டதுடன் தீர்ந்து போன பிரச்சினையாக அரசாங்கத்துக்கு இருக்கப் போவதில்லை. ஏனென்றால், குணரட்ணமும் சரி, அவர் சார்ந்துள்ள அரசியல் செயற்பாட்டாளர்களும் சரி, வேண்டாம் வில்லங்கம் என்று ஒதுங்கிப் போகக் கூடியவர்களாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தை வைத்து அரசாங்கத்தை ஒரு பிடி பிடிக்க அவர்கள் தயாராகின்றனர். கூடவே ஐதேக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆட்கடத்தல்களைக் கண்டித்து அரசுக்கு எதிராக களமிறங்குகின்றன. 

ஆட்கடத்தல்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்தக் கோரியுள்ளது ஐதேக. இந்த விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்படும், அங்கு கேள்விகள் எழுப்பப்படும் என்று மிரட்டியுள்ளார் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல. வரும் ஜுன் மாதம் அதையடுத்து செப்ரெம்பர் பொதுஅமர்வுகள், நவம்பர் மீளாய்வுக் கூட்டத்தொடர், அதற்கடுத்து 2013 மார்ச் பொதுஅமர்வு என்று அடுத்தடுத்து நடக்கப்போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் எல்லாம் இலங்கையை கூண்டுக்குள் நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்க குணரட்ணம் கடத்தல் விவகாரம் கைகொடுத்துள்ளது. உலகில் பல நாடுகளில் ஆட்கள் கடத்தப்படுவது சாதாரணமானது தான். ஆனால் இலங்கையைப் பெர்றுத்தவரையில் இது போரின் பின்னரான ஒரு மோசமான அரசியல் கலாசாரமாகவே வளர்ந்து விட்டது. அரசியல் மயப்படுத்தப்பட்ட இத்தகைய ஆட்கடத்தல்கள் நாட்டின் பெயரை மட்டும் கெடுக்கவில்லை. மக்களின் நிம்மதியையும் கெடுக்கிறது. இது சர்வதேச சமூகத்தின் முன்பாக இலங்கையை கூனிக்குறுகி நிற்க வைக்கப் போகிறது என்பதையே குணரட்ணம் கடத்தல் விவகாரம் வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாது போனால், சர்வதேச அளவில் இலங்கை, தற்போது எதிர்கொள்ளும் இராஜதந்திர நெருக்கடிகளுக்கு அப்பாற்பட்ட தடைகளையும் சந்திக்க நேரிடலாம்.

கட்டுரையாளர் கபில் இன்போதமிழ் குழுமம்

பௌத்த சிங்களத் தேசியவாதத்தை கிளப்பி விட்டு அதில் குளிர்காயத் துடிக்கும் மகிந்த............!

பிரான்சுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றுபவர் கலாநிதி தயான் ஜெயதிலக. அவர் இடதுசாரிக் கொள்கையின் ஊடாக, அரசியலில் ஈர்க்கப்பட்ட ஒருவர். ஆரம்பத்தில் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இருந்து தனிஈழத்துக்காகப் போராடியவர். வடகிழக்கு மாகாணசபையில், வரதராஜப்பெருமாளின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். பின்னர் கொழும்பு அரசியலுக்குள் நுழைந்து இன்று இலங்கையின் முக்கியமான- தவிர்த்து ஒதுக்கப்பட்டு விட முடியாத ஒரு இராஜதந்திரியாக விளங்குகிறார்.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, அவர்களை சர்வதேச அளவில் ஓரம்கட்டுவதற்கு தயான் ஜெயதிலகவின் இராஜதந்திரமும், உத்திகளும் அரசதரப்புக்கு வலுவாகவே கை கொடுத்தன. அதுமட்டுமன்றி 2009ம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தோற்கடிப்பதில் தயான் ஜெயதிலக முக்கிய பங்காற்றினார். இப்போது பிரான்சில் உள்ள தூதரகத்தில் அவர் பணியாற்றுகின்ற போதும், இலங்கை அரசு அவரது பணிகள் தொடர்பாக முழுமையாகத் திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை. 

அண்மைக்காலமாகத் தயான் ஜெயதிலக வெளியிடும் கருத்துகள், அரசின் கருத்துகளுக்கு முரண்பாடாகவே உள்ளன. அவர் ஒரு முக்கிய இராஜதந்திரியாக இருக்கின்ற போதும், ஜெனிவாவில் இருந்து அவரைத் தொலைவிலேயே வைத்திருந்தது அரசாங்கம். வெறும் அரை மணிநேரப் பயணத்தில் அவரால் பிரான்சில் இருந்து ஜெனிவா சென்றிருக்க முடியும். இந்தியாவில் இருந்து பிரசாத் காரியவசம் ஜேர்மனியில் இருந்து சரத் கொங்கககே போன்ற இலங்கைத் தூதுவர்கள் ஜெனிவாவுக்கு அழைக்கப்பட்ட போதும் தயான் ஜெயதிலக மட்டும் ஓரம்கட்டப்பட்டு பாரிசுக்குள் முடக்கப்பட்டிருந்தார். அவர் மீதான காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு ஓரம்கட்டப்பட்டாரா அல்லது அவரது ஆலோசனையைக் கேட்கும் நிலையில் அரசு இல்லாததால் அவராகவே ஒதுங்கிக் கொண்டாரா என்ற கேள்வி உள்ளது.. 

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தயான் ஜெயதிலக பிபிசிக்கு வழங்கிய பேட்டியில், மியான்மரைப் பார்த்து இலங்கையும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

2009ம் ஆண்டு மே மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதை வெற்றிகரமாகத் தோற்கடித்திருந்தது அரசாங்கம். அதேசபையில் மியான்மருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் தோல்வியடைந்து அந்த நாடு. அப்போது இலங்கையைக் காப்பாற்றிய சீனா, ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகள் மியான்மருக்கும் கைகொடுத்தன. அதற்காக வாக்களித்தன. ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. இதன் பின்னர் மியான்மரால் சர்வதேச தடைகளை குறிப்பாக மேற்கு நாடுகளின் தடைகளைத் தாக்குப் பிடிக்க முடியாது போனது. சீனாவின் பலமான ஆதரவு இருந்தாலும் மியான்மரால் தாக்குப்பிடிக்க முடியாமல் தளர்ந்துபோனது. 2009இல் இலங்கையைப் போன்றே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நெருக்கடியை எதிர்கொண்ட மியான்மர், இப்போது அந்த நெருக்கடியில் இருந்து மீளும் முயற்சியில் வெற்றிகண்டுள்ளது. அதேவேளை, 2009இல் ஏற்பட்ட நெருக்கடியை வெற்றிகண்ட இலங்கை அரசாங்கம் இப்போது தோல்வி கண்டு நிற்கிறது. இதற்குக் காரணம், மியான்மர் 2009 தீர்மானத்தின் பின்னர், சீனாவின் வாலைப் பிடித்துக் கொண்டு சர்வதேச சமூகத்துக்கு - குறிப்பாக மேற்குலகிற்கு சவால் விடவில்லை. தன்னை திருத்திக் கொள்ள முயன்றது. மாற்றிக் கொள்ளத் தொடங்கியது. அதாவது சர்வதேச விருப்பங்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தியது. ஜனநாயக சீர்திருத்தங்களை திரும்பிப் பார்த்தது. அரசியல் கைதிகளை விடுவித்தது. இதன்மூலம் தான் சக்திமிக்க நாடுகளின் வலுவான பொறியில் இருந்து மியான்மரால் தப்பிக்க முடிந்ததாக கூறுகிறார் தயான் ஜெயதிலக. 

அவர் கூறவருவது, ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் சாதாரணமாக எடை போட்டு விடக் கூடாது என்பதையே. 

ஏனென்றால் இது முடிந்து போய்விட்ட ஒன்றாக இருக்காது, நீண்டகாலத் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மியான்மரின் பாதையில் இலங்கையும் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும் என்பதே தயான் ஜெயதிலகவின் கருத்து. இப்போதைய நிலைப்பாட்டில், அரசாங்கத்தினால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இது இருக்க முடியாது. ஏனென்றால் அரசாங்கம் இப்போது, போலியான தேசியவாதத்தை கிளப்பி விட்டு அதில் குளிர்காயப் பார்க்கிறது. இப்படிப்பட்ட நிலையில் மியான்மரிடம் பாடம் கற்குமாறு கூறுவது அதன் தலையில் ஏறாது. பாதையை மாற்றி- சர்வதேச சமூகத்துடன் இணைந்து நடக்குமாறு கூறுவதையும் அரசினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.. ஏற்கனவே தயான் ஜெயதிலகவை சந்தேகப் பார்வையுடன் வைத்திருந்த அரசாங்கம், சந்தர்ப்பத்தைப் பார்த்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவரது கருத்தின் யாதார்த்தத்தை புரிந்து கொள்ளும் நிலையில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் எவரும் இல்லை என்பதே உண்மை. அவர்கள் உணர்ச்சிபூர்வ அரசியலை நடத்த முனைகின்றனரே தவிர, யதார்த்தபூர்வமான- அறிவுபூர்வமான அரசியல் அவர்களுக்குப் புரியவில்லை. 

சர்வதேச அரசியல் சூழமைவுகளையும், காலவோட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு காய்களை நகர்த்தும் ஒருவரால் தான்- ஒரு நாட்டினால் தான் இன்றைய நவீன உலகில் நிலைத்து நிற்க முடியும். அது அரசாங்கத்துக்கு சரியாகப் புரியவில்லை. தயான் ஜெயதிலக போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் கூறும் அறிவுரை அரசுக்கு கசக்கிறது. இதற்கு சீனா, ரஸ்யா போன்ற நாடுகளின் பின்புல ஆதரவு உள்ளதே என்ற கர்வமே காரணம்.

ஆனால் சீனா எத்தனை காலத்துக்குத் தான் இலங்கைக்கு முண்டு கொடுக்கப் போகிறது என்ற கேள்வி உள்ளது. 

சீனாவில் அடுத்த ஆண்டு பல மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. அங்கு புதிய அதிபர் பொறுப்பேற்கவுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம் உள்ளபோது, புதிய அதிபரால், அரசின் கொள்கைகள் மாறாது என்ற வாதம் இப்போது உடைந்து போகிறது. திறமையாக ஆட்சியை நடத்த விமர்சனம் செய்யும் உரிமை தேவை, அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று இப்போதைய அதிபர், பிரதமர் போன்றோர் கேட்கின்றனர். அதைவிட சீனாவின் பொருளாதார பலம் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாது போனால் பேராபத்து காத்திருப்பதாக உலகவங்கி கூறியுள்ளதை சீனாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. வெளிநாட்டுக் கடன் அதிகரித்து கடந்த 27 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. இப்படி சீனாவுக்கும் தலைவலிகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கைக்காக அந்த நாடு தனது பொருளாதார வளங்களை கொட்டிக் கொண்டிருக்கும் என்றோ, தன் அரவணைப்பில் வைத்திருக்கும் என்றோ முழுமையாக நம்ப முடியாது. சிரியா விடயத்தில் மேற்குலகுடன் கடுமையாக முரண்டு பிடித்த சீனா இப்போது, சிரியாவைக் கண்டிக்கின்ற நிலைக்கு வந்துள்ளது. அதுபோன்ற நிலை இலங்கைக்கு வருவதற்கு ஒன்றும் நீண்டகாலம் தேவைப்படாது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தமது பொருளாதார மற்றும் படைபலத்தினால் எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. தயான் ஜெயதிலக இதனை அடிப்படையாக வைத்துத் தான் எச்சரித்துள்ளார். மேற்குலக நாடு ஒன்றில்- அதுவும் ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாட்டின் தலைநகரில் உள்ள தயான் ஜெயதிலகவினால் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது. அதன் அடிப்படையில் தான் ஜெனிவா தீர்மானத்தை அவர் ஆபத்தான அறிகுறியாக இனங்கண்டுள்ளார். ஜெனிவா தீர்மானம் குறித்து அரசாங்கமும் எச்சரிக்கை விடுத்தது. 

ஆனால் தயானின் எச்சரிக்கைக்கும், அரசின் எச்சரிக்கைக்கும் வேறுவேறு அர்த்தங்கள். 

தயான் உறக்கத்தில் இருப்பதாக நடிக்கும் அரசை தட்டியெழுப்ப முனைகிறார். 

ஆனால் அரசாங்கமோ சிங்களத் தேசியவாதத்தை இந்த எச்சரிக்கையின் மூலம் தட்டியெழுப்ப முனைகிறது. 

இது தான் அந்த வித்தியாசம்.

கட்டுரையாளர் கபில் இன்போ தமிழ் குழுமம்

இந்தியா பெற்றெடுத்த குழந்தை இலங்கையின் ஊதாரிப்பிள்ளை

ஜெனீவாவில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ற தலைப்பில்  (2012 ஏப்ரல் 7) சென்னையிலிருந்து வெளியாகும் இந்துப் பத்திரிகையில் நிருபமா சுப்பிரமணியம் எழுதியிருந்தகட்டுரைக்கு இலங்கை பிரஜை மற்றும் பத்திரிகையாளர் என்ற ரீதியில் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த விபர தகவல் பணிப்பாளர் லூசியன்ராஜகருணாநாயக்க பதில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். இலங்கைக்கு இந்தியாவால் திணிக்கப்பட்ட திருத்தமானது (13 ஆவது திருத்தம்) தீர்வை தரவில்லை என்ற தலைப்பில் தனிப்பட்ட முறையில் லுசியன்ராஜகருணாநாயக்க தனது கருத்துகளை குறிப்பிட்டிருந்தார் . அதற்கு நிருபமா சுப்பிரமணியன் பதில் அளித்திருக்கிறார்.
லூசியன் கருணாநாயக்கவின் கருத்தும் அதற்கான நிருபமா சுப்பிரமணியத்தின் பதிலும் இங்கு தரப்படுகிறது.

நிருபமா சுப்பிரமணியன்
1987 இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பான நெருக்கடிகளை லூசியன் ராஜ கருணா நாயக்க சரியான முறையில் சுட்டிக்காட்டியுள்ளார். இடம் , காலம் தொடர்பான நெருக்குவாரங்கள் அவரை தடுத்திருக்கின்றது என்பது சந்தேகமில்லை. இந்திய தலையீட்டுக்கு இட்டுச் சென்ற  துன்பகரமான நிகழ்வுகளை மீள அசைப் போடுவதற்கு எனக்கும் அத்தகைய நெருக்கு வாரங்கள் இருக்கின்றன. 

13 ஆவது திருத்தத்தை சகல கட்சிகளும் முன்னர் எதிர்த்து இருந்தன இன்றைய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிகளும் உட்பட சகல கட்சிகளும் எதிர்த்திருந்தன. ஆயினும் ஜே.வி.பி உட்பட இக் கட்சிகள் இந்தத் திருத்தத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களில் ஆர்வத்துடன் பங்குப்பற்றின. இன்று கிழக்கு மாகாணம் உட்பட சகல மாகாண சபைகளையும் ஐ.தே.சு.மு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. 1990 இல் வட,கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக 2008 இல் கிழக்கில் இடம் பெற்ற  மாகாண சபைத் தேர்தல்களில் ஐ.தே.சு. மு அதனை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இது வரை வட மாகாணசபைக்கு தேர்தல்கள் இடம்பெறவில்லை. 1999 இல் முதற் தடவையாக மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி, போட்டியிட்டது. அக் காலம் தொட்டு முன்னைய காலத்தை அது திரும்பி பார்க்கவில்லை. 13 ஆவது திருத்தத்திற்கான  தேசிய ரீதியான  வெறுப்பு இருக்கின்றது என்பதை கண்டு கொள்வதை இது கடினமாக்கி உள்ளது. அதாவது ராஜ கருணாநாயக்க கூறுவது பற்றியதை கண்டுப்பிடிப்பது  கடினமான விடயமாக உள்ளது.   

இந்த குறிப்பிட்ட ஏற்பாடானது பரந்தளவில் வெறுக்கப்பட்டதாக இருப்பது  உண்மையானதாக இருந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஜே.வி.பியும் 1987 இல் போன்று இப்போதும் அதனை எதிர்ப்பதாக இருந்தால் அதனை  இல்லாமலே செய்வதற்கு தற்போது உள்ள தருணத்தைப் போன்ற சிறப்பான வேளை இருக்க முடியாது. 1987 இற்கு பின்னர் இலங்கையில் முதற் தடவையாக  ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. ஆதலால் தான் விரும்புவது போன்று அரசியல் அமைப்பில் மாற்றத்தை மேற்கொள்வதற்குரிய  தனித்துவமான வாய்ப்பு இருக்கின்றது. யாவற்றுக்கும் மேலாக அரசியல் அமைப்பை திருத்துவதற்கான தனது ஆற்றலை அரசாங்கம் ஏற்கனவே வெளிப்படுத்தி உள்ளது. 2010 இல் அதனைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் இரு தடவை பதவிக் கால ஏற்பாட்டை அகற்றியிருந்தது. அந்த நடவடிக்கைக்கும் ஜனநாயக ரீதியற்றது என்று எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. ஐ.தே.க. ,ஜே.வி.பி ஆளும் கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் 18 ஆவது திருத்தமானது அரசியல் அமைப்பில் ஓர் அங்கமாக இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. 

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இணக்கப்பாடு காண்பதற்கான  அரசியல் அமைப்பு ரீதியிலான அலகாக மட்டுமே 13 ஆவது திருத்தம் இருப்பதாக   சகலரும் கூறியுள்ளனர். தனது முதலாவது ஆட்சி காலத்தில் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க, அரசியல் அமைப்பு மறுசீரமைப்பை கொண்டு வருவதற்கு முயற்சித்திருந்தார் அந்த மறுசீரமைப்புகள் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் பட்டவையாகும். மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதில் 13 ஆவது திருத்தத்திற்கும் வெகு தொலைதூரத்திற்கு சென்றவையாக அவை அமைந்திருந்தன. மேலும்  பாராளுமன்றத் தெரிவுக் குழுவூடாக அந்த மிகவும் ஆமை வேகத்தில் முன்னெடுக்கப்பட்ட  இந்த தீர்வுப் பொதிக்கு புலிகள் கடைசி நேரத்தில் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர். மறுபக்கத்தில் எதிர்க்கட்சியும்  அரசாங்கத்தின் உறுப்பினர்களும் கூட எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதற்குப் பிறகு உள்நாட்டில் ஏற்படுத்தப்படும் அதிகாரப் பகிர்வு திட்டத்திற்கான ஒரேயொரு முற்சியைமட்டுமே இலங்கை அரசியல் சமுதாயம் மேற்கொண்டது. அது சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை ஒரு போதுமே பகிரங்கப்படுத்தப்படவில்லை. கிடப்பில் சத்தமின்றி போடப்பட்டதாக தோன்றுகின்றது. 13 ஆவது திருத்தமானது பிரகாசமானதாக இல்லா விடினும் குறைந்தளவு சட்டமாகவாவது இருந்து வருகிறது. புலிகளைத் தவிர சகல தமிழ்க் குழுக்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த திருத்தமானது எழுத்தில் நேர்மையான முறையில் நிதி, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் காணி உரிமைகளை கொண்டதாக இருக்கின்றது. அவை அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான நீண்ட தூரத்திற்கு அது சென்றிருக்கும். அத்தகைய முன் நகர்வானது வடக்கு, கிழக்கு மட்டுமன்றி இலங்கையின் ஏனைய 7 மாகாணங்களிலும் வரவேற்பை ஏற்படுத்தக் கூடிய முன்நகர்வாக  அமைந்திருக்கும்.


                                                         லுசியன்ராஜகருணாநாயக்க 

2009 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானமானது 11 பெரும் பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 29 வாக்குகளும் 12 எதிரான வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அந்த தீர்மானம் கேள்விகளை எழுப்புகின்றது. "இராஜதந்திர ரீதியாக தோல்வியடைவதிலிருந்தும் வெற்றியை இலங்கை சமாளித்து தட்டிப் பறித்துக் கொண்டது' என்று ஜெனீவாவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ( 7 ஏப்ரல், 2012) என்ற தனது கட்டுரையில் நிருபமா சுப்பிரமணியன் நினைவு கூர்ந்துள்ளார்
.
அத்துடன் 2009 தீர்மானத்தின் முன்னுரையில் இடம்பெற்றிருந்த வரியொன்றையும் அவர் நினைவு கூருகிறார். அந்த வரியானது "இலங்கையில் இறுதிச் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு தொடர்பான இலங்கையின் உறுதிப்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தது. 13 ஆவது திருத்தம் தொடர்பான இந்தக் குறிப்பைப் பார்க்கும் போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்  அண்மையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு புதுடில்லி ஆதரவளிப்பதென மேற்கொண்ட தீர்மானமானது கொழும்பு செலுத்திய விலையென்ற சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது.

"இந்தியாவின் கண்ணோட்டத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பாக இலங்கையானது மீண்டும் கவனத்தைச் செலுத்துவதற்கு இது உதவியிருக்கின்றது என்ற வாதத்தை நிரூபமா முன்வைத்திருக்கிறார்‘. இந்தச் சரத்து தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக ஞாபகமூட்டுவது இலங்கைக்கு எரிச்சலூட்டுவது முடிவில்லாமல் தொடர்வதாகவும் இந்தியா ஏன் இதனை திரும்பத்திரும்ப நச்சரிக்கிறது? மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் விதத்தில் மிகவும் அதிகளவுக்கு மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையிலிருந்தும் நகர்ந்து செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பு ரீதியாக மேற்கொண்ட ஒரேயொரு ஏற்பாடாக 13 ஆவது திருத்தம் இருப்பதைத் தவிர வேறு காரணம் இல்லை என்றும் நிரூபமா மேலும் கூறியுள்ளார். 

இந்தச் சரத்து தொடர்பாக இந்தியா தொடர்ச்சியாக நினைவூட்டுவதானது இலங்கைக்கு எரிச்சலூட்டுவது முடிவின்றி தொடர்வதென்றால் அந்த மாதிரியான உணர்வுகளுக்கு சிறப்பான காரணம் இருக்கிறது. 1987 இலங்கை இந்திய உடன்படிக்கையின் ஓரங்கமாக இத்திருத்தம் கொண்டுவரப்பட்டதுடன், இலங்கையின் தொண்டைக்குள் திணிக்கப்பட்டதொன்றாகும். வட இலங்கை மீது இந்தியா வான்வழி ஊடுருவலை மேற்கொண்டு “உணவுப் பொதியை போட்டதைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்க அல்லது இறுதியான நிலைக்கு கொண்டுவருவதை உறுதிப்படுத்தும் நிலைமையில் இலங்கையின் ஆயுதப்படைகள் இருந்த தருணத்தில் இது இடம்பெற்றிருந்தது.  இது 2009 இற்கு அதிக காலத்துக்கு முற்பட்டதாகும்
.
இலங்கையில் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வை நான் ஆதரிப்பவள். ஆனால் 13 ஆவது திருத்தத்தின் நிபந்தனைகள் ஜனநாயக ரீதியான தன்மையைக் கொண்டவை அல்ல. இந்நாட்டின் பெரும்பான்மை, சிறுபான்மை  உறவுகள் தொடர்பான பிரச்சினைக்கு உண்மையான தீர்வை கொண்டவையென ஜனநாயக ரீதியில் கருதப்பட முடியாதவையாகும். இது திணிக்கப்பட்ட திருத்தமாகும். இலங்கை மக்கள் மீது மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவால் திணிக்கப்பட்டதொன்றாகும். அந்தத்  தருணத்தில் பாராளுமன்றத்திலிருந்த 5/6 பெரும்பான்மையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திருத்தமாகும். இந்தியாவில் டாக்டர் அம்பேத்கார் செய்திருந்தது போன்று உரிய முறையில் பொதுமக்களுடன் கலந்துரையாடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தமாக இது இருக்கவில்லை. 

இந்திய இலங்கை உடன்படிக்கையினூடாக 13 ஆவது திருத்தம் திணிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக வாக்களித்த அச்சமயம் ஆளும் கட்சியாக இருந்த ஐ.தே.க. உறுப்பினர்கள் கூட பாதுகாப்புடனேயே பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். 2/3 பெரும்பான்மையை உறுதிப்படுத்த அவ்வாறு கொண்டுவரப்பட்டிருந்தனர். அண்மைய தீர்மானத்தில் அமெரிக்காவுடன் இணைந்து வாக்களிப்பதற்கான இந்தியாவின் தீர்மானத்தில் கூட்டணி நெருக்குவாரத்தின் வகிபாகம். பற்றி அவர் (நிரூபமா) குறிப்பிடுகிறார். இலங்கையிலும் அத்தகைய நிர்ப்பந்தங்கள் இருப்பதை புரிந்துகொள்வது அவசியமானதாகும். இன்றைய கூட்டணி அரசில் அரசியல் கட்சிகள் பல அங்கம் வகிக்கின்றன. அவை இலங்கை  இந்திய உடன்படிக்கையையும் 13 ஆவது திருத்தத்தையும் முழுமையாக எதிர்த்தவையாகும். இதற்கு அச்சமயம் ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலேயே எதிரணி எதிர்ப்பை தெரிவித்திருந்தது. தற்போதைய கூட்டணி அரசிலும் சுதந்திரக் கட்சியே பெரிய கட்சியாகும்.

ஏனைய மாகாணங்களில் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்டு உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு அதிகார வலுவூட்டியிருப்பதாக ஆனால் இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமான வடக்கு, கிழக்கு தமிழ் மாகாணங்களில் இது இல்லையெனவும் நிரூபமா குறிப்பிட்டுள்ளார். ஆனால் 13 ஆவது திருத்தமானது  "மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வாகவே நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் "செழிப்பாக' இருப்பதாக பார்ப்பதை இந்த மாகாணங்களிலுள்ள மக்களுக்கு வலுவூட்டியிருக்கின்றதா என்பதை ஆராய்வது பிரயோசனமானதாக இருக்கும். 

அதேவேளை தற்போதைய நிலையில் தமிழ்த் தலைமைத்துவமானது புலம்பெயர்ந்தோரின் தீவிரவாத மனப் பிரதிமையை அதிகளவுக்கு பற்றிப்பிடித்திருப்பதாக அவரின் (நிரூபமா) அச்சத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். 2012 தீர்மானத்தை முன்தள்ளுவதற்கு புலம்பெயர்ந்த சமுகத்தின் பங்களிப்பு பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். கடும்போக்கான அரசியல், சமூக வலியுறுத்தல்களை தமிழ்த் தலைமைத்துவம் விடுப்பதில் இது முடிவடையக்கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார். அந்தக் கோரிக்கைகளை இலங்கை அரசியல் சமுதாயம் நிராகரிப்பதற்கு இவை சாட்டாக அமைந்துவிடக் கூடாததாக இருப்பினும் மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைப்பாடொன்றை அரசியல் சமுதாயம் உருவாக்குவதற்கு மிகவும் கடினமான நிலைமையை இது நிச்சயமாக ஏற்படுத்தும்.

அரசியல்வாதிகளுக்கு அல்லாமல் மக்களுக்கு அதிகார வலுவூட்டும் பொருத்தமான அதிகாரப் பகிர்வின் தேவை தொடர்பாக நான் கேள்வி எழுப்பவில்லை. அந்தப் பகிர்வானது நாட்டின் மீதோ மக்கள் மீதோ திணிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது அல்லது நல்ல அயலவராலோ அல்லது விரக்தியடைந்த அரசியல் தலைமைத்துவத்தாலோ திணிக்கப்பட்டதாகவும் இருக்கக்கூடாது. அதாவது 1987 இல் இடம்பெற்றது போன்று இருக்கக்கூடாது.
சிறப்பான பகிர்வுக்கான நல்ல சந்தர்ப்பத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். அத்துடன் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்கு வலுவூட்டும் முக்கியமான விடயங்கள் தொடர்பாகவும் அரிய வாய்ப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம் என நம்புகிறேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கான கணிசமான பணிகள் ஊடாக இவற்றுக்கு வலுவூட்ட முடியும். இந்த முயற்சிகளுக்கு வலுவூட்டுவதே ஜெனீவாவிலிருந்தான சிறப்பான பாடமாகும். இந்த முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதல்ல.

தினககுரல்

மீண்டும் வலுப்பெறுகிறது தமிழீழக் கோரிக்கை


போரை வெற்றிகொள்ள களம் இருந்தால் மட்டும் போதாது. புறநிலைக் களம் மற்றும் மக்களின் ஆதரவுகள் இருந்தால்த்தான் போரை வெற்றிகொள்ள முடியும் என்பதுதான் நியதி. இறுதிப் போர் நடைபெற்ற வேளையில் தமிழகம் புறநிலைக் களமாக இருந்திருந்தால் தமிழீழத் தனியரசை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கியிருக்க முடியும்.  1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாறுதல்கள் தமிழீழம் அடையும் நோக்கத்திற்கு தடையாக இருந்தது. 1991-ஆம் ஆண்டுக் காலப் பகுதிகளுக்கு முன்னர் பல ஆண்டுகள் தமிழ் போராளி அமைப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தமிழீழம் அமைக்கும் நோக்கம் பலிக்காமல் போனதற்கு ஒரு காரணமாக இருந்தது. 

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான ஈழத் தமிழர்களின் ஆயுதப் போர் தமிழீழக் கோரிக்கைக்கு தடைக் கற்களாகவே அமைந்தது. தமிழர்களுக்கென்று ஒரு கட்டுக்கோப்பான அரசியல் தலைமைத்துவம் இன்றுவரை இருந்ததில்லை. இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைப் பண்புகளை கொண்டிருந்தார்கள். அரசியல் ரீதியாக தமது தலைமைப் பண்பை உருவாக்கி வரும் வேளையில் இறுதிப் போருடன் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. 

ஏறத்தாள எட்டுக் கோடித் தமிழர்களைத் தன்னகத்தே வைத்துள்ள தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளின் பின்னுக்கு முன் முரணான நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் நிலையில் இல்லை. தமிழ்நாடு மற்றும் தமிழர் மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்டால், ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளை வசைபாடி மக்களை பிழையான வழிக்கே அழைத்துச் சென்றுள்ளார்கள் என்பதுதான் வரலாறு. 

தலைமைப் பண்புகளுக்கு ஒவ்வாத செயற்பாடுகளையே கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் இதுநாள் வரை செய்து வந்துள்ளார்கள். கொள்கை ஒன்றை வகுத்துவிட்டால் அதற்காக இறுதிவரை போராடும் தன்மை ஒரு தலைவருக்கு இருத்தல் வேண்டும். தொண்டர்கள் அக்கொள்கைகளில் இருந்து மாறாமல் இருக்க தலைவர் தொடர்ந்தும் அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற மறைந்த தமிழகத் தலைவர்கள் தமது கொள்கைகள் என்னவோ அதற்காக போராடி வெற்றியடைந்தவர்கள்.

போராட்டப் பாதைகள் மாறலாம் ஆனால் போராட்டம் மாறிவிடக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி கூறுவார். இவருடைய கூற்று நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே. ஒற்றையடிப் பாதையில் சென்று போராட்டத்தை வெல்லலாம் என்பது மடத்தனம்.போராட்டத்தின் தன்மைகளை அறிந்து நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு போராட்டத்தை செய்தாலே வெற்றிகொள்ள முடியும். 

காலத்திற்கு ஏற்றவாறு மாறும் தலைமைகள்

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் உயரிய தலைமைப் பண்பைக் கொண்டவர். தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை பற்றுக்கொண்டு வெல்லும் மனம் படைத்தவர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதித் தீர்வு என்கிற கொள்கையை ஏற்றுக்கொண்டு தமிழீழப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பல்வேறு உதவிகளைச் செய்தவரே எம்.ஜி.ஆர் என்பது உலகறிந்த உண்மை. 

1970 மற்றும் 1980-களில் தமிழ்ப் போராளிகள் தமிழகம் சென்றபோது அவர்களைப் பிடித்து சிறிலங்காவிடம் ஒப்படைத்த கலைஞர் பின்னர் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி ரெசோ என்கிற அமைப்பின் தலைவராக செயற்பட்டார். இயக்கங்களை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதில் அவர்களை பிரித்துப் பார்க்கவே விரும்பினார் கலைஞர். டெலோ போன்ற போராளி இயக்கங்களுக்கு பண உதவிகளை செய்து விடுதலைப் புலிகளின் தலைமையை ஓரம்கட்ட வேண்டுமென்கிற வகையில் செயற்பட்டார் கலைஞர். 

காலத்திற்குக் காலம் மாறுபட்டக் கருத்துக்களைக் கொண்டு செயற்பட்டவரே கலைஞர். இராஜீவ் மரணத்திற்குப் பினனர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாறுதல் காரணமாக1991-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் கலைஞர் பேசுகையில்,விடுதலைப் புலிகளின் தனி ஈழம் என்ற கோரிக்கையில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார். ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்கிற வாதத்தை முன்வைத்துப் பேசிவந்தவர் கலைஞர். 

பிரபாகரன் இல்லையென்றால் தமிழர்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று கூறி வந்தவரே ஜெயலலிதா. 1990-ஆம் ஆண்டில் கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து மீண்டும் தேர்தலை நடத்தி அதன் மூலமாக தான் ஆட்சிக்கட்டில் ஏறிவிட வேண்டுமென்கிற காரணத்தினால் பொய்ப் பிரச்சாரங்களை ஜெயலலிதா மேற்கொண்டார். 

சிங்கள அரச படைகளுடன் மீண்டும் 1990-ஆம் ஆண்டில் போர் ஆரம்பித்தவுடன் பல்லாயிரம் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக படையெடுத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் உட்புகுந்து விட்டதாகவும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து விட்டதாகவும் கூறி தமிழக ஆட்சியைக் கலைக்க உத்தரவிடும்படி போராட்டங்களை முன்னெடுத்த ஜெயலலிதா வெற்றியும் கண்டார். 

இந்திய மத்திய சர்க்கார் தமிழக அரசைக் கலைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தது. 1991-ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இதனைச் சாட்டாக வைத்து கலைஞர் தலைமையிலான தி.மு.காவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஜெயலலிதா அமோக வெற்றிபெற்று தமிழக முதல்வரானார். இதன் பின்னர் இயற்றப்பட்ட சட்டங்கள் ஈழத் தமிழர்கள் பற்றியோ அல்லது அவர்களுடைய போராட்டம் பற்றியோ தமிழகத்தில் பேசுவதற்குக்கூட இடமளிக்கவில்லை. 

தமிழீழத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள் சிறை அடைக்கப்பட்டனர். அப்பாவி ஈழத் தமிழ் அகதிகளை கைது செய்து புலி எனும் முத்திரை குத்தி பல்லாண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வழி அமைத்து கொடுத்தார் ஜெயலலிதா. காலங்கள் உருண்டோடின. பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் ஈழத்தில் அழியும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் தமிழக அரசியல்வாதிகள்.தமிழீழ விடுதலைக்குப் போராடிய விடுதலைப் புலிகள் புறநிலைக் களமின்றி தவித்தார்கள்.

பல்வேறுபட்ட தடைகளை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்களை வதைப்படுத்தியது சிங்கள அரசுகள். தமிழ் நாடு பக்கபலமாக இருந்திருந்தால் எவ்வித தடைகளுமின்றி பொருட்களை கொள்முதல் செய்து பல்லாயிரம் மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். புறநிலைக் களம் இல்லாத காரணத்தினால்த்தான் ஈழத் தமிழர்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. ஈழத்திற்கு ஆதரவாக தாம் வாழும் நாடுகளில் உலகத் தமிழர்கள் போராட்டங்களைச் செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்ந்தார்கள். ஆனால், புறநிலைக் களம் இல்லாத காரணத்தினாலேயே நான்காம் கட்ட ஈழப் போர் தோல்வியில் முடிந்தது.

மீண்டும் ஈழத்திற்கான குரல்

ஈழப் போர் உச்சிக்கட்டத்தில் இருந்த போது ஜெயலலிதாவின் கட்சி எதிர்க் கட்சியாக இருந்தது. தமிழக மக்களின் எழுச்சியைக் கண்டு அவர்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறிவிட வேண்டுமென்கிற காரணத்தினால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மூன்று வருடங்களுக்கு முன்னர் எடுத்தார் ஜெயலலிதா. கலைஞருக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு மீண்டும் அரச நாற்காலியைப் பிடித்துக் கொண்ட ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சில செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கு இறுதித் தீர்வு என்று கூறாமல் இலங்கைத் தமிழர்கள் என்றே கூறிவருகிறார் ஜெயலலிதா.

கலைஞர் தலைமையிலான தி.மு.க. கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.அன்றிலிருந்து இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பேச்சுக்களை பேசி வருகிறார் கலைஞர்.பொதுக்கூட்டம் ஒன்றில் கலைஞர் சில தினங்களுக்கு முன்னர் பேசும்போது, “தமிழீழம் மலராததற்கு காரணம் நிறைய உண்டு. அது பற்றி ஆராய்ந்து சொல்ல விரும்பவில்லை. தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். தமிழீழத்துக்கு இன்றைய தினம் புதிய எழுச்சியை உருவாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.நான் முன்பு சொன்னது போல் எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளோ தெரியாது. ஆனால் ஈழத்தின் எழுச்சியை உருவாக்காமல் உங்களை மட்டும் அல்ல இந்த உலகத்தை விட்டே போகமாட்டேன்"என்றார் கலைஞர். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்களுக்கு நிறைவேறாத ஆசை உண்டா?என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு ஈழம் மலர வேண்டும் என்பதே என் ஆசை என்றேன். தமிழ் மலர பாடுபட நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மீண்டும் டெசோவை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதில் நானும்இ பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி இடம்பெறுவோம்" என்றார் கலைஞர்.

கடந்த வாரம் சிறிலங்கா சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனும் இடம்பெற்று இருந்தார். நாடு திரும்பியதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான பல சொற்பதங்களை பாவித்தே வந்தார் இவர். குறிப்பாக தாம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற போது தமிழ் மக்கள் தனித் தமிழீழம் கோரவில்லையெனவும், இலங்கை நாட்டிற்குள் சில அரசியல் அதிகாரங்களைப் பெற்று வாழ வேண்டுமென்பதே தமது விருப்பம் என்று தம்மிடம் தமிழ் மக்கள் கூறியதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார் ரங்கராஜன். இது குறித்து இவருடைய கருத்துக்களை நிராகரிக்கும் விதமாக அறிக்கையை வெளியிட்டார் கலைஞர்.

கலைஞர் தனது அறிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், சுரேஷ் பிரேமச்சந்திரன், வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினை சுட்டிக்காட்டி இருக்கிறார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால்; தற்போது சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்."

“டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்ற போது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன்.இலங்கைப் போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில்13,000 விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார்."

“தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே. ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, 1976-ல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து ‘தனித் தமிழ் ஈழம்’ தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து அதனையே முன் வைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள்.தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.”

“தனித் தமிழ் ஈழம் தான் என்பது 1977-ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு.ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.இலங்கைத் தமிழர் பிரச்சினையை அடக்குமுறை அடாவடிகளாலோ,அதிகார அத்து மீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது" என்று தனது அறிக்கையில் கூறினார் கலைஞர்.

“தனி ஈழக் கோரிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சித்துள்ள கலைஞருக்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ள கருத்தைத்தான் டி.கே.ரங்கராஜன் தெரிவித்ததாக ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தனி ஈழத்திற்குக் குறைவான எதற்கும் இலங்கைத் தமிழர்கள் எதற்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருணாநிதியின் கருத்து குறித்து தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காண்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவிடமும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்."

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றுகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதையே வலியுறுத்தினார்.இப்போதும் கூட அவர் தனி ஈழத்திற்குக் குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று கூறவில்லை.மாறாக, தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளார்.எந்த ஒரு பிரச்சனையிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்தோட்டம் என்ன என்பதே முதன்மையானது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி, அர்த்தபூர்வமான அதிகாரப்பரவல் என்பதையே முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது" என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

தமிழீழம் அடையும் வரை ஓயமாட்டேன் மற்றும் வன்முறையின்றி ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றவாறு தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசு உதவ வேண்டுமென்று கருணாநிதி குரல் கொடுத்துள்ளதானது உலகத் தமிழர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. ஆட்சிக் கட்டிலில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கலைஞர் பேசுவது நாடகம் என்று கருதுகிறார்கள் உலகத்தமிழர்கள். 

ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு அதுவே தனது நிலைப்பாடும் என்று கலைஞர் தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளது வெறும் நாடகம் என்று கருத வேண்டியுள்ளது. சிங்களவர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னர் பேசியவரே கலைஞர். தனி ஈழம் என்கிற வாதத்தை இப்போது முன்வைத்துப் பேசும்போது மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சா கலைஞரைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.ஈழத்தை இந்தியாவில் அமைப்பதே சிறந்ததாகவும் கலைஞர்ருக்கு அறிவுரை கூறியுள்ளார் கோத்தபாய. 

பல்லாயிரம் தமிழ் மக்கள் ஈழத்தில் சாகும்போது ஆட்சியில் இருந்தவரே கலைஞர்.இந்திய மத்திய அரசில் கலைஞருடைய கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தனது கட்சியின் செல்வாக்கை பாவித்து மனிதாபிமான ரீதியிலாவது ஈழத் தமிழர்களின் துயரை துடைக்க முனையாமல் வெறும் கண்துடைப்பு நாடகங்களை நடத்தியதைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை. இப்படிப்பட்டவர் தற்போது தொடர்ந்தும் ஈழம் பற்றி அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். இவருடைய அறிக்கைகளுக்கு பதில் அறிக்கைகளை தொடர்ந்தும் வெளியிட்டுவரும் ஜெயலலிதா இது சம்பந்தமாக எதனையும் தெரிவிக்காமல் இருக்கிறார். 

தமிழீழ விடுதலைக்கான குரல் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கிறது என்பது உண்மையே. தலைமைப் பண்புகள் இல்லாமல் வெறும் அரசியல் காய் நகர்த்தல்களுக்காக ஈழப் போராட்டத்தைப் பாவிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம். தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் தமிழீழமே சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு இறுதியும் அறுதியுமான தீர்வு என்று கூறி அறவழிப் போராட்டத்தை ஆரம்பிப்பதே தமிழீழ தனியரசை நிறுவ வழி வகுக்கும். இதுவே லட்சக்கணக்கான மக்களின் குருதி சிந்திய மண்ணுக்கும் மக்களுக்கும் அளிக்கும் ஆதரவாக அமையும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்