Friday, June 29, 2012

சிவசங்கர் மேனன் கொழும்பு வருவது ஏன்?


இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்  நாளை கொழும்புக்கு மேற்கொள்ளும் பயணம் முன்னெப்போதையும் விட அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ஊடகங்களில் மட்டுமன்றி இந்தியாவின் பிரதான ஆங்கில ஊடகங்களிலும் பலநாட்களாக இதுவே பேச்சாக இருந்து வருகிறது. போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இவ்வாறான செய்திகள் வருவது இயல்பு தான். ஆனால் போர் முடிந்த பின்னர் இந்தியத் தரப்பில் இருந்து, இவ்வாறான ஒருவரின் பயணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை உணர முடிகிறது. சிவ்சங்கர் மேனன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி ஏற்க முன்னர், கொழும்பில் இந்தியத் தூதுவராக பணியாற்றியிருந்தார். அந்தவகையில் இலங்கை அரசுடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தவர். அவரையே புதுடெல்லி ஒரு சிறப்புத் தூதுவராக கொழும்புக்கு அனுப்பவுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை அவர் கொழும்பில் நடத்தப் போகும் இரண்டு சந்திப்புகள் மிக முக்கியமானவை என்று கூறப்படுகிறது. 

முதலாவது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப் போகும் சந்திப்பு. 

இரண்டாவது - பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் நடத்தவுள்ள சந்திப்பு. 

இந்த இரண்டு சந்திப்புகளுமே தனித்தனியான சந்திப்பாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் போர் முடிவுக்கு வந்த பின்னர்- கடந்த மூன்று ஆண்டுகளில் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷவையோ, கோட்டாபய ராஜபக்ஷவையோ தனியாக சந்தித்துப் பேசுவதற்காக இந்தியா அனுப்பும் முதல் தூதுவர் இவர் தான் என்று தகவல்கள் கூறுகின்றன. 

இலங்கையில் அதிகாரம் மிக்கவர்களை வரிசைப்படுத்தினால், அதில் முதலாவது இடத்தில் உள்ளவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. 

இரண்டாவது இடத்தில் இருப்பவர் கோட்டாபய ராஜபக்ஷ  

இந்த முதலிரு இடங்களை வகிப்போருடன் சிவ்சங்கர் மேனன் தனியாகச் சந்திக்கவுள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது.வெளிநாட்டு உறவுகளில், தனியான சந்திப்புகள் என்பது பொதுவாக இரண்டு சந்தர்ப்பங்களில் நிகழ்வதுண்டு. ஒன்று- அதிகம் நெருக்கமான சூழலில். இரண்டு- மிகவும் சிக்கலான நேரத்தில். 

சிக்கலான நேரத்தில் நடக்கின்ற இத்தகைய சந்திப்புகள்- வெளிப்படையாக பேச முடியாத விடயங்களைப் பேசுவதற்கு, மறைமுகமாகவோ நேரடியாகவோ எச்சரிக்கை விடுப்பதற்கு உதவும். 

அதாவது, அதிகாரிகள் மட்டத்தில் கூட விவகாரங்கள் கசிந்து போகாதபடி இருப்பதற்காக நடத்தப்படுவதுண்டு. 

இந்தியாவும் இலங்கையும் இப்போது அதிகம் நெருக்கமான சூழலில் இல்லை என்பதால், இந்தத் தனியான சந்திப்பை வேறு விதமாகவே அர்த்தப்படுத்த வேண்டியுள்ளது. அண்மையில் பிரேஸிலில் நடந்த றியோ+ 20 மாநாட்டுக்கு சென்றிருந்த போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்தார். இதன்போது கூட முதலில் சிறிது நேரம் இருவரும் தனியாகவே சந்தித்துப் பேசினர். அதையடுத்தே இருநாட்டுக் குழுவினரும் பங்கேற்றனர். அந்தச் சந்திப்பிலும் கூட சிவ்சங்கர் மேனன் உடனிருந்தார். மன்மோகன்சிங் தனியான சந்திப்பை நடத்திய பின்னர் தான் சிவ்சங்கர் மேனன் தனியான சந்திப்புக்காக கொழும்புக்கு அனுப்பப்படுகிறார். ஆக, புதுடெல்லி ஒரு இறுக்கமான போக்கில்தான், இருக்கிறது என்பதும், எச்சரிக்கை செய்யும் செய்தியுடன் தான் சிவ்சங்கர் மேனனை புதுடெல்லி அனுப்புகிறது என்பதுமே ஊடகங்களின் பொதுவான எதிர்வு கூறலாக இருக்கிறது. 

இதற்குக் காரணம், ஜெனிவா தீர்மானத்தின் பின்னர், புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒருவித இடைவெளி தான். இதை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுப் பிளவு அல்லது விரிசல் என்று சொல்வது பொருந்துமா என்பது சந்தேகம் தான். ஆனால் இந்த உறவுகளில் சுமுகநிலை இல்லை என்பதும், நெருடலான ஒரு நிலையே உள்ளதும் உண்மை. 

இந்த நெருடல் நிலை நாளுக்கு நாள் தீவிரமடைவதையும் அவதானிக்க முடிகிறது. 

இந்தியாவின் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கம் போட்டு வரும் முட்டுக்கட்டைகளில் ஆகப் பிந்தியதாக, பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் இருந்து இந்தியா கழற்றி விடப்பட்டதை குறிப்பிடலாம். ஏற்கனவே, சம்பூரில் கூட்டு முயற்சியாக அனல் மின்நிலையத் திட்டத்தை அமைக்கும் பணி இன்னமும் தொடங்கப்படாமல் இழுபறியில் உள்ளது. நீண்டகாலமாக ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த இந்தத் திட்டத்துக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா வரப் போகிறார் என்றதும் அவசரஅவசரமாக அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் உருப்படியாக எதுவும் நடக்கவில்லை. திருகோணமலையில் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்களை மீளப்பெறும் முயற்சிகளிலும் அரசாங்கம் இறங்கியுள்ளது. இப்போது பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கான பணிகளையும் இந்தியாவிடம் இருந்து பிடுங்கிக் கொண்டுள்ளது அரசாங்கம். இதற்கான உடன்பாடு கையெழுத்திடப்படாது போனாலும், பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இந்தியா உதவும் என்று புதுடெல்லியில் மஹிந்த ராஜபக்ஷவும் மன்மோகன்சிங்கும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது, பலாலி விமான நிலைய ஓடுபாதையைப் புனரமைக்க இந்தியா உதவியிருந்தது. ஆனால், போர் முடிந்த பின்னர் இந்தியாவை அரசாங்கம் மெல்ல மெல்ல வெட்டி விட்டு வருகிறது. பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டது குறித்து இந்தியத் தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் வெளியாகாத போதும் இந்தியாவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இதைவிட, அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் கருத்தை இலங்கை மதிக்காதது, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் உதாசீனம் செய்து வருவது போன்ற எல்லாமே இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா வெறுப்புக் கொள்வதற்கான காரணங்களாக காட்டப்படுகின்றன. இவைபற்றி கொழும்புடன் கண்டிப்பாகப் பேசுவதே, சிவசங்கர் மேனனின் பயண நோக்கம் என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் சிவ்சங்கர் மேனனின் உண்மையான நிகழ்ச்சிநிரல் என்னவென்று யாருக்கும் தெரியாது. 

உண்மையில் சிவசங்கர் மேனனின் பயணம் குறித்து இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள ஊடகங்கள் முதலில் செய்திகளை வெளியிட்ட போது, இலங்கை வெளிவிவகார அமைச்சோ அதுபற்றித் தமக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியிருந்தது. எவ்வாறாயினும் மேனனின் கொழும்பு வருகை என்பது சுமுகமானதொரு சூழலில் இடம்பெறவில்லை. அதுபோலவே அவரது சந்திப்புகளும் சுமுகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. 

விரைவில் இந்தியாவிலும் நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதற்குள் காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளும் காங்கிரசுக்கு முக்கியமானவை. அவற்றை வெற்றிகொள்ள வேண்டிய தேவை காங்கிரசுக்கு உள்ளது. இந்திய அரச, போரை நிறுத்தத் தவறியதுடன், தமிழ்மக்களின் அழிவுகளை வேடிக்கை பார்த்தது என்ற கருத்து தமிழ்நாட்டில் ஆழமாக பதிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் தமிழ்நாட்டின் கவனத்தை மீண்டும் பெறுவதற்கு இழந்து போன செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கும் மத்திய அரசுக்கு வேறு வழியில்லை. இலங்கை அரசுடன் கடும் போக்கை வெளிப்படுத்தினால் தான் அதனால் காரியம் சாதிக்க முடியும். இந்தநிலையில் மேனனின் கொழும்பு வருகை இலங்கை மீதான இந்தியாவின் அடுத்தடுத்த கட்ட நகர்வுகளுக்கான திறவுகோலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தோன்றியிருப்பதில் ஆச்சரியமில்லை.

கட்டுரையாளர் கே. சஞ்சயன் இன்போ தமிழ் குழுமம்

Thursday, June 28, 2012

இராணுவத்தினரின் அதிக பிரசன்னத்தால் பாதிக்கப்படும் யாழ். மக்களின் வாழ்க்கை


யாழ்.மாவட்டத்தில் மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ளன. இங்கு மக்களது நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.யாழ்ப்பாண மாவட்டம் 1995இல் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்து யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் இருப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.
 
யாழ். குடாநாட்டை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து குறுகிய காலத்தில் பல்வேறு இடங்கள் "உயர் காப்பு வலயங்கள்' என முத்திரை குத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்நோக்குவதற்கும், இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புக் கருதியும் "உயர் பாதுகாப்பு வலயங்கள்' அமைக்கப்பட்டன. இலங்கையில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டத்திலேயே மிக அதிக எண்ணிக்கையான உயர் காப்பு வலயங்கள் காணப்படுகின்றன. 
 
அங்கு மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர் காப்பு வலயங்களாகும். இந்த இடங்களில் பொதுமக்களின் நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துலக மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு மனிதாபிமான உடன்பாடுகளை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், நாட்டில் உயர் காப்பு வலயங்கள் உருவாக்கப்படுவதை இந்த அனைத்துலக உடன்பாடுகளால் தடுக்கமுடியாது. அதற்கான போதியளவு சட்ட வரைபுகள் காணப்படவில்லை. எனினும் உண்மையில் இவ்வாறான உயர் காப்பு வலயங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன. 
 
ஜனநாயக சோசலிச குடியரசான இலங்கை பின்வரும் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சரத்துகளைக் கொண்டுள்ளது: 
 
பேச்சு சுதந்திரம் - அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம் 

மத சுதந்திரம் - ஒருவர் தனது சொந்தப் பண்பாட்டைப் பின்பற்றி அதனை மேம்படுத்துவதற்கான சுதந்திரம் 

சட்ட ரீதியான தொழில்கள், வர்த்தகம், முயற்சியாண்மை போன்றவற்றை மேற்கொள்வதற்கான சுதந்திரம். 
 
நடமாடுவதற்கான சுதந்திரம், இலங்கைக்குள் எந்தவொரு பகுதியிலும் வசிப்பதற்கான சுதந்திரம் 

அரசமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு இந்தச் சுதந்திரம் அனைத்தும் உறுதிப் படுத்தப்பட்டாலும் உயர் காப்பு வலயம் என்ற பெயரில் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான பெருமளவான நிலங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
 
சொந்த இடங்களிலிருந்த மக்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை, மக்களின் நடமாடும் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவித்தல், சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதியாமை போன்றவற்றின் மூலம் இலங்கை அரசு அடிப்படைச் சுதந்திரத்தைக் கொண்டுள்ள உள்நாட்டு மற்றும் அனைத்துலகச் சட்டங்களை மீறிச் செயற்படுகின்றது.
 
யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் காப்பு வலயங்களும் அகற்றப்படும் என ஜனவரி 2010இல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். 2011 ஓகஸ்ட் முடிவில் அவசரகாலச் சட்ட நடைமுறைகள் காலாவதியாகிய பின்னர், உயர் காப்பு வலயங்களுக்கு இருந்த "உத்தியோகபூர்வ' அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது. 
 
ஆனால் இந்த மாற்றமானது ஒவ்வொரு மக்களும் இயல்பு வாழ்வை வாழமுடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கவில்லை. அல்லது இவ்வாறான "உத்தியோகபூர்வ' செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமை யாழ். குடாநாட்டில் இயங்கும் அனைத்து இராணுவ நிர்வாகங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கவில்லை.
 
இடம்பெயர்ந்த அனைத்து மக்களும்2011முடிவுக்குள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனால் இக்காலக்கெடுவுக்குள் பணி பூர்த்தி செய்யப்படவில்லை. அண்மையில், மாதகலைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் தமது நிலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானித்திருந்தனர். அப்படி நில உரிமையாளர்கள் தமது நிலங்களை மீட்பதற்குச் சட்டத்தை அணுகினாலும்கூட தற்போது நடைமுறையில் காணப்படும் நீதிமுறைகள் இவர்களுக்கு வலுவான தீர்வை வழங்கப்போவதில்லை.
 
வலி. வடக்கில் உயர் காப்பு வலயங்களில் காணிகளைக் கொண்ட சுமார் 26,000 வரையானவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாது தவிக்கின்றனர். யாழ். குடாநாட்டில் உயர் காப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 வரையானவர்கள் அண்மைக் காலம்வரையில் சொந்த இடங்களில் மீள்குடியமர்ந்துவிட்டனர் என்று அரசு தெரிவித்துள்ளது. 
 
உயர் காப்பு வலயங்கள் தொடர்பான கலந்துரையாடல், திட்டமிடல் மற்றும் அவற்றில் சில மக்களின் பாவனைக்காக விடப்பட்டமை போன்றன உயர் காப்பு வலயங்கள் தொடர்பில் தெளிவின்மையை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து உயர் காப்பு வலயங்களும் மக்களின் பயன்பாட்டுக்காக மீளத்திறக்கப்படுமா என்றும் சந்தேகம் தொடர்ந்தும் நிலவுகின்றது. 
 
இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள உயர் காப்பு வலயங்கள் மக்களின் பாவனைக்காக திறந்து விடும் விருப்பத்தை இலங்கை அரசு இன்னமும் கொண்டிருக்கவில்லை என்பதையே அதன் தற்போதைய நிலைப்பாடு சுட்டிக்காட்டுகின்றது. 
 
இலங்கை அரசானது மனித உரிமைகளுக்கான அனைத்துலக பிரகடனம், பொது மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம் போன்ற பல முக்கிய சாசனங்களை ஏற்றுக் கைச்சாத்திட்டுள்ள போதிலும், அவற்றைப் பின்பற்றி நடக்கவில்லை.
 
"ஒவ்வொருவரும் சம உரிமையுடன், கௌரவத்துடன், சுதந்திரமாக பிறக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் மற்றையவர்களை சகோதர மனப்பான்மையுடன் ஏற்று அவர்களின் உரிமைகளை மதித்து நடக்கவேண்டும்'' என்று அனைத்துலக மனிதாபிமான உரிமைகள் சாசனத்தின் முதலாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இலங்கை அரசு பல பத்தாண்டுகளாக இதன்படி நடக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம்தான். உயர் காப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதற்கான மக்களின் அடிப்படை மனித உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மக்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல இடங்கள் அழிந்துவருகின்றன. 
 
அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 20-02-2006 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சில நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் கையளித்தது. 
 
ஆனால் தற்போது அந்த நிலங்கள் உள்ளடங்கலாக பல பிரதேசங்களை அரசு உயர் காப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. தெல்லிப்பளை, கொல்லன்கலட்டி, பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறைப் பிரதேசம், பொன்னாலை தொடக்கம் தொண்டமானாறு வரையான கரையோரப் பிரதேசங்கள் மாதகல், கீரிமலை, மயிலிட்டி, வசாவிளான் உள்ளடங்கலாகப் பல உயர் காப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளன. 
 
இதே போன்று மிருசுவில், கிளாலி, அரியாலை கிழக்கு, அல்லைப்பிட்டி போன்ற இடங்களும் இராணுவத்தால் முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களில் இருந்த வசதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டு இப்போது போதியளவு வசதி வாய்ப்புக்கள் காணப்படாததால் மக்கள் மீளவும் அங்கு செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
 
முப்பது ஆண்டுகளாக நடந்த குருதி சிந்தும் போரை, உயர் காப்பு வலயங்களில் தமது சொந்த வீடுகளைக் கொண்ட மக்கள் படும் துன்ப துயரங்கள் இன்றும் நினைவூட்டுவனவாக உள்ளன. முதன் முதலாக உயர் காப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்ட போது, பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
 
 இந்த மக்கள் இன்று வரை அவர்களது சொந்த இடங்களில் மீள்
குடியேற்றப்படவில்லை. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்திலுள்ள தமது நண்பர்களினதும், உறவினரதும் வீடுகளில் தற்காலிகமாக வாழ்கின்ற அதேவேளையில், ஏனைய மக்கள் நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் தங்கி வாழ்கின்றனர். இந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழ முடியாததால் இவர்கள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதில் சங்கடங்களை எதிநோக்கியுள்ளனர். 
 
எந்தவொரு தொழிலையும் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். தவிர, இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மிகத் தாழ்வாகக் காணப்படுகின்றது. ஏனெனில் முகாம்களில் இவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. 
 
இவ்வாறான தொடர் இடப் பெயர்வுகளின் விளைவாக தமிழ் இளையோர் தமது கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். இடப்பெயர்வு காலத்தில் இந்த மக்களுக்கு ஓர் உறுதியான தொழில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
 
இலங்கை இராணுவத்தினர் பல ஆண்டுகளாக மக்களின் நிலங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் இந்த மக்கள் போரின் பின்னரும் தமக்கான வாழ்வை மீளக் கட்டியெழுப்ப முடியாதுள்ளனர். போர் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், தமிழ் மக்கள் வாழ்விடங்களில் இராணுவ மயப்படுத்தலும், இராணுவச் செலவினமும் இன்றும் அதிகரித்த வண்ணமேயுள்ளன. 
 
இந்த ஆண்டில் இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 2 பில்லியன் டொலர்களாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இது ஏழு சதவீதத்தால் அதிகரித்துள்ளது
 
நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஆய்வாளர் கிப்சன் பேற்மன் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

நன்றி- உதயன்

வட மாகாண சபை ஊதாரிப் பிள்ளையா?


யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்தும் விவகாரம் இழுபட்டுக் கொண்டே செல்லும் நிலையில் இன்னமும் ஒரு வருடத்திற்கு ஆயுட்காலம் இருக்கும் நிலையில் கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகள் புதன்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டிருக்கின்றன. இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வாக 1987 ஜூலை இந்தியஇலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் வடக்கு, கிழக்கை இணைத்துக்கொண்டு 8 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு நிர்வாகம் அந்தந்த மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட்டதும் பின்னர் வட, கிழக்கு மாகாண சபை நீதிமன்ற உத்தரவின் பேரில் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு 2008 இல் கிழக்கு மாகாண சபைக்கு தனியாக தேர்தல் நடத்தப்பட்டுமிருந்த நிலையில் வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்தும் விடயம் தட்டிக் கழிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி அரசியல் நிர்வாகத்தை அப்பகுதி தமிழ் மக்களிடம் ஒப்படைத்து நல்லிணக்கத்தை வலுப்படுத்துமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற போதிலும் அது தொடர்பாக அக்கறை காட்டாத தன்மையையே கொழும்பு வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வட மாகாண சபைக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற வெளிநாட்டு நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடளாவிய ரீதியில் குடிசன மதிப்பீடு இடம்பெற்று வருவதாகவும் அது நிறைவுபெற்றதும் புதிய வாக்காளர் இடாப்புகள் தயாரிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தப்படுமெனவும் தெரிவித்திருந்தார். ஆனால், மார்ச்சில் குடிசனமதிப்பீடு இடம்பெற்று  அதன் ஆரம்பகட்ட அறிக்கை நேற்று முன்தினம் புதன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளை கலைத்து புதிய தேர்தல்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே தவிர தேர்தல் நடத்துவதற்கான அவசியத் தேவையாக உள்ள வட மாகாண சபைக்கான தேர்தல் பற்றி அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை. 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட முக்கிய அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப் போவதில்லையென்ற கடும் தொனியுடனான கருத்துகள் அரச தரப்பினரால் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. 

கால் நூற்றாண்டு காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாத  நிலையில் கூட வட மாகாண சபைக்கு தேர்தலை நடத்துவதில் அக்கறையோ, விருப்பமோ இல்லாத தன்மையே வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் உரிய காலத்துக்கு முன்பாக தற்போது மூன்று மாகாண சபைகளை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தேசித்திருப்பது ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் செல்வாக்கை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்தைக் கொண்டது என்று அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை சர்வதேச சமூகத்துக்கு காண்பிக்கும் நோக்கம் கொண்டதே இந்தக் காய் நகர்த்தல் என்று அவர்கள் கூறுகின்றனர். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள், யுத்தத்துக்குப் பின்னரான கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான உலக காலக்கிரம மீளாய்வு இடம்பெறவுள்ள நிலையில், உள்நாட்டில் மக்கள் மத்தியில் உறுதியான செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்கான முயற்சியாகவும் இந்தக் குட்டித் தேர்தல்கள் காணப்படுகின்றன.
 
வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவது தேர்தல் இடம்பெற்றால் அந்த மாகாண சபையின் நிர்வாகம், வட மாகாணத்தில் தமிழ் மக்களின் ஒரேயொரு நம்பகரமான பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் சென்று விடும் என்று அரசு அஞ்சுவதனாலேயே என்று கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துகள் களநிலை யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன. 

வட பகுதியில் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல்களை அரசாங்கத்தினால் நடத்தக்கூடியதாக இருந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலை மட்டும் ஏன் நடத்த முடியாது என்ற கேள்விக்கு நியாயமான, நீதியான  பதில் அரசிடம் இல்லை என்பதே தெளிவான  உண்மையாகும். அதிலும் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த மாகாணத்திற்கு தேர்தலை நடத்த தயங்குகின்றமை அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் பாரபட்சமாகச் செயற்படுகின்றது என்று அர்த்தம் கொள்வதே தவிர இதில் வேறொன்றும் கிடையாது. இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதய சுத்தியுடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக  உலகிற்கு கூறிக்கொண்டு அதேசமயம், ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் தடவும் கைங்கரியமே முன்னெடுக்கப்படுகின்றதென்ற பரவலான சந்தேகங்களை  களைவதற்கு இனிமேலாவது காலம் தாழ்த்தாது ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்வர வேண்டும் என்பது நியாயமாகச் சிந்திப்போரின் எதிர்பார்ப்பு. இதுவரை காலமும் கொழும்பின் கண்ணோட்டத்தில் வட மாகாண சபை ஒரு ஊதாரிப் பிள்ளையாகவே இருப்பதாக தோன்றுகிறது.

நன்றி - தினக்குரல்

யாழ்ப்பாணத்தில் 2000-3000 வரையானோர் உடல் உறுப்புக்களை இழந்தோராக வாழ்கின்றனர்

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ பதிவுகளின் படி, இங்கு வாழும் 600,000 மக்களில் 2000-3000 வரையானோர் உடல் உறுப்புக்களை இழந்து வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் வடக்கில் வாழும் மக்களில் 10-15 சதவீதமானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்தோர்களாகக் காணப்படுவதாகவும், நோய், விபத்து, பிறவிக் குறைபாடு மற்றும் யுத்தம் போன்றன காரணமாக உள்ளதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கால்களை இழந்து வாழும் மக்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் நடவடிக்கையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது மாற்றுவலுவுடையோர் புனர்வாழ்வுக்கான யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 

கிளிநொச்சியைச் சேர்ந்த 12 வயதான கமலநாதன் நவநீதன் என்கின்ற சிறுவன், சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது வீசப்பட்ட எறிகணை ஒன்றில் தனது காலை இழந்திருந்தார். இச்சம்பவத்தில் இச்சிறுவனின் சகோதரியும் காயமடைந்திருந்தார். யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய போது நவநீதனின் குடும்பத்தவர்களும் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் தஞ்சம் புகுந்துகொண்டனர். 





தனது கால்களில் ஒன்றை இழந்த நவநீதன் என்கின்ற இந்தச் சிறுவன் தற்போது நம்பிக்கையுடன் வாழத்தொடங்கியுள்ளான். யாழ்ப்பாணத்திலுள்ள ஜெய்ப்பூர் செயற்கைக் கால் பொருத்தும் நிறுவனம் இந்தச் சிறுவனுக்கு செயற்கைக் காலைப் பொருத்தியுள்ளதால் அதன் உதவியுடன் இவன் மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளான். 

"என்னால் மீண்டும் நடக்க முடிந்ததை நினைத்து நான் மகிழ்வடைகிறேன். நான் பாடசாலைக்கு செல்ல முடியும். உண்மையில் நான் வாழ்வில் நம்பிக்கை கொள்கிறேன்" என நவநீதன் தெரிவித்துள்ளான். 

யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனமானது செயற்கைக் கால்களை வழங்கிவருவதுடன், மற்றும் இதனுடன் தொடர்புபட்ட எலும்பியல் சம்பந்தமான பல்வேறு சேவைகளையும் வழங்கிவருகின்றது. இவ்வாண்டு யூலை மாதத்தில் இந்நிறுவனமானது 25 ஆண்டுகால சேவையை நிறைவுசெய்கின்றது. 

யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, சிறிலங்காத் தீவு முழுவதிலும் தமது கால்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு செயற்கைக் கால்களை வழங்கி அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்வதற்கும், சமூகத்தில் அவர்களுக்கான கௌரவம், உரிமைகள், அங்கீகாரம் போன்றவற்றை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து புனர்வாழ்வுப் பயிற்சிகளையும் வழங்குவதை ஜெய்ப்பூர் செயற்கைக் கால் நிறுவனம் தனது நோக்காகக் கொண்டுள்ளது. 

"1994லிருந்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமானது யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு தொழினுட்ப உதவிகளை வழங்கிவருகின்றது. செயற்கைக் கால்களைப் பெறும் பயனாளிகள் இதற்காக எந்தக் கட்டணத்தையும் செலுத்தத் தேவையில்லை. இவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த மக்கள் மீண்டும் தம்மால் எதையும் செய்ய முடியும் என்ற மனவலிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பாகும்" என சிறிலங்காவுக்கான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடக அதிகாரி சரசி விஜயரட்ன தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவில் வாழும் கால்களை இழந்த மக்களுக்கு 5000ற்கும் மேற்பட்ட குறைந்த நிறையைக் கொண்ட செயற்கைக் கால்களை வழங்கியுள்ளது. இவ்வாறான செயற்கைக் கால்களை உற்பத்தி செய்வதற்கு மிகக் குறைந்த செலவு ஏற்படுவதாகவும், இவற்றை குறைந்த சில நாட்களில் உற்பத்தி செய்ய முடிவதுடன், இதற்கான பராமரிப்பும் இலகுவானது எனவும், இதற்கான தொழினுட்பத்தை இந்தியாவிலுள்ள ஜெய்ப்பூர் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்வதாகவும் இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

"எமது நிறுவனத்துக்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்தவர்களாவர். அத்துடன் நீரிழிவு நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டு கால்களை இழந்தவர்களும் உள்ளனர்" என யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனத்தின் உடற்பயிற்சி சிகிச்சைக்கான உதவியாளர் தமயந்தி தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் யுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியான 1998ல் நிலக்கண்ணிவெடி வெடித்ததில் 35 வயதான பிறேமதீசன் தனது காலை இழந்திருந்தார். 

"நான் விறகு தேடிச் சென்றபோது அங்கு புதைத்து வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடியில் எனது காலை இழந்திருந்தேன். ஜெய்ப்பூர் நிறுவனத்தின் மூலம் நான் செயற்கைக் கால் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடிந்தததன் பிறகு தற்போது என்னால் நடக்க முடிகிறது. எனது பழைய செயற்கைக் கால் பழுதடைந்து விட்டதால் தற்போது வேறொரு புதிய செயற்கைக் காலைப் பெற்றுக் கொள்வதற்காக இங்கு வந்துள்ளேன்" என பிறேமதீசன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண ஜெய்ப்பூர் நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலர்கள் சிலர் பிறேமதீசனுக்கு செயற்கைக் காலைப் பொருத்துவதற்காக அளவெடுத்தலில் ஈடுபட்டனர். ஒரு சில நாட்கள் கழித்து பிறேமதீசன் தனக்கான புதிய செயற்கைக் காலைப் பெற்றுக் கொள்ள முடியும் என எம்மிடம் தெரிவிக்கப்பட்டது. 

இதேபோன்று 30 வயதான பிறேமநந்தன் என்பவர் சிறிலங்காவின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வீசுப்பட்ட எறிகணையில் தனது கால்களில் ஒன்றை இழந்திருந்தார். மீனவரான இவரது மற்றைய காலில் தற்போதும் எறிகணைச் சிதறல் காணப்படுகின்றது. தனது காலில் உள்ள எறிகணைச் சிதறலால் தான் பெரிதும் துன்பப்படுவதாகவும், ஆனால் இழந்த தனது காலுக்குப் பதிலாக புதிய செயற்கைக் கால் பொருத்தப்பட்டதால் தன்னால் தற்போது தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தவர்களுக்கு வருவாயை ஈட்டிக் கொடுக்க முடிவதாகவும் தெரிவித்துள்ளார். 

உலகம் பூராவும் செயற்கைக் கால்களை உற்பத்தி செய்வதில் பல்வேறு வேறுபட்ட தொழினுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், ஜெய்ப்பூர் தொழினுட்பமானது தனித்துவம் மிக்கதாகக் காணப்படுவதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாண ஜெய்ப்பூர் செயற்கைக் கால் பொருத்தும் நிறுவனமும் தெரிவித்துள்ளன. 

செய்தி வழிமூலம் - Colombo Gazette: [Report and pics By Easwaran Rutnam in Jaffna]

நன்றி -புதினப்பலகை

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் நினைவு


28.06.1995 அன்று திருகோணமலை மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன்(கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்களை நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது.
காட்டுப்பகுதியில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்கா படை உயர் தளபதிகளின் திட்டமிடலில் ”ராமசக்தி – 03” பெயரில் திரியாய் காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கை விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏதுமின்றி முறியடிக்கப்பட்டது. அந்நடவடிக்கையை வழிநடாத்திய கேணல் காமினி பெர்னாண்டோ உட்பட பல படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துமிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகள் அனைத்து சாள்ஸ் அன்ரனி படையணியால் முறியடிக்கப்பட்டன.
படை நடவடிக்கை முறியடிப்பு, வலிந்த தாக்குதல் நடவடிக்கையென அனைத்தையும் வெற்றிகரமாக வழிநடாத்திய தளபதி லெப்.கேணல் கில்மன் திருமலை மாவட்டத்தில் இழக்கப்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தியதுடன் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேலும் விரிவடையாது படையினர் மீதான தாக்குதல்கள் மூலம் கட்டுப்படுத்தினார்.
இந்நிலையில் 28.06.1995 அன்று திருமலை முதன்மைச் சாலையில் வைத்து சிறிலங்கா படை உயர் தளபதி ஒருவர் மீதான பதுங்கித் தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் இரு போராளிகளுடன் லெப்.கேணல் கில்மன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
லெப்.கேணல் கில்மன் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் தீபன் அவர்களின் உடன்பிறப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
லெப்.கேணல் கில்மன் அவர்களுடன் இவ்வெடிவிபத்தில்
மேஜர் வரன் (கலைவாணன்)
(நாகராசா தவரத்தினராசா – முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு)
லெப்டினன்ட்  அன்பன் (அழகன்)
(நடராசா சிறிக்குமார் – செட்டிக்குளம், வவுனியா)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.


ஆயுதக் கலாசாரத்தினை மீண்டும் முனைப்புடன் அரங்கேற்ற முயற்சி ?


தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்தினர் அபகரிப்பதை எதிர்த்துத் தமிழ்த் தேசிய முன்னணியால் யாழ். நகரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம், ஜனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றும் முயற்சி என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்று தெரிவித்துள்ளது.

இந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்துக்கு பொலிஸார் யாழ். நீதிவான் மன்றிடமிருந்து தடையுத்தரவு பெற்றிருந்தனர். இந்தத் தடையுத்தரவை நீக்கக் கேட்டு தமிழ்த் தேசிய முன்னணிசார்பில் மனுச் செய்யப்பட்டது. அந்த மனு மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. 

சட்டமுறைகளுக்கு அமைவாக இந்த மனு செய்யப்படவில்லை என்பதால், வழங்கப்பட்ட தடையை மீண்டும் உறுதி செய்வதாக நீதிவான் மா.கணேசராசா தீர்ப்பளித்தார்.
 
அவரது தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

"இந்த வழக்கிலுள்ள பிரச்சினையை ஆரோக்கியமான, புத்திசாலித்தனமான, சட்டமுறையான நடவடிக்கைகள் மூலம் அணுகியிருக்க முடியும். ஆவணங்களின் மூலம் உரிய நீதிமன்றின் முன்சென்று தமது உரித்தை நிலைநாட்டியிருக்க முடியும்.
 
பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதை விடுத்து தேசிய பாதுபாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்த முயன்றுள்ளனர்.
 
அத்துடன் நீதிமன்றக் கட்டளையை அவமதிக்கும் வகையில் கட்டளையைக் கிழித்தெறிந்து, "நீதிமன்றக் கட்டளையை மதிக்கும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்'' என்று கோஷமிடப்பட்டதாகவும் மன்று அறிகின்றது. 
 
இதன் மூலம் சட்டத்தினைக் கையில் எடுக்கும் வகையிலும் அதனூடாக மக்களைத் தவறாக வழிநடத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குச் சாட்சியாக எதிர்மனுதாரர்களுக்காக வாதாடும் ஒரு சில சட்டத்தரணிகளும் இருந்துள்ளார்கள்.
 
இவ்வாறான செயற்பாடுகள் நீதித்துறைக்கு சவால் விடும் வகையிலும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் அமையும் என்று மன்று கருதுகின்றது. சட்டத்துறையில் உள்ள இவர்கள் இதனைக் கண்டிக்க முனையாததன் மூலம் அவர்களின் கடப்பாட்டிலிருந்து விலகியிருப்பதுடன் இத்தகைய செயலுக்கு உரமூட்டிதாகவே மன்று கருதுகின்றது.
 
மக்களின் அவலங்களின் மீது அரசியல் நடத்தி, மீண்டும் இருண்ட யுகத்துக்குள் மக்களை இட்டுச் செல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  ஜனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றுவதற்கான முயற்சியாகவே மன்று இதனைக் கருதுகின்றது. 
 
மக்களை அரசியல் பகடைக் காய்களாக்கி அவலங்களின் மீது அரியணை ஏறும் முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளது. இனக்குரோதங்களைத் தூண்டி இரத்தம் தோய்ந்த வரலாற்றை மீண்டும் இந்த மண்ணில் மேடையேற்றுவதற்கான முயற்சியை மன்று எந்த வகையிலும் அனுமதிக்காது.
 
ஆகவே மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் சட்டமுறையற்ற வகையில் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை மன்று நிராகரிப்பதுடன் ஏற்கனவே வழங்கப்பட்ட தடைக் கட்டளையை மன்று உறுதி செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Wednesday, June 27, 2012

மன்னாரில் இடம்பெயர்ந்தோர் தம் சொந்த இடங்களுக்கு செல்ல சிறிலங்கா கடற்படை தடை


சிறிலங்கா கடற்படையால் மன்னாரின் முள்ளிக்குளம் கிராமமானது உயர் காப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு, மக்கள் மீள்குடியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை தமது சொந்த நிலங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி இக்கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க, தமிழ் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக முள்ளிக்குளத்திலிருந்து இடம்பெயர்ந்து 2007லிருந்து மன்னாரில் வசித்து வரும் 140 இற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த சனிக்கிழமையிலிருந்து அவர்களது சொந்தக் கிராமத்தைச் சென்று பார்வையிடுவதற்கான தடைவிதிக்கப்பட்டுள்ளனர். 



இக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தே வாழ்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், தாம் மிகக் கடினமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முள்ளிக்குளம் கிராமத்து மக்கள் கடற்படை முகாமுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட போது, இக்குடும்பங்கள் அருகிலிருந்த கிராமம் ஒன்றில் பலவந்தமாக குடியேற்றப்பட்டனர். 



"இது உண்மையில் ஆத்திரமூட்டும் செயலாகும். பல ஆண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது சொந்தக் கிராமத்தை மீட்டு அதில் மீள்குடியேறவேண்டும் என்பதே எமது நோக்காகும்" என முள்ளிக்குளத்துக்கு வெளியே மரம் ஒன்றின் கீழ் அமர்ந்திருந்த நான்கு பிள்ளைகளின் தாயான 50 வயதுடைய அக்னெசியா றெவல் தெரிவித்துள்ளார்

காட்டு மரங்களில் 'காட்போட்' மற்றும் ஆடைகள் போன்றவற்றால் தற்காலிக கொட்டகைகள் அமைத்து அந்த மக்கள் தங்கியிருந்தனர். அருகிலுள்ள தேவாலயம் ஞாயிறன்று மீண்டும் திறக்கப்பட்டதாக அக்னெசியா றெவல் தெரிவித்துள்ளார். 



"அடிப்படை வளங்கள் எதுவுமின்றி இந்த மக்கள் அதிக பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இந்த மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் கவனத்திலெடுக்க வேண்டும். இவர்கள் தமது சொந்தக் கிராமத்தில் குடியேறுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும்" என மீனவ ஒருங்கிணைப்பு அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏ.ஈ.சுனேஸ் சூசை தெரிவித்துள்ளார். 



சிறிய ஒடுங்கிய நிலப் பிரதேசத்திலுள்ள முள்ளிக்குளக் கிராமத்திலிருந்து படகுச் சேவை மூலம் இந்தியாவுடன் தொடர்பை பேணிக்கொள்கின்ற கேந்திர முக்கியத்துவம் மிக்க பிரதேசமாக இருப்பதால் சிறிலங்கா இராணுவத்தினர், இங்கிருந்து 400 வரையான குடும்பங்கள் 2007ல் இடம்பெற்ற யுத்த நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்ததிலிருந்து, இதனை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 



யுத்தம் இடம்பெற்ற போது 4,096 கெக்கேரயர் பிரதேசமானது உயர் காப்பு வலயமாக அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் 2582 கெக்ரேயர் பிரதேசம் மட்டுமே உயர் காப்பு வலயமாக உள்ளதாகவும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இம்மாதம் அறிவித்திருந்தார். 



சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பல பத்தாண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக 448,000 வரையான மக்கள் இடம்பெயர்ந்ததாகவும், இவர்களில் 6000 வரையான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாததன் காரணமாக தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 



செய்தி வழிமூலம் : ucanews.com reporter, Mannar

தமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதச் செயல் -தேசிய பிக்குகள் முன்னணி


தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனச்சுட்டிக் காட்டியுள்ள தேசிய பிக்குகள் முன்னணி, யுத்தம் முடி வடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

தெற்கிலுள்ள விகாரைகளைப் புனரமைப்பதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காத அரசு, வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைத்து அதீத மதப்பற்றை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.
 
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் போர் முடிவடைந்த கையோடு அரசு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவதுடன், புதிதாக விகாரைகளையும் அமைத்து வருகின்றது. பௌத்தர்கள் இல்லாத பிரதேசங்களிலும் விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்று தமிழ் அரசியல் தலைவர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர்.
 
இந்நிலையில், வடக்கு,கிழக்கில் புதிதாக விகாரைகள் அமைக்கப்பட்டு வரும் விவகாரம் தொடர்பில் தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தேரரிடம் "சுடர் ஒளி' வினவியது. 
 
இதன்போது அவர் கூறியவை வருமாறு:
யுத்தம் முடிவடைந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு அவர்களின் நிலங்களை அரசு மீளப் பெற்றுக்கொடுத்திருக்கவேண்டும்; வயல் நிலங்களை  கையளித்திருக்கவேண்டும்; மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்க வேண்டும். 
 
ஆனால், அரசு அவ்வாறு செய்யவில்லை. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழ்மக்கள் இன்னும் முகாம்களிலேயே முடங்கியிருக்கின்றனர். அவர்க்ள இருண்ட யுகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை.
 
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசு நாட்டில் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றது. நீங்கள் சொன்னதுபோல பௌத்தர்கள் இல்லாத, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு பிரதேசத்தில் விகாரைகளை அமைப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும்.
 
தெற்கில் நிறையவே விகாரைகள் உள்ளன. பிக்குகள் இன்மையால் அவை பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே, உள்ளவற்றைப் பாதுகாப்பதற்கும், புனரமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்ததாக எமக்குத் தெரியவில்லை.
 
மாறாக, வடக்கு, கிழக்கில் புதிதாக விகாரைகளை அமைப்பதோ அல்லது புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதோ மதப்பற்று அல்ல. முதலில் இருப்பவற்றைப் பாதுகாக்க பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்றார்.

தமிழர்கள் கோசம் போடுவதற்கு இன்றுவரை நியாயங்கள் உள்ளன


போருக்குப் பின்னரான மீள்கட்டமைப்புப் பரிமானங்களின் நிலையைக் காட்டும் ஒரு வரைபு, தொடக்கப் புள்ளியிலேயோ அல்லது வீழ்ச்சிப் புள்ளியிலேயோ நகராது நீண்ட காலம் நிற்கும் நிலையில் அபிவிருத்தியின் இலக்குகளும் மாற்றம் பற்றிய சிந்தனைகளும் முரண்பாடுகளிலிருந்து விலகாதனவாக தோற்றுவாய்களிலேயே தொங்கி நிற்க நிர்ப்பந்திக்கின்றன.

தமிழர்கள் புலிக்கோஷத்தை தாயகக் கோஷத்தை நிறுத்தாதவரை நமது நாட்டில் அமைதி ஏற்படும் என நினைக்கிறீரா எனச்சிங்கள நண்பர் ஒருவர் கேட்ட போது நான் திணுக்குற்றுப் போனேன். 
 
தமிழ் மக்கள் இங்கே பதாகைகளுடன் பாதைக்கு இறங்குவதும், பட்டினி ஊர்வலம் செய்வதும் சிங்களவர்களின் பார்வையில் புலிக்கோஷங்களாக விளங்கிக் கொள்ளப்பட்டனவா என்ற கவலையும், தமிழ் சிங்கள மக்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளுக்குத் தடையாக இருக்கும் பேரினவாத அரசியல் சித்தாந்தங்கள் குறித்த ஆதங்கமும் ஒன்றுக்கொன்று மிகப் பாரிய தொடர்புகளைக் கொண்டவை. 

போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் அரசு வெளிப்படையாகக் காண்பித்து வருகின்ற புறக்கணிப்பு, மக்களின் நலன்களில் அக்கறை காண்பிக்கப்படாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோஷம் எழுப்புகின்றனர். பசிக்கிற பிள்ளைதான் அழும் என்ற மிகச் சாதாரண யதார்த்தத்தைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக சிங்களவர்களை மாற்றியது சிங்களப் பேரினவாத அரசியல் முறைமையே என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. 
 
ஆயினும், தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்றுக் கொள்ளத்தக்க புரிந்து கொள்ளத்தக்க முற்போக்கான சிங்களத் தனிநபர்களும், அமைப்புகளும் இல்லாமலில்லை. இருந்தபோதும், அவர்களால் தமிழ் மக்களுக்கு ஆன அல்லது ஆகக்கூடிய நன்மை என்ன என்பது கேள்வியே? 
 
மேலும், இந்த முரண்பாடுகளின் பின்னணியில் தமிழ்த் தலைவர்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகளும் நியாயமான செல்வாக்குச் செலுத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள வேண்டியதே. 
 
போருக்குப் பின்னர் இரு விடயங்கள் மக்களின் இயல்பு வாழ்வுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது பகிரங்கமானது. ஒன்று, போர்க் காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் மற்றும் இறுதிப்போரின்போது சரணடைந்து தடுப்பில் இருப்போரும் காணாமல் போனோரும். இரண்டாவது, உயர் பாதுகாப்பு வலயங்களால் குடியிருப்புகளை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளோர்  மீள்குடியேற்றப்படாதோர்.
 
இவ்விரு வகைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களது கோஷங்களின் பின்னாலுள்ள நியாயங்களை எதன் அடிப்படையிலாவது புறந்தள்ள முடியுமா? தமது சொந்த வீடுகளில் புறத்தான் வாழ்வதையும் சொந்த நிலங்களின் வளங்கள் சுரண்டப்படுவதையும் எத்தனை தசாப்தங்களுக்குத்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? 
 
கிழக்கில் திருகோணமலையிலும், வடக்கில் வன்னியிலும் யாழிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மக்களின் சொத்துக்களையும் இராணுவம் முடக்கியுள்ளது. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிவுற்ற பின்னரும் உரிய மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழி செய்யாதிருப்பதென்பது நேரடியான அடக்குமுறையின் உச்சக்கட்ட வெளிப்பாடே. 
 
திருகோணமலை சம்பூர் பிரதேச மக்கள் 2006 ஏப்ரல் 25 இல் இடம் பெயர்ந்தவர்கள், ஆறு மாதங்களில் மீள்குடியமர்த்துவதாக அரசினால் அளிக்கப்பட்ட உத்தரவு ஆறு வருடங்களாகியும் அடைய முடியாததாகவே உள்ளது. 
 
சம்பூர்க் கிராமத்தில் வாழ்ந்த 890 குடும்பங்களும், கூனித்தீவில் 335 குடும்பங்களும், சூரகுடா கிராமத்தில் 170 குடும்பங்களுமாக சுமார் 1,395 குடும்பங்கள் அரச உயர் பாதுகாப்பு வலயத்தினால் சொந்த வீடுகளையும் வயல் காணிகளையும் இழந்துள்ளனர்.
 
இவற்றுள் 573 குடும்பங்கள் கிளிவெட்டியிலும், 265 குடும்பங்கள் பட்டித்திடலிலும், 180 குடும்பங்கள் மண்சேனையிலும் மேலும் சில குடும்பங்கள் சேனையூர் மற்றும் பள்ளிக்குடியிருப்பு பகுதிகளிலும் தற்காலிக குடியிருப்புகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.
 
இவர்களுக்கு உலக உணவு நிறுவனத்தால் வழங்கப்பட்டுவந்த உலர் உணவு நிவாரணம் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்சார, குடிதண்ணீர் வழங்கல்களும் விரைவில் நிறுத்தப்படலாம் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 
 
வடக்கில் யாழ். மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு, வலிகாமம் வடக்கு, மருதங்கேணி, யாழ். நகரின் சில பிரதே\ங்களிலும் இதே நிலையிலேயே மக்களின் குடியிருப்புக் காணிகள் இராணுவத்தால் பலவந்தமாக ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
இவ்வாறு சுமார் 8,000 ஏக்கர் குடியிருப்புக் காணிகளும், வயல் காணிகளும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முடக்கப்பட்டுள்ளன. இராணுவம் நிலைகொண்ட வீடுகளில் 50 வீதமானவை மக்களிடம் கையளிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்படும் அரச தகவல்களை வலுவற்றவையாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது.
 
400 வீடுகளிலேயே இராணுவம் நிலை கொண்டுள்ளதென்றும், அவை விரைவில் உரிய மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்ததை அண்மையில் ஊடகங்களில் காணவும்  கேட்கவும் முடிந்தது.
 
1995 முதல் யாழ். மாவட்டத்தின் வளங்கள் பொருந்திய நிலங்கள் பல இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன. யாழில் சுமார் 20 ஆயிரம் படையினர் கடமையாற்றுகின்றனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரசு தெரிவித்திருக்கிறது. 
 
"வோர் ஹீரோஸ்' போர் கதாநாயகர்கள் எனச் சமகாலத்தில் புகழப்படுகின்ற படையினரை நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கான பெரும் வேலைத்திட்டங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். 
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் காணப்படும் அரச காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை பிரதேச செயலர் பிரிவுகள் ஊடாக மேற்கொள்ளப்போவதாக வடமாகாண ஆளுநர்  ஜீ.ஏ.சந்திரசிறி அண்மையில் அரச ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த செய்தியும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. 
 
இராணுவத்தை வடக்கில் நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்வதற்கான பிள்ளையார் சுழியே இது. மக்களின் இயல்பு வாழ்வை முற்றாகப் பாதிக்கின்ற செயற்பாடுகள் மட்டுமன்றி, தமிழ் மக்களின் எதிர்கால அபிலாஷைகள் இருப்பு என்பவற்றை மேலும் அச்சுறுத்தலான சூழலுக்குள் முடக்குவதற்கான பெரும் சதியாகவும் இது பார்க்கப்படவேண்டியது.
 
இராணுவ நிலைகொள்ளல் காரணமாக வடக்கில் பொருளாதார முடக்கம், பொருளாதார ரீதியான அப்பட்டமான சுரண்டல் நிலையும், முற்றுமுழுதாக இராணுவ மயப்படுபத்தப்பட்ட நிர்வாக அமைப்பும் காணப்படுகின்றது. 
சமூகமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிப்பு, எத்தகைய ஒன்றுகூடல்களுக்கும் சமூக செயற்பாடுகளுக்கும் இராணுவத்திடம் அனுமதி கோரவேண்டிய நிலை என்பன இராணுவ நிர்வாகத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. 
 
உயர் பாதுகாப்பு வலயங்கள் அல்லது முகாம் பகுதிகள் என்று கூறப்படும் இடங்களில் வாழிடங்களை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் துயருற்றிருக்கும் மக்களும் அவர்களுக்கு ஆதரவாக சமூக நிறுவனங்களும் இணைந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்துக்கு யாழ். நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துள்ளது. 
 
வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் எந்தவொரு ஒன்றுகூடலை நடத்துவதற்கும் அந்தந்தக் கிராமங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களின் அனுமதியைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.
 
 ஒன்று கூடலில் இராணுவ உறுப்பினர்களும் கலந்துகொள்வதுடன், கலந்துரையாடல்களைத் தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்க்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. 
 
முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரான இச்செயற்பாடுகளில் மக்களின் இயல்புவாழ்வுக்கு பச்சையாகத் தடையாக இருக்கின்ற அடிப்படை உரிமைகளை எதிர்த்து தமிழர் கோஷம் எழுப்புவதென்பது எந்த வகையிலும் நியாயமற்றதோ அல்லது புலிக்கோஷம் என அடையாளப்படுத்தத் தக்கதாகதோ அல்ல.
 
இராணுவ மயப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளினால் உடைந்து தகர்ந்த வீடுகளில் சுவர்களின் இடிபாடுகளை பொலித்தீன் துண்டுகளால் மறைத்தபடி மீளக்குடியேறியுள்ள மக்களும் கூட அசௌகரியங்கள் நிறைந்த அச்சம் சூழ்ந்த நிலையிலேயே வாழ்கின்றனர். போரின் பின்னர், போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் மிக அத்தியாவசியமான தேவைகளில் உள ஆற்றுப்படுத்துகையும் மிகப்பிரதான இடம் வகிக்கின்றது.
 
 போரின் முடிவைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற நடவடிக்கைகளில் அனேகமானவை மக்களின் மனதை கிலேசமடையச் செய்வனவாகவே அமைகின்றன. 
சொந்த இடங்களையும் தொழில் செய்வதற்கான வயல் காணிகளையும் இழந்து தொழிலற்று நிற்கும் உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட மறுக்கப்பட்டுள்ளன. 
 
இராணுவ உறுப்பினர்கள் வெளிப்படையான வியாபாரச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். தொலைத் தொடர்பு நிலையங்களை நடத்துதல், தெற்கிலுள்ள உற்பத்திகளை சந்தைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். 
 
இது உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை இழக்கச் செய்து நேரடியான பொருளாதாரச் சுரண்டலுக்குள் மக்களை முடக்கியுள்ளது. தமிழ் மக்களின் உரிமைக் கோஷங்களை முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் ஜனநாயகத்துக்கு எதிராகவும் வடக்கை முற்றிலும் இராணுவ நிர்வாகத்தின் கீழும் நிலைப்படுத்துவதற்கான செயற்பாடுகளின் பல்பக்க வெளிப்பாடுகளே இவை.*

நன்றி - உதயன்

Tuesday, June 26, 2012

பெளத்த பேரினவாதிகளின் முற்றுகைக்குள் சிறிலங்கா முஸ்லிம்கள்

சில புத்த பிக்குகளால் தலைமை தாங்கப்பட்ட 200 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள், தெகிவளையில் அமைந்துள்ள சிறிய பள்ளிவாசல் வளாகத்துள் அத்துமீறி நுழைந்ததுடன் பள்ளிவாசல் நுழைவாயிலை நோக்கி கற்களையும் அழுகிய இறைச்சித் துண்டுகளையும் வீசத் தொடங்கினர். இவ்வாறு The Diplomat. இணையத்தில் Joseph Hammond எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 


சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் நிறைவானது, நாடு ஒன்றுபடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது சிறிலங்காத் தீவில் பௌத்த பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளால் இத்தீவின் உள்ளக அமைதியானது பாதிக்கப்பட்டு, நாடு புதியதோர் சவாலை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனக் கருதப்படுகிறது.

 

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தெகிவளை என்கின்ற இடமானது இதுநாள் வரை கொழும்பு மிருகக்காட்சிசாலை அமைந்துள்ள இடம் என நன்கு அறியப்பட்டிருந்தது. அங்கே அமைந்துள்ள சிறிய பள்ளிவாசல் மீது கடந்த மாதம் பௌத்த காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவம் சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் தலைவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மே 30 காலை வேளையில், காவற்துறை அதிகாரிகளால் தெகிவளை முஸ்லீம் சங்கத்தின் தலைவருக்கு அங்கே அமைந்துள்ளதும் இச்சங்கத்தால் பராமரிக்கப்பட்டு வரும் சிறிய பள்ளிவாசல் மீது வன்முறைச் சம்பவம் மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கே மேற்கொள்ளப்படும் இஸ்லாமிய கற்கை வகுப்புக்களை நிறுத்துமாறு தெகிவளை முஸ்லீம் சங்கத்தின் தலைவர் செய்க் றம்சிக்கு சிறிலங்கா காவற்துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

அன்று நள்ளிரவு, சில புத்த பிக்குகளால் தலைமை தாங்கப்பட்ட 200 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள், தெகிவளையில் அமைந்துள்ள சிறிய பள்ளிவாசல் வளாகத்துள் அத்துமீறி நுழைந்ததுடன் பள்ளிவாசல் நுழைவாயிலை நோக்கி கற்களையும் அழுகிய இறைச்சித் துண்டுகளையும் வீசத் தொடங்கினர். அத்துடன் இப்பள்ளிவாசலை மூடுமாறும், இங்கே ஒவ்வொரு நாளும் மிருகப்பலி மேற்கொள்ளப்படுவதாகவும் உரத்து கத்தினர். ஆனால் இக்குற்றச்சாட்டுக்களை பள்ளிவாசல் நிர்வாகம் மறுத்துள்ளது. 

"உண்மையில் இக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இதிலிருந்து இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்லாம் மதம் தொடர்பாக எவ்வளவு தெரிந்துவைத்திருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது. நாங்கள் மிருகப்பலிகளை ‘Eid ul-Adha’ என்கின்ற இஸ்லாம் மதத்தின் முக்கிய விழாக் காலத்தில் மட்டும் தான் மேற்கொள்கின்றோம். பின்னர் இந்த இறைச்சிகளை ஏழைகளுக்கு வழங்குகிறோம்" என செய்க் றஸ்மி எடுத்துக் கூறினார். 

சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் இனத்தவர்கள் மீது பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல தொடர்ச்சியான சம்பவங்களில் தெகிவளை பள்ளிவாசல் மீதான வன்முறைச் சம்பவம் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றது. 

எடுத்துக்காட்டாக, ஏப்ரல் மாதத்தில் தம்புள்ள பள்ளிவாசலில் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்டிருந்த முஸ்லீம்களுக்கு இடையூறு விளைவிப்பதை நோக்காகக் கொண்டு குறிப்பிட்ட சில புத்த பிக்குகளின் தலைமையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப்பள்ளிவாசல் 1962ல் கட்டப்பட்டதாகவும், இது சட்ட ரீதியற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். சில வாரங்களின் பின்னர், குருநாகல நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மேற்கொள்ளப்படும் மத வழிபாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என புத்த பிக்குகளால் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. 

"முஸ்லீம் சமூகத்தவர்களாகிய நாங்கள் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குழப்பமடைந்துள்ளோம். கடந்த சில மாதங்களாக நாட்டில் புதிய முறையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஏன் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பது தொடர்பில் நாங்கள் நிச்சயமற்றுள்ளோம். முஸ்லீம், கிறீஸ்தவர்கள், பௌத்தர்கள், இந்துக்கள் என எவ்வித பாகுபாடுமின்றி நாம் இந்த நாட்டில் ஒன்றாக நீண்ட காலமாக வாழ விரும்புகிறோம்" என கொழும்பிலுள்ள Darul Iman Islamic Book House இன் எழுதுவினைஞரான றெசா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

முப்பது ஆண்டுகளாக சிறிலங்காத் தீவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தத்தில் முஸ்லீம் மக்கள் தமிழ் பேசுகின்ற இனத்தவர்களாக இருந்த போதிலும் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தனர். 

இதன் விளைவாக, 1990களின் ஆரம்பத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். யுத்தகாலப்பகுதியில், சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஆதரவாளர்களாக முஸ்லீம்கள் மாறினர். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்திலும், நிர்வாகத் துறைகளிலும் முஸ்லீம் மக்கள் முக்கிய பதவிகளை வகித்தனர். சிறிலங்கா இராணுவத்தில் இணைந்தும் முஸ்லீம்கள் பணியாற்றியுள்ளனர். 

மொழியாக்கம்: நித்தியபாரதி

கிழக்கு நோக்கிய படையெடுப்பு


கிழக்கிலங்கை நோக்கி அமைச்சர் பட்டாளம் படை நடக்க ஆரம்பித்து விட்டது. கிழக்கின் உதயத்தைப் பார்வையிடவோ அபிவிருத்தியை மதிப்பிடுவதற்காகவோ அல்ல. வரப்போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முன் தயாரிப்பிற்காகவேயாகும். கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் ஒரு வருட காலம் இருக்கிறது. அப்படி இருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு, அங்கு தேர்தல் நடத்த அவசரப்படுகிறது. ஜனநாயகம் என்பதும் அதன் கீழான விதிமுறைகள், நெறிமுறைகள் என்பன யாவும் வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதை யாராவது நேரில் காண வேண்டுமானால் அதனை மஹிந்த சிந்தனையின் வழிகாட்டலில் கண்டுகொள்ளலாம்.
 
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது முதுமொழி. "வாய்ப்புள்ள போது தேர்தலை நடத்தி வெற்றி பெறு' என்பது மஹிந்த மொழி. அதற் கிணங்கவே, கிழக்கு மாகாணத் தேர்தல் நடத் தப்பட இருக்கிறது. அதன் முதல் காட்சியே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என்போரது கிழக்கிற்கான பயணச் சுற்றுலாவாகும். அதன் மூலம் கிழக்கின் நிலைமைகளையும் மக்களின் மன நிலைகளையும் நாடிபிடித்துப் பார்ப்பதும் அதன் நோக்கமாகும்.
 
பல நூற்றாண்டுகளாக கிழக்கு மக்கள் அந்தப் பிரதேசத்தின் வளங்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்கள். தமது மொழி, மதப்பண்பாட்டின் தனித்துவங்களைப் பாதுகாத்து, வளப்படுத்தி விவசாயமும் மீன்பிடியும் ஏனைய தொழில்களும் வியாபாரங்களும் செய்து வந்த தமிழ் முஸ்லிம் மக்கள் தம்முள் வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையுணர்வுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
 
அதனை அவர்களது இன்றைய வாழ்விடங்கள் தொட்டு பழைமை வாய்ந்த பாரம்பரிய பிரதேசங்களும் பறைசாற்றி நிற்கின்றன. மதத்தாலும் அதன் பண்பாட்டம்சங்களாலும் தமிழ் முஸ்லிம் மக்கள் தனித்தன்மைகளைக் கொண்டிருப்பினும் மொழியால் ஒன்றுபட்டவர்களாகவும் பண்பாட்டுக் கூறுகளால் கொடுத்து வாங்கியவர்களாகவும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
 
அத்தகைய கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் பௌத்த சிங்களப் பேரினவாத உள்நோக்குடன் கொண்டு வரப்பட்டதோ, அன்றிலிருந்தே நாசங்களுக்கான விதைகள் விதைக்கப்பட்டன. நிலவளங்களும் நீர்வளமும் மிக்க கிழக்கு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமுரிய தனித்துவ மாகாணமாக இருப்பதை எந்தவொரு பேரினவாத ஆட்சியினரும் விரும்பவில்லை. அதன் வழியில் திட்டமிட்ட குடியேற்றம் என்பதன் கீழ் கிழக்கில் மூன்றாவது இன மத மக்களாகச் சிங்கள விவசாயிகளுக்கு நிலங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டன. 
 
அதன் மூலம் சுதந்திரம் என்பதற்குப் பின்னரான காலப்பகுதியில் இரண்டு இன மக்களாக வாழ்ந்துஒரே மொழி பேசித் தமது பாரம்பரிய பிரதேசமாகக் கொண்டிருந்த கிழக்கு படிப்படியாக மூவின மக்களது பிரதேசமாக மாற்றப்ட்டது.
 
அத்துடன் அது பெருமையாகவும் சாதனையாகவும் காட்டப்பட்டது. இயல்பாகவே மக்கள் வளமுள்ள பிரதேசங்களை நாடிச்சென்று தமது வாழ்விடங்களாக்கிக் கொள்வதற்கும் திட்டமிட்டு பேரினவாத நோக்கில் வலிந்து குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அதுமட்டுமன்றி, இன்றும் இந்தத் திட்டமிட்ட குடியேற்றமும் பாரம்பரிய இனங்களை அப்புறப்படுத்தி இனச் சுத்திகரிப்புப் பிரதேசங்களாக மாற்றுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
 
அன்று கல்லோயாத் திட்டம், பதவியாத் திட்டம் என்பன விரிவடைந்ததுடன் திருகோண மலையை பௌத்த சிங்கள மாவட்டமாக்கும் முயற்சிகள் நடந்தேறின. இன்று சம்பூர், கண்முன்னே இடம்பெறும் தமிழ் மக்களது நில அபகரிப்பாகக் காணப்படுகிறது. 
 
இதனை இந்திய அனல் மின் நிலைய உருவாக்கம் என்பதன் மறைவில் அரசு அரங்கேற்றி வருகிறது. மட்டக்களப்பு, கிழக்கின் நடுமையப் பகுதியாக மட்டுமன்றி விவசாய வளத்தாலும் ஏனைய தொழில் துறைகளாலும் அழகான கடற்கரைகளாலும் காட்சி தரும் பிரதேசமாகக் காணப்படுகிறது. இந்த மாவட்டத்தில் தமிழ்ர்கள் கூடுதலாகவும் முஸ்லிம் மக்கள் அதற்கு அடுத்ததாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
 
அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் அதிகளவாக வாழ்ந்து வந்த போதிலும் இன்று அது சிங்கள மக்களின் மாவட்டம் என்பதாக மாற்றப்பட்டுள்ளது. எந்த இன,மொழி, மத, மக்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு சமத்துவமாகவும் ஐக்கியத்துடனும் வாழ்ந்தால் பிரச்சினைகள் எழ இடம் ஏற்படாது.
 
ஆனால், ஆதிக்க நோக்கிலும் இன, மத, மேலாதிக்க நிலையிலும் விடயங்கள் முன்னெடுக்கப்படும்போதே பிரச்சினைகளும் பிளவுகளும் ஏற்படுகின்றன. இவற்றை சாதாரண மக்கள் உருவாக்குவதில்லை. அதிகாரம், பணம், பதவி, சொத்து, சுகம் தேட நிற்போரே தத்தமது குறுகிய அரசியல் நிலைப்பாட்டின் ஊடாக முன் னெடுக்கிறார்கள். மக்கள்தான் பாவம். அவர்கள் பலிகொள்ளப்படுகின்றார்கள்.
 
இவ்வாறு நோக்கும் போதே கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் என்ன நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படுகிறது என்பது அடிப்படையில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். அங்கு மூவின மக்களையும் ஒற்றுமையாகவும், சமத்துவமாகவும் வாழவைப்பதற்கும் போரினால்பட்ட காயங்களை ஆறவைத்து வாழவைப்பதற்கும் மாகாணசபைத் தேர்தலும் அதன் மூலமான நிர்வாகமும் என்ற நிலை இருப்பின் பரவாயில்லை என்றாவது கூறலாம். 
 
ஆனால், அப்படியில்லை. ஏற்கனவே முன்னாள் புலிப் போராளி மட்டுமன்றி, தளபதிகளில் ஒருவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரே முதலமைச்சர். அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பிரதிநிதியாகவே முதலமைச்சராக இருந்து வருகிறார். தமிழ் முஸ்லிம் மாகாண அமைச்சர்களும் இருந்து வருகிறார்கள். இதன் மூலம் மூவின மக்கள் வாழும் கிழக்கு மாகாணம் ஒரு முன்னுதாரணம் என்பதைக் காட்ட அரசு முன்னிற்கிறது. 
 
இதற்கு மேலால் வேறு என்ன அரசியல் தீர்வு வேண்டிக் கிடக்கிறது என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவே கிழக்கில் தேர்தல் நடத்தப்பட விருக்கிறது. அதுமட்டு மன்றி, அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆட்சிக்கு வர விடாது தடுத்து தமது அதிகாரத்தை நிறுவவே அரசு முழுமூச்சாக இறங்கி நிற்கிறது.
 
ஜனநாயகமும் அதன் கீழான தேர்தல் விதிமுறைகளும் ஒரு புறத்தே கிடக்கட்டும். எத்தகைய தில்லு முல்லுகளைச் செய்தாவது தமது மஹிந்த சிந்தனையிலான மாகாண சபை ஆட்சி நிறுவினால் போதும் என்றே அரசு தலையால் மண்கிண்ட முன் நிற்கிறது. அவ்வாறு ஆட்சி அதிகாரம் பெற்றால் அதனை சர்வதேச சமூகத்திற்கு ஒரு நற்சாட்சிப் பத்திரமாகக் காட்டமுடியும் என்றும் நம்புகிறது.
 
இதன் வழியிலே கிழக்கின் சிங்கள வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் பெரும்பான்மையாகவும் தம்முடன் உள்ளவர்களைக் கொண்டு கணிசமான தமிழ் வாக்குகளையும் பெற்று விட்டால் அதுவே தமக்கும் தமது உள்ளார்ந்த பேரினவாதத் திட்டங்களுக்கும் உள் உரையாக அமையக்கூடியது என்றே அரசு தரப்பு கணக்கிடுகிறது.
 
கடந்த முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்கு கொள்ளவில்லை. அது ஆளும் தரப்பிற்கு வசதியாகிக் கொண்டது. ஆனால் இம்முறை அப்படி இடம்பெற வாய்ப்பு இல்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாகக் கிழக்கின் தேர்தலில் பங்கு கொள்ளவே இருக்கிறது. 
 
அதன் முன்னோட்டமாகவே அண்மையில் மட்டக்களப்பு நகரில் தமிழரசுக் கட்சி மாநாடு நடத்தப்பட்டது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யபட்ட ஐந்து பேர் உள்ளனர். 
 
எனவே, கிழக்கில் தமிழ் வாக்குகள் பெருமளவிற்கு தமிழ்த் தேசியத்திற்கே கிடைக்கும். அதை எப்படி உடைக்கலாம் என்பதே அரசத் தரப்பில் இருந்து வரும் ஆலோசனையாகும்.
 
இந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த நிதானத்துடனும் தூரநோக்குடனும் செயற்பட வேண்டியுள்ளது. கிழக்கின் முஸ்லிம் மக்களோடு இணைந்து மாகாணசபை அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய ஒரு உறுதியான தந்திரோபாயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும்.
 
வெறுமனே முஸ்லிம் தலைமைகளுடன் பேசுவதுடன் நிறுத்தாது முஸ்லிம் மக்களுடன் பேச வேண்டும். ஏற்கனவே வெடிப்புகளுக்கும், பிளவுகளுக்கும் உள்ளாகி நிற்கும் தமிழ் முஸ்லிம் உறவை மீளநிலை நிறுத்த வேண்டும். 
 
கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பு வாக்கு வங்கியை வைத்திருப்பது போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது.அதே போன்று அரசில் அங்கம் பெறும் ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கும் அப்பால் முஸ்லிம் அமைப்புகள் இருந்து வருகின்றன. 
 
எனவே, இந்தத் தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்களது ஐக்கியம் அவசியமானதாகும். அத்தகைய ஐக்கியத்தின் மூலம் தமிழ் முஸ்லிம் மற்றும் முற்போக்கான ஜனநாயக சிங்கள மக்களது ஐக்கியத்துடன் ஒரு மாகாண ஆட்சி முறை உருவாகுவதே இன்றைய தேவையாகும். 
 
அந்த ஆட்சியானது பேரினவாதத் திட்டங்களுக்குத் தடையாகவும் முட்டுக் கட்டையாகவும் அமைவது இன்று தேவையானதாகும். இது கிழக்கின் ஜனநாயக சக்திகளின் சிந்தனைக்குரிய விடயமாகும்.
 
இதனை விடுத்து தமிழ் முஸ்லிம் தேசியங்கள் தத்தமது எல்லைகளுக்குள் நின்றவாறு குறுகிய அரசியல் நிலைப்பாட்டை இன, மத குரோத அடிப்படையில் முன்னெடுக்க முற்பட்டால் அது ஆளும் பேரினவாத சக்திகளுக்கே வாய்ப்பும் வசதியும் ஆகிவிடும். 
 
மஹிந்த சிந்தனை அரசு மட்டுமன்றி முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியும் கிழக்கில் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியே வந்துள்ளது. இன்றும் கூட அவ்விதமான நரித்தந்திரத்தையே பயன்படுத்த நிற்கிறார்கள். தமது சொந்த நலன்கள், பதவிகள், பட்டங்களுக்காக இன, மத வேறுபாடுகளைத் தூண்டி வாக்குச்சேகரிப்பதும் அதனைப் பேரினவாதிகளின் காலடியில் ஒப்படைப்பதும் மக்களுக்குச் செய்யும் மோசமான துரோகமாகும்.
 
இதுவரையான அனுபவம் பட்டறிவுகள் மூலம் தமிழ்த் தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் உண்மைகளையும் யதார்த்தங்களையும் காணத் தலைப்பட வேண்டும். ஏன் வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்த மறுப்பதில் இருந்து அரசின் உள்நோக்கம் தெளிவாகவே புலனாகிறது. சிலவேளை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை வடக்கில் குடியேற்றி வாக்காளர்களாக்கிக் கொண்ட பின்புதான் வடக்கின் தேர்தல் நடத்தப்படுமோ தெரியாது.*

நன்றி-உதயன்